Tuesday, May 12, 2020

Greatness of saranagati

சரணாகதி

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வி க்கு  பல  ஆயிரம் மறுப்புகள் கூறிவிடலாம். 

ஆனால் கண்ணதாசன் சொன்னது போல் கடவுளின் நினைப்பு வராமல் யாரும் இருக்க முடியாது.  

ஜனனத்தின் போதே உணர்ந்த ஞானக் குழந்தை களும் உண்டு. 

பட்டுத் தெரிந்து இறக்கும் போது அல்லது இருக்கும்போதே  உணரத் துடிக்கும் மக்களும் உண்டு. 

அல்லது குறைந்த பட்சம் எதிர்க்கவாவது கடவுளை நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. 

உலகத்தில் துயரங்களே இல்லாத மனிதன் என்பவன் இருக்க முடியாது.  

எல்லா மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு துயரம் ஏதோ ஒருவகையில் ஜனித்து நிற்கிறது. 

அந்த துயரம் எல்லை கடந்து தாள இயலாமல் நிற்கும் போது அதை இறக்கி வைக்க கடவுள் நமக்குத் தேவைப் படுகிறார். 

ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? 

சரணாகதி தத்துவம் மிகவும் எளிமையானது. 

பாரதத்தில்  சூதாட்ட சர்க்கம். 

பகடையில் தோற்றான் தருமன். 

தன்னை இழந்து, தன் தம்பிகளை இழந்து பின் மனைவியையும் வைத்திழந்த இழிநிலையில்  இருக்கிறான்.  

எதிரே வெற்றி பெற்ற ஆணவம் கொக்கரிக் கிறது. மேலும் மேலும் என்று ஆர்ப்பரிக்கிறது. 

 கொண்டுவா பாஞ்சாலியை, இந்த மன்றத்தில் அவள்  வந்து நிற்கட்டும். பார்த்திந்த பார் என்னைப் புகழட்டும் என்று பேயாட்டம் ஆடுகிறது.

பாஞ்சாலி இழுத்து வரப்பட்டு சபையில் நிற்கையில் ஆணவம் தன் குன்றின் மேலேறி இன்னும் ஆட்டம் போடுகிறது. 

 மார்பில் துணி மறைக்கும் பழக்கம் அடிமை களுக்கு உரியதல்ல, அவள் ஆடைகளை உரித்தெறி  என்று ஊளையிடும் ஓநாயாய் மாறுகிறது. 

கையறு நிலையில் அழுகிறாள். 

பெரியோர்களை நோக்கி நீதி கேட்கிறாள். 

தன்னை மணந்த கணவர்களாவது இதை எதிர்த்துக் காப்பாற்றுவார் என்று தன் சேலையைக் கையால் பிடித்துக் கொண்டு அரற்றுகிறாள்.  

அனைவரும் அமைதியாய் இருக்கிறார்கள். 

அதுவரை இல்லாத கடவுளின் நினைவு அவளுக்கு அப்போது வருகிறது.

 கேசவா மாதவா கோவிந்தா நீயே சரண் என்கிறாள்.  

உறிய உறிய சேலையாய் தருகிறான் அந்த கோவிந்தன். 

சரணாகதி தத்துவத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக  பரவலாகச் சொல்லப் படும் கதை இது.  

ஆதிமூலமே என்று அலறிய யானையின் கதையும் பரிபூர்ண சரணாகதியின் உதாரணம் அல்லவா. 

ஆதிமூலமேன்னு அலறியதும் கருடாழ்வார் மேல பரந்தாமன் ஏறி  வந்தாராம். 

காப்பாத்தனுமேங்கற வேகத்துல கொஞ்சம் முன்னாடியே குதிச்சுட்டாராம்.  

ஆனா கருடனை ஒரு கையால இழுத்துட்டே போனாராம். 

கருடன் இல்லாம வந்தா அது நாராயணன் இல்லைன்னு முதலை நினைச்சுக்குமாம் 

 உபன்யாசகர்கள் சொல்வது. 

கருடாழ்வாரும் இல்லை... தாயாரும் இல்லை... அப்ப வந்திருக்கிறது நாராயணந்தான்னு எப்படி நம்பறதுன்னு யோசிக்குமாம் அந்த ஆனை. 

அதற்காக கருடாழ்வாரை விடாம இழுத்துட்டுப் போனாராம்.

ஆனால் பரிபூர்ண சரணாகதி யாரிடம் இருக்கிறது இப்போது ? 

