Tuesday, July 28, 2020

Gopala vimsati slokas 1 to 5 in tamil

courtesy:Smt.Dr.Saroja Ramanujam

கோபால விம்சதி

வேதாந்த தேசிகர் பல அர்ச்சாவதாரங்கள் மேல் ஸ்தோத்திரம் செய்துள்ளார். ஆனாலும் கிருஷ்ணாவதாரத்தின் மேல் அவருக்கு ஒரு தனி ஈடுபாடு உள்ளதாகத் தோன்றுகின்றது. யாத்வாப்யுதயம் என்ற கிருஷ்ண சரித்திரம் பற்றிய காவியம் இதை உணர்த்துகிறது. கோபாலவிம்சதியில் உள்ள இருபது ஸ்லோகங்கள் இந்தப் பெரும் காவியத்தின் சாராம்சம் என்று சொல்லலாம்.இதன் முதல் ஸ்லோகமும் யாத்வாப்யுத்யத்தின் முதல் ஸ்லோகமும் ஒன்றே என்பது இதை உணர்த்துகிறது.

நாளை கோகுலாஷ்டமி கண்ணன் உங்களை எல்லாம் சந்திக்க அவசரமாக வந்துவிட்டான் இன்றே. க்ருஷ்ணாம்ருதத்தைப் பருகுவோமா?

1. வந்தே ப்ருந்தாவனசரம் வல்லவீஜனவல்லபம் 
ஜெயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்
இந்த ஸ்லோகம் மிகுந்த பொருட்செறிவுடன் கிருஷ்ணரின் மகிமையை பூரணமாக விவரிக்கிறது. கிருஷ்ண ஜெயந்திக்கு ஏற்ற ஸ்லோகம்

ஜெயந்தீசம்பவம் – க்ருஷ்ணாஷ்டமி அன்று ஜனித்தவரும்
ப்ருந்தாவனசரம்- பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கிறவரும்
வைஜயந்தீ விபூஷணம் – வனமாலை அணிந்தவனும் 
வல்லவீஜனவல்லபம்- கோபியரின் ப்ரியனும் ஆன
தாம – கண்ணன் என்னும் ஜோதியை 
வந்தே - வணங்குகிறேன்

இந்த நான்கு அடைமொழிகளும் பக்வானுடைய வாத்சல்யம், சௌசீல்யம் , சௌலப்யம், ஸ்வாமித்வம் ஆகிய குணங்களை விளக்குகின்றன.

அவனுடைய வாத்சல்யம் அல்லது அடியவர்களிடம் அன்பு பசுவுக்கு அதன் கன்றிடம் உள்ளதைப் போன்றது. .இது ப்ருந்தாவனசரம் என்ற சொல்லிலிருந்து விளங்குகிறது. இதை ப்ருந்த +அவன+சரம் என்று பிரித்தால் , ப்ருந்த என்பது அடியார் கூட்டம். அவன என்றால் காப்பது. சரம் என்றால் சஞ்சரிப்பவன். ப்ருந்தானாம் அவனாய சஞ்சரதி, அடியவர்களைக் காக்கவே சஞ்சரிப்பவன் என்று பொருள். 
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே என்ற கீதை வாக்கியத்தை நினைவூட்டும் சொல்.

அப்பைய தீட்சிதர் யாத்வாப்யுதயத்தில் இந்த ஸ்லோகத்தின் விளக்கத்தில், யார் தண்டகாரண்யசரனாக ராமாவதாரத்தில் ரிஷிகளைக் காக சஞ்சரித்தானோ அவனே இங்கு பசுக்களையும் ஆயர்களையும் காக்க பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கிறான் என்று கூறுகிறார். நவரசங்களில் அத்புத ரசம் மிளிறும் சொல்.

பரம்பொருள் இங்கு இடையனாக வந்து தன் அன்பை எல்லோருக்கும் பாகுபாடின்றி வழங்கும் அற்புதத்தைக் காண்கிறோம். அவனுடைய வாத்சல்யம் நரசிம்மாவதாரத்தில் நன்கு உணரப்படுகிறது. ஒரு தாயின் வாத்சல்யத்துடன் ப்ரஹ்லாதனுக்கு ஹிரண்ய கசிபுவால் எந்த துன்பமும் நேராமல் காத்தான் அல்லவா?
பிராணிகளிடத்தும் அவன் வாத்சல்யம் எத்தகையது என்பதை கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களிடம் அவன் காட்டிய அன்பிலும், பாரதப்போரில் தானே தன் கையால் குதிரைகளுக்கு உணவு கொடுத்து நீராட்டினதிலும் காண்கிறோம்.

