Thursday, July 30, 2020

Narada's pride curbed - Spiritual story

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

" பரந்தாமன் நடத்திய பாடம்...."

வைகுண்டத்தில் இருந்து புறப்பட்ட நாரதர்.... பூவுலகில் சென்றடைந்தது ஒரு குயவர் வீட்டை... அந்த குயவரும் தம் குடிசைக்கு முன் பானைகள் செய்தபடி இருந்தார்.... அவரின் மனைவி அவருக்கு ஒத்தாசையாக இருந்தார்.... பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்....

நாரதரும் உள்து ஒரு ஓரமாக அவர்களுக்கு புலனாகதபடி அமர்ந்து கொண்டார்.... யாம் கவனிக்க என்ன உள்ளது இவரிடம் என்கிற கேள்வியும்... நாரதருக்குள் எழுந்தது.....

அவ்வமையம்....

" வார்ப்புனல் அந்தண் அருவி, வட திருவேங்கடத்து எந்தை...

பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப், பித்தர் என்றே பிறர் கூற....

ஊர்ப்பல புக்கும் புகாதும், உலோகர் சிரிக்க நின்றாடி...

ஆர்வம் பெருகிக் குனிப்பார், அமரர் தொழப்படுவாரே.... "

( திருவாய்மொழி 3.5.8)

என்ற பாசுர வரிகளுக்கு ஒப்ப.... குயவர் மண்ணை மிதிக்கும் போதெல்லாம்... குதித்து அடியபடி....நாராயணா....கோவிந்தா.... முகுந்தா.... என்று நாம கோஷங்கள் இட்டான்.... சில நேரங்களில் கோர்வையாக பாடவும் செய்தார்.... 

"மண்ணப் போட்டு மிதிக்கிறேன் நாராயணா.... என்னை

மன்னிப்பாயே... மன்னிப்பாயே நாரயணா....

என்னைத் தாங்கும் மண்ணுதானே.... நாராயணா...

உன் நெஞ்சில் வாழும் பூமாதேவி நாராயணா...."

என்று அவர் ராகமாய் பாடுவதை கேட்க நன்றாகத்தான் இருந்தது....குறிப்பாக அவர் பிறரோடு பேசாத நேரங்களில் வேலை செய்த தருணங்களில் எல்லாம் இப்பாடி பல் வேறாக பாகவானின் நாமங்களைப் பாடினார்... ஆடினார்...

நாரதரும் அவர் கடமை முடிந்து தூங்கச் செல்லும் வரை கவனித்தார்....தூங்கும் முன்பும்...." நாராயணா.... கோவிந்தா..." என்று திருநாமங்கள் கூறத் தவறவில்லை... பின்னர் அவரை கவனித்து முடிந்தவராக வைகுண்டம் திரும்பினார் நாரதர்....

"ப்ரபோ..."

"வா..,,, நாரதா... பூலோகம் சென்று வந்து விட்டாயா...?

"ஆயிற்று ப்ரபோ.... உம் பக்தனான அந்த குயவர் ஒரு நல்ல பாடகணும் கூட.... "

"அது சரி.... எம் நாமத்தை அவர் கூறினார் தானே....?

"ஆஹா.... பாடலே ஸ்வாமியைப் பற்றித்தானே...?

"அது இருக்கட்டும்.... அவர் எத்தனை முறை எம் நாமத்தை கூறினார் என்று தெரியுமா...?

"ஸ்வாமி ஷமிக்கவும்... அடியேன் செய்யத் தவறிவிட்டேனே.... "

"பரவாயில்லை.... தோராயமாகச் சொல்..."

" எப்படியும் நூறு முறைக்கு குறையாது...."

"அது போதும்... சரி யாம் உமக்கு ஒரு பணியைத் தரப்போகிறோம்... செய்வாயா?

"எம் கடன் ஸ்வாமியின் பணி செய்து கிடப்பதுதானே.... ப்ரபு...?

" எனில்.... உம் உள்ளங்கையை நீட்டு...." என்றார் பரந்தாமன்...

