Thursday, September 24, 2020

god wont appear if you dont have belief - Spritual story

சாமி, நீயே துணை J K SIVAN
மனைவி குழந்தைகளை நிர்க்கதியாக, நிராதரவாக விட்டுவிட்டு எவளுடனோ ஓடும் கணவன்கள் பற்றி நாம் அறிவோம். இருவது வருஷம் ஆயிட்டுது ருக்குவை மாதவன் கைக்குழந்தை முரளியோடு விட்டுச் சென்று!!.
நாகர்ஜுன சாகர் அருகே ஒரு கிராமத்தில் ருக்கு குழந்தை முரளியோடு குடியேறி வளர்த்து அவனை பக்கத்து நகரத்தில் படிக்கவும் வைத்தாள். பள்ளியில் முரளியின் பெயர் "பார்த்தசாரதி" இதன் பின்னால் ஒரு குட்டி கதை ஒளிந்துகொண்டிருப்பதை வெளியே எடுத்து தருகிறேன். சுருக்கமாக அது இதுதான் :

***
ஏகாம்பரம் கிண்டியிலேயே பழியாக கிடப்பான் குதிரை ரேஸ் செல்பவன். எந்த குதிரையின் மீது பணம் கட்டினாலும் அது அடிபடாமல் ஜாக்ரதையாக கடைசியில் தான் வந்தது. அவன் பெண் தான் ருக்மணி என்கிற ருக்கு. அவர்கள் ஆந்த்ராவில் ஒரு கிராமத்தில் வசித்தபோது எதிர் தெருவில் இருந்த பார்த்தசாரதி கோவில் தான் ருக்குவுக்கு போக்கிடம். பார்த்த சாரதியின் புன்முறுவல் நிறைந்த முகம் நெஞ்சிலே எப்போதும் நிற்க அவள் தினமும் சொன்ன வார்த்தை "சாமி, நீயே துணை". இதுவே அவளுக்கு தெரிந்த எல்லா மந்திரமும். பார்த்தசாரதியை நினைத்தாலே அவள் கவலைகள் பறக்கும். அப்பன் தினமும் குடி போதையில் இரவில் அம்மாவோடு சண்டையிட்டு அவளையும் ருக்குவையும் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போதெல்லாம் "சாமி நீயே துணை". அப்பன் ஒருநாள் திடீரென்று மாரடைப்பால் கண்ணை மூடினான் அவனது கை வண்டியில் ருக்கு காய்கறி வியாபாரம் செய்து பிழைத்தாள் . வயிறு கழுவ 4வது படிக்கும் போதே பள்ளிப் படிப்பை நிறுத்தி வீட்டு வேலை செய்து பாத்திரம் கழுவியது அவளது பழங்கதை.
***
நாகர்ஜுன சாகர் பக்கம் முரளி தினமும் ஒரு மைல் நடந்து தான் குறுக்கு வழியில் ஒரு அடர்ந்த காட்டு பாதையில் பள்ளி செல்ல வேண்டும். பஸ் டவுன் வழியே செல்லும் அதில் போக முரளிக்கு ஆசை.
"அம்மா என்னை பஸ்ஸிலே அனுப்பு"
" ஏன் அழுவுறே"
"நாம்ப ஏழை கண்ணு என்கிட்டே காசு இல்லப்பா. நீ குறுக்கு வழியாகவே நடந்து போப்பா" என்றாள்.
" பயமா இருக்கு மா".
"சாமி, நீயே துணை'' என்று சொல்லுடா. கிருஷ்ணன் காப்பாத்துவார். பயமா இருக்கும்போது கிருஷ்ணா
கிருஷ்ணா என்று கூப்பிட்டு கிட்டே போ. வேறே வழி தெரியலை கண்ணு."
காட்டு பாதையில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக பத்து வயது முரளி, கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூப்பிட்டு கொண்டே போனான். அவன் மனதுக்கு அது தெம்பாக இருந்தது. யாரோ கூடவே துணைக்கு வருவது போல் இருந்ததால் மனதில் பயம் விலகியது.
அன்று பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசார விருந்து என்பதால் எல்லா மாணவர்களும் எதாவது பரிசு கொடுக்கவேண்டும் என்று அவன் வகுப்பு வாத்தியார் தாமோதரன் ஆர்டர் போட்டார்.
''அம்மா எங்க வாத்யார் ஹெட்மாஸ்டருக்கு பரிசு கொடுக்க ஏதாவது கண்டிப்பாக கொண்டு வரணும்
னுட்டார். நீ என்னம்மா தருவே?''