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர்   வேடிக்கையாக ஒரு கதை சொல்வார் 

ஒரு சலவைத் தொழிலாளி துணியை ஆற்றங் கரையில் காயவைத்திருந்தார். 

அந்த பக்கம் ஒரு ரிஷி தெரியாமல் அந்த துணியை மிதித்த வாறு நடந்து சென்றுவிட்டார். 

சலவைத் தொழிளாளிக்கு வந்ததே கோபம்.  ஆத்திரத்தில் திட்டிக் கொண்டு கையில் கொம்பெடுத்துக் கொண்டு ஓடினார்.

 அந்த ரிஷியோ அய்யோ கேசவா மாதவா நாராயாணா என்று அலறினார். 

மேலே இதெல்லாம் பார்த்த நாராயணன் அவசர அவசரமாக  அங்கவஸ்திரம் நழுவ ஓடினாராம்

 பின்னாடியே லஷ்மி தேவி அங்கவஸ்திரத்தை தூக்கிட்டு ஓடுனாங்களாம். 

ஓடி வந்தவர் சற்று நேரத்தில் திரும்ப வைகுந்தம் சென்று விட்டாராம். 

அதை பார்த்த லட்சுமி கேட்டார். 

அவ்ளோ அவசரமா ஓடினீங்க. அதே வேகத்துல திரும்ப வந்துட்டீங்களேன்னு கேட்டாராம். 

அதுக்கு நாராயணன் சொன்னாராம்

என்னை நம்பி ஒரு பக்தன்  காப்பாத்து காப்பாத்துன்னு கூப்டான். நானும் போனேன் "

ஓ அவ்ளோ சீக்கிறம் காப்பாத்திட்டு வந்துட்டீங் களா...  யூ ஆர் தி க்ரேட் "

" அட நீ வேற... அவன் அதுக்குள்ள என்னை நம்பாம கல்லெடுத்து சண்டை போடப் போய்ட்டான். 

இனிமே நமக்கென்ன வேலைன்னு திரும்பி வந்துட்டேன்" அப்படின்னாராம்..

ஒருமுறை  கண்ணனும் அர்ஜுனனும் நடந்து செல்கிறார்கள் 

 எதிரே நாலைந்து  தேவகணங்கள் சிறு கூடை யில் பூக்களை சுமந்து கொண்டு செல்கிறார்கள்.  

அர்ஜுனன் கேட்கிறான். என்ன இது என்று. 

அதற்கு அவர்கள் சொல்கிறார்கள். :

இது பூலோகத்தில் யாரோ அர்ஜுனனாம் 

அவன் பூஜை செய்யும் பூக்கள் இவை. 

அவற்றை கொண்டு சென்று இறைவனிடம் சேர்ப்பிக்கப் போகிறோம் என்கிறார்கள்.  

அர்ஜுனனுக்குப் பெருமை தாங்க வில்லை. 

கொஞ்சம் தூரம் போனதும்  பெரிய பெரிய பார வண்டிகளை யானையைக் கட்டி இழுத்துச் செல்கிறார்கள் 

அவை அனைத்தும் பூக்களாலும் அழகிய  நறுமணமிக்க  பொருட்களாலும் நிறைந்து கிடந்தது. 

கண்ணனிடம் பெருமை பொங்க அர்ஜுனன் கேட்கிறான் இதுவும் என்னுடையது தானே என்று. 

அதற்கு கண்ணன் அவர்களிடமே கேட்டுப் பார் என்கிறான்.

அவர்கள் சலித்துக் கொண்டே சொல்கிறார்கள்.

 " இந்த பூலோகத்தில் பீமன் செய்யும் அட்டகாசம் தாங்கவில்லை.  

எந்த ஒரு பூவைப் பார்த்தாலும் எந்த ஒரு நல்ல விஷயங்களைப் பார்த்தாலும் இது இறைவனுக்கு சமர்ப்பணம் என்று மனதார சங்கல்பித்து விட்டு சென்று விடுகிறான். 

தினமும்  இதுபோல பல பாரவண்டிகளை இழுத்து இழுத்து யானைகளும்  ஓய்ந்து போய் விட்டன " என்று

இதல்லவா பூரண சரணாகதி, 

நான் மட்டுமல்ல நான் காணும் அனைத்துமே உன்னுடையது, உனக்கே அவை சேரவேண்டும் என்று சங்கல்பித்த பீமனின் பக்தி

No comments:

Post a Comment