நாரதரும் புரியாமல் நீட்டினார்.... அக்கையின் மேல் வழிய... வழிய... எண்ணெயுடன் கூடிய ஒரு கிண்ணத்தை வைத்தார் மகாலட்சுமி...

"தாயே என்ன இது?

"யாம் வாசம் செய்யும் நல்லெண்ணெய் நாரதா.."

"இது எதற்கு எமக்குத் தாயே....?"

"இந்த கிண்ணத்தோடு எண்ணெய் துளியும் சிந்தாமல் நீர் இந்த பூமியை ஒரு சுற்று சுற்றிவர வேண்டும்... "

"இது என்ன விளையாட்டு ஸ்வாமி...?

" விளையாட்டுதான் பூவுலகில் வெற்றி..தோல்விகளை உணர்ந்து கொள்ளவும்...ஆரோக்கயத்துக்காகவும் ... விளையாடுகிறார்கள்.... இங்கே எங்களுக்கும் விளையாடும் ஆசை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளேன்..."

" என்றால்.... ஸ்வாமிகள் விளையாடாமல்... அடியேனை இப்படிச் சொல்வதன் காரணம்?

"நீர் உலகைச் சுற்றி முடித்து விட்டு வா.... பிறகு கூறுகிறோம்..."

லட்சுமி தேவியும் சொல்லி முடித்திட நாரதரும் அந்த எண்ணெய் கிண்ணத்தையே உற்றுப் பார்த்தவராக... அது சிந்திவிடாதபடி அப்படியே வானில் ஏறி சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்....

வழியில்... தேவர்கள்... கந்தர்வர்கள்... யெளவனர்கள்... கின்னரர்கள்.... கிம்புருடர்கள்.. மோகினிகள்.... ரிஷிகள்...முனிகள் என்று பல்லோர் இடையிட்டனர்...

"நாரதரே... இது என்ன வேடிக்கை.... யாருக்கு இந்த எண்ணெய்? என்று கேள்வியும் கேட்டனர்...

"தயவு செய்து எதுவும் பேசாமல் செல்லுங்கள்.... எம் கவனம் பிசகிவிடப் போகிறது...." என்று அவர்களை எல்லாம் முகம் பார்க்காமலே சமாளித்தார் நாரதர்....

ஒரு வழியாக வைகுண்டமும் வந்து சேர்ந்தார்.... காலையில் தொடங்கிய பயணம் இருட்டவும்தான் முடிந்தது...

வைகுண்டத்தில் மகா விஷ்ணுவையும்.... லட்சுமித் தாயாரையும் பார்த்து கிண்ணத்தை திரும்பத் தந்த நிலையில்.... பெருமூச்சுவிட்ட நிலையில்... ஆனந்தப்பட்டார்...

" என்ன நாரதா.... வெற்றிகரமாக சுற்றி வந்து விட்டாயே.... சபாஷ்..."

" இப்படிப் பாராட்டுவதற்கா... அடியேனை சுற்றி வரச் சொன்னீர்கள் ஸ்வாமி...?

" பாராட்டு என்பதும் ஒருவருக்கு முக்கியம் தானே...?

"ப்ரமோ.... அடியேன் ஒரு முனி.... பிரம்மச்சாரி... பற்றுக்கள் அற்றவன்... பின் அடியேனுக்கு எதற்கு பரிசும் ... பாராட்டும் ?"

"அருமையான பதில்.... ஆனால்... "யாமே... நாரயணா நமத்தை அதிகம் சொல்லிய பெரும் பக்தன் என்னும் பெருமிதமும், கர்வமும் உம்மிடம் காணப்பட்டதால்... பாராட்டும் உமக்கு பிடிக்கும் என்று கருதிவிட்டோம்... தவறா... நாரதா ?

லட்சுமிதேவி அப்படிக் கேட்கவும் நாரதரிடம் ஒரு வித ஸ்தம்பிப்பு.... தாம் கேட்ட கேள்வியாலேயே தமக்கொரு வலை பின்னப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டு திருதிருவென விழிக்கத் தொடங்கினார் நாரதர்...

" என்ன நாரதா... பேசாமல் விழிக்கிறாய்?"

