பெரியாழ்வார் என்று அழைப்பது ஏன்?
ஆசார்யன்: கேசவா. உனக்கு ஏதோ சந்தேகம்; கேட்கவேண்டும் என்று சொன்னாயே. என்ன சந்தேகம்?
சிஷ்யன்: அடியேன். நீங்கள் நேற்றுவரை பெரியாழ்வாரின் திவ்ய சரித்திரத்தைச் சொன்னீர்கள். அதில் தான் எனக்கு ஒரு சந்தேகம். ஆழ்வார்கள் பதின்மர் இருக்கும்போது விஷ்ணுசித்தரை மட்டும் பெரியாழ்வார் என்பது ஏன்?
ஆசார்யன்: நல்ல கேள்வி கேட்டாய் கேசவா. பெரியாழ்வார் என்று பட்டர்பிரானை அழைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஒவ்வொன்றாய் சொல்கிறேன். கவனத்துடன் கேள்.
இவர் விஷ்ணுவிடம் எப்போதும் தன் சித்தத்தை வைத்திருந்த படியாலும் விஷ்ணுவின் சித்தம் இவர் மேல் இருந்த படியாலும் இவருக்கு விஷ்ணுசித்தன் என்று பெயர்.
எல்லாருக்கும் எம்பெருமான் ரக்ஷகன். அவனே எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவன். அப்படிப்பட்ட இறைவனுக்கே தீயவர் கண்பட்டு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று பதறி அவனைக் காக்கும் பொறுப்பை தன்னில் ஏற்றுக்கொண்டதால் இவர் பெரியாழ்வார்.
மற்ற ஆழ்வார்கள் எல்லாம், தன்னை அவன் காக்கவேண்டும் என்று எண்ணியிருக்க, இவர் யசோதையின் நிலையடைந்து கண்ணனை தாலாட்டி சீராட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றதால் இவர் பெரியாழ்வார்.
மற்ற ஆழ்வார்கள் 'தான்' என்னும் எண்ணத்தைக் கொஞ்சமாகவேனும் கொண்டிருந்தனர்.
'வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக...சூட்டினேன் சொல்மாலை', 'அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக...ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்', 'திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்...என்னாழி வண்ணன் பால் இன்று' என்றார்கள் முதலாழ்வார்களான பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும்.
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
என்றார் நம்மாழ்வாரும். இப்படி இவர்கள் 'நான்' என்ற எண்ணம் கொஞ்சமாவது கொண்டிருந்தபடியால் இவர்களை சிறந்தவராகச் சொல்லமுடியவில்லைபோலும். விஷ்ணுசித்தரோ 'பல்லாண்டு பல்லாண்டு' என்று பாடியவர். அப்படி பல்லாண்டு பாடுவது மற்ற ஆழ்வார்களுக்கு எப்போதோ ஏற்படும் உணர்வு. ஆனால் இவருக்கோ அதுவே இயற்கை. அதனால் இவர் பெரியாழ்வார்.
மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர். அப்படியின்றி இவரோ அதே திருமேனி அழகைக் கண்டவுடன் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப்பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பல்லாண்டு பாடுவதன் பலனைக் கூறும்போது கூட
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே
என்று என்றும் பரமனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி ஏத்துவதே பல்லாண்டு பாடுவதன் பயன்; மற்றொன்றில்லை என்று திடமாய்க் கூறியவர். தன் சுகத்தை எதிர்பார்த்தாரில்லை. அதனால் இவர் பெரியாழ்வார்.
அது மட்டும் இன்றி எம்பெருமானின் கட்டளைப்படி கோதை நாச்சியார் தான் சூடிக் கொடுத்த மாலையை பெருமாளுக்குச் சமர்ப்பித்து இறைவனருள் பெற்றவர். கோதை நாச்சியாரின் தந்தையாகவும் ஆசார்யனாகவும் இருக்கும் பேறு பெற்றவர். அதனால் அழகிய மணவாளனையே மருமகனாகப் பெறும் பேறு பெற்றவர். அழகிய மணவாளனோ பெரிய பெருமாள். அவனை மருமகனாகப் பெற்ற இவரோ பெரியாழ்வார்.
No comments:
Post a Comment