Thursday, April 9, 2020

Kaumodaki

*எம்பெருமானின் பஞ்சாயுதங்கள்*


3. *கௌமோதகி* *கதை -மஹான் தத்வாம்சம்*

*கௌமோதகி* என்பது திருமாலின்  பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும்.  இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது

எம்பெருமானின் கதாயுதம் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிரளய காலாக்னி போல நாற்றிசையிலும் பொறிபறக்க சிதறடித்து எதிரிகளின் கதை முடித்து உலகத்தாரை மகிழ்விப்பதால் அவன் தண்டுக்கு கௌமோதகீ என்று பெயர்

கௌமோதகி என்ற கதாயுதத்தை அக்னி பகவான் கிருஷ்ணனுக்கு அளித்ததாக மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது
 
*புத்திரத் யாஸ்தே கதா ரூபேண மாதவே* என்று விஷ்ணு புராணமும்
 
*சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம்*
என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மாச்சாரும்

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் *சங்கொடு சக்கரம்வில்,*

*ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டு* புள் ளூர்ந்து,உலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத,

நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே.

பலபல வகைப்பட்ட அவதாரங்களை பண்ணி ஸம்ஸாரிகளின் கண்ணுக்கும் புலப்பட்டு சங்கு சக்கரங்களையும் சார்ங்கத்தையும் ஒளி பொருந்திய முஸலத்தையும் அழகிய கந்தக வாளையும் கௌமோதகி யென்னும் கதையையும் ஏந்திக்கொண்டு பக்ஷிராஜனை வாஹனமாகக்கொண்டு உலகத்திலுள்ள கடினமான மனமுடைய அரக்கர்களும் அசுரர்களம் மாண்டொழியும்படி ஆயுதப்பிரயோகம் பண்ணிப் போர் செய்து  நன்மை மிக்கவனான எம்பெருமானுடைய திருக்குணங்களை துதிக்கப்பெற்ற அடியேன்
ஒரு குறையுமுடையேனல்லேன்

என்று திருவாய்மொழியில் நம்மாழ்வாரும்


*தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும்  தடக்கையன்*

இந்த சிறு பிள்ளை, தன்னிடம் விளையாடுவதற்கு ஏதும் இல்லாதபடியால் உன்னை அழைக்கவில்லை; தன் வலிமையான பெரிய பிஞ்சு கைகளில் கௌமோதகி என்ற கதாயுதத்துடன்(கதையுடன்), உன்னினும் பொலிவான சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருக்கின்றான்.

என்று பெரியாழ்வாரும் – 

*சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான்
பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வாரும்

*விஸ்வ சம்ஹ்ருதி சக்திர்யா விஸ்ருதா* *புத்தி ரூபிணீ சா வ சவ்தர்சநீ பூயாத் கத பிரசமநீ கதா* –
என்று ஸ்வாமி தேசிகன் ஷோடாசாயுத ஸ்தோத்திரத்திலும்

கதாயுதபானியான ஸ்ரீமந்நாராயணனை மங்களாஸாசனம் செய்கின்றனர்.

பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார்.

------------------------------------------------------------------
*ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்:*

*ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்*

*கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்*

 *வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்*

*கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே*


பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.
------------------------------------------------------------------
பிரதிதினமும் ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வதால் எம்பெருமானுடைய  பரிபூர்ணமாக அநுக்ரஹம் கிட்டும்

------------------------------------------------------------------

No comments:

Post a Comment