அத்யாத்ம ராமாயணம் - முன்னுரை
அத்யாத்ம ராமாயணம் ப்ரம்மாண்ட புராணத்தில் காணப்படும் ஒரு தொன்மையான நூலாகும். இதில் ராமாவதாரத்தின் வேதாந்த உண்மைகள் கூறப்படுகின்றன. சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த சம்பாஷணை உருவில் உள்ள இது ஞானமும் பக்தியும் நிறைந்ததாகும்.
இதில் இரண்டு முக்கியமான பகுதிகள் ஸ்ரீராம ஹ்ருதயம், ஸ்ரீராம கீதை. முதலாவது பால கண்டத்திலும் மற்றது உத்தர காண்டத்திலும் காணப்படுகிறது.
இதன் பின்னணி என்ன என்று பார்த்தால் ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம் ராமாவதாரத்தின் உட்பொருளைக் கூறும்படி வேண்டினாளாம். அதற்கு சிவபெருமானுடைய பதிலே அத்யாத்ம ராமாயணம். இதை பிரம்மா நாரதரிடம் கூற சூதபௌராணிகர் மூலம் உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
அத்யாத்ம ராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் உள்ளார்ந்த மறைமுகமான பொருளை உணர்த்துவதேயாகும். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடிக்கடித் தன் உரையாடலில் அத்யாத்ம ராமாயணத்தில் பக்தியும் ஞானமும் மேம்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு பக்தி மார்கத்தில் இதன் அவசியத்தை அறிவுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.
பக்தி , ஞானம் இவை மூலம் ஸ்ரீராமனின் அருள் பெற்று முக்தியை அடைய வழிகாட்டும் நூல் எனக் கொள்ளலாம்.
பால காண்டத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் ஐந்து ஸ்லோகங்கள் இதன் பெருமையை விளக்குகின்றன.
பிறகு சிவன் உண்மை ச்வரூபத்தைப்பற்றிக் கூறுகிறார். அதன் பின்னர் சீதை ஹனுமானுக்கு ராமனின் கட்டளைப்படி ஞானோபதேசம் செய்தபின் , அதை ஒட்டி ராமனே ஹனுமானுக்கு உபதேசம் செய்வதுதான் ஸ்ரீராம ஹ்ருதயம் எனப்படுகிறது.
இதை மூன்றுதரம் ஹனுமனுடைய சந்நிதியில் பாராயணம் செய்பவருடைய எல்லாவித மனோபீஷ்டங்களும் பூர்த்தியாகும் என நம்பப்படுகிறது.
இதில் உள்ளர்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ராமாயண கதை எங்கெல்லாம் வால்மிகியிடம் இருந்து வேறுபடுகிறதோ அதையெல்லாம் மட்டும் முன்னிலைப்படுத்த எண்ணியுள்ளேன். ஏனெனில் ராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதைதானே.
No comments:
Post a Comment