அடுத்தது அவனது சௌசீல்யம். இதன் பொருள் விளக்கம் என்னவென்றால், 'மஹத: மந்தை: ஸஹ நீரந்த்ர ஸம்ச்லேஷ ஸ்வ்பாவ: ' அதாவது உயர்ந்தவர்கள் சாமான்ய மக்களிடம் பேதமின்றிப் பழகுதல். இது வல்லவீஜனவல்லபம் என்ற அடை மொழியால் குறிப்பிடப்படுகிறது.

அப்பய்ய தீட்சிதர் சொல்கிறார். எவன் மகாலக்ஷ்மியுடன் நீங்காத சங்கமத்தில் உள்ளவனோ அவன் எளிய இடையப் பெண்கள் சங்கமத்திலும் இன்புறுகிறான் என்று. வல்ல என்றால் சஞ்சாரம் செய்வது. இடையர்கள் பசுமையான இடங்களைத் தேடிப்போவதால் வல்லவ எனப்படுகிறார்கள்.இது சிருங்கார ரசம் உணர்த்தும் சொல்.

அடுத்து ஜயந்தீசம்பவம் என்ற அடை மொழி. இது சௌலப்யத்தைக் குறிக்கிறது. இடைய்ர் குலத்தில் அவதரித்ததன் மூலம் தன சௌலப்யத்தைக் காட்டுகிறான் பகவான். சௌலப்யம் என்றால் லப்தும் ஸுஸகத்வம் , அதாவது எளிதில் அடையக்கூடியது. மற்ற எந்த அவதாரத்திலும் இல்லாத எளிமை கிருஷ்ணாவதாரத்தில் காணப்படுகிறது.

ஆயர்க்கு எளியோன், பசுக்கள் கன்றுகள் இவைகளுக்கு நண்பன், அடியார்க்கு எளியோன் என்று காட்ட பாண்டவர்க்கு தூது சென்று தேரோட்டியவன். இந்த எளிமையும் பெருமையும் வேறு எங்கும் காணக்கிடைக்கவில்லை.

ஜெயந்தீசம்பவம் என்ற சொல் பொருள் செறிந்தது. தேசிகர் தேவகீசம்பவம் என்று கூறாமல் ஜெயந்தீசம்பவம் என்று ஏன் சொல்கிறார்? அதாவது கிருஷ்ணன் பிறக்கவில்லை, தோன்றினார் என்பதனால்.

ஸம்பவாமி யுகே யுகே , ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன், யதாயதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்---ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம், எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஹானி ஏர்படுகிறதோ அப்போது நான் என்னைத் தோற்றுவிக்கிறேன் என்று சொல்கிறான் அல்லவா?

தேசிகர் யாதவாப்யுத்யத்தில் தேவகியின் கர்ப்பிணிக் கோலத்தை விரிவாக வர்ணிக்கிறார். ஆனால் சூரியன் கிழக்கில் உதிப்பதுபோல் தேவகியிடம் தோன்றினான் என்கிறார். அதாவது சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை. நாம்தான் கிழக்கில் சூரியனைப் பார்க்கிறோம். 
அது போல பகவான் எங்கும் எப்போதும் இருக்கிறான் ,. நாம் அவனைப் பலவிதமாக்க் காண்கிறோம். தேவகியின் கர்ப்பிணித் தோற்றம் அவன் மாயை. எங்காவது நான்கு கரங்களுடனும் கையில் சங்கு சக்கரமுடனும் ஒரு குழந்தை பிறக்குமா? அதனால்தான் 'தாம் அத்புத பாலகம் ' என்று கூறுகிறார் சுகர்.

ஜயந்தி என்றால் ஜயம் தநோதி என்று பொருள். கண்ணனுக்கு சென்றவிடமெல்லாம் ஜெயம் . வீரரசம் த்வனிக்கிறது.

தாம வைஜயந்தீ விபூஷணம என்ற சொற்கள் ஸ்வாமித்வத்தைக் குறிக்கின்றன. தாம என்றால் ஸ்வயம்ப்ரகாசம். வைஜயந்தி என்ற சொல் வனமாலையை குறித்தாலும் , பூததன்மாத்ர அதிஷ்டான தேவதா என்றும் பொருள். அதாவது பஞ்ச பூதங்களின் ஆதாரமாகிய பரம்பொருள். வனமாலை என்பது பகவானின் மாயையே. அதை அணிந்துகொண்டு பலவாறாகத் தோன்றுகிறான். பரவாசுதேவன் இந்த அடைமொழியால் குறிப்பிடப்படுகிறான்.

