Friday, July 17, 2020

Trinayanam 3 eggs of Ambaal - Periyavaa

*வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்*

*த்ரிநயநா*

சிவ சரீரத்தைச் சேர்ந்த இரண்டு அம்சங்களை அம்பாளிடம் ப்ரத்யக்ஷமாகப் பார்த்துவிட்டுத்தான் ஆச்சார்யாள் (கவித்வ வர்ணனையில், வேடிக்கையாக, அம்பாள் சிவனிடமிருந்து திருடி விட்டதாக) ஸந்தேஹப்பட்டிருக்கிறார். என்ன இரண்டு? ஒன்று: "த்ரிநயநம்"; இரண்டு: "குடில சசி சூடால மகுடம்". 

"த்ரிநயநம்" என்றால் தெரிந்திருக்கும்; 'முக்கண்'. 'குடில சசி சூடால மகுடம்' என்றால் 'சந்திரப் பிறையுடன் கூடிய மகுடம்'. முக்கண்ணன், சந்த்ரமெளீச்வரன் ஸ்வாமி தானே? அந்த இரண்டும் அவனுக்குரியவைதானே? 'த்ரயம்பகன்' என்று வேதமே அவனுக்குப் பேர் சொல்லியிருப்பதற்கு 'முக்கண்ணன்' என்றுதான் அர்த்தம். 

ருத்ராபிஷேகத்தில் சொல்லும் த்யான ச்லோகத்தில் "ஜ்யோதி ஸ்பாடிக லிங்க மௌளி விலஸத் பூர்ணேந்து" என்று வருவது அவன் சிரஸில் சந்திரன் இருப்பதைத் தெரிவிக்கிறது. இங்கே சொல்வது ஸ்படிக லிங்காகாரமான ஸ்வரூபம். அப்படியிருக்கும்போது லிங்கத்தின் உச்சியில் பூர்ண சந்திரனே இருக்கிறான்; 'பூர்ணேந்து' என்று அதையே ச்லோகம் சொல்கிறது. அதே ஸ்வாமிக்கு முகம், கண், காது என்று அவயவங்களோடு உள்ள ரூபத்திலேயோ உச்சியில் பூர்ண சந்திரனாக இல்லாமல் பிறையாக இருக்கும்.

ஆக, முக்கண்ணும் சந்த்ர கலையும் ஸ்வாமியைச் சேர்ந்தவை. ஆனால் ஆசார்யாள் தர்சனம் பண்ணியபோது அம்பாளிடமே இந்த இரண்டையும் அவர் பார்த்து விட்டார்! இது ஸர்வ நிச்சயமாக ஸ்வாமியை அபேஸ் அடித்ததுதானே? இதை வைத்தே 'சார்ஜ் ஷீட்' கூடக் கொடுக்கலாமாயினும் 'ஸந்தேஹம்' என்று லைட்டாகச் சொல்லியே திருடித்தான் என்று நாம் ஜட்ஜ்மென்ட் கொடுக்கிற அளவுக்கு உறுதி பண்ணிவிடுகிறார்!

இவர் போனபோது அவள் ஸெளந்தர்யலஹரிக்கு தேவதையான காமேச்வரியாகவே இருந்தாள். காமேச்வரிக்கு லலாட நேத்ரம் (நெற்றிக் கண்) உண்டு; அதாவது அவளுக்கு மொத்தம் மூன்று நேத்ரங்கள். 

லலிதா ஸஹஸ்ரநாம ஆரம்பத்தில் சொல்லும் "ஸிந்தூராருண விக்ரஹாம்" ச்லோகத்தில் வரும் ஸிந்தூர அருண விக்ரஹந்தான் இங்கே சொல்லும் "ஸகலம் அருணாபம்" என்று முழுச் சிவப்பு ரூபம். "ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயநம்" என்று அங்கே வருவதையே இங்கே "ஸகல மருணாபம் த்ரிநயநம்" என்று கொடுத்திருக்கிறார். 

அதாவது காமேச்வரிக்கு உரியதாகவே அங்கே சொன்ன சிவப்பு ரூபம், முக்கண் இரண்டையும் இங்கே ஆசார்யாளும் சொன்னாலும் முன்னது மட்டும் அவளுக்கு ஸொந்தமாகச் சேர்ந்தது என்றும் பின்னது பதியிடமிருந்து தஸ்கரம் பண்ணினது என்றும் வைத்து வேடிக்கை செய்திருக்கிறார்! 

_ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 95 / நாமம் 453 – த்ரிநயநா- முக்கண் உள்ளவள்_

_பெரியவா சரணம்!_

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

No comments:

Post a Comment