கீதாம்ருதம் - அத்தியாயம் 1 தொடர்ச்சி
20. அத வ்யவஸ்திதான் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ரான் கபித்வஜ:
ப்ரவ்ருத்தே சஸ்த்ரஸம்பாதே தனுர்யுத்யம்ய பாண்டவ:
21.ஹ்ருஷீகேசம் ததா வாக்யம் இதம் ஆஹ மஹீபதே
அர்ஜுனன் கூறினான்
சேனயோ: உபயோ: மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத
அங்கு யுத்தம் ஆரம்பிக்கப்போகும் தருணம் போர் புரியக் கூடியிருந்த தருதராஷ்டிரனின் புதல்வர்களைப் பார்த்த அர்ஜுனன் வில்லை உயர்த்தியவனாக க்ருஷ்ணனை நோக்கி இந்த வார்த்தைகளைக் கூறினான்.
அர்ஜூனன கூறியது ,
அச்சுதா என் தேரை இரு சேனைகளுக்கும் மத்தியில் நிறுத்துவாயாக.
அர்ஜுனன் த்ருத்ராஷ்ரானின் புத்திரரகளான துரியோதனன் முதலியோரைக் கண்டான். அவர்கள் யுத்தம் ஆரம்பிக்கத் தயாராக இருந்தனர். சேனயோ: உபயோ: மத்யே – இரு சேனைகளுக்கும் நடுவே , ரதம் ஸ்தாபய – என் ரதத்தை நிறுத்து என்று கூறிய அர்ஜுனன் மனதில் இருந்தவர் துரியோதனாதியரே , பீஷ்மரும் துரோணரும் அல்ல. இதை அடுத்த ஸ்லோகம் தெளிவுறுத்துகிறது. அனால் அவன் நினைத்தது ஒன்று. பார்த்தது வேறு.
அர்ஜுனன் கபித்வஜன் , குரங்குக்கொடியோன் எனப்படுகிறான் . ஏனென்றால் அவன் தெர்க்கொடியில் இருந்தது ஹனுமான். பீமன் ஹனுமான் யார் என்று தெரியாமல் அவரை ஒரு குரங்கு என்று எண்ணி விலகச் சொல்லிப் பிறகு அவரை அறிந்து பாரதபோரில் தங்களுக்கு உதவும்படி கேட்க அவர் அர்ஜுனன் கொடியில் இருந்துகொண்டு காப்பதாகக் கூறினார்.
தனுருத்யம்ய – வில்லை உயர்த்தி என்றதில் அர்ஜுனனின் யுத்தம் செய்யும் ஆவல் தெரிகிறது. பின்னர் அவன் மனக்குழப்பம் வந்தது கண்ணனின் மாயத்தால்.
22.யாவத் ஏதான் நிரீக்ஷே அஹம் யோத்துகாமான் அவஸ்திதான்
கை: மயா ஸஹ யோத்தவ்யம் அஸ்மின் ரணஸமுத்யமே
23. யோத்ஸ்யமானாம் அவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர ஸமாகதா:
தார்த்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தே: யுத்தே ப்ரியசிகீர்ஷவ:
என்னுடன் யுத்தம் செய்ய இங்கு வந்துள்ள யாவரையும் காண விரும்புகிறேன். யார் யார் தீய எண்ணம் கொண்ட துரியோதனனுக்க சகாயம் செய்ய வந்துள்ளர்களோ அவர்களைக் காண வேண்டும்.
அடுத்து கண்ணனின் லீலையைக் காண்போம்
சஞ்சயன் கூறினான்
24. ஏவம் உக்தோ ஹ்ருஷீகேச: குடாகேசேன பாரத
சேனயோ: உபயோ: மத்யே சஸ்தாபயித்வா ரதோத்தமம்
25 .பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்
உவாச பார்த்த பச்யேதான் ஸமவேதான் குரூன் இதி
குடாகேசேன- அர்ஜூனனால்
ஏவம் உக்தோ ஹ்ருஷீகேச:- இவ்வாறு உரைக்கப்பட்ட ஹ்ருஷீகேசனான கண்ணன்
ரதோத்தமம் – அந்த சிறந்த ரதத்தை
சேனயோ: உபயோ: மத்யே- இரு சைன்யங்களுக்கும் மத்தியில்
பீஷ்மத்ரோணப்ரமுகத:- பீஷம்ர் துரோணர் இவர்களை முன்னிட்ட
ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்- எல்லா அரசர்களுக்கும் முன்
ஸ்தாபயித்வா- கொண்டு நிறுத்தி
உவாச – கூறினான்.