  

கோபாலவிம்சதி

2.வாசாம் நிஜாங்கரஸிகாம் ப்ரஸமீக்ஷமாணம்
வக்த்ராரவிந்த விநிவேசித பாஞ்சஜன்ய: 
வர்ணத்ரிகோண ருசிரே வரபுண்டரீகே
பத்தாஸனோ ஜயதி வல்லவசக்ரவர்த்தீ

வர்ணதிரிகோண –எழுத்துக்கள் அமைக்கப்பெற்ற முக்கோண வடிவமான யந்திரத்தால் 
ருசிரே – அழகிய 
வரபுண்டரீகே- சிறந்த தாமரை மலர் வடிவமுள்ள ஆசனத்தில் 
பத்தாஸன: அமர்ந்தவனாய்
நிஜாங்க ரஸிகாம்- தன் மடியில் இன்புற்று அமர்ந்து இருக்கும்'
வாசம் – சரஸ்வதி தேவியை 
ப்ரஸமீக்ஷமாண:- நன்கு பார்ப்பவனாய் 
வக்த்ராரவிந்த – தாமரை போன்ற வாயில் 
விநிவேசித பாஞ்ச ஜன்ய: - பாஞ்சஜன்யத்தை வைத்திருப்பவனான
வல்லவசக்ரவர்த்தீ – இடைக்குலத்தின் சக்ரவர்த்தியான கண்ணன் 
ஜயதி- சிறந்து விளங்குகிறான்.

எட்டு தளம் கொண்ட தாமரைவடிவத்தின் நடுவில் ஒரு முக்கோணம்.அதில் கோபாலமந்திரத்தின் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அதுவே சரஸ்வதி வடிவமாக உருவகப்படுத்தப் படுகிறது. அதன் நடுவில் கையில் பாஞ்ச ஜன்யத்துடன் கிருஷ்ணனின் உருவம் த்யானிக்கப்படுகிறது.

3. ஆம்னாயகந்திருதிதசஸ்புரிதாதரோஷ்டம் 
ஆஸ்ராவிலேக்ஷணம் அனுக்ஷணமந்தஹாஸம் 
கோபாலடிம்ப வபுஷம் குஹனாஜனன்யா: 
ப்ராணஸ்தனந்தயம் அவைமி பரம் புமாம்ஸம்.

ஆம்னாயகந்திருதிதசஸ்புரிதாதரோஷ்டம்- வேதத்தின் மணம் வீசும் உதடுகள் துடிக்க அழுகின்றவனும்
ஆஸ்ராவிலேக்ஷணம்- கண்ணீரால் கலங்கிய கண்களுடையவனும் 
அனுக்ஷண மந்த ஹாஸம் – அடிக்கடி புன்னகை புரிபவனும்
குஹனா ஜனன்யா: - கபடமாக தாய்போல் வந்த பூதனையின்
ப்ராணஸ்தனந்தயம் – பாலோடு உயிரைப் பருகியவனும் 
கோபால் டிம்ப வபுஷம். – இடைக்குழந்தை வடிவு கொண்டவனும் ஆன கண்ணனை 
பரம் புமாம்ஸம் – பரம புருஷனான நாராயணன் என்று 
அவைமி- அறிகிறேன்

ஒரு அற்புதமான சித்திரம். கண்ணன் வெண்ணைக்கோ பாலுக்கோ அல்லது விஷமம் செய்துவிட்டு தாயார் அடிப்பாள் என்றோ அழுகிறான்,.அது பொய் அழுகை என்கிறார் தேசிகர். ஏனென்றால், கீழ் உதடு துடிக்கிறது ஆனால் அந்த உதடு வேத மணத்தை அல்லவா பரப்புகிறது? கண்களில் நீர் ஆனால் யாரும் பார்க்கவில்லை என்ற சமயம் புன்னகை. இவன் சாதாரண இடைச்சிறுவனா? கபடமாக வந்த பூதனையின் உயிரைக்குடித்தவனாயிற்றே! ஆகையால் இவன் பரமபுருஷனாகிய நாராயணனே என்கிறார்.

