Thursday, September 3, 2020

Periazhwar & Andaal

Courtesy: Dr.Smt.Saroja Ramanujam

தந்தையும் மகளும்-1

இதை ஏற்கெனவே ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளேன்.. தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்தவுடன் நேரம் இல்லாததால் பாதியில் விடப்பட்டது. இப்போது தமிழில் இதையே எழுத எண்ணி உள்ளேன். பெரியாழ்வருக்கும் கோதைக்கும் நடந்த சம்பாஷணை உருவில் பெரியாழ்வாரின் பாசுரங்களை ரசிக்கலாம் வாருங்கள்.

கோதை தந்தையிடம் ஒருநாள் கேட்டாள்,
" தந்தையே நீங்கள் எதற்காக பகவானுக்குப் பல்லாண்டு பாடினீர்கள்?" என்று.

அதற்கு அவர் பதில் கூறினார், " எனக்கே தெரியவில்லை குழந்தாய் , அதுவும் அவன் திருவுள்ளமே" என்று.

"அன்று அவனை நேரில் கண்ட பின்பு அவன் அழகில் ஈடுபட்டு மெய்மறந்து யசோதை ஆகிவிட்டேன். அவனுக்கு கண் படப் போகிறதே என்று நினைத்து பல்லாண்டு பாடினேன் "என்றார்.

" இது எப்போது நிகழ்ந்தது ,?"

" பாண்டியன் சபையில் வாதம் புரிந்து வெற்றி கொண்டபின் அரசர் என்னை யானை மீது அமர்த்தி ஊர்வலம் நடத்தினார் . அதுவும் அவன் செயலே.

நான் அவன் கோவிலில் பூமாலை கைங்கர்யம் செய்வதைத் தவிர வேறொன்றும் அறியேன்.

எனது நண்பர் செல்வநம்பி என்னை வாதத்தில் கலந்து கொள்ள வேண்டியபோது இறைவன் என் கனவினில் வந்து "நீ செல், நாமே உன் வாக்கில் அமர்ந்து உன்னை வெற்றிபெறச் செய்வோம்" என்று சொல்ல அதே போல நடந்தது.
நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியாது. எல்லாம் அவன் செயல். 
அப்போது நகர் வலம் வந்த என்முன் நாராயணனே கூடல் அழகனாகத் தோன்றினான் . அப்போதுதான் அவன் அழகைப் பார்த்து கண் படப் போகிறதே என்று பயந்த என் வாக்கில் பல்லாண்டு பாசுரங்கள் தோன்றின. என்றார் .

"அவன் ஏன் அங்கு தோன்றினான் என்று எனக்குத் தெரியுமே" என்றாள் கோதை. பரமபக்தரான விஷ்ணுசித்தரின் பெண் அல்லவா?

" அவனுடைய அடியார்க்கு ஒரு பெருமை என்றால் அவன் அதைக்காண வந்ததில் என்ன வியப்பு?"

" ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் தந்தையே " வந்தவன் நாராயணனாக அல்லவா வந்தான் ? அவனுக்கு பல்லாண்டு பாடுகையில் 'மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் ,' என்று கண்ணனிப் பாடிநாதன் நோக்கம் என்ன?" என்றாள்.

அதற்கு அவர் பதில் என்ன என்று பிறகு பார்ப்போம்.

தந்தையும் மகளும் -2

வந்தவன் நாராயணனாக அல்லவா வந்தான் ? அவனுக்கு பல்லாண்டு பாடுகையில் 'மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் ,' என்று கண்ணனைப் பாடியதன் நோக்கம் என்ன?" என்ற ஆண்டாளின் கேள்விக்கு பெரியாழ்வார் பதில் கூறினார்.

"என் கண் முன் அவன் தோன்றியபோது அவன் அழகில் ஈடுபட்டு நான் யசோதையாய் மாறி விட்டேன். ஒருதாய் உள்ளம் தன் குழந்தைக்கு கண் படப்போகிறதே என்று அஞ்சும் மனநிலையில் அப்படி சொற்கள் என்னிடம் இருந்து தோன்றின " என்றார்.

மேலும் அவர் கூறினார். "ஏழாட்காலும் இராக்கதன் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொறுத்தான்" என்று ராமனாகவும் 'அந்தியம்போதில் அரி உருவாகி' என்று நரசிம்மனாகவும் அவனைக் கண்ட போதிலும் கண்ணனே என் கண் முன் நிலை பெற்று நின்றான்.

"அதனால்தான் ' மிதிலையில் வில் முறித்தவனை 'திருமதுரையில் சிலை குனித்து ,' என்று கூறினீர்களா? என்றாள் கோதை குறுஞ்சிரிப்புடன்.

" ஆம் அம்மா கண்ணனையே நினைத்து அவன் வடமதுரையில் கம்சனின் வில் மண்டபத்தில் புகுந்து அந்த வில்லை முறித்ததுதான் என் கண்முன் தோன்றியது ."

அதற்குப்பிறகு என்னுடைய எல்லா கற்பனைகளும் கண்ணன் தொடர்பாகவே அமைந்தன. நானும் ஆயர்பாடியில் யசோதை ஆகி விட்டேன்." என்றார்.

"தந்தையே எனக்கு ஆயர்பாடியில் கண்ணனின் லீலைகளைப் பற்றி சொல்லவேண்டும் " என்றாள் கண்ணனையே கணவனாக வரிக்கப் போகும் சிறுமி..

"ஆம் குழந்தாய் உனக்கு ஏற்கெனவே பலமுறை சொல்லி இருந்தாலும் திரும்ப திரும்ப அவன் லீலைகளை சொல்வதும் கேட்பதும் அமுதம் அல்லவா. " என்று சொல்லி கண்ணன் பிறந்தது முதல் அவன் லீலைகளை சொல்ல ஆரம்பித்தார் பெரியாழ்வார்.. 
நாமும் அதை கேட்கலாமா?

தந்தையும் மகளும்-3

பெரியாழ்வார் கண்ணன் திருவிளையாடல்களைக் கூற ஆரம்பிக்கிறார்.

"கண்ணன் ஆயர்பாடியில் பிறந்ததாகக் கருதிய 
ஆயர்கள் அவன் பிறப்பை சிறப்புடன் கொண்டாடினர். மணமிகுந்த தைலங்கள் மஞ்சள் இவை ஒருவருக்கொருவரும் கண்ணன் மாளிகை முற்றத்திலும் தூவி அந்த இடம் சேறானது. "

'வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் 
எண்ணை சுண்ணம் எதிரெதிர் தூவிட 
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே.'

"சிலர் மகிழ்ச்சிபெருக்கால் இங்கும் அங்கும் ஓடினர். சிலர் உவகை மிஞ்சி விழுந்தனர். வேறு சிலர் எங்கிருக்கிறான் கண்ணன் என்று தேடினர். ஆனந்தம் மேலிட்டு பாடுபவர்களும் ஆடுபவர்களும் கொண்டு ஆய்ப்பாடி விளங்கிற்று."

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் 
நாடுவார்நம்பிரான் எங்குத்தான் என்பார் 
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று 
ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே'

என்ற பெரியாழ்வாரின் சொற்களைக் கேட்டு கோதையும் மனதால் ஆயர்பாடிக்கே போனவளாக ஆட ஆரம்பித்தாள்.