பார்த்த- அர்ஜுனா
ஏதான் – இந்த
ஸமவேதான் குரூன்- குழுமியுள்ள கௌரவர்களைப்
பச்ய -பார் (என்று)
அர்ஜுனன் அச்யுதா என்று அழைத்து ரதத்தை சேனைகளின் இடையில் நிறுத்தச் சொன்னான். சஞ்சயன் கண்ணனை ஹ்ருஷீகேசன் என்றே குறிப்பிடுகிறான். ஹ்ருஷீகேசன் என்றால் இந்த்ரியங்களுக்கும் மனதிற்கும் ஈசன் என்று பொருள் . அதாவது நம் மனதிலும் இந்த்ரியங்களிலும் ஏற்படும் சலனம் அவன் திருவுள்ளமே.
அச்யுதன் என்பது சொல் தவறாதவன் என்பதைக் குறிக்கும். மகாபாரதத்தில் திரௌபதியிடம் வானமே இடிந்து விழுந்தாலும் இமயமலை பொடிப்பொடியாக தகர்ந்தாலும் கடல் முழுதும் வற்றினாலும் என் சொல் மாறாது என்று உறுதி கூறுகிறான்.
அர்ஜுனனுக்கு குடாகேசன் என்று ஒரு பெயர் உண்டு. குடாகேசன் என்றால் உறக்கத்தை வென்றவன் என்று பொருள். அதாவது எப்போதும் விழிப்புடன் இருப்பவன் . அர்ஜுனன்
துரியோதனாதியரைக் காண விழைந்தபோது கண்ணன் அவனை பீஷ்மர் துரோணர் இவர்களின் முன் நிறுத்தியதற்குக் காரணம் அவன் உள்ளத்தில் மறைந்திருந்த பந்த பாசத்தை எழுப்பவே. அதனால் அவன் மனதில் உண்டாகிய குழப்பத்தை வியாஜமாகக் கொண்டு பகவான் உலகிற்கு கீதையை உபதேசித்தான்,
அர்ஜூனன குழப்பத்தைத் தெளிவிக்க ஒரு தலையசைப்பே போதும்.ஒரு நொடியில் அவன் மனதை மாற்ற இயலும் பதினெட்டு அத்தியாயம் கீதை சொன்னது பரமானந்த மாதவனாகிய கோபால நந்தனன் உபநிஷத்துக்களின் சாரமான கீதையாகிய பாலை உலகுக்கு அளிக்கவே.
அர்ஜுன பார்க்க நினைத்தது துரியோதனாதியரை. ஆனால் அவன் உண்மையில் கண்டதோ பாட்டனாரையும் குருமார்களையும். இதுவே கண்ணனின் லீலை
கீதாம்ருதம் - அத்தியாயம் 1 தொடர்ச்சி
26. தத்ர அபச்யத் ஸ்திதான் பார்த்த: பித்ரூன் அத பிதாமஹான்
ஆசார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பௌத்ரான் ஸகீன் ததா ,
27. ச்வசுரான் ஸுஹ்ருதஸ் தத்ர சைவ சேனயோருபயோரபி
தான் ஸமீக்ஷ்ய ச கௌந்தேய: ஸர்வான் பந்தூன் அவஸ்திதான்
அங்கு, பார்த்த:-அர்ஜுனன், ஸ்திதான் –இருந்த , பித்ரூன் அத பிதாமஹான்- பித்ருக்களையும் பாட்டனாரையும், ஆசார்யான்-குருநாதர்களையும், மாதுலான் – மாமன்மார்களையும், ப்ராத்ரூன் – சகோதரர்களையும், புத்திரான் – புத்திரர்களையும், பௌத்ரான்- பேரன்களையும், ஸகீன் – நண்பர்களையும்,
ச்வசுரான்- மாமனார்களையும், ஸுஹ்ருத: சைவ- அன்பர்களையும், ததா –அவ்வாறே, தத்ர சைவ சேனயோ: உபயோ:அபி- அங்குள்ள இரண்டு சைன்யங்களிலும் அபச்யத் – பார்த்தான்.தான் அவஸ்திதான் – அங்கு கூடியிருந்த ,ஸர்வான் பந்தூன்- எல்லா பந்துக்களையும் , ஸமீக்ஷ்ய – பார்த்து,
28. க்ருபயா பரயாவிஷ்ட: விஷீதன் இதம் அப்ரவீத்
க்ருபயா பரயா- மிகுந்த இரக்கத்தோடு , ஆவிஷ்ட: - கூடியவனாக ,இதம் வசனம் – இந்த வார்த்தைகளை , அப்ரவீத்- கூறினான்.