அவன் வாயைத் திறந்தாலே வேதம் மணக்கிறது. தேசிகர் யாதவாப்யுதயத்தில் சொல்கிறார, கண்ணன் முதல் முதல் பேச ஆரம்பிக்கும்போது அவன் நாவிலிருந்து வந்த சப்தம், அவன் நண்பர்களுடன் பேசியது அவனைச்சுற்றி உள்ள பசுக்கள் செய்த சப்தம் எல்லாமே வேத சப்தமே.ஏனென்றால் பரமாத்மாவான அவனுடைய மூச்சுக்காற்றே வேதம்தான்.

  

கோபாலவிம்சதி

4.ஆவிர்பவது அனிப்ருதாபரணம் புரஸ்தாத் 
ஆகுஞ்சிதைக சரணம் நிப்ருதான்ய பாதம் 
தத்னாநிமந்தமுகரேண நிபத்த தாளம் 
நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்

நந்தபவனே – நந்தகோபன் இல்லத்தில் 
அனிப்ருதாபரணம் – அசைந்து ஒலிக்கும் ஆபரண்ங்களுடன்
ஆகுஞ்சிதைக சரணம் – ஒரு பாதம் மடங்கியதாயும்
நிப்ருதான்ய பாதம்- இன்னொரு பாதம் நேராகவும் வைத்து
நிமந்தமுகரேண தத்னா- நன்கு கடையப்பட்டதால் ஒலிக்கின்ற தயிரால் 
நிபத்த தாளம் – தாளம் போடப்பட்ட 
நாதஸ்ய –கண்ணபிரானுடைய 
நவநீத நாட்யம் – வெண்ணையை விரும்பி செய்யப்பட்ட நடனம் 
ஆவிர்பவது- என் முன்னே தோன்றட்டும்.

நந்தகோபர் இல்லத்தில் யசோதாயுடன் இதர கோபியர் தயிர் கடைகின்றனர். அப்போது கண்ணன் வெண்ணையை விரும்பி அவர்களை சந்தோஷப்படுத்த நாட்டியம் ஆடுகிறான். அதை ரசித்துப் பரிசாக வெண்ணை கொடுப்பார் என்றெண்ணி.

ஒரு கால் தூக்கியும் இன்னொரு கால் தரையில் வைத்தும் , மாறி மாறி ஆடுகிறான். அப்போது அவனுடைய ஆபரணங்கள் அசைந்து ஒலிக்கின்றன. அது பாடல் போல் இருக்கிறது. தயிர் கடையும் போது உண்டாகும் சப்தம் தாளமென ஒலிக்கிறது. அதற்கேற்ப கண்ணன் ஆடுகிறான்.அந்தக் காட்சியைக் கண்முன் காண ஆசைப்படுகிறார் தேசிகர். அதற்கு நவநீத நாட்டியம் என்று பெயர் சூட்டுகிறார்.

'ஒருபதம் வைத்து மறுபதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனமாட மயக்குவிழியாட மலர்மகளும் பாட,' என்ற ஊத்துக்காடு கவியின் சொற்களை நினைவூட்டுகிறதல்லவா?

இனி யாதவாப்யுதயத்தில் இதை தேசிகர் எவ்வாறு அனுபவிக்கிறார என்று பார்ப்போம்.

உலக சூத்ரதாரியான பகவான் கோபியரை மகிழ்விக்க வெண்ணையை விரும்பி நடனம் ஆடினானே , இது என்ன விந்தை என்கிறார். மேலும் அவன் மேனியில் தெறித்த தயிர்த் துளிகள் அவருக்கு நாராயணனாக அவன் பாற்கடலைக் கடைந்தபோது, அவன் மேல் தெளித்து மேனியை நிறைத்த அமுதத்துளிகளும் பால் துளிகளும் போலத்தோன்றினவாம்.

இந்த காட்சியை குலசேகரர் முகுந்தமாலையில்,

க்ஷீரசாகரதரங்க சீகரா சாரதாரக்ருத சாரு மூர்த்தயே
போகிபோக சயநீய சாயினே மாதவாய மதுவித்விஷே நம: என்கிறார்.

இதன் பொருள், மது என்ற அசுரனைக்கொன்றவனும், சேஷ சயனத்தில் பாற்கடலின் பாற்துளிகள் நீல மேனியில் ஆகாயத்தில் நக்ஷத்திரங்களைப்போல் பிரகாசிக்க சயனித்தவனும் ஆன மாதவனை வணங்குகிறேன்.