"ப்ரபோ....தங்கள் விளையாட்டு.... திருவிளையாட்டு என்பது அடியேனுக்குப் புரிகிறது.... இருப்பினும் ஸ்வாமி... அடியேனை அந்த ஏழை பக்தனின் குடிலுக்கு அனுப்பியது மட்டும் புரியவில்லை.. "

"பரமஜ்ஞாநியான உமக்குள் இன்னுமா அறியாமை... போகட்டும்.... அந்த ஏழை பக்தன்... எம் நாமத்தை எத்தனை முறை கூறினார் என்றாய்...?

"ஒரு நூறுமுறைக்கு மேல் இருக்கும் என்றேன்?

"இந்த எண்ணெய் கிண்ணத்துடன் சுற்றி வரும்போது... நீர் எத்தனை முறை கூறியிருப்பீர்?

ஸ்ரீவிஷ்ணுவின் கேள்வி நாரதருக்கு சம்மட்டி அடியாகத்தான் இருந்தது....

" ப்ரபோ...."

" என்ன?"

"கிண்ணத்தின் மேல் எண்ணெய் சிந்திவிடக் கூடாது எனும் கவனம் இருக்கும் போது எப்படி ஸ்வாமியின் நினைவு வரும்?"

" என்றால்... எம் நாமத்தை விட.... யாம் இட்ட கடமை பெரிதாகி விட்டது.... அப்படித்தானே?

"ஆம் அப்படித்தான் அத்தருணத்தில் எமக்குப் பட்டது ஸ்வாமி... "

"ஏழை குயவனுக்கும் கூட பானை வினையும் கடமை இருக்கத்தான் செய்தது.... ஆனால் அதற்கு இடையிலும்...அவர் நூறு முறையாவது எம் நாமத்தைச் சொன்னாரே... அது மட்டும் எப்படி ?

"ப்ரபோ...."

"நாமம் சொல்வதையே கடமையாகக் கொண்டு வாழும் உம் வாழ்வும்.... இன்னொரு கடமைக்கு நடுவில் நாமம் சொல்லும் அவர் வாழ்வும் ஒன்றா?

"நிச்சயமாக இல்லை..."

" என்றால்... எம் நாமத்தை இக்கட்டிலும் சொல்லும் அந்த பக்தரை விட நீர் உயர்ந்தவரா...?

"நிச்சயமாக இல்லை.... அடியேனை ஷமிக்கவும்.... ப்ரபோ.."

"இந்த உணர்வே மன்னிப்புதான்.... எவரையும் அகந்தை விழுங்கி விடும் புரிந்து கொள்...."

"புரிந்து கொண்டேன் ஸ்வாமி.... எவ்வளவு முறை சொல்கிறோம் என்பதை விட.... சொல்லும் போது உளம் உருகி பக்தியோடு.... ஸ்வாமி உகக்கும் கைங்கர்யங்களே பெரிது என்பதை புரிந்து கொண்டேன்...."

நாரதருக்கு இப்படி நாமத்தை ஒட்டி கர்வபங்கம் வழக்கில் உண்டு.... எனவே நாரதர் கர்வமின்றி அதே தருணத்தில் தம் கடமையை சாதுர்யமாக செய்பவராக தம்மை செதுக்கிக் கொண்டார்.... அனுபவங்களே அடியோங்களை மேலானவர்களாக ஆக்குகின்றன.... எனவே கல்வி... செல்வம்.... ஜ்ஞாந... செருக்கு ஒழித்து.... பகவானின் உகப்புக்காக மட்டுமே... அடியோங்களின் கைங்கர்யங்களாக இருக்க முயல்வோம்....

"தேவபிரானை.... ஒருமை மனத்தினுள் வைத்து, உள்ளங்குழைந்து எழுந்தாடி....

பெருமையும் நாணும் தவிர்ந்து, பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.... "

( திருவாய்மொழி-3.5.10-பாசுர வரிகள்)

"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

அடியேன்

வகுளாபரணராமாநுஜதாசன்🙏🙏🙏

No comments:

Post a Comment