Tuesday, June 2, 2020

Sri Chandrasekaramrutham - Sri Adi Shankara Bhagavathpada's jayanti- Periyavaa

Today's Sri Chandrasekaramrutham - Sri Adi Shankara Bhagavathpada's 2530th Avathara Jayanthi Punya Dhinam 
     "வைசாக சுத்த சுக்ல பஞ்சமி" ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் திரு அவதார தினம். அப்போது நக்ஷத்திரம் ஆருத்ரா [திருவாதிரை] அல்லது புணர்வஸுவாக [புனர்பூசம்] வரும். அவதார வருஷம் "நந்தன" என்றும், நக்ஷத்திரம் "திருவாதிரை" என்றும் ஒரு புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது (509 BC).
     ஸ்ரீ பகவத்பாதர்களுடைய அவதார தினமானது பெரிய புண்யகாலம் என்று நான் நினைப்பது வழக்கம். புண்யகாலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சிவராத்திரி, ஸ்ரீ ராம நவமி, கோகுலாஷ்டமி, நரசிம்ம ஜயந்தி, உத்தராயண புண்யகாலம், தக்ஷிணாயன புண்யகாலம் முதலிய பல உண்டு. இவைகளைத் தவிர புராணங்களில் பல புண்ய காலங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் விட நம்முடைய ஸ்ரீ ஆசார்ய ஜயந்தி ஸர்வோத்க்ருஷ்டமானது.
     நம்முடையது என்ற ஓர் அபிமானம்; ஸ்ரீ ஆசார்யாள் அவதாரத்தைச் சொல்ல வேண்டுமென்ற அபிப்பிராயம், ஆகிய இரண்டையும் காரணங்களாக நீங்கள் எண்ணலாம். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு முக்யமான ஒரு காரணம் என்பதால் இது தான் உத்கிருஷ்டமான புண்ய காலம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றப் புண்ய காலங்களை விட இதனை அதிக ஸ்ரத்தையுடன் கொண்டாட வேண்டும் என்றே தோன்றுகிறது. என்ன காரணம் என சொல்லுகிறேன்.
     பூலோகத்தில் கலியுகம் ஆரம்பித்து இரண்டாயிரம் வருஷங்களுக்கு மேல், வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள் முதலியவற்றில் அநாதி காலமாக இருந்துவந்த நம்பிக்கைக்கு குறைவு ஏற்பட்டு, அதுவரை பரம்பரையாக இருந்துவந்த அனுஷ்டானம் பக்தி ஆகியவை எல்லாம் மாறி, புத்த மதம் போன்ற 72 மதங்கள் உண்டானதால், அது பர்யந்தம் வேதம் முதலியவைகளால் ஸித்தமான புண்யகாலங்கள் எல்லாம் தத்தளித்த பொழுது, இந்த புண்ணிய காலம் ஏற்பட்டு மற்றவற்றை எல்லாம் நிலை நிறுத்தியது. அதனால், சிவராத்திரி, ஸ்ரீ ராம நவமி, கோகுலாஷ்டமி முதலிய புண்ணிய காலங்கள் புனருத்தாரணம் பெற்றுவிட்டன. எனவே இதில் அதிக ஸ்ரத்தை வேண்டும் என கூறுகிறேன்.
     இந்த புண்ணியகாலம், மலையாள தேசத்தில் "காலடி" என்ற ஊரில் ஸ்ரீ சிவகுரு - ஆர்யாம்பாள் என்னும் புண்ணிய தம்பதிகளுக்கு அவர்களுக்கு உரிய வீட்டில் நண்பகலில், அபிஜித் முகூர்த்தத்தில் ஏற்பட்டது. நம் ஆசார்ய ஸ்வாமிகளுக்கு பிறந்த நாளை அனுசரித்துப் பெயர் சூட்ட நினைத்தார்கள். வேதத்தில் "ஶங்கர" என்று சொல்லியிருப்பதைப் பார்த்து வைக்கவில்லை. அவர்கள் எண்ணின கணக்குப்படி அது அமைந்துவிட்டது. பகவத்பாதர் அவதார தினம் வைசாக சுக்ல பஞ்சமி - மாஸம், பக்ஷம், திதி ஆகிய மூன்றையும் "கடபயாதி ஸங்க்யை" படி திருப்பிப் பார்த்தால் 5வது திதி, முதல் பக்ஷம், 2வது மாஸம் அது. ஐந்தைக் குறிக்க "शं" என்பதை வைத்து, ஒன்றைக் குறிக்க "क" என்பதை வைத்து, இரண்டை "र" என்பதாகக் குறித்தார்கள். ஆகவே, திதி, பக்ஷம், மாஸம் ஆகிய மூன்றின் கணக்குக்கும் ஸங்கேதமாக शंकर என்னும் பெயர் வந்தது. அதையே நம் ஸ்ரீ ஆசார்யாள் திருநாமமாகச் சூட்டினார்கள்.
[ஸ்ரீ மஹா பெரியவாள் சென்னை உபன்யாசம் - 5th & 6th November, 1932] 

No comments:

Post a Comment