லீலாசுகர் கீழ்கண்டவாறு அனுபவிக்கிறார்.
வதனே நவநீதகந்த வாஹம் வசனே தஸ்கரசாதுரீதுரீணம்
நயனாகுஹனாச்ரு ஆச்ரயேதா: சரணம் கோமளதாண்டவம் குமாரம்

முகத்தில் எப்போதும் வெண்ணை வாசனை , பேச்சோ சாமர்த்தியமான திருடனைப்போல., கண்ணில் பொய்யாக கண்ணீர், இவ்வாறு உள்ள அழகாக நடனம் செய்யும் சிறுவனை சரணமடையுங்கள்.

அடியார்கள் பகவான் பாற்கடலை விட்டு ஏன் கோகுலம்வந்தான் என்பதற்கு ஒரு அழகான காரணம் கற்பிக்கிறார்கள். பாற்கடலில் பால் மட்டும்தான் கிடைக்குமாம். வெண்ணை தயிர் இவை கிடைக்காதாம் அதனால் தான் ஆயர்பாடிக்கு வந்தானாம்!

  

கோபால விம்சதி

5. ஹர்தும் கும்பே விநிஹிதகர; ஸ்வாது ஹையங்கவீனம்
த்ருஷ்ட்வா தாமக்ரஹண சடுலாம் மாதரம் ஜாதரோஷாம்
பாயாத் ஈஷத் பிரசலிதபத:நாபகச்சன் ந திஷ்டன்
மித்யாகோப: ஸபதி நயனே மீலயன் விச்வகோப்தா

ஸ்வாது – ருசியுள்ள 
ஹையங்கவீனம் – வெண்ணையை 
ஹர்த்தும் – எடுப்பதற்காக 
கும்பே – குடத்தில் 
விநிஹிதகர:- கையை விட்டவனும் 
சடுலாம் – பரபரப்புடனும்
ஜாதரோஷாம் –கோபத்துடனும் வந்த 
மாதரம் – தாயை
த்ருஷ்ட்வா- பார்த்து 
ஈஷத்- சிறிது 
பிரசலிதபத:-அங்கிருந்து நகர்ந்தவனாய்
நாபகச்சன் ந திஷ்டன் –செல்லாமலும் நிற்காமலும் 
சபதி- உடனே 
நயனே- கண்களை
மீலயன்- மூடிக்கொண்டவனான
விச்வகோப்தா- உலகத்தைக் காப்பவனான
மித்யாகோப: பொய்யாக இடையன் வேஷம் பூண்ட கண்ணன் 
பாயாத்- காத்தருள்வானாக.

ஹையங்கவீனம் என்பது முந்தைய நாள் கறந்த பாலில் இருந்து கடைந்த வெண்ணை 
கண்ணன் புதிதாகக் கடைந்த வெண்ணை வைத்திருக்கும் குடத்தில் கை விட்டு வெண்ணை எடுக்கப் பார்க்கிறான். அப்போது அவன் தாய் யசோதை அங்கு வந்துவிடுகிறாள். உடனே நகர்ந்தாலும் அந்த இடத்தை விட்டுப் போகாமல் போவது மாதிரி போக்குக்காட்டி அங்கேயே நிற்கிறான். தாயின் கோபத்தைக் கண்டு அஞ்சியவன் போல் கண்ணை மூடிக்கொள்கிறான்.

இந்தக் காட்சி பாகவதத்தில் பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறது 
க்ருதாகஸம் தம் ப்ரருதந்தம் அக்ஷிணீ
கஷந்தம் அஞ்சன் மஷிணீ ஸ்வபாணினா
உத்வீக்ஷமாணம் பயவிஹ்வலேக்ஷணம்
ஹஸ்தே க்ருஹீத்வா பிஷயந்த்யவாகுரத் (ஸ்ரீமத் பா. 1௦.9.11)

தவறு செய்துவிட்டு மையிட்ட கண்களை தன் கையால் கசக்கிக்கொண்டு அழுபவனும் பயத்தினால் சலிக்கின்ற கண்களை உடையவனும் மேலே அவளைப்பார்க்கின்றவனும் ஆன அவனைக் கையில் பிடித்துக்கொண்டு பயமுறுத்தி அதட்டினாள். 
என்ன ஒரு அழகான சித்திரம்!

கண்ணனை தேசிகர் மித்யாகோபன் அல்லது பொய்யாக இடையனாக வந்தவன் என்கிறார். ஏனென்றால் உலகையே காப்பவன் இங்கு அன்னைக்கு பயந்து அழுகிறானாம்! இது உரலில் கட்டுண்டதற்கு முந்தைய சம்பவம்..
அடுத்தச்லோகத்தில் மித்யாகோபன் என்ற பதத்திற்கு சரியான விளக்கம் காண்கிறோம்.

  

No comments:

Post a Comment