வேதார்த்த சங்க்ரஹம்-6
நாம் முன்பே பார்த்தபடி வேதத்தில் மூன்றுவகையான வாக்கியங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு முண்டக் உபநிஷத்தில் 'த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா—என்ற பாடப்பகுதியில் ஜீவாத்மா , பரமாத்மா என்ற இரண்டும் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைப்போன்ற பகுதிகள் பேத சுருதி எனப்படும். அதாவது ஜீவனையும் பிரம்மத்தையும் தனித்தனியாகக் குறிப்பிடுகின்றன.
தத் தவம் அஸி போன்ற பகுதிகள் ஜீவபிரம்ம ஐக்யத்தைக் கூறுகின்றன. இவை அபேத சுருதி எனப்படுபவை.
இதைத் தவிர மூன்றாவது வகை வாக்கியங்கள் 'யஸ்ய ஆத்மா சரீரம்' போன்றவைகள் பிரம்மத்தை ஜீவனுடைய அந்தராத்மாவாகக் கூறுகின்றன. இவைகளை ராமானுஜர் கடக சுருதி, அதாவது மேற்கூறிய இரண்டையும் இணைக்கும் வாக்கியங்கள் என்று கூறுகிறார்.
முன்னமே அத்வைத சித்தாந்தத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறியவர் இப்போது விரிவாக விமர்சிக்கிறார்.
அத்வைத கொள்கையின்படி பிரம்மம் வேறுபாடு எதுவும் இல்லாத ஞானஸ்வரூபம். (undifferentiated consciousness). இதன் பொருள் என்னவென்றால் ஞாத்ரு அதாவது அறிபவன், (knower) ஞானம் , அறிவு,(knowledge) ஞேயம், (known)அறியப்படும் பொருள் இவை மூன்றுக்கும் வேறுபாடு இல்லை என்பது. ஜீவனும் பிரம்மமும் ஒன்றே , ஜீவோ ப்ரம்மைவ நாபர: என்ற அத்வைத சித்தாந்தத்தில் பிரம்மம் அறியப்படும் பொருள் ஜீவன் அறிபவன் என்ற வேற்றுமைக்கே இடம் இல்லை அல்லவா. நான் என்னை அறிவது போல. நான்தான் பிரம்மம் என்பதை அறிந்தால் அங்கு நான் என்பதே இல்லாமல் போகிறதல்லவா? அப்போது யார் யாரை அறிவது?
ஏகமேவ அத்விதீயம் என்ற உபநிஷத் வாக்கியம் பிரம்மத்தைத் தவிர் வேறு ஒன்றும் இல்லை என்று கூறுகிறது, அதனால் அறிவு அறிபவன் அறியப்படும் பொருள் எல்லாம் அடிபட்டுப் போகிறது.
ஆனால் பிரம்மம் எப்போதும் நித்யமுக்தஸ்வரூபமானது (ever free), ஸ்வயம்ப்ரகாசம் ( அதாவது அதை அறிய இன்னொன்று தேவை இல்லை). அப்படி இருக்கையில் தத் தவம் அஸி போன்ற வாக்கியங்கள் ஆரம்பமும் முடிவும் உள்ள சம்சாரபந்தத்தில் கட்டுப்பட்ட ஜீவன் பிரம்மமே என்று கூறுவது எவ்விதம் பொருந்தும்?
இதை அத்வைதம் எவ்வாறு விளக்குகிறது?அதைப் பிறகு காண்போம்.
No comments:
Post a Comment