Monday, July 6, 2020

Uddhava gita part 5,6 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

உத்தவ கீதை-5- நவயோகி சம்வாதம் தொடர்ச்சி

13.ஆண் யானை- யோகியானவன் மரத்தாலான ஸ்திரீயைகூட காலினாலும் ஸ்பர்சிக்கக்கூடாது. பெண் சங்கத்தால் ஆண்யானையைப்போல் கட்டுப்படுவான். 
காட்டு யானையை பிடிப்பதற்கு ஒரு பழக்கிய பெண் யானையை குழிக்கு அந்தப் பக்கம் நிறுத்தி ஆண் யானையை அங்கு விரட்டுவார்கள். அது பெண்யானையைப் பார்த்து நெருங்க முயற்சிக்கையில் குழியில் அகப்பட்டுக்கொள்ளும். 
அது மட்டும் அல்ல.பெண்யானையிடம் உள்ள மோகத்தால் ஆண் யானையானது மற்ற பலம் பொருந்திய ஆண் யானைகளால் போட்டியினால் சண்டையிட்டு கொல்லப்படும். அதனால் யோகியானவன் பெண் சங்கத்தை மரணத்திற்கு காரணம் போல் விலக்கவேண்டும்.

14.தேன் வேட்டைக்காரன் – தேனீக்கள் அருபாடுபட்டு தேனை சேகரிக்கின்றன. ஆனால் அதை எவனோ ஒருவன் எடுத்து அனுபவிக்கிறான். அதுபோல லோபியானவன் தன் செல்வத்தை தானும் அனுபவிப்பதில்லை. மற்றவர்க்கும் கொடுப்பதில்லை. கடைசியில் எவனோ அதை எடுத்துப்போகிறான். 
15.மான்- வேடனுடைய குழல் கீதத்தில் மயங்கி அவனுடைய அம்புக்கு இரையாகிறது மான். அதுபோல வனவாசியான துறவி புத்தியைக் கெடுக்கக்கூடிய பாட்டை ( sensuous music, not devotional) ஒருபோதும் கேட்கக்கூடாது. 
இதற்கு உதாரணம் ஒன்று கூறுகிறார். 
ந்ருத்யவாதித்ர கீதானி ஜுஷன் க்ராம்யாணி யோஷிதாம் 
ஆஸாம் க்ரீடனகோ வச்ய:ருஷ்யஸ்ருங்கோ ம்ருகீஸுத (ஸ்ரீமத், பா. – 11.8.18)
நகர ஸ்திரீகளின் நடனம், வாத்யம், சங்கீதம் இவைகளால் கவரப்பட்டு ருஷ்யஸ்ருங்கர் அவர்களுக்கு வசமானார்.
ரிஷ்யஸ்ருங்கர், விபாண்டகர் என்ற ரிஷிக்கும் ஒரு கலைமானுக்கும் பிறந்தவர்..விபாண்டகர், மகனை பெண் வாசனையே தெரியாதபடி வளர்த்தார். தன் ராஜ்யத்தில் பல்லாண்டுகள் மழை இல்லாதிருக்கையில் மன்னன் ரோமபாதன், தன் குருவின் அறிவுரையை ஏற்று, ரிஷ்யஸ்ருங்கரை தன் நாட்டிற்கு வரவழைக்க, நாட்டியப்பெண்களை அனுப்பினான். அவர் பாதம் பட்டதுமே அங்கே பெருமழை பெய்து, அரசனின் துயர் தீர்ந்தது. அரசனும் மகிழ்ச்சி யுற்று, தன் மகள் சாந்தையை ரிஷ்யஸ்ருங்கருக்கு விவாகம் செய்து கொடுத்ததாகக் கதை. இந்த ரிஷ்யஸ்ருங்கரே தசரதனுக்கு, குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் புத்ரகாமேஷ்டி யாகம் நடத்த உதவியவர். இவர் கலைக்கோட்டு முனிவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
16.மீன்.- தூண்டிலில் உள்ள இரைக்கு ஆசைப்பட்டு நாவின் சுவையால் அழிகிற மீனைப்போல நாவுக்கு அடிமையான மனிதன் இறக்கிறான். மற்ற இந்த்ரியங்களை அடக்குவதைவிட நாவை அடக்குவது எவ்வளவு கஷ்டம் என்பதை அடுத்துக் கூறுகிறார்.
இந்த்ரியாணி ஜெயந்தி ஆசு நிராஹாரா: மனீஷிண: 
வர்ஜயித்வா து ரஸனம் தத் நிரன்னஸ்ய வர்ததே( 11. 8.20)
புத்திமான்கள் ஆகாரத்தைத் தவிர்த்து மற்ற இந்த்ரியங்களை எளிதில் ஜெயிக்கிறார்கள். ஆனால் ஆஹாரத்தை மட்டும் விட்டவனுக்கு சுவை உணர்வு அதிகரிக்கிறது. ( ஏகாதசி பட்டினி இருக்கையில் த்வாதசி அன்று சுவையான உணவு சாப்பிடலாம் என்று நினைப்பதைப்போல.)
அதனால் நாவை அடக்குவதே உண்மையான இந்த்ரிய நிக்ரஹம் என்று கூறுகிறார். 
தாவத் ஜிதேந்த்ரியோ ந ஸ்யாத் விஜிதானி இந்த்ரிய: புமான் 
ந ஜயேத் ரஸனம் யாவத் ஜிதம் ஸர்வம் ஜிதே ரசே (11.8.21)
நாவை அடக்காதவரை இந்த்ரியங்களை வசப்படுத்த முடியாது. ஒருவன் நாவை அடக்கிவிட்டால் எல்லாம் வென்றவன் ஆவான்.
நாக்கு சுவை அறியும் இந்த்ரியம் மற்றும் வாக்கு என்னும் கர்மேந்த்ரியம். நாவை அடக்குவது என்பது இந்த இரண்டு வழியிலும் அவசியம். அதனால் தான் வள்ளுவர் 
யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு. 
என்று கூறினார்.
இதுவரை காட்டிய உதாரணங்களில், ஒவ்வொரு பிராணியும் ஒவ்வொரு இந்த்ரியங்களால் ஏற்பட்ட ஆசையால் நாசம் அடைகின்றன என்று பார்த்தோம். யானை – ஸ்பர்சம், தேனீ, கந்தம்,மான்- சப்தம், மீன் -, சுவை , விட்டில் – ஒளி. மனிதனுக்கு மட்டும் இந்த ஐந்து இந்த்ரியங்களாலும் ஆசை தூண்டப்படுகிறது. மனிதனின் நிலை பரிதாபமானது


