"கொரோனா கலாபம்"-03
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 29.04.2020)
ஸ்ரீரங்கம் மற்றும் நம்பெருமாள் இரண்டுமே விசித்ரமானது..!
சில ஆண்டுகாலம் இங்கு வாழ்க்கை நடத்தி, அவ்வப்போது கோயிலுக்குச் சென்று, நம்பெருமாளைத் தரிசித்தால் போதும்..!
அதன் பிறகு, நம் ஜன்மா பிரியும் வரையில் இந்த ஊரின் தாக்கமும், நம்பெருமாளின் தாக்கமும், நம் ஊனோடும், உயிரோடும் கலந்து உறவாடும்..!
இது "நம்பெருமாள் தொற்று..".
அதுவும் இந்த ஊரினை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் படும் ப்ராண அவஸ்தையினைப் பற்றி கேட்கவே வேண்டாம்..! அது நம் ப்ரியமான தாய் மற்றும் தந்தையாரைப் பிரிந்திருப்பதுப் போன்ற அவஸ்தை..!
எப்போதுமே பிரிவுதான் பாசத்தினை அதிகப்படுத்தும்..!
பாசம் என்றால் என்னவென்பதை உணர வைக்கும்..!
அருகிலிருக்கும் வரை ஏதும் அருமைத் தெரியாது..!
ஸ்ரீரங்கம் என்ற சொல்லே அவர்களுக்கு ஒரு புத்துணர்வுத் தரும்..! தாபத்தினை உண்டாக்கும்..! இத்திவ்யதம்பதிகள்தாம் நம் எந்தை, தந்தை, மூத்தப்பன்...!
இந்த தாபம் உடையவர்கள் அனைவருமே நம்பெருமாளுக்குப் ப்ரியமானவர்கள்..!
நம்பெருமாளுமே தம் பக்தர்கள் மீது மாறாத அன்பு கொண்டவன்..! ஒரு சிறு உதாரணம்..!
ஸ்ரீரங்கம் கோயிலில் பல பொருட்களுக்கு வேறெரு பெயர் உண்டு..! இது கோயில் பரிபாஷை..!
உதாரணத்திற்கு குண்டூசியினை "ஆண்டாள்" என்போம்..! அதே போன்று பெருமாளின் திருவடிகளை ஒட்டி, இரண்டு பக்கமும் சோ்க்கப்படும் வலுவான கம்பிகளை "சொட்டை" என்போம்..!
அதென்ன "சொட்டை..."?
மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு வேதாந்த விழுப்பொருளத்தனையும் உபதேசித்தார்.. பிறகு, உமது பாட்டனாரின் செல்வமாகிய "பக்தியோக மார்க்கம்" குருகைக் காவலப்பன் என்பவரிடமுள்ளது, அவரிடம் சென்று அதை உபதேசித்துக் கொள்ளும் என நியமித்தார். நியமித்தபடியே ஆளவந்தார் அவரிடம் சென்றார். அப்போது குருகைக்காவலப்பன் கண்களை மூடி யோக நிலையில் ஆழ்ந்திருந்தார். ஆளவந்தாரோ இவரது தியானத்திற்கு நாம் இடையூறு விளைவிக்கலாகாதென்று எண்ணி, அவர் பின்புறம் மறைந்திருந்தார். குருகைக் காவலப்பன் உடன் கண்களைத் திறந்து "சொட்டைக் குலத்தவர் இங்கு எவரேனுமுளரோ?" எனக்கேட்டார். 'அடியேன்' என்று ஆளவந்தார் அவர் எதிரில் வந்து வீழ்ந்து நமஸ்கரித்து "அடியேன் வந்தது தேவரீருக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார். 'யோகத்தில் கண்ணன் என்னைவிட்டுப் பிரிந்து பின்புறம் கடாக்ஷித்தார்...! சொட்டைக் குலத்தவருக்கல்லாது இப்படி யாருக்கும் கடாக்ஷிக்க மாட்டான்..!. அதனாலறிந்தேன்" என்று அருளிச் செய்தாராம். ஆகையால் இக்குலத்துக்குக் கண்ணன் ஆதரவு உண்டு எனப்பட்டது.! 'யத்ர கிருஷ்ண க்ருதாதர" என்று கண்ணன் ஆளவந்தாரிடத்தில் க்ருபை மிகுந்தவனாயிருந்தான்..!.
ரங்கநாதனின் இரு திருவடிகளையெல்லாம் தழுவி நிற்கும், இக்கம்பிகளையே, இன்னமும் ரங்கநாதன், நாதமுனியாகவே, சொட்டைக்குலமாகவேக் கருதுகின்றான்..!
அதனால்தான் அர்ச்சகமுகனே, அவன் புறப்படும்பொதெல்லாம் "சொட்டை" என்றழைக்கப்படுகின்றது...! மேலும் இன்னொரு விஷயம்..! நம்பெருமாள் புறப்பாடுக்குண்டான சாமான்கள் அனைத்தும் வேறொரு அறையிலிருக்க, இ்ந்த சொட்டை மெத்தை (சொட்டை மெத்தை = பெருமாள் திருவடிகளைப் பல்லக்கோடு இணைக்கப்பயன்படும் இந்த இரண்டு இரும்புக் கம்பிகள், பிணைக்கப்பயன்படும் பாசம் (கயிறு), இவ்விரண்டையும் சேர்த்து, நம்பெருமாள் கைலியினால் மூடிக் கட்டியது) பெரிய பெருமாளின் திருவடிக்கருகிலேயே எப்போதுமிருக்கும்..!