பிறகு , " இவனைப்போல் பிள்ளை வேறில்லை , திருவோணத்துப் பிறந்த இப்பிள்ளை உலகை ஆள்வான் என்று அவனைக் கண்டவர் எல்லாம் ஒருமித்து ,
'ஆணொப்பார் இவன் நேர் இல்லை காண், திரு
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே.' 
என்று கூறினர்," என்ற தந்தையின் சொல் கேட்ட கோதை ,

"திருவோணமா? கண்ணன் பிறந்தது ரோகிணிஅல்லவா" என்றாள்.

"ஆம் குழந்தாய் , ஆனால் பரம்பொருளான அவன் தன் ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு ஓர் இடைப்பிள்ளையாய் அவதரித்தானே தவிர பிற்காலத்தில் அவன் தன மகிமையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் அல்லவா?

அதைக் கண்ட எனக்கு 'இப்பிள்ளை உலகை ஆள்வான்' என்ற சொற்களால் அவன் முன்னோர்காலத்தில் வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் உலகை ஆண்டது நினைவுக்கு வந்தது. வாமனமூர்த்தியின் நக்ஷத்ரம் திருவோணமல்லவா?" என்றார்.

"நீங்கள் யசோதையாய் மாறி அவனைப் பாடினாலும் அவன் நாராயணன் என்ற உணர்வு உங்களை ஆட்கொண்டதல்லவா? அதனால்தான் உங்கள் யசோதையும் ஆழ்வாராகவே காட்சி அளிக்கிறாள்.".என்றாள் கோதை.

மேலும் சொல்கிறார் பெரியாழ்வார் .

'உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் 
நறு நெய் பால் தயிர்நன்றாகத தூவுவார் 
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே '

"ஆய்ப்பாடி மக்கள் பித்துக்கொண்டவர் போல உறியில் உள்ள நெய் பால் தயிர் எல்லாவற்றையும் உருட்டி அவற்றை எங்கும் இறைத்தனர். அவர் கூந்தல் அவிழ ஆடிக் களித்தனர்"என்று கூற கோதை ,

" ஆலிலை மேல் ஒரு பாலகனாய் துயின்றவன் , உலகெல்லாம் தன்னுள்ளே அடக்கியவன், இங்கு ஒரு உள்ளம் கொள்ளைகொள்ளும் கள்ளமறியாப் பிள்ளை போல கிடப்பதைக்கண்டு யார்தான் பித்தாக மாட்டார்கள் ." என்றாள்கோதை.

அடுத்து பன்னிரண்டாம் நாளில் கண்ணனை நீராட்டி தொட்டில் இடும் காட்சியைக் காண்போமா?


தந்தையும் மகளும் - 4

அடுத்து பன்னிரண்டாம் நாளில் கண்ணனை நீராட்டி தொட்டில் இடும் காட்சியைக் காண்போமா?

பெரியாழ்வார் சொல்ல ஆரம்பித்தார் .
"யசோதை கண்ணனை நீராட்டுவதற்காக அவன் கையையும் கால்களையும் நீட்டி வெதுவெதுப்பான மஞ்சள் நீரால் குளிப்பாட்டினாள்."

'கையும் காலும் நிமிர்த்து கடாரநீர் 
பைய ஆட்டிப் பசும் சிறுமஞ்சளால் '
'ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட,'

அப்போது அவன் நாக்கை வழித்திட அவன் வாயைத்திறக்க , " என்று பெரியாழ்வார் உணர்ச்சி மேலிட்டு நிறுத்தினார் .

அப்போது கோதை " பிறகு என்ன ஆயிற்று ? என்று கேட்க , பெரியாழ்வார் கூறினார்,

'வையம் எழும் கண்டால் பிள்ளை வாயுளே '
"அவன் வாயினுள் ஏழு உலகமும் கண்டாள் ." என்றார் .

கோதையும் திறந்த வாய் மூட மறந்தாள்.

" அது மட்டும் அல்ல . யசோதை அதை கோபியருக்கும் காட்ட அவர்கள் 'இவன் 'ஆயர் புத்திரன் அல்ல அரும் தெய்வம் ' என்று கூறினர். " என்றார் .

கோதை கேட்டாள். " கண்ணன் மண் தின்றபோதுதானே அது நடந்தது? இங்கே எப்படி? "

அதற்கு அவர் , " குழந்தாய் , அவன் மகாமாயன் அல்லவா? 'பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன் மாயன்,' அவன் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்வான் . அதை அவர்களுக்கு உடனே மறைத்தும் விடுவான். " என்றார்.

இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பெரியாழ்வார் கண்ணன் சரித்திரத்தைசொல்ல விழைந்து பாசுரங்கள் இயற்றவில்லை. அவர் ஆழ்ந்த பக்தர். அதனால் அவர் மனதில் எப்போதும் கண்ணன் பரம்பொருளாகவே காட்சி அளித்தான் . அதனால் அங்கங்கு அவனுடைய இறை உருவத்தையே காண்கிறோம்.

மேலும் அவர் சொல்ல ஆரம்பித்தார்.

" கண்ணன் ஆயர்பாடியில் வந்து பதினொரு நாட்கள் ஆகிவிட்டன . பன்னிரண்டாம் நாள் தொட்டிலில் இட்டு சுற்றிலும் அலங்காரங்கள் செய்து கொண்டாடினர்."

'பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே,'
" கோவர்தனம் என்னும் மலையைத் தாங்கப்போகும் கண்ணனை கையில் தாங்கிக் கொண்டாடினர்." என்றார் .

கோதை காண்ணன் தொட்டிலில் உறங்கப்போவதை மனதினால் கற்பனை செய்தவளாய் தானும் உறங்கினாள்தந்தையும் மகளும் - 4

அடுத்து பன்னிரண்டாம் நாளில் கண்ணனை நீராட்டி தொட்டில் இடும் காட்சியைக் காண்போமா?

பெரியாழ்வார் சொல்ல ஆரம்பித்தார் .
"யசோதை கண்ணனை நீராட்டுவதற்காக அவன் கையையும் கால்களையும் நீட்டி வெதுவெதுப்பான மஞ்சள் நீரால் குளிப்பாட்டினாள்."

'கையும் காலும் நிமிர்த்து கடாரநீர் 
பைய ஆட்டிப் பசும் சிறுமஞ்சளால் '
'ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட,'

அப்போது அவன் நாக்கை வழித்திட அவன் வாயைத்திறக்க , " என்று பெரியாழ்வார் உணர்ச்சி மேலிட்டு நிறுத்தினார் .

அப்போது கோதை " பிறகு என்ன ஆயிற்று ? என்று கேட்க , பெரியாழ்வார் கூறினார்,

'வையம் எழும் கண்டால் பிள்ளை வாயுளே '
"அவன் வாயினுள் ஏழு உலகமும் கண்டாள் ." என்றார் .

கோதையும் திறந்த வாய் மூட மறந்தாள்.

" அது மட்டும் அல்ல . யசோதை அதை கோபியருக்கும் காட்ட அவர்கள் 'இவன் 'ஆயர் புத்திரன் அல்ல அரும் தெய்வம் ' என்று கூறினர். " என்றார் .

