Thursday, June 18, 2020

Shanti: Lalita sahasranama -Periyavaa

_அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்_

*சாந்தி:*

சமம், தமம் என்பனவற்றை 'சமாதி ஷட்க ஸம்பத்' என்பதாக ஆத்ம ஸாகதனுக்கு இருக்க வேண்டிய ஆறு ஸம்பத்துக்களில் நம் ஆசார்யாள் வைத்திருக்கிறார். 'சம'த்தோடு சேர்ந்த நிலைதான் 'சாந்தி' : 'தம'த்தோடு சேர்ந்த நிலை 'தாந்தி' எனப்படும். இப்போது 'சாந்தி' என்ற வார்த்தை நம் எல்லோர்க்கும் தெரிகிறது. 'தாந்தி' என்ற வார்த்தை அவ்வளவாகத் தெரியாது. மடத்து ஸ்வஸ்தி வசனம் தெரிந்தவர்களானால், அதிலே ஆசார்யாளைச் சொல்கிறபோது 'சாந்தி தாந்தி பூம்நாம்' என்று வருவதை கவனித்திருப்பீர்கள். 

'தம'த்திலிருந்து 'தமனம்', 'தாந்தி' என்ற வார்த்தைகளும், 'சம'த்திலிருந்து 'சமனம்','சாந்தி' ஆகிய வார்த்தைகளும் வந்திருக்கின்றன. தமனம்-தாந்தியைவிட சமனம் – சாந்தி அதிகம் வழக்கிலிருக்கிறது. உஷ்ண சமனம், பித்த சமனம், கோபத்தை சமனம் பண்ணுவது என்றெல்லாம் சொல்கிறோம். 'அடக்குவது' என்பதுதான் அர்த்தமானாலும் அது கடுமையாகத் தெரியாமல், 'தணிப்பது' என்று mild -ஆக த்வனிக்கிறது! 'சாந்தி' என்கிற போதும் கொந்தளிப்பை அடக்குவது என்பதன் கடுமை தெரியாமல், ஸெளக்யமாக அடங்கி அமைதியாகிவிட்ட தன்மையையே குறிப்பதாக இருக்கிறது.

மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக்கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம் தான்.

மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூற ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமான படியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக்காமல், வெளியே ஆனந்தத்தைத் தேடித் துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். 

தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான் (சாந்தி ரூபமாக இருக்கும் சக்தியின் கடாக்ஷத்தினால் அவனுக்கு சாந்தி கை கூடும்) .

_ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 94 / நாமம் 447 – சாந்தி:- சாந்தி ரூபமாக இருப்பவள்_

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

No comments:

Post a Comment