ஸ்ரீமத்பாகவதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 41
ஸ்ரீக்ருஷ்ணன் தன் ஸ்வரூபத்தை நீரில் காண்பித்துவிட்டு அக்ரூரர் துதித்துக்கொண்டு இருக்கையிலேயே மறைந்தார். பின்னர் அக்ரூரர் தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு நீரிலிருந்து வெளியேறி வியப்புடன் தேருக்கு வந்தார்.
அவரிடம் " நீரில் ஏதோ ஆச்சரியமான காட்சி காணப்பட்டவரைப் போல தோன்றுகிறீர்களே, " என்று கேட்க அதற்கு அவர் " இங்கு பூமியிலோ ஆகாசத்திலோ ஜலத்திலோ எவ்வளவு அதிசயங்கள் உண்டோ அவ்வளவும் ஸர்வாத்மாவான உம்மிடம் உள்ளனவே! உம்மைப் பார்க்கும் என்னால் காணப்படாதது என்ன இருக்கிறது?" என்று பதிலளித்தார்.
பிறகு அக்ரூரர் தேரை ஓட்டிக்கொண்டு அவர்களை அந்தப் பகல் முடிவில் மதுரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களுக்கு முன்னமே வந்திருந்த நந்தர் முதலியவர்கள் அங்கிருந்த உபவனத்தில் தங்கி அவர்களை எதிர்பார்த்திருந்தனர். அப்போது கிருஷ்ணர் வணங்கி நின்ற அக்ரூரரைக் கண்டு முதலில் தேருடன் செல்லும்படி கூறி தங்கள் அந்த நந்த வனத்தில் இளைப்பாறிப் பின் வருவதாகக் கூறினார்.
அப்போது அக்ரூரர் தன் இல்லத்திற்கு வந்து பாததூளியால் அதைப் புனிதப் படுத்த வேண்டும் என்று கூற அதற்கு பகவான் முதலில் கம்சனைக் கொன்று விட்டுப் பிறகு தமையனுடன் வருவதாகக் கூறினார். அக்ரூரரும் பிரிய மனமின்றி நகரத்துள் சென்று கம்சனிடம் அவர்கள் வருகையைத் தெரிவித்தார்.
பிறகு மாலை நேரத்தில் கிருஷ்ணர் பலராமனுடனும் கோபர்களுடனும் பட்டணத்திற்குள் பிரவேசித்தார் . வீதிகளும் மாளிகைகளும் செல்வம் மிக்கவைகளாகக் காணப்பட்டன. அங்கிருந்த பெண்கள் அவர்கள் இருவரையும் காண உப்பரிகைகளின் மேல் ஆவலுடன் ஆடைகளையும் ஆபரணங்களையும் அரைகுறையாக அணிந்து வந்தனர். தாமரைக்கண்ணனாகிய கிருஷ்ணன் அவர்கள் மனதைக் கவர்ந்தான்.
• வழியில் கம்சனுடைய வண்ணான் அரசவஸ்திரங்களை எடுத்து வந்தான். அவனிடம் க்ருஷ்ணர் வேடிக்கையாக அந்த வஸ்திரங்களைத் தரும்படி கேட்க அதற்கு அவன் அவை அரச உடைகள் என்றும் காட்டு வாசிகளான அவர்களுக்கு ஏற்றதல்ல என்றும் அவமரியாதையுடன் பேசினான். அப்போது மரியாதை கெட்ட அவனைக் கொன்று வஸ்திரங்களை கோபர்களுக்குக் கொடுத்துத் தானும் அணிந்துகொண்டு மீதியுள்ளவைகளை எறிந்து விட்டார்.
மற்றொருவன் அங்கு வந்து அவர்களுக்கு உடைகள் ஆபரணங்கள் பரிசளிக்க அவனுக்கு ஸகல சௌபாக்கியங்களையும் அளித்தார். பின்னர் ஸுதாமன் என்ற மாலைகட்டுபவன் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று சந்தனம் மாலை முதலியவைகளைக் கொடுத்து கௌரவித்தான். அவனுடைய பக்தியை மெச்சி அவனுக்கு எல்லா நன்மைகளையும் அருளினார்.
No comments:
Post a Comment