கோதை கேட்டாள். " கண்ணன் மண் தின்றபோதுதானே அது நடந்தது? இங்கே எப்படி? "

அதற்கு அவர் , " குழந்தாய் , அவன் மகாமாயன் அல்லவா? 'பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன் மாயன்,' அவன் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்வான் . அதை அவர்களுக்கு உடனே மறைத்தும் விடுவான். " என்றார்.

இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பெரியாழ்வார் கண்ணன் சரித்திரத்தைசொல்ல விழைந்து பாசுரங்கள் இயற்றவில்லை. அவர் ஆழ்ந்த பக்தர். அதனால் அவர் மனதில் எப்போதும் கண்ணன் பரம்பொருளாகவே காட்சி அளித்தான் . அதனால் அங்கங்கு அவனுடைய இறை உருவத்தையே காண்கிறோம்.

மேலும் அவர் சொல்ல ஆரம்பித்தார்.

" கண்ணன் ஆயர்பாடியில் வந்து பதினொரு நாட்கள் ஆகிவிட்டன . பன்னிரண்டாம் நாள் தொட்டிலில் இட்டு சுற்றிலும் அலங்காரங்கள் செய்து கொண்டாடினர்."

'பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே,'
" கோவர்தனம் என்னும் மலையைத் தாங்கப்போகும் கண்ணனை கையில் தாங்கிக் கொண்டாடினர்." என்றார் .

கோதை காண்ணன் தொட்டிலில் உறங்கப்போவதை மனதினால் கற்பனை செய்தவளாய் தானும் உறங்கினாள்

தந்தையும் மகளும் -5

அடுத்த நாள் பெரியாழ்வார் பெருமாள் கைங்கர்யம் முடித்து உணவு கொண்ட பின்னர் கோதை அவரிடம் குழந்தைக் கண்ணனைப் பற்றி கூறுமாறு வேண்டினாள்.

பெரியாழ்வார் கண்ணனின் அழகில் ஈடுபட்டு இருபது பாசுரங்கள் இயற்றியுள்ளார்.

" தேவகி யசோதைக்கு அளித்த அமுதம் போன்ற இந்தக் குழந்தை தன் பிஞ்சு விரல்களால் தன் கால் கட்டைவிரலைப் பிடித்து சுவைக்கும் இந்தக் காட்சியை, 
'சீதகடலுள்ளமுதன்ன தேவகி கோதைக்குழலாள் யசோதைக்கு போத்தந்த 
பேதைக்குழவி பிடிட்து சுவைத்துண்ணும் பாதக்கமலங்கள் காணீரே '

"அது வெறும் பாதமல்ல . பாதக்கமலம் அல்லவா ? '
கண்டீரோ என எல்லோரும் அதிசயித்தனர். "

கோதை கூறினாள் . " வண்டுகள் தாமரை மலரை நாடுவதைப்போல் அன்பர்கள் தன் பாத்த்தை நாடுவது கண்டு அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று சுவைத்துப் பார்த்தானோ ?"

" அவன் பாதங்களில் நகங்கள் எப்படி இருந்தன தெரியுமா? தங்கம் முத்து வயிரம் ரத்தினங்கள் முதலியவை பதித்ததுபோல் ஜ்வலித்தன " என்றார் பெரியாழ்வார் .

"ஓ அதனால்தான் பக்தர்களுக்கு அவனுடைய பாதங்கள் மற்ற அங்கங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவையோ ? ஒருவேளை அவனை வணங்கிய தேவர்களின் ,மணிமகுடங்களில் இருந்து அவை ஒட்டிக்கொண்டனவோ ? " என்றாள் கோதை .

"அருமையாய் சொன்னாய், மகளே, ஒருக்கால் தேவர்கள் அவன் பாதத்தில் விழுந்து அவனை சேவிக்கும்போது அந்த மணி மகுடங்களின் ஒளி மட்டும் நம் கண்களுக்குத் தெரிகிறதோ என்னவோ?" என்றார் தந்தை .

"அவன் கணைக்காலில் வெள்ளி ச்சிலம்பு கண்டு வியந்த கோபியர் கூறினர், அவனுடைய முழந்தாள் அழகைக் காணவேண்டும் என்றால் அவன் தவழும்போது காணவேண்டும். எப்போது தெரியுமா ?

வைத்த நெய் முழுதும் உண்டுப் பின் தாய் கடையும் கயிறால் அடிப்பாள் என பயந்து தவழும்போது.
'உழந்தாள் நறு நெய் ஓரோர் தடாவுண்ண இழந்தாள் ----பழந்தாம்பால் ஓச்ச பயந்து தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே.'

ஆண்டாள் " தந்தையே அவன் வீட்டில் உள்ள நெய் அவன் சாப்பிடுவது தவறா" அதற்கு ஏன் தண்டிக்க வேண்டும் ?" என்றாள் .

பெரியாழ்வார் கூறினார்" அதற்கல்ல குழந்தாய், அவ்வளவு நெய் சாப்பிடுவதால் அவன் வயிறு கெடக்கூடாதே என்ற கவலைதான் . "

" அவன் 'உலகம் உண்ட பெருவாயன் ' என்று அவன் அன்னை அறியமாட்டாள் அல்லவா'
நம்மாழ்வார் கூறியது போல் 'தானே உலகெல்லாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வான் ' அல்லவா? "

" இப்படி கண்ணனின் ஒவ்வொரு அவயவத் தையும் கண்டு களித்தனர் கோபியர் என்று மேலும் விரிவாக் கூற ஆரம்பித்தார். அதைப் பின்பு காண்போம்

தந்தையும் மகளும் -7

இப்போது கண்ணனை தாமோதரனாகக் காணலாமா ?
பெரியாழ்வார் கூறினார்.
"அவன் உதரத்தைப் பார் குழந்தாய். அதில் யசோதை கயிற்றால் கட்டிய வடுவை இன்னும் தான் அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்று காண்பிக்க அவன் ரங்கநாதனாய் இன்றும் சுமந்துகொண்டிருக்கிறான் திருவரங்கத்தில். " 
'அதிரும் கடல்வண்ணனை ஆய்ச்சி மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப்படாமே பழம்தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ,
ஒளிவளையீர் வந்து காணீரே.'
"கோபியர் அவன் உதரத்தைக் கண்டுஒருவரை ஒருவர் அழைத்து மகிழ்கின்றனர்."
அவன் அதிரும் கடல் வண்ணன் அல்லவா ? அவனை எப்படிப் பிடிக்க இயலும்? அதனால் முலை உண்ண வா என்று அழைத்து வஞ்சித்துக் கட்டிப்போட்டாளாம்.

"ஆனாலும் அது மிகவும் கடினமாக இருந்தது அல்லவா? பாகவதத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி கூறும்போது நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். " என்றால் ஆண்டாள்.,

"ஆம். எங்கும் நிறைந்தவனை எப்படிக் கட்ட இயலும்?. யசோதை எவ்வளவு நீளமான கயிறை எடுத்தாலும் அவனைக் கட்டுகையில் இரண்டு அங்குலம் குறைவாக இருந்ததாம். பார்த்தவர் எல்லாரும் சிரிக்க, தாய் படும் பாட்டைக் கண்டுஇறங்கி, தானாகக் கட்டுப்பட்டான் அந்த மாயவன். அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவான் என்று காட்ட இன்றும் அந்த வடுவைச் சுமந்து கொண்டிருக்கிறான்"

"ஆயினும் எல்லாமே அவன் திருவுள்ளம்தானே? அங்கு சாப விமோசன்த்திற்காகக் காத்திருக்கும் நள கூபரர்களை ரட்சிக்க அவன் நடத்திய நாடகம்." என்றார் பெரியாழ்வார்.