நம்பெருமாளே, "மணிக்கதவம் தாள் திறவாய..!" என்று திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் போன்று பலரும் தாபத்துடன் காத்திருககின்றனர்..!
நம்பெருமாள் இந்த பிரபஞ்ச சக்தி..! தாயார் ஸமஸ்த லோகத்தின் பிரகாச சக்தி..! ஒளி..!
மாலிக்காபூர் படையெடுப்பிற்கு முன்னரே ஒரு படையெடுப்பு நடந்துள்ளது..!
இது இரண்டாவது கலாபம்..!
அப்போது, ஸ்ரீரங்கம் அருகிலுள்ள உத்தமர் கோயிலைச் சேர்ந்த ஒரு பெண் டில்லி வரை இத்துலுக்கர்களைப் பின்தொடர்ந்து சென்று மீண்டும் வந்து இங்குள்ள கோவிலார்களுக்கெல்லாம் விபரங்கள் சொல்லி, இத்திருக்கோயில் அரையர்கள் மற்றும் சில கைங்கர்யபரர்கள் துணையுடன் மீண்டும் டில்லி சென்று, அரங்கனைத் தவிர்த்து வேறு யாரையும், ஆடிப்பாடி அகம்கரைந்து உருகும் "அரையர்கள்" எனும் பெருமக்கள், அரங்கனை மீட்பதற்காக, அந்த அரசன் முன்பு "ஜக்கினி" எனும் நடனமாடி, அவனை மகிழ்வித்து மீண்டும் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்தனர்..!
இந்த கலாபத்தின் போது அரங்கனுக்காக இருமுறை டில்லி சென்று வந்த இந்த உத்தமர்கோயில் உத்தமியின் பெயரும் தெரியவில்லை..! "பின் தொடர்ந்த வல்லி" எனும் காரணப்பெயரும் "கரம்பனுார தாசி" என்ற ஊர் பெயரையும் சொல்கின்றனர். உண்மைப் பெயர் தெரியவில்லை..!
எந்தவித தொலைதொடர்பும் இன்றி, Google Mapம் இன்றி எப்படித் தடம் மாறாமல் அவர்கள் சென்று, மீட்டு வந்தனர்...?
"அரங்கன்" எனும் ஆன்ம சக்தி அவர்களைச் செயல்பட வைத்தது...!
அரங்கனுக்காக, அரங்கனை மீட்பதற்காக டில்லி வரை சென்று ஆடிப்பாடி மகிழ்வித்த அந்த அரையர்கள் பெயர்களும் கோயிலொழுகில் தெரியவில்லை..!
இந்த பெயர் தெரியாத உத்தமியும், உத்தமர்களும் அரங்கன் மீது எவ்வளவு மையல், தாபம், அன்பு கொண்டிருப்பார்கள்..?
அரங்கனைக் காணாது, அக்கணமே தம் உயிர் நீத்த, இன்றும் கூட அர்ச்சுன மண்டபத்தில் சித்திரரூபத்தில் அருள்பாலிக்கும் "துலுக்க நாச்சியார்" எத்துணை தாயுள்ளத்தோடு அரங்கனிடத்து விளைாடியிருப்பாள்..!
அன்று அவர்கள் படையெடுத்து வந்தபோது எத்துணை பேர் சித்ரவதைப்பட்டு இறந்திருப்பார்கள்..! அரங்கனைக் காணாத ஏக்கத்தில் பித்துபிடித்து அலைந்திருப்பர் - உயிர் தியாகம் செய்திருப்பர்..!
அன்று, இவர்களிடம் சிக்கிய(!) அரங்கன், பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் படையெடுத்து வந்தும் உலுக்கானின் படைவீரர்களிடம் சிக்காமல் தப்பித்தாரே..! என்ன காரணமாகயிருக்கும்...?
எல்லாம் அவன் சங்கல்ப்பம்.!
அன்று, சுல்தான் மன்னரின் குமாரத்தி "சுரதாணி" என்பவளுக்கு அருள்புரிவதற்காகக் கூடயிருக்கலாம்..! அவளது ஜன்ம சாபல்யத்தினைப் போக்குவதற்காகயிருக்கலாம்..!
என்றோ, ஆற்றங்கரையோரம், தம் பேரனைக் காணாது "ரங்கா..! ரங்கா..!" என்று கதறிய பாட்டிக்காக இன்'று வரை ஜீயர்புரம் வரை போய்வருகின்றானே இவன்..!
இவனது கருணை அளவில்லாதது...!
இதையெல்லாம் எண்ணி, இன்று நாம் தாபத்தினை சற்று ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டும்..!
தனித்திருந்து அரங்கனைப் பற்றிய சிந்தையோடு, விடியும் வரைக் காத்திருப்போம்..!
தாஸன் - முரளீ பட்டர்
#கொரோனாகலாபம்#
No comments:
Post a Comment