உத்தவ கீதை -6- நவயோகி சம்வாதம்

17. பிங்களை-விதேக நகரத்தில் பிங்களை என்றுஒரு தாசி இருந்தாள். அவள் ஒரு சமயம் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளிவாயிலில் காத்திருந்தாள். அவ்வழி வருபவரில் ஒருவர் தனவந்தராக இருந்தால் தனக்கு நல்லது என்று எண்ணி எதிர்பார்த்து உள்ளே போவதும் வெளி வருவதுமாக இருந்தாள்.

ஒருவரும் தன்னை நாடி வராமையால் பொருளாசையால் மனம் கலங்கி கவலையுற்ற அவளுக்கு தன் மேலேயே வெறுப்பு வந்து வைராக்கியம் உண்டாயிற்று. 
அவள் சிந்தித்தாள்.

எப்போதும் இருப்பவரும் என்றும் இன்பம் அளிப்பவரும் ஆன இறைவனை விட்டு துன்பத்தையும் பயத்தையும் அல்ப சுகத்தையும் கொடுப்பவனான மனிதனை நாடுகிறேனே. துராசை கொண்ட எனக்கும் வைராக்யத்தை கொடுத்த பகவான் கருணை மிக்கவர். அச்சுதனை விட்டு அல்பமானுடனை விரும்பிய எனக்கும் நல்ல புத்தி கொடுத்தார் என்றால் அது நான் முன் ஜன்மத்தில் செய்த நற்செய்கையின் பலனாகத்தான் இருக்க வேண்டும்.

சம்சாரமாகிய கிணற்றில் விழுந்து விஷயங்களால் விவேகம் இழந்து காலம் என்னும் சர்ப்பத்தால் விழுங்கப்படுவதை எவன் உணர்கிறானோ அவனை பகவானைத் தவிர யார் ரட்சிக்க முடியும்? 
இவ்வாறு உணர்ந்து அவள் சுகமாகத் தூங்கினாள்.

அவதூதர் கூறினார்.

ஆசையானது அளவற்ற துன்பம் . ஆசையின்மை அளவற்ற இன்பம். இதை உணர்ந்தால் பிங்களையைப்போல் நிம்மதியாக இருக்கலாம்.,

18.குரர பக்ஷி –Osprey- ஒரு குரரபக்ஷி ஒரு துண்டு மாமிசத்தைக் கவ்விக்கொண்டு பறந்தபோது மற்ற வலிமை மிக்க பட்சிகள் அதைத்துரத்தின. அது உடனே மாமிசத்தைக் கீழே போட்டுவிட்டு சுகமடைந்தது. இதிலிருந்து பிரியமானதைத் தேடி அடைவதனால் துன்பமே ஏற்படுகிறது. எதையும் வேண்டாமையே சுகம் அளிக்கிறது என்று கற்றுக்கொண்டேன்.

19. தனக்குதானே விளையாடிக்கொண்டு தானே சந்தோஷம் அடையும் குழந்தையைப் போல ஆத்மஞானியும் கவலை அற்று பரமானந்தத்துடன் சஞ்சரிக்கிறான்.