அவன் அந்த மருத மரங்களை நோக்கித் தவழும்போது அவன் திருமார்பில் கௌஸ்துப மணியைக் காண்கிறது ஆழ்வாரின் பக்தி உள்ளம்.

'பொருமா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இரு மாமருதம் இறுத்த இப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும் 
திருமார்பு இருந்தவா காணீரே ' என்கிறார்.

"இதுதான் கண்ணன் செய்த காட்டிய முதல் அதிசயமா" என்றால் கோதை.

"கண்ணன் செய்த அதிசயத்திற்கு அளவேது? 
பிறந்தவுடன் நான்கு கரங்களோடு பெற்றோர்க்கு காட்சி அளித்தான் . பிறகு யமுனையை வழி விடச் செய்தான். பூதனையை வதம் செய்தான். நாலைந்து மாதக் குழந்தையாய் இருக்கும்போதே தாள் கொண்டு உதைத்து சகடாசுரனை மாய்க்கவில்லையா? " என்று மேலும் கூறலுற்றார்.

இவ்வாறு அவன் தோள், சங்குசக்கரரேகையுடன் கூடிய கைத்தலங்கள் , அண்டம் விழுங்கிய கண்டம் என்று ஒவ்வொரு அவயவமாகப் பார்த்துப் பூரித்த கோபியர் செயல்களை விவரித்தவரிடம் கோதை கேட்டாள்.

"இப்படி எல்லோரும் சூழ்ந்து கொட்டம் அடித்தால் கண்ணன் எவ்வாறு துயில் கொள்ளுவான் ? "

"ஆம் அவன் துயிலும் நேரம் வந்துவிட்டது. " என்று கூறி பெரியாழ்வார் யசோதை ஆகி அவனுக்கு தாலாட்டுப் பாடுவதை அடுத்து காண்போம்.

தந்தையும் மகளும் - 8

ஒருநாள் மாலை கோதை தன் தந்தை அவளுக்களித்த கிருஷ்ண விக்ரஹத்தை மடியில் போட்டு விளையாடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த பெரியாழ்வரைக் கண்டு " தந்தையே ராமன் யௌவனப் பருவத்தில்தான் அசுரர்களை கொன்றான். ஆனால் கண்ணன் குழந்தைப் பருவத்திலேயே அசுரர்களைகே கொன்றதன் மூலம் உலகசம்ரக்ஷணத்தை தொடங்கிவிட்டான் .அல்லவா ?"என்றாள்.

அதற்குப் பெரியாழ்வார் " ஆம் குழந்தாய் , ராமன் மானுடனாகவே பிறந்தான் , வாழ்ந்தான். ஆனால் கண்ணன் பிறக்கும்போதே சங்கு சக்கரத்துடன் அல்லவா பிறந்தான்!" என்றார்.

" எனக்கு அவன் கையில் உள்ள சங்குதான் பிடிக்கும் சக்கரத்தை விட. ஏனென்றால் அதுதானே அவன் இதழோடு உறவாடுகிறது ." என்றாள், பின்பு சங்கைக் குறித்தே பத்துப் பாசுரம் இயற்றப்போகும் கோதை.

பிறகுஅவள் கண்ணனுடன் விளையாடிய பின்னர் "கண்ணா , நீ தூங்கும் சமயம் ஆகிவிட்டது வா " என்று கூறி அவனை தொட்டிலில் இட அவன் தூங்காமல் அடம் பிடித்தான் . அப்போது கோதை தன தந்தையிடம்" நீங்கள் யசோதையைப்போல் தாலாட்டுப் பாடினால்தான் என் கண்ணன் தூங்குவான்." என்று கூற, அவரும் ,

மாணிக்கம் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறு தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் 
மாணிக்குறளனே தாலேலோ 
வையம் அளந்தானே தாலேலோ 
என்று பாடஆரம்பித்தார்.

கண்ணனின் தொட்டில் தங்கத்தினால் செய்யப் பட்டது. அதில் மாணிக்கம் வயிரம் இவை பதிக்கப்பட்டு இருந்தது. அதைத் தந்தவன் யார் தெரியுமா? பிரம்ம தேவன். அதில் படுத்துக் கொண்டிருக்கிறானே சிறு குழந்தையாய் அவன் தான் அன்று குள்ள பிரம்மச்சாரி உருவில் வந்து வையம் அளந்தவன். 
அப்போது அவன் அழுகிறான். யசோதையாகிய ஆழ்வார் கூறுகிறார்.

"அழாதே கண்ணா! இதோ பார் ! எவ்வளவு அழகிய அரைஞாண் உனக்கு விடையேறு ஈசனாகிய சிவ பெருமான் கொடுத்திருக்கிறான் பார். 
'உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடை விரவிக்கோத்து', மாதுளம்பூ போன்ற பதக்கங்கள் கட்டி அழகான அரைஞாண்,' " என்று கூற ,

கோதை "பிரமனும் சிவனும் கண்ணனுக்கு பரிசுகள் கொடுத்தார்களா ," என ஆச்சரியத்துடன் வினவ , 
பெரியாழ்வார் , அவர்கள இருவரும் மட்டும் அல்ல, இந்திரன் எழில் உடைய கிண்கிணி, தேவர்கள் வலம்புரி சங்கு, மற்றும் பல ஆபரணங்களை அளித்தனர் என்றார்.

"கண்ணன் அப்போது எவ்வளவு அழகாய் இருந்திருப்பான் !" என்று கோதை கூற , அவனுக்கு ஆபரணங்கள் தேவையா, ஆபரணங்களுக்கேஅழகு சேர்ப்பவன் அல்லவா ," என்ற பெரியாழ்வார்,

கருமுகில் போல் வண்ணமும் தாமரைச் செங்கண்ணும் உடைய தேவகி சிங்கமே தாலேலோ என்று பாட, கோதை கூறினாள்.

"இன்னும் என் கண்ணன் தூங்கவில்லை தந்தையே . உங்கள் வாக்கிலிருந்து இன்னும் தாலாட்டை எதிர்பார்க்கிறான் போலும்.' என்றாள்.

பெரியாழ்வார் கூறினார் , 
"எழில் ஆர் திருமாவிற்கு ஏற்கும் இவை என்று
அழகியம்படையும் ஆரமும் கொண்டு,'

உந்தன் ஆயுதங்களை ஒக்கும் ஐம்படைத்தாலியும் ஆரமும் கொண்டு குபேரன் நிற்கின்றான்.

வருணன், 'ஒதக்கடளினொலி முத்தின் ஆரமும் சாதிப்பவளமும் 
சந்தச் சரிவளையும், '

முத்தாரமும் பவள வளையும் வருணன் கொடுத்தான்"என்றார்.

"கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவன் இன்னும் பரிசுகளை எதிர்பார்க்கிறான் போல் இருக்கிறது." என்றாள் கோதை.
" நீ சொல்வது சரிதானம்மா, இதோ அவன் தேவியரும் சகோதரியும் பரிசுகளுடன் வந்தனர் பார்."
"குடந்தைக் கிடந்தானே ஆராவமுதனே இதோ வருகிறாள் 'தேனார் மலர்மேல் திருமங்கை' , உன் இதயத்தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவி, கையில் துளசி மாலையோடும், தேவலோக பாரிஜாத மலர்களின் மாலையோடும்.

பக்கத்தில் பூதேவி மற்றும் பல ஆபரணங்களோடும் அச்சுதனான் உனைக் காண வருவதைப் பார். நீ நாராயணனே என்ற சான்று இதைவிட வேண்டுமா. நீ ஒரு பாமரக் குழந்தையைப்போல் அழுகிறாயே?" என்றார்.

"ஆகா! உன் எண்ணம் தெரிந்தது. உன் சகோதரியின் வரவை அல்லவா எதிர்பார்க்கிறாய்? இதோ அவளும் சந்தனக் குழம்போடும் கண்ணுக்கு மையோடும் சிந்தூரப பொடியோடும் அரங்கத்து அணையானான உன்னைக்காண வந்துவிட்டாள்"

'குடந்தைக்கிடந்தானே தாலேலோ; 
நாராயணா அழேல் தாலேலோ ; 
அரங்கத்து அணையானே தாலேலோ" என்று ஆழ்வார் பாட கண்ணனும் உறங்கி விட்டான்.


அடுத்து கண்ணன் தவழும் அழகைகைக் காண்போம்.

தந்தையும் மகளும்-10

செங்கீரைப் பருவம் என்பது குழந்தை தவிழ ஆரம்பித்த பிறகு அந்த நிலையிலேயே மேலும் கீழும் ஆடுவது. கண்ணனும் விளையாட்டாக அவ்வாறு ஆடிக்கொண்டிருக்கிறான். யாராவது கண்டால் நிறுத்திவிடுகிறான். அதைக் கண்ட யசோதை அவனை மேலும் ஆடும்படி சொல்வதை பெரியாழ்வார் வர்ணிக்கிறார்.

"குழந்தையாக ஆடிக்கொண்டிருந்த கண்ணனை அழைத்து மேலும் ஆடும்படி யசோதை கூறினாள். 'ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே' என்று. ' ஆனால் என் கண்களுக்கு என்ன தெரிகிறது தெரியுமா ? அங்கு ஆடுவது யார் ?

' உய்ய உலகு படைத்து, உண்ட மணி வயிறா, 
ஊழிதோறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் 
பைய்ய உயோகு துயில் கொண்ட பரம்பரனே ,' என்றல்லவா அவனை அழைக்க வேண்டும்? இந்த மூவுலகையும் படித்துப் பின்னர் பிரளயகாலத்தில் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டு ஓர் ஆலிலை மேல் பாலகனாய் துயின்றவன் அல்லவா?"

" அவன் இங்கு குழந்தை வடிவில் செங்கீரை ஆடுகிறானே தந்தையே ! இது என்ன விந்தை ? " என்றால் கோதை. " 
"அதுதான் அவன் செய்யும் மாயம் குழந்தாய், அவன் யார்? 
'கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் 
குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய்!
`மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி' 
என நரசிங்க வடிவம் எடுத்து பக்தனை ஆட்கொள்ளஅரக்கன் உடலைக் கிழித்தவன் அல்லவா ?

இந்த கிருஷ்ணாவதாரத்திலும் ஆயர்களைக் காக்க அவன் என்னதான் செய்யவில்லை? இந்திரன் கோபம் கொண்டு ஏவிய மேகங்களின் பெருமழையிலிருந்து குன்று குடையாக எடுத்தானே? " என்ற பெரியாழ்வார் யசோதையின் நிலையில் நின்று,
'காள நன் மேகமவை கல்லோடு கால் பொழியக்
கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே 
ஆள! எனக்கொருகால் ஆடுக செங்கீரை 
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே' என்றார்.

ஆண்டாள் கேட்டாள், தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி கிருஷ்ணனாய் அவதாரம் செய்திருக்க அவன் பகவான் என்பதை இந்திரன் எவ்வாறு மறந்தான்?"

" தேவர்களும் அவன் மாயைக்குட்பட்டவர்களே என்பதைக் காட்ட கண்ணன் செய்த ஜாலம். அதில் இருந்து பிரமனும் மீள முடியவில்லையே ?"

"ஆம் தந்தையே ! ஒரு வருடம் தானே கன்றுகளாகவும் ஆயர்சிறுவராகவும் மாறி பிரமனின் கர்வத்தை ஒடுக்கியது பற்றி நினைத்தால் மனது விந்தையுறுகிறது." என்றாள் கோதை.

"இதில் விந்தை என்ன குழந்தாய்? த்ரிவிக்ரமனாக உலகில் எங்கும் நிறைந்து தாரகைகள் மற்றும் விண்ணுலகும் தாண்டி வளர்ந்தவனால் என்னதான் முடியாது?
'தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவன்' ஆயிற்றே" என்றார் பெரியாழ்வார்.

"பூதனை சகடாசுரன், தேனுகன் முரன் நரகன் முதலியவரைக் கொன்று 'கானகமாமடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் புரியும் சுந்தரன்' ஆயிற்றே! இவனை 'என் சிறுவா ஆடுக செங்கீரை' என்று யசோதை அழைக்க அவனும் கள்ளச்சிரிப்புடன் ஆடுகிறானே?
இவனைப் பார்த்தால் குவலயாபீடம் என்னும் யானையின் தன்தந்தை ஒடித்து எதிர்த்த மல்லர்களைக் கொன்றவன் என்று யார் சொல்வர்? " என்றார் பெரியாழ்வார்.

தந்தை வர்ணித்த் கண்ணனின் செங்கீரைப் பருவத்தை மனதில் உருவகப் படுத்தி மகிழ்கிறாள் ஆண்டாள். 
'பாலோடு நெய் தயிர் சாந்தோடு செண்பகமும் 
பங்கயம் நல்ல மருப்பூரமும் நாறிவர,' 
கண்ணன் உண்ட பால்நெய் தயிர் இவைகளின் மணத்துடன் அவன் உடலில் பூசிய சந்தனம் பூண்ட மலர்கள் இவையும் சேர்ந்து மனதை மயக்குகின்றன.

'கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடை க்
கோமள வெள்ளிமுளைப போல் சில பல் இலக'
கண்ணன் ஆடிக்கொண்டே சிரிக்கிறான் . அப்போது அழகான பவளவாயினுள் வெள்ளிமுளை போன்று முளைத்த சிறு பற்கள் தெரிய ,

'நீலநிறத்து அழகார் ஐம்படையின் நடுவே 
நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ '
நீல நிறத்து அழகனான அவன் கனி வாயமுதம் அவன் மார்பில் உள்ள ஐம்படைத்தாலியின் மேல் விழுகிறது.

