Thursday, July 16, 2020

Uddhava gita dhyana mangalam in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

உத்தவகீதை- த்யானமங்களம்

உத்தவர் கூறினார்
கிருஷ்ணா ,பிரும்மத்தைப் பற்றி பேசுபவர்கள் உயர் நலனை அடைய பல வழிகளைப் பற்றிக் கூறுகிறார்கள். இவற்றில் சிறந்தது எது?

பகவான் கூறினார்.

ஆதியில் பிரம்மாவுக்கு உபதேசிக்கப்பட்ட வேத வாக்கானது பிரளய காலத்தில் மறைந்து போயிற்று. பிரம்மா அதை தன் முதல் புத்திரனான ச்வாயம்புவ மனுவிற்கு உபதேசித்தார். அவரிடம் இருந்து ப்ருகு முதலிய ஏழு பிரம்மரிஷிகள் உபதேசம் பெற்றனர். அவர்களிடமிருந்து தேவர் , தானவர், முதலியோர் மற்றும் மனிதர்கள் உபதேசம் பெற்றார்கள்.

சத்வம் ரஜஸ் தமஸ் இவைகளின் வேறுபாட்டின்படி அவரவர் புரிதலும் வேறுபட்டதாக இருக்கிறது. இதனால் சிலர் வேதத்திற்கு முரணாகவும் வாதம் செய்யக் காண்கிறோம். எது உயர்நலம் என்பது இதனால் அவரவர் தொழிலுக்கும் விருப்பத்துக்கும் இணங்க வேறுபாட்டை அடைகிறது.

எதையும் வேண்டாதவனும் எனக்கு எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்தவனும் ஆகிய புருஷனுக்கு நானே ஆத்மாவாகப் பிரகாசிப்பதால் ஏற்படும் சுகம் உலக விஷயங்களில் மனம் செலுத்துபவனுக்கு எப்படி ஏற்படும்?

என்னிடம் மனதை அர்ப்பணம் செய்தவன் பிரம்மாவின் பதவியையோ இந்திர பதவியையோ பூலோகம் அல்லது பாதாள ஆட்சியையோ விரும்ப மாட்டான். என்னைத் தவிர எதையும், மோக்ஷத்தையும் கூட விரும்பான்.

பிரம்மாவும் சிவனும் பலாராமனும் லக்ஷ்மியும் கூட உன்னைப்போன்ற பக்தர்களை விட எனக்கு பிரியமானவரல்ல.

எவ்வாறு நெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்குகிறதோ அது போல என்னிடம் கொண்ட பக்தியானது பாபங்களை எரிக்கிறது. ஸ்ரத்தையுடன் கூடிய பக்தியாலேயே என்னை அடைய முடியும்.

சத்தியம் தயை இவற்றோடு தர்மவழியில் செல்வதோ, தவத்துடன் கூடிய வித்தையோ, இவை எல்லாமே பக்தியோடு சேர்ந்தால்தான் மனத்தூய்மை பிறக்கும்.( இல்லாவிடில் அஹங்காரம் தலை தூக்கும்.)

தீயில் புடம் போட்ட பொன் அழுக்கு நீங்கி இயற்கையான பிரகாசத்தை அடைவது போல மனம் பக்தியோகத்தால் கர்ம வாசனை நீங்கி என்னை அடைகிறது. 
அதனால் கனவு போன்ற பொய்யான உலக சுகத்தை விட்டு பக்தியினால் பண்பட்ட மனதுடன் என்னை த்யானிப்பாயாக. 
மோக்ஷத்தை விரும்பியவன் பகவானை எவ்விதம் எந்த வடிவத்தில் தியானிக்க வேண்டும் என்று கேட்ட உத்தவருக்கு அடுத்து பதில் கூறுகிறார்.

  

உத்தவ கீதை - தியான மங்களம் -2

மோக்ஷத்தை விரும்பியவன் பகவானை எவ்விதம் எந்த வடிவத்தில் தியானிக்க வேண்டும் என்று கேட்ட உத்தவருக்கு அடுத்து பதில் கூறுகிறார்.

பகவான் கூறுகிறார். 
என்னை கீழ்க்கண்டபடி தியானிக்க வேண்டும். 
சாந்தமான ஸுமுகமான ரூபம், நீண்ட நான்கு புஜங்கள் ,அழகிய கழுத்தும் கன்னங்களும், பரிசுத்தமான புன்முறுவல், செவிகளில் மகர குண்டலங்கள் , இடையில் பீதாம்பரம், மேகச்யாமள வர்ணம், ஸ்ரீவத்சத்திற்கும் ஸ்ரீதேவிக்கும் இருப்பிடமாயும் கௌஸ்துப மணியின் ஒளியுடன் கூடியதுமான மார்பு, சங்கு சக்கரம் கதை பத்மம் இவைகளுடன் விளங்கிய கரங்கள் , தண்டையணிந்த பாதங்கள் , கிரீட குண்டலங்களுடன் பலவித ஆபரணங்கள் அணிந்து மனம் கவரும் இந்த ரூபத்தை தியானிக்க வேண்டும்.

புத்தியை இந்த்ரியங்களிடம் இருந்து இழுத்து என்னிடம் செலுத்த வேண்டும்.ஒவ்வொரு அவயவத்திலும் முறையே மனம் செலுத்திப் பின் முகமண்டலத்தில் லயிக்க வேண்டும்.அதிலிருந்து சுத்தப்ரம்மமாகிய என்னிடம் சித்தத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்.

இவ்விதம் நிலை பெற்ற புத்தியுள்ள மனிதன் தன்னிடம் என்னையும் சர்வச்வரூபியான என்னிடம் தன்னையும் ஒளியில் ஒளி கலந்தாற்போல் பார்ப்பான்.

இவ்வாறு தீவிர தியானத்தால் மனதை ஆத்மாவிடம் சேர்க்கும் யோகிக்கு பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன், பார்த்தல் என்ற செய்கை என்ற வேற்றுமை மறைந்துவிடும்.

இந்த யோகத்தில் சிறந்தவனுக்க் பல சித்திகள் உண்டாகின்றன. 
அவை யாவை என்பதை அடுத்து விளக்குகிறார்.

No comments:

Post a Comment