Thursday, April 2, 2020

saranagati - Total surrender

#பாதம்ஒன்றேகதி
#சரணாகதி

இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை.

அப்படிப்பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை; பற்றாமல் போனால் நம் மடமை என்பதே சரணாகதி தத்துவம்.

ராமருக்கு சரணாகத வத்ஸலன் என்ற பெயரே உண்டு.

பால காண்டத்தில் தேவர்களும் அயோத்யா காண்டத்தில், பரதனும் மற்றும் குகனோடு சக்யம், ஆரண்ய காண்டத்தில், ரிஷிகள் சுக்ரீவன்,
யுத்த காண்டத்தில், விபீஷணன் ஆகியோர் சரணாகதி செய்கிறார்கள்.

பகவத் கீதையின் இறுதியில், எல்லாவித தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் மட்டும் தஞ்சமடையும்படி கிருஷ்ணர் கட்டளையிடுகிறார்.

அவ்வாறு கிருஷ்ணரிடம் தஞ்சமடைதல் "சரணாகதி" எனப்படுகிறது.

சரணடைந்த பக்தர்களை தான் பாதுகாப்பதாகவும் அவர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளிக்கின்றார். (பகவத் கீதை 18.66).

விபீஷண சரணாகதிக்குத்தான் தனியொரு பெருமையும் விசேஷமும் இருக்கு.

சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது இதில்தான். சரணாகதியின் ஐந்து அங்கங்கள் இருந்தது விபீஷண சரணாகதியில்தான்.

அந்த சரணாகதி தத்துவத்தில் சொல்லப்படும் ஐந்து அங்கங்கள்

அநுகூல்ய சங்கல்பம்- இறைவனுக்கு அனுகூலமான செயல்களைச் செய்தல். அதாவது எவையெல்லாம் தர்மத்துக்கு உகந்ததோ, அவையெல்லாம் இறைவனுக்கு அனுகூலம்.
ப்ராதிகூல்ய வர்ஜநம்- இறைவனுக்கு விரோதமானவற்றை செய்யாதிருத்தல். தர்மத்துக்கு மாறுபட்ட, முரணான அனைத்தும் இறைவனுக்கு விரோதம். மகாவிச்வாசம்- இறைவன் அவசியம் ரக்ஷிப்பான் என்ற நம்பிக்கை கொள்ளல். காலக்கெடு நிர்ணயம் செய்யாமல், சந்தேகம் கொள்ளாமல், பூர்ணமாயிருத்தல்.
கோப்த்ருத்வ வரணம்- சரணம் அடைந்தேன், ரட்சகனாக இருத்தல் வேண்டும் என பிரார்த்தித்தல்.
கார்ப்பண்யம் - என்னைக்காத்துக் கொள்ள என்னிடம் ஆற்றல் இல்லை எனச் செருக்கு நீங்கிடல்.
சரணாகதியில் இருக்கக்கூடிய இந்த ஐந்து அங்கங்களையும் தாண்டி, விபீஷணரிடம்தான் அங்கீ என்கிற ஆறாவது தன்மையும் இருந்தது.
(அகிஞ்சன:) அகிஞ்சன என்றால் விருப்பு, வெறுப்பின்றி இருத்தல் என்பது பொருள்.

சரணடைந்த சிலர் பற்றி

ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சொல்கிறார்:
பிராட்டியும், பகவானும் விட்டாலும், நான் விடமாட்டேன் என அவர்களின் பாத கமலம் சொல்லுமாம்.

.இரண்டு அடிகளில் மூவுலகையும் அளந்த வாமனரிடம் சரணடைந்து மூன்றாவது அடிக்காக தன்னையே
அர்ப்பணித்தார் மாமன்னர் பலி.

ப்ரஹ்லாதனோட சரணாகதி தான்
நரசிம்ம அவதாரத்திற்கு வித்து.

கஜேந்திரன் இறைவனிடம் அடைந்த சரணாகதியே ஸ்ரீ மகாவிஷ்ணுலை
நொடிப்பொழுதில் வரவழைத்தது.

தன்னிடம் சரணாகதி அடைவோரை இறைவன் கை விடுவதில்லை!

எத்தகைய  வினைப் பயன்கள் இருப்பினும் தானே கதி என்று தன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்போரை அவன் கை கொடுத்து மீட்பது நிச்சயம், அது சத்தியம்!

ஓம் நமோ நாராயணாய !

No comments:

Post a Comment