வேதார்த்த சங்கிரஹம்-7
அத்வைதக் கொள்கைப்படி,
நிர்விசேஷ சின்மாத்ரமான ( undifferentiated consciousness) பிரம்மத்தைத் தவிர ஜீவன் ஜகத் என்கிற இந்த பிரபஞ்சம் உண்மை அல்ல. ஜீவன் அவித்யையினால் ஏற்பட்ட சரீர சம்பந்தத்தினால் தான் வேறு என நினைக்கிறது. இதுதான் மாயை. பிரம்மஞானம் ஏற்பட்டுவிட்டால் தானே பிரம்மம் என்று அறிந்து பிரம்மத்துடன் ஐக்கியம் ஏற்பட்டுவிடுகிறது.
உலகமே உண்மை இல்லை என்றால் , பிரம்மஞான்த்தை போதிக்கும் குரு, கற்கும் சிஷ்யன், அந்த ஞானத்திற்கு மூலமான வேதம் எல்லாமே உண்மை அல்ல. ஏனென்றால் உண்மையில் ஜீவன் கட்டுப்பட்டவனே அல்ல. அறியாமையினால் அவ்விதம் எண்ணுகிறான்.
இதற்கு விசிஷ்டத்வைதத்தின் பதில் என்ன?
முதலில் வேதப்ரமாணத்தை மேற்கோள் காட்டியே அத்வைத கொள்கையானது மறுக்கப் படுகிறது.
தத என்ற சப்தத்தால் அறியப்படும் பிரம்மமே படைத்தல் , காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணம் என்பதை உபநிஷத் வாக்கியங்கள் மூலம் காணலாம்.
சாந்தோக்ய உபநிஷத்தில் பிரபலமான தத் தவம் அஸி வாக்கியம் காணப்படும் பகுதியில், 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்' என்று தொடங்கி 'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய,' என்று காண்கிறோம். இதற்குப் பொருள் பிரம்மம் மட்டுமே ஆதியில் இருந்தது. அது பலவாறாக ஆக சங்கல்பித்தது என்பது.
இந்த பகுதியின் முடிவில் 'ஸந்மூலா: சௌம்ய இமா: பிரஜா: ஸதாயதனா: ஸத்ப்ரதிஷ்டா:' என்ற வாக்கியம் காணப்படுகிறது. இதன் பொருள், இவை எல்லாவற்றிற்கும் மூலம் பிரம்மம். எல்லாம் பிரம்மத்திலேயே இருக்கின்றன , பிரம்மமே இவற்றை வகிக்கிறது என்பது. மேலும் எல்லாம் பிரம்மத்திலிருந்து தோன்றி, பிரம்மத்தினால் காக்கப் பட்டு ப்ரம்மத்திலேயே ஒடுங்குகின்றன என்றும் உள்ளது.
இந்தக் கருத்தை 'யதோ வா இமானி பூதானி ஜாயந்தே என ஜாதானி ஜீவன்தி யாஸ்மின் அபிஸம்விசந்தி தத் விஜிக்ஞாஸஸ்வ தத் ப்ரம்ம,' (தைத். 3.1.1.)என்ற வாக்கியம் தைத்திரீய உபநிஷத்திலும் காணலாம். இதன் பொருள் 'எதிலிருந்து எல்லாம் உண்டாகிறதோ, எதனால் எல்லாம் ஜீவிக்கிறதோ எதில் கடைசியில் போய் ஒடுங்குகிறதோ அதைத் தெரிந்து கொள். அதுதான் பிரம்மம்; என்பதாகும்.
இந்த உபநிஷத் வாக்கியங்களின் மூலம் இந்த பிரபஞ்சம் பிரம்மத்தினால் தோற்றுவிக்கப்பட்டு , காக்கப் பட்டு முடிவில் தன்னிடமே சேர்த்துக் கொள்ளப்படுகிறது என்பது உறுதியாகிறது. அதனால் இந்த பிரபஞ்சம் பிரம்மமே ஆகையால் இது உண்மை பொய் அல்ல என்று ராமானுஜர் ஸ்தாபிக்கிறார்.
இதே போல பிரம்மம் நிர்குணம் நிர்விசேஷ சின்மாத்ரம் (undifferentiated consciousness) என்பதையும் மறுக்க வேறு உபநிஷத்திலிருந்து பிரம்மனுக்குப் பல அடைமொழிகள் இருப்பதை மேற்கோள் காட்டுகிறார்.
No comments:
Post a Comment