செந்தாமரை ஒத்த அவன் கால்களில் கழல் , சிறிய மலர்களைப் போன்ற விரல்களில் மோதிரங்கள் , மார்பில் மாதுளைம்பூவைக் கொத்ததுபோன்ற பொன் மாலை , ஐம்படைத்தாலி, தோள்வளை, காதில் மகரக் குழை, தலையில் சுட்டி , 
இவ்வாறு ,
'அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும்
ஆமையும் ஆனவனே ! ஆயர்கள் நாயகனே ! '

ஹம்சமாகம், மத்ஸ்யமாகவும், நரசிங்கமாகவும், வாமனனாகவும், கூர்மமாகவும் ஆன அவனை மனக்கண்ணால் கண்ட கோதை " ஏழ் உலகும உடையாய் ஆடுக ஆடுகவே ' என்று பாடுகிறாள்.


"

தந்தையும் மகளும் -11

தாயை மகிழ்விக்க கண்ணன் செங்கீரை ஆடினதை கற்பனையில் கண்டு தந்தையும் மகளும் சிறிது நேரம் மெய்ம்மறந்து இருந்தனர். அப்போது யாரோ கைகொட்டும் சப்தம் கேட்டது.

கோதை யார் தந்தையே இது என்று கேட்க பெரியாழ்வார் " அது கண்ணனைத் தவிர யாராக இருக்க முடியும். இதோ பார் யசோதை கண்ணனை கைகொட்டச்சொல்கிறாள்.'"என்ற பெரியாழ்வார் யசோதை ஆகிவிட்டார்.

" மகாபலியிடம் இருந்து மூன்றடி மண் கொண்ட கைகளால் கொட்டாய் சப்பாணி. அப்போது உன் இடையில் உள்ள ஒட்டியாணத்தில் உள்ள மாணிக்கக் கற்கள் சப்திக்கின்றன. கைகளைக் கொட்டி சிரிக்கும்போது உன் பவளவாயில் முத்துப்போன்ற பற்களைக் காண்கிறேன் " 
'மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின்மேல்
ஆணிப்போனால் செய்த ஆய்ப்பொன் உடைமணி 
பேணி, பவளவாய் முத்து இலங்க பண்டு 
காணி கொண்ட கைகளால் சப்பாணி
கருங்குழல் குட்டனேசப்பாணி.'

" எங்கிருந்து கண்ணன் சப்பாணி கொட்டுகிறான் ?" எனக் கோதை வினவ , பெரியாழ்வார் கூறுகிறார் .

"என்அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்தம் 
மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி, மாயவனே கொட்டாய் சப்பாணி'
என்று யசோதை தன் மடியில் உள்ள கண்ணனை இறங்கி எதிரில் நந்தகோபரின் அருகில் சென்று சப்பாணி கொட்டக் கோருகிறாள்."

பெரியாழ்வார் யசோதையின் நிலையில் நின்று ,

" தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலி ! சந்திரா! வாஎன்று
நீ நிலா, நின்புகழா நின்ற ஆயர்தம்
கோ நிலாவ , கொட்டாய் சப்பாணி 
குடந்தைக் கிடந்தானே கொட்டாய் சப்பாணி'

ஆராவமுதனே இங்கு நிலா முற்றத்திற்கு வந்து சந்திரனை இங்கு வந்து உன்னுடன் விளையாட கைகொட்டி அழைப்பாய் அதைக்கண்டு உன் தந்தை ஆயர் தம் கோ மகிழ்வார் " என்று யசோதை கூற இங்கு அந்த குடந்தைக் கிடந்தான் கை கொட்டுவதைப்பார் ." என்று கூறினார்.

கோதை ,"அவன்தான் ஆராவமுதன் ஆயிற்றே ! தான் தேய தேய க் குறையும் அமுதத்தை மறுபடி நிரப்பிக் கொள்ளவே சந்திரன் வந்திருப்பான்." என்றாள். 
ஒரு சமயம் கண்ணன் புழுதியிலும் சேற்றிலும் விளையாடிவிட்டு வந்து யசோதையை அணைத்துக்கொண்டு அவள் மேனியில் அதைப் பூச பெரியாழ்வாராகிய யசோதை சொல்கிறாள்.

'புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து 
அட்டி அமுக்கி, அகம் புக்கு, அறியாமே ,
சட்டித்தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக்கன்றே ! கொட்டாய் சப்பாணி, 
பற்பனாபா கொட்டாய் சப்பாணி'

"பத்மநாபனே , நீ ஏன்இப்படி செய்கிறாய் என்று எனக்குத் தெரியாதென்று நினைத்தாயா? சட்டியில் இருந்த தயிர் தடாவினில் உள்ள வெண்ணை இவைகளை ஓசைப்படாமல் விழுங்கிவிட்டு கிடாக்கன்றைப்போல் திரிந்தவன் அல்லவா நீ?

இப்படி ஓடிவந்து இறுக அணைத்துக் கொண்டால் நான் அதை மறப்பேன் என்றுதானே ? கெட்டிக்காரனே கொட்டாய் சப்பாணி.'"

"புழுதியில் விளையாடினால் சேறு எப்படி வந்தது? " என்றாள் கோதை . அதற்கு பெரியாழ்வார் . "விளையாடிவிட்டு சேற்றில் புரண்டான் அதனால் அவன் நாபியில் சேறு ஒட்டிக்கொண்டது." என்றார்.

"அவன் பத்மநாபன் ஆயிற்றே தாமரை உள்ள இடத்தில் சேறு இருப்பதில் என்ன ஆச்சரியம் !" என்றாள் ஆண்டாள்.
அவன் சப்பாணி கொட்டும் கைகளை ஆழ்வார் மேலும் வர்ணிக்கிறார் .
அதைபிறகு காண்போம்

தந்தையும் மகளும்- 12

ஆழ்வார் தன் நிலையில் நின்று கண்ணனின் சப்பாணி கொட்டும் கைகளை வர்ணிக்கையில் அவனை பார்த்த சாரதியாகவும், ராமனாகவும், நரசிம்ஹனாகவும், காண்கிறார்.

"அன்று கௌரவர் தூதுவனாக வந்த உன் சொல் கேளாது போருக்குவர பார்த்தனுக்கு தேர் ஊர்ந்த கைகளால் கொட்டாய் சப்பாணி ," என்று ஆழ்வார் கூற கோதை ,
"கண்ணன் இப்போது சிறு குழந்தையாக கைகளை கொட்டுவது பின்னால் பாரதபோரில் தர்மம் வெற்றி பெறப்போவதை கைகளால் கரகோஷம் செய்து காட்டுவது போல இருக்கிறது ." என்றாள்.

அதற்கு அவர், "ஆம் குழந்தாய், கிருஷ்ணாவதாரத்தில் அவனுடைய ஒவ்வொரு செயலும் பொருள் வாய்ந்தது ." என்றார் "

"சாரங்க விற்கையன், நேமியங்கையன் ஆகிய திருமாலே ராமனாகி வேண்டிகொண்ட போதும் வராமல் இருந்த கடலை கலக்க வில்லெடுத்த கையால் , அரக்கரைக் கொல்ல சரம் எடுத்தகையால் இங்கு சப்பாணி கொட்டுகிறான் பார்த்தாயா?"

'கடலைக்கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி
சார்ங்க விற்கையனே சப்பாணி ,'
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
நேமியங்கையனே சப்பாணி ' என்று பரவசத்துடன் கூரிய ஆழ்வாரைப் பார்த்து கோதை கேட்டாள்.

