Friday, May 29, 2020

Vedartha sangraham part 11 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

வேதார்த்த சங்க்ரஹம்- 11

தத் த்வம் அஸி என்பது ஏன் பிரம்மஜீவ ஐக்யத்தைக் குறிப்பதாக இருக்கக் கூடாது? ஏன் சரீர சரீரி பாவத்தை கொண்டுவரவேண்டும் என்றால் அதற்கு ராமானுஜர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

தத் தவம் அஸி விளக்கம்

தத் தவம் அஸி

இந்த வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்தாபிக்கிறார் ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில். இதன் பொருள் என்ன என்பதை விளக்க சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது. இதை நாம் வேதார்த்த ஸங்க்ரஹம் பற்றிய பதிவில் கொஞ்சம் தெரிந்துகொண்டோம்.

இதில் உத்தாலகருடைய மகன் ச்வேத கேது குருகுலவாசம் முடிந்து தந்தையிடம் வருகிறான். அவனைப் பார்க்கும்போது எல்லாம் அறிந்தவான் போல் ஒரு பெருமிதம் காணப்படுகிறது. அதைப் பார்த்து
உத்தாலகர் கேட்கிறார்.

எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ (ஏக விக்ஞானேன சர்வ விஞ்ஞானம்) அந்த ஞானத்தை அடைந்தாயா என்று,

அவன் அது என்ன என்று கேட்கிறான் . அவன் தந்தை சொல்ல ஆரம்பிக்கிறார். "ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்." சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் "தத் தவம் அஸி" நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.

தந்தை "எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா," என்று கேட்க ச்வேதகேது " அது எப்படி சாத்தியம் " என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.

வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.

இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.

ஸ்வேதகேது இதை அறியவில்லை என்றதும் அவரே சொல்ல ஆரம்பிக்கிறார்.
"ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்'

சௌம்ய- அன்பு மகனே
அக்ரே – முதலில்
இதம்- இந்த பிரபஞ்சம்
ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே 
ஆஸீத்- இருந்தது 
(ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது 
அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்றும் இல்லை

அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.

சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது? 
தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் பிரஜாயேய என்கிறார்.

அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது.

அங்கே 'தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,' 
அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.

அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
'அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி' (சாந்தோக்ய உப.)

இதன் பொருள், 'இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.'

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

\அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

ச்வேதகேது மேலும் விளக்கத்தைக் கேட்கவே எட்டு உதாரணங்கள் மூலம் அதை விளக்குகிறார்.ஒவ்வொன்றையும் சொல்லி "ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ" என்று முடிக்கிறார்.

1. ஒரு தேநீயானது பல புஷ்பங்களில் இருந்து தேனை சேகரிக்கிறது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த பின் எந்த மலரிலிருந்து எந்த தேன் வந்தது என்று தெரிவதில்லை. எல்லாம் ஒன்றாகவே ஆகிறது.

அதே போல ஜீவ ராசிகள் எப்படி அயர்ந்த தூக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய தனித் தன்மையை அறிய முடியவில்லையோ அது போல முடிவில் பிரம்மத்தில் லயித்து விடுகின்றன,. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.

அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு சிருஷ்டி மாறுபடுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை கொசு கடிக்காமல் இருப்பதில்லை. தூங்கி எழுந்த போது எப்படி அதனதன் இயற்கை மாறவில்லையோ அது போல,. முக்தியடைந்த ஜீவர்கள் மறுபடி பிறப்பதில்லை. மற்றவர்கள் அவரவர் கர்மவாசனைப்படி மறுபிறவி எடுக்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. கர்ம வாசனை பிரம்மஞானம் ஏற்பட்டு முக்தியடையும் வரை அழிவதில்லை.

  

No comments:

Post a Comment