Tuesday, May 5, 2020

Mukundamala part12 to 14 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

முகுந்தமாலை

12. பவஜலதிகதானாம் த்வந்தவவாதாஹதானாம் 
ஸுததுஹித்ருகளத்ரத்ராணபாரார்த்திதானாம்
விஷமவிஷயதோயே மஜ்ஜதாம் அப்லவானாம் 
பவது சரணம் ஏகோ விஷ்ணுபோதோ நராணாம்

சம்சாரம் என்ற கடலில் அகப்பட்டு, இருமைகள் என்ற காற்றினால் அலைக்கழிக்கப்பட்டு , புத்திரன் புத்திரி மனைவி இவர்களை பராமரிக்கும் பாரத்தினால் சோர்ந்து, விஷய சுகங்கள் என்ற ஆழத்தில் மூழ்கி வெளியேற ஒரு தோணி இல்லாதவர்க்கு பகவான் விஷ்ணுவாகிற ஓடமே சரணம்.

சம்சாரம் என்பது. ஜீவன் பிறப்பு இறப்பு என்னும் அலைகள் கொண்ட ஒரு கடல்,(பவஜலதி). சுகம் –துக்கம், குளிர்-உஷ்ணம், வெற்றி –தோல்வி என்ற இருமைகளாகிய , (த்வந்தவம்,) காற்றினால் அலைக்கழிக்கப்பட்டு, (வாதாரதானாம்), அல்லலுறுகின்றது. இதைவிட்டு வெளியேற முடியாமல், மனைவிமக்கள் என்கிற பாரம் அழுத்துகிறது. அதனால் விஷய சுகம் என்கிற ஆழத்தில் (விஷமவிஷயதோயே) அழுந்தி கரையேற ஒரு தோணி இல்லாமல் (அப்லவானாம்) அல்லலுறும் மக்களுக்கு விஷ்ணு என்கிற ஓடம் (விஷ்ணுபோத:) கரையேற்றுகிறது.

13.பவஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரீயம்
கதம் அஹம் இதி சேதோ மாஸ்மகா: காதரத்வம்
ஸரஸிஜ த்ருசி தேவே தாவகீ பக்திரேகா
நரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யதி அவச்யம்.

மனமே, மிகவும் ஆழமானதும், கடக்கமுடியாததும் ஆன பிறவிக்கடலை எவ்விதம் கடப்பது என்று எண்ணி பயம் வேண்டாம். நரகாசுரனைக் கொன்றவனும் கமல நயனனும் ஆன பகவானிடத்தில் நீ கொண்ட பக்தியே உன்னை தாண்ட வைக்கும்.

முந்தைய ஸ்லோகத்தினால் ஏற்பட்ட ஒரு சந்தேகத்துக்கு இது பதிலாக அமைந்துள்ளது. அது என்னவென்றால், விஷ்ணு என்கிற ஓடம் சம்சாரசாகரத்திலிருந்து கரையேற்றும் என்றாலும், முன் வினை காரணமாக வெகு ஆழத்தில் அமிழ்ந்து ஆசை, பற்று இவைகளால் கட்டப்பட்டுக் கிடக்கும் எனக்கு எவ்விதம் உதவும் என்பது.

குலசேகரர் சொல்கிறார், பகவானின் கருணைக்கு வேறு எந்தவித புண்ணியமும் தேவை இல்லை பக்தி ஒன்றே(பக்தி: ஏகா) போதும் அதுவே உன்னை சம்சாரக்கடலை நிச்சயமாக தாண்டவைக்கும், ( தாரயிஷ்யதி அவச்யம்) என்று.

பகவானே கீதையில், அபி சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அனன்ய பாக் சாதுரேவ ஸ மந்தவ்ய:,' "ஒருவன் எவ்வளவு பாபியானாலும் என்னை முழு மனதுடன் பூஜித்தானேயாகில் அவன் சாதுக்களுள் ஒருவனாக எண்ணப்படுவான்," என்று கூறியுள்ளாரே 
ஏனெனில்,அவன் க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா. சீக்கிரத்தில் பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.

அந்த பக்தியைப் பெறுவது எப்படி? அதற்கு அவனையே வேண்டவேண்டும் அதைத்தான் அடுத்த ச்லோகம் கூறுகிறது.

14.த்ருஷ்ணாதோயே மதனபவநோத்தூத மோஹோர்மிமாலே 
தாராவர்த்தே தனய ஸஹஜ க்ராஹஸங்காகுலே ச
ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் ந: த்ரிதாமன் 
பாதாம்போஜே வரத பவதோ பக்திநாவம் ப்ரயச்ச

மூன்று இடங்களில் எழுந்தருளி இருக்கும்(த்ரிதாமன்) வரதனே, ஆசை, (த்ருஷ்ணா) என்னும் நீரை (தோயே) உடையதும், மன்மதனாகிய வாயுவினால், கிளப்பப்பட்ட ( மதனபவநோத்தூத) மோகமாகிற அலைகளின் வரிசைகளை ( (மோஹோர்மிமாலே) உடையதும், மனைவியாகிற சுழல்களை உடையதும்,(தாராவர்த்தே ) மக்கள், (தனய) உடன்பிறந்தோர்( ஸஹஜ) முதலிய முதலைக் கூட்டங்களை உடையதும் , (க்ராஹசங்காகுலே) ஆகிய சம்சாரம் என்கிற பெருங்கடலில் ( ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ) முழுகி உள்ள (மஜ்ஜதாம்) எங்களுக்கு (ந: ) உன் சரணக்கமலங்களில் ( பாதாம்போஜே) பக்தி என்கிற ஓடத்தை (பக்திநாவம்) தந்தருள் ( ப்ரயச்ச).

மூன்று இடம் என்றது வைகுண்டம், பாற்கடல், திருமலை.

மனைவி மக்கள் உடன் பிறந்தோர் இவர்கள் விடத்தக்கவர்கள் என்று அர்த்தமில்ல. ஸ்வதர்மம் என்பதை அனுஷ்டித்தே ஆகவேண்டும் . ஆயினும் அவர்களிடத்தே பற்றுக்கொண்டு பாவங்களை செய்வதனால் பிறவிச்சுழலில் அகப்பட்டுக்கொள்கிறோம். விடவேண்டியது ஆசையையும் பற்றையும்தான்.

  

No comments:

Post a Comment