"அவன்தான் நேமியன்கையன் ஆயிற்றே. ராவணனைக் கொல்ல கடலுக்கு குரங்குகளாலே அணை கட்டி கடலைக் கடந்து இலங்கை சென்று இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா?அயோத்தியில் இருந்தே சக்கரத்தால் கொல்ல வேண்டியதுதானே ? "

"அவன் மனித உருவில் வந்தவன் என்பதை மறந்து விடுகிறாயே ? ராவணனுக்கு மனிதர்களாலும் குரங்குகளாலும் மட்டுமே அழிவு என்பதனால்தான் இவ்வளவு சிரமம்."என்றார் பெரியாழ்வார்.

"இந்தக் கைகள் தானே அன்று இரணியன் தூணைத் தட்ட அதைப பிளந்து சிங்க உருவில் அவன் மார்பைக் கிழித்தது? இப்போது சப்பாணி கொட்டும் இந்தக்கைகள்
'வாள்உகிர் சிங்க உருவாய்
உளந்தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகள்'"என்ற பெரியாழ்வாரிடம் ஆண்டாள் கூறினாள்.

"தந்தையே இந்த பிரம்மா அசுரர்களுக்கு இப்படி வரம் கொடுத்ததால் நாராயணனுக்கு எவ்வளவு கஷ்டம் ? " இரணியனைக் கொள்ள எவ்வளவு பாடு பட வேண்டி இருந்தது? " என்றாள் ஆண்டாள் .

" ஆம், மனிதன் மிருகம்,ஆயுதங்கள் , பகல், இரவு , உள்ளே, வெளியே இப்படி எந்த வகையிலும் சாகக்கூடாது என்ற வரத்தை பிரம்மா தந்ததனால், பகவான் மனிதனும் இன்றி மிருகமும் இன்றி நர சிங்கமாக வந்து மாலை வேளையில் வாயிற்படியில் நகத்தாலேயே அவனை க் கொல்லவேண்டி வந்தது.

அவனுக்கு தர்ப்பைப்புல் ஆனாலும் நகம் ஆனாலும் எல்லாமே ஆயுதம் தான். அதனால்தான் பீஷ்மர் விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் ஸர்வப்ரஹரணாயுத: என்று அவனை துதிக்கிறார். பாரத யுத்தத்தில் ஆயுதமே எடுக்கவில்லை. ஆனால் அவன் பாஞ்சஜன்யத்தை எடுத்த் ஊதியபோதே பகைவர்கள் அழிந்தார்கள் .
அதனால் தான் கீதையில் 'மயைவ ஏதே நிஹதா: பூர்வம் ஏவ|நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின்,' (BG11.33), "நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாகிவிட்டது. . நீ ஒரு கருவிதான் ." என்று கூறுகிறான் கண்ணன் ." என்றார்

கடைசியில் ஆழ்வார் கூறுகிறார். "இந்தக் கைகள் அல்லவா அன்று தேவர்களுக்கு உதவ மந்தரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி பாற்கடலை கடைந்தன"

'அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாகக் நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
கார்முகில் வண்ணனே சப்பாணி'
என்று பரவசத்தில் ஆழ்கிறார் .

தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி பாயும் என்றது போல கோதை " ஆஹா எவ்வளவு அழகு? அவன் கடலைக்கடையும்போது அவன் உத்தரீயம் பறக்க, பீதாம்பரத்தில் பால் திவலைகள் தெறிக்க அவனை மனக்கண்முன் காண்கிறேன்.
அப்போது கடையப்பட்ட பாற்கடலே கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணையாக ஆனதோ ? அதனால்தான் கண்ணனுக்கு வெண்ணை பிடிக்கிறதோ "? என்றாள்

தந்தையும் மகளும்-14

பெரியாழ்வார் யசோதையாய் கண்ணனை வந்து தழுவுமாறு கூப்பிடுகிறார்.
'என்னிடைக்கு ஒட்டரா அச்சோ அச்சோ'- " கண்ணா இங்கு வந்து என்னை த் தழுவி என் இடையில் ஏறிக்கொள்" என்று.
ஆண்டாள் கேட்டாள் , "யசோதை கண்ணனை எந்தக் கோலத்தில் கண்டாள்?" என்று.
ஆழ்வார் கூறினார்.
'பொன் இயல் கிண்கிணி சுட்டிப் புறம் கட்டி
தன இயல் ஓசை சலன் சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல்,'

" மின்னலுடன் கூடிய மேகம் விரைந்து வந்ததுபோல ஒளி பொருந்திய அரையில் கட்டிய கிண்கிணி சதங்கை சலன் சலன் என்று ஒலிப்ப வந்தான். "

' செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப
சங்கு வில் வாழ் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ
ஆரத்தழுவாய் வந்து அச்சோ அச்சோ'

" அவன் பவள வாய் அமுதத்திற்கு ஆசைப்பட்டதைப் போல செங்கமலப்பூவில் தேன் உண்ணும் வண்டுகள் அதை விட்டு அவன் இதழை மொய்க்க , பஞ்சாயுதம் ஏந்திய அவன் கைகளால் வந்து தழுவுமாறு அழைத்தாள்."

இதைக் கூறிய பெரியாழ்வார் கண்ணனின் திருவிளையாடல்களை நினைவு கூறுகிறார் .
"பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்தவன் , சமாதானத் தூதுவன் போல் சென்று பாரதப் போருக்கு வழி வகுத்தவன், நஞ்சுமிழ் நாகமாகிய காளியன் பொய்கை புகுந்து அவன் மேல் நடமாடி அவனுக்கு அருள் செய்தவன், கூனியின் கூனை நிமிர்த்தியவன் ,

" ஆம் தந்தையே , அவன் தீயவருக்கும் அவர் திருந்த வாய்ப்பு கொடுத்துபிறகே அழிக்கிறான் அல்லவா? ராமாவதாரத்தில் ராவணன் திருந்தி மன்னிப்புக் க் கேட்பானாகில் அவனுக்கும் சரணம் அளிப்பேன் என்றவன் அல்லவா? என்றால் ஆண்டாள்.

ஆழ்வார் " அப்படி திருந்தாதவரை தண்டிப்பான். துரியோதனன் சபையில் 'சூழலைப் பெரிது உடைத் துரியோதனனை அழல விழித்தான்,' தன்னை அவமதித்த துரியோதனனைக் கண்டு தீப்போல் விழித்தான் அல்லவா ? அதன் விளைவாக போரை விளைவித்து விஜயன் தேர் செலுத்தி இப்பூமி பாரத்தை குறைத்தான்." என்றார்.

ஆண்டாள் , "எல்லாம் அவன் திருவுள்ளமே அல்லவா ? " என்றாள்.
"ஆம் அவன் அவதாரம் எடுத்ததே இந்த பூமிக்கு பாரமாக இருந்த தீயவர்களை அழிப்பதுதான்." என்றார் பெரியாழ்வார்.

" ஆனால் யசோதைக்கு அவன் 'கார் ஒக்கு மேனிக் கரும் பெரும் கண்ணன்' அல்லவா? அதனால் அவள் அவனை வந்து தழுவும்படி அழைக்கிறாள். "

அதன்பின் பெரியாழ்வார் மகாபலியின் கர்வத்தை த்ரிவிக்ரமனாய் வந்து ஒடுக்கியதை சற்று விரிவாகவே உரைக்கிறார் .