"நான் கூலி வேலை செய்றேன். நமக்கு யார்டா இருக்க உதவ. உனக்கு வழியிலே துணைக்கு வருவானே கிருஷ்ணன், அவனையே ஏதாவது தரச்சொல்லி கேளு '' என்று ஏழை அம்மா கண்ணீர்விட்டு மனமுருகி
சொன்னாள்.
"கிருஷ்ணா கிருஷ்ணா" என்று வழக்கம்போல் முரளி கூப்பிட்டபோது "என்ன முரளி சொல்லு" என்று காட்டுப்பாதையில் அவனுக்கு பழக்கமான குரல் கேட்டது
"எங்க வாத்தியார் தாமு ஸார் , ஹெட்மாஸ்டருக்கு என்னை ஏதாவது பரிசு கொண்டான்னு சொல்றார். அம்மாவை கேட்டா உன்னை கேக்க சொல்றா. நீ ஏதாவது எங்க ஹெட்மாஸ்டருக்கு பரிசு கொடுக்கிறியா".
''அதுக்கென்னடா, அதோ உன் எதிரே தெரியுது பார் ஆலமரம் அதன் அடியில் ஒரு செம்பு நிறைய பால் வச்சிருக்கேன் அதை கொண்டு போய் கொடு. மாட்டுக் காரன் கிட்ட பால் தானே இருக்கும்".
எல்லா பிள்ளைகளும் வித விதமான பரிசு கொடுக்க முரளியின் பால் செம்பு சீந்தப்படாமல் இருந்தது. தாமு அவனை கேவலமாக பார்த்தார்.
மதியம் தாமு தனது வீட்டில் மனைவியிடம் "அந்த முட்டாள் பையன் கொடுத்த செம்பு பாலை காய்ச்சி கொடு நாம்பளாவது குடிக்கலாம்" என்றதும் அடுப்பில் பாத்திரத்தில் பால் செம்பை கவிழ்க்க "என்ன அதிசயம்! பால் செம்பு மீண்டும் நிரம்பியது. ஆச்சர்யத்தோடு மறுபடியும் பாத்திரத்தில் பாலைக் கொட்டினாள். செம்பு மீண்டும் பாலோடு தானாகவே நிரம்பியது. பயந்து போய் அவள் இதை தாமுவிடம் சொல்ல, அவர் பள்ளிக்கூடத்துக்கு ஓடி முரளியைப் பிடித்து
"ஏலே, உனக்கு யார்டா பால் செம்பு கொடுத்தது?"
அவன் பூரா விஷயம் சொல்ல, தாமுவும் மற்ற பிள்ளைகளும் கொல்லென்று சிரித்தனர்
"கிருஷ்ணனாவது, ராமனாவது, என்னடா இது உளறல்? . யாரோ மாஜிக் காரன் கிட்டே செம்பு வாங்கி வந்து ஏமாத்தறே"
" இல்லே சார், கிருஷ்ணன் தான் கொடுத்தான்".
" டே, எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் திருப்பி திருப்பி கிருஷ்ணன் தினமும் கூப்பிட்டா பேசுவான், துணை வருவான், பால் செம்பு தந்தான் என்று அதையே சொன்னாக்க . முட்டாளே, கிருஷ்ணன் ராமன் எல்லாம் இப்போ எங்கடா இருக்காங்க? கோவில்ல தான் சிலையாக, படமாக இருக்காங்க புராணத்திலே தான் பேசியிருக்காங்க"
"இல்லே சார் தினமும் என் கூட கிருஷ்ணன் பேசுவான் சார், அவன் தான் சார் இதை உங்க கிட்டே கொடுக்க சொன்னான்".
"டேய் , மேலே பேசாதே, ரொம்ப கோவமாயிருக்கேன். பிரம்பு பொளந்துடும். இப்போவே உன் கூட வரேன் அந்த கிருஷ்ணனை காட்றியாடா?"
"சரிங்க சார்"
காட்டில் தாமு அருகில் நிற்க முரளி உரக்க ''கிருஷ்ணா கிருஷ்ணா'' என்று பலமுறை கூப்பிட்டும் பதிலே இல்லை.
முரளி அழுதுகொண்டே ":கிருஷ்ணா எங்க வாத்தியார் வந்திருக்கார் நான் சொல்றதை நம்ப மாட்டேன்கிறார். உன்னை பார்க்கணுமாம் கொஞ்சம் வரியா."
அப்போது தீர்க்கமாக ஒரு குரல் அவர்கள் இரண்டு பேருக்கும் கேட்டது.
"முரளி, நான் எப்படி அப்பா வர முடியும் அவர் தான் நான் இப்போது இல்லவே இல்லை . வெறும் கட்டுக்கதை என்று சொல்லிட்டாரே நம்பாதவர் முன் நான் எதற்கு வரணும்''
தாமு கண்ணில் நீர் வடிய "கிருஷ்ணா என்னை மன்னிச்சுடு நான் தப்பு பண்ணிட்டேன்" என்று குரல் வந்த திசையில் வணங்கினார்.
முரளியின் காலை பிடித்து கொண்டு "சாமி, நீயே எனக்கு துணை வழிகாட்டு" என்றார்.

No comments:

Post a Comment