20. இள மங்கை- ஒரு இளமங்கை தன்னை பெண் பார்க்க வீடு தேடி வந்தவர்களை அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உபசரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அதற்காக நெல் குத்துகையில் தன் வளைகள் செய்த சப்தத்தால் வேறு வரும் உதவிக்கு இல்லை என்று தங்கள் ஏழ்மையை பறைசாற்றுவதாக நினைத்து கைக்கு ஒன்றாக இரண்டு வளைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை கழட்டி விட்டாள். அப்போதும் அந்த இரண்டும் மோதி சப்தம் செய்வது கண்டு ஒன்றைக் கழட்டிவிட்டாள்.

நான் உலகைச் சுற்றி வருகையில் இதைக்கண்டு பல பேர்களுடன் இருந்தால் கலகம் உண்டாகும் இருவராக இருப்பினும் விவாதம் ஏற்படும். ஆகையால் ஒருவராகவே சஞ்சரிக்க வேண்டும் என்று அறிந்தேன்.
யோகியானவன் ஆசன ஜெயம் பிராண ஜெயம் இவற்றோடு வைராக்யத்தையும் அப்யாசத்தையும் கைக்கொண்டு ஸ்திரமான மனதை ஒரே லக்ஷ்யத்தில் செலுத்தவேண்டும்.

21. அம்பு செய்பவன்- ஆத்மஸ்வரூபத்தில் நிலை பெற்றவன் அரசனே வந்தாலும் கவனிக்காமல் தன வேலையில் ஈடுபட்ட அம்பு செய்பவன் போல உள்ளும் வெளியும் எதனாலும் பாதிப்படைய மாட்டான்.

22. பாம்பு-பாம்பு தனக்கென்று வீடு அமைத்துக் கொள்வதில்லை. கரையான் புற்றில் புகுந்து சுகமாக வாழ்கிறது. அதே போல நிலையற்ற வாழ்வில் வீடு வசதிக்காக கஷ்டப்பட்டு துன்பம் அடைவது வீண்.

யோகியானவன் தனியாக சொந்த இருப்பிடம் இன்றி, குகைகளில் வசிப்பதைப்போல மறைந்து வாழ்கிறான். பாம்பு போல பிறரால் அறியப்படாதவனாக சஞ்சரிக்கிறான்.

23.சிலந்தி- சிலந்தி தன் மார்பிலிருந்து உண்டாகும் நூலை வாயினால் விஸ்தரித்து விளையாடிப் பிறகு மறுபடி அதை விழுங்குகிறது. அது போல பகைவனும் லீலை புரிகிறார். தன் மாயையால் சிருஷ்டித்த உலகை கல்பமுடிவில் காலம் என்ற சக்தியால் சம்ஹாரம் செய்கிறார். சிலந்தியின் நூலைப்போல முக்குணங்களைக் கொண்டு ( குணம் என்ற சொல் நூல் என்றும் பொருள் கொள்கிறது) உலகை நெய்கிறார்.

யதா ஊர்ணநாபி: ஸ்ருஜதே க்ருண்ணதே ச ----ததாக்ஷராத் ஸம்பவதீஹ விச்வம் ( முண்டகோபனிஷத் 1.1.7) எவ்வாறு சிலந்தி தானே வலையை உண்டுபண்ணி தானே விழுங்குகிறதோ அது போல ஈஸ்வரனிடம் இருந்து இந்த உலகம் உண்டாகிறது.

24. குளவி- ஒரு புழு குளவிக்கூட்டில் புகுத்தப்பட்டு பயத்தினால் அதையே நினைந்து நினைந்து முன் உருவத்தை விடாமலேயே அந்தக் குளவியின் ரூபத்தை அடைகிறது.அதுபோல உடல் படைத்தவன் ஸ்நேகத்தினாலோ பயத்தினாலோ த்வேஷத்தினாலோ ஏகாக்ர புத்தியுடன் எதை நினைக்கிறானோ அதன் வடிவை அடைகிறான்.

அவதூதர் மேலும் கூறினார். இந்த இருபத்துநான்கு குருக்களிடம் இருந்து நான் இதை எல்லாம் அறிந்தேன். மேலும் என் சரீரத்திடம் இருந்தே நான் கற்றுக்கொண்டது என்ன வென்றால், இது பிறப்பு இறப்பு இரணடையும் தாங்குவதையும் எப்போதும் துன்பமே அனுபவிப்பதையும் கண்டு வைராக்கியம் உண்டாகிறது. இதனால் தத்துவ விசாரத்தை மேற்கொள்கிறேன் . அதனால் விவேகம் ஏற்படுகிறது. இந்த உடல் எனக்கு சொந்தம் இல்லை என்ற புத்தியுடன் பற்றற்று சஞ்சரிக்கிறேன். என்று கூறினார் 
இதைக்கேட்ட யது மகாராஜன் பற்றுகளை விட்டு அமைதியடைந்தார் என்று கண்ணன் உத்தவரிடம் தெரிவித்தான்



No comments:

Post a Comment