'மிக்கப் பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது இது என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ
சங்கம் இடத்தனே அச்சோ அச்சோ '

யசோதை யாகிய பெரியாழ்வார் மகாபலி சரிதத்தை நினைவு கூறுகிறார்.

" பெரும் புகழ் பெற்ற மகாபலி வேள்வியில் நீ வாமனனாய் வந்து மூவடி மண் யாசிக்க சுக்ராச்சாரியார் உன்னை அறிந்து இது தகாதுஎன்று தானத்தைத் தடுக்க ஓர் வண்டாய் மாறி நீர் பாத்திரத்தின் துவாரத்தை அடைக்க நீ ஒரு சிறு துரும்பால் அவர் கண்ணைக் கிளறினாய் அல்லவா? சங்கை இடக்கையிலும் சக்கரத்தை வலக்கையிலும் ஏந்தும் பிரானே ன் வந்து என்னைத் தழுவுவாய்."

"நீர் அவன் கையில் விழ விழ உயர்ந்து விண்ணும் மண்ணும் அளாவ நின்றானே, என்ன விந்தை" என்ற ஆண்டாள் அந்த த்ரிவிக்ரமாவதாரத்தை எண்ணி தன்னை மறந்தாள்.

அப்போது பெரியாழ்வார் நமுசியைப் பற்றி கூற தன்னிலை எய்தினாள்.

பெரியாழ்வார் கூறினார் . " மஹாபலியின் புதல்வனான நமுசி கூறினான் ,
'என்ன இது மாயம் ? என் அப்பன் அறிந்திலன்;
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன,'

"இது மாயம் என் தந்தை இந்த ஏமாற்றுசெயலை அறிய வில்லை. முன்னே இருந்த உருவத்திலே யே அளக்க வேண்டும் ." என்று கூற அவனை பகவான் வானில் சுழற்றி அடித்தார்."

மேலும் யசோதை மனநிலையில், பெரியாழ்வார் சொல்கிறார் ,

" இவ்வுலகில் அறியாமை என்னும் பேரிருள் சூழ்ந்த போது வேதம் மறைய அன்ன வடிவில் வந்து உலகைக் காப்பாற்றியவனே வந்தென்னை அணைப்பாயாக."

'அவன் வந்து தழுவினானா என்று கோதை கேட்க , பெரியாழ்வார் கூறினார்.

"யசோதை கடையும்போது கண்ணன் வந்து பின்னாலிருந்து தழுவிக் கொள்கிறான்."
" அது வெண்ணெய்க்காகத்தானே ?" என்று ஆண்டாள் வினவ, பெரியாழ்வார் , "இருக்கலாம்," என்று கூறி அந்தகாட்சியில் ஒன்றி யசோதையாகக் கூறுவார்,

" விஜயனுகாக மணித்தேர் ஊர்ந்தவன், வாமனன், பார் அளந்தான் , உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி வெண்ணை விழுங்கியவன் இங்கு என்னைஒன்றும் அறியாதவன் போல' புறம் புல்குவான்', பின்னாலிருந்து அணைக்கிறான்."

" மணற்குன்றின் மேல் ஏறி குழல் இசைக்க , முனிவரும் தேவரும் அதைக் கண்டு வணங்கிய சிறுவன் எண்ணை அணைக்கிறான்."
மேலும் பெரியாழ்வார் கூறினார்.

" கற்பக மரம் வேண்டும் என்ற காதலிக்கு அவள் முற்றத்தில் அதைக்கொணர்ந்தவன் என்னைப புறம் புல்குவான்."
அதைக்கேட்ட கோதை தன்னையே முன் அவதாரத்தில் பாமாவாக எண்ணி சூழ்நிலையை மறந்து விட, பெரியாழ்வார் கண்ணன் எவ்வாறு அன்னையை விளையாட்டாக அப்பூச்சி காட்டி பயமுறுத்தினான் என்பதை சொல்ல ஆரம்பிக்க அவள் தன் நிலை அடைந்தாள்.
அது அடுத்து

தந்தையும் மகளும் -15

இன்னொருத்தி முறையிட்டாள்.
'செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால் 
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் ;பண்டும் இப்பிள்ளை பரிசு அறிவன்
இன்னும் உகப்பன் யான் என்று சொல்லி 
எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்.'

"இவள் திருவோணம் வ்ரதத்திற்காக செய்து வைத்த பக்ஷணங்களை எல்லாம் நைவேத்யம் ஆகும் முன்பே கண்ணன் சாப்பிட்டுவிட்டு இன்னும்வேண்டும் என்று கேட்கிறானாம்."

ஆண்டாள் கூறினாள், " தந்தையே இதென்ன பேதைமை! திருவோண நட்சத்திரத்தில் உதித்தவனே நேரில் வந்த பிறகு நைவேத்யம் என்று ஒன்று எதற்காக ? "என்றாள்.

"ஆம் , அந்த உண்மை தெரியாத பேதையர் சிலரும் இருந்தார்கள்.இதோ இன்னொருவளைப்பார் . 
'கன்னல் இலட்டுவத்தோடு சீடை காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்;
இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் 
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
பிறங்கொளி வெண்ணையும் சோதிக்கின்றான்

"லட்டு எள்ளுருண்டை இவைகளை என் வீடுதானே இங்கே யார் வரப்போகிறார்கள் என்று வைத்துவிட்டு வந்தாளாம் . அப்போது கண்ணன் அங்கு புகுந்து அவ்வளவையும் உண்டதும் அல்லாமல் உறியில் வெண்ணை உள்ளதா என்று பார்க்கிறானாம்."

"அதற்குள் இன்னொருவள் வந்தாள். அவள் கூறினாள், 
'இதுவாவது பரவாயில்லேயே! கண்ணன் என்மனைப் புகுந்து என் மகள் கையில் இருந்த வளையைக் கழற்றிக்கொண்டு அங்கு வந்து நாவல் பழம் விற்ற ஒருவளிடம் கொடுத்து நாவற்பழங்கள் வாங்கினான் . என்னடா இப்படிச்செய்தாய் என்றால் நான் ஒன்றுமே செய்யவில்லையே என்கிறான்.,"என்றாள்.

ஆண்டாள் இதையெல்லாம் கேட்டு கைகொட்டிச் சிரித்தாள். பிறகு யசோதை இதைக்கேட்டு என்ன செய்தாள் என்க., ஆழ்வார் கூறினார்.

யசோதை கண்ணனைக் கூப்பிடுகிறாள். 
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே 
நேசம் இலாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே , போதராயே.

"கண்ணா , நீவருவாயோ வெண்ணை பக்ஷணம் எல்லாம் எடுத்து சாப்பிடுவாயோ என்று ஏங்கும் எவ்வளவோ பேர் இருக்க உன்மேல் அன்பில்லாதவர் வீட்டில் நீ ஏன் போய் விளையாடுகிறாய் ? இங்கு உனக்கிலாத வெண்ணையா திண்பண்டமா? இங்கே வா . " என்று கூப்பிடுகிறாள்.

அடுத்து கண்ணன் கன்று மேய்க்கப போகிறான் . யசோதை ஏன் அனுப்பினோம் என்று வருத்தப்படுவதைக் காண்போம்


No comments:

Post a Comment