அர்ஜுனன் கூறினான்
த்ருஷ்ட்வா இமம் ஸ்வஜனம் க்ருஷ்ண யுயுத்சும் ஸமுபஸ்த்திதம்
இமம்- இந்த , யுயுத்சும்- யுத்தம் செய்ய, ஸமுபஸ்திதம்- வந்து நிற்கும், ஸ்வஜனம் – பந்துக்களை, த்ருஷ்ட்வா-பார்த்து, அர்ஜுனன் கூறினான்.
மகாபாரத யுத்தம் பந்துக்களிடையே நடைபெற்றது அல்லவா? அதனால் அர்ஜுனன் இருபக்கங்களிலும் உள்ளவர் யாவரும் பந்துக்களே என்று உணர்ந்தான்.
க்ருபயா பரயா ஆவிஷ்ட: என்பது உறவினர்கள் மேல் கொண்ட பற்றினால் போர்வீரனுக்கு ஒவ்வாத கருணையுடன் கூடிய கோழைத்தனம் அர்ஜுனன் மனதில் எழுந்தது என்பதைக் குறிக்கிறது.
இது க்ருஷ்ணனால் உண்டுபண்ணப்பட்ட கர்மயோக உபதேசத்தின் முன்னோடியான முரண்பாடு
29. ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி
வேபதுஸ்ச சரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே
3௦. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத் த்வக் ச பரிதஹ்யதே
ந ச சக்நோமி அவஸ்தாதும் பிரமதீவ ச மே மன
மம காத்ராணி- என் அவயவங்கள் , ஸீதந்தி-சோர்வு அடைகின்றன. முகம் ச-வாயும் – பரிசுஷ்யதி- உலர்கின்றது. சரீரே மே- என் உடலில் , வேபது: - நடுக்கமும் , ரோமஹர்ஷ; ச- மயிர்சிலிர்ப்பும், ஜாயதே – உண்டாகிறது.
காண்டீவம் - காண்டீவம், ஹஸ்தாத்- கையிலிருந்து , ஸ்ரம்ஸதே- நழுவுகின்றது., த்வக் ச – சருமத்திலும் , ப்ரிதஹ்யதே- எரிச்சல் உண்டாகிறது. அவஸ்தாதும் ச – நிற்கவும், ந சக்நோமி – இயலாதவனாக இருக்கிறேன்.
அர்ஜுனனுக்கு ஏற்பட்ட பந்துக்களிடம் பற்று, கருணை இவைகளால் மனச்சோர்வு உண்டாயிற்று. அது உடலையும் பாதித்தது. மகாவீரனான அர்ஜுனனுக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் பயத்தினால் அல்ல. வாழ்க்கை முழுவதும் எதிர்பார்த்த முக்கியமான நிகழ்ச்சியின் போது மனக்குழப்பம் வருவது என்றால் அது ANXIETY NEUROSIS எனப்படும் அதீதமான பதற்றம்.
இதற்கு உதாரணம் சொல்வதென்றால் நன்கு படித்து பரீக்ஷைக்குச் செல்லும் மாணவன் பரீக்ஷை தொடங்கும்போது ஒருவித பதற்றம் அடைவதைப் போன்றது. அர்ஜூனனுக்குத் தான் எதிர்க்கப்போவது தன் பந்துக்களைத்தான் என்பது தெரியாதா ?இத்தனை நாள் இல்லாத பற்றும் கருணையும் இப்போது வரக்காரணம் நேருக்கு நேர் சந்தித்தபோது ஏற்பட்ட ஒருவிதப் பதற்றம். இது ஒரு நடிகனுக்கும் , பேச்சாளருக்கும், மாணவனுக்கும், மண மக்களுக்கும் கடைசித் தருணத்தில் ஏற்படும் பதற்ற மனநிலை.
ஒரு போர்வீரன் யுத்தபூமியில் மனம் மாறினால் அவனுக்குப் பின் உள்ள அவனை நம்பியுள்ள அத்தனை பேர் நிலை என்ன ? யுத்தம் புரிய வேண்டாம் என்பது யுத்தபூமிக்கு வருவதற்கு முன் எடுக்க வேண்டிய தீர்மானம். தர்மபுத்திரர் சமாதானமாகப் போக விரும்புகையில் எதிர்த்து யுத்தம் புரிய வேண்டும் என்று கூறினது பீமனும் அர்ஜுனனும்தான் . இப்போது மனம் மாறுவது என்பது அவன் மன்க்குழ்ப்பத்தைதான் காட்டுகிறது. ஆனாலும் எல்லாம் கண்ணனின் லீலை.
No comments:
Post a Comment