காஞ்சிபுரம் To திருவரங்கம் -
கப்பலில் போக முடியுமா?
காஞ்சிபுரம் டு திருவரங்கம் - பேருந்தில் போகலாம், ரயில்ல போகலாம்,
கார்-ல போவலாம், பைக்-ல கூட ஜாலியாப் போகலாம்
ஆனா கப்பல்ல போக முடியுமா?
முடியும்
எப்படி?
வேங்கடநாதன், இராமானுஜ சம்ப்ரதாயம் செழித்து விளங்க புறப்படுகிறார்...
வேங்கடநாதன் எனும் கப்பல் காஞ்சியில் இருந்து கஸ்தூரி ரங்கரின் கோவிலை நோக்கி புறப்பட்டது.
ஜெயத்தை பறைசாற்ற வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க,
திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,
ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்..
மாலுமியாக ஹயக்ரீவர் அமர
காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து
தேசமெல்லாம் பவனி வரும் தேசிகக் கப்பல் இது
நாலு வேதங்களும் நங்கூரமாக
நலமுடைய வடகலைக் கொடியொன்றை நாட்டி
திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம்
திடமான கொடியிலே கயிறாக மாட்டி
ஆழ்வார்கள் பதின்மரும் அதன்மேலே ஏறி
அடைவுடன் வழிதேடி சுக்கான் திரும்ப
காஞ்சி நகர் விட்டு கிளம்பியே கப்பல்க
ஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி
பரமகுரு எங்களுடை தேசிக கப்பல்
பாலாறு கரை தாண்டி வருகுதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா
கருணை எனும் கடல் நடுவே
ஞானம் எனும் பாய் விரித்து
மறையவர்கள் ஜெய ஜெயவென
மகிழ்ந்து வரும் கப்பல் இது
ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக
ஹயக்ரீவர் அவர்களுக்கு அதிகாரியாக
கப்பலின் மேல்வரும் துரைகளின் பேர்கள்
கணக்குடன் சொல்லுவேன் ஞானமுடன் கேளீர்
திருமலையிலே வாழும் திருவேங்கடத்தான்
திருவலிக்கேணியில் பார்த்தசாரதியும்
திருவள்ளூர் அதிகாரி வீரராகவனும்
திருவிடந்தை மேவு லக்ஷ்மிவராகன்
இத்தனை துரைகளும் இதன்மேலே ஏற
விசையுடன் கப்பலும் இவ்விடம் விட்டு
தெளிவுடை பெண்ணை நதிக் கரைதன்னில் வந்து
திருக்கோவலூர் கண்டு திரும்புதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா
உலகமெலாம் இருள் நீங்க
உடையவர் தம் மதம் விளங்க
அறு சமயக் கொடியறுத்து
அமர்ந்து வரும் கப்பல் இது
தர்மங்கள் ஆனதொரு பலகைகள் சேர்த்து
தர்ப்பங்கள் ஆனதொரு பாய்மரம் நாட்டி
அருமறைகள் ஆனதொரு ஆணிகள் தைத்து
அரங்க மாநகர் தேடி அதிவேகமாக
பதிகள் நூற்றெட்டிலும் முதலான கோயில்
பிரதிவாதியாலே ஒரு பழுதாகாதென்று
திருக்கோவலூர் விட்டு கிளம்பியே கப்பல்
திருச்சோழ் நாட்டை ஓர் நொடியிலே தாண்டி
காவேரிக் கரைதன்னில் உதயத்தில் வந்து
கஸ்தூரி ரங்கருடைக் கோவிலைக் கண்டு
கண்ணாலே ஆனந்த பாஷ்பங்கள் உதிர
கமலங்கள் போல இரு கைகளைக் கூப்பி
அத்தலத்துள்ளோர் அனைவர்களாலே ஆராதனம் நின்ற செய்தியைக் கேட்டு
செழிப்புடைய வடதிருக்காவேரி தாண்டி
ஸ்ரீரங்க நகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா
பதின்மர்கள் துதிசெய்ய கோவிந்தா
பாம்பணை மேல் பள்ளி கொள்ளும்
ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு
இவ்வுலகில் ஒருவரும் ஈடில்லையென்று
எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணி
கிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல
கண்டாவதாரரை கண்டித்து மேலும் சாஸ்திரங்களான
பீரங்கியாலே சண்டப்ரசண்டமாய் சண்டைகள் செய்து
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிர் நிற்க மாட்டாமல் எழுந்திருந்தோட
அப்போது ரங்கருக்கு ஆராதனை செய்ய
அங்குள்ள பேர்களுக்கு ஆக்ஞைகள் பண்ணி
ஸ்ரீரங்க நகர் விட்டு கிளம்பியே கப்பல்
திருப்பேர்நகர் தாண்டி ஆடுதுறை வந்து
கும்பகோணம் வந்து ஒருநாள் இருந்து
கோதண்டபாணியுடை பாதங்கள் கண்டு
திருவாழி திருநகரி சீர்காழி வந்து
திரைகடல் போல் வரும் கொள்ளிடம் தாண்டி
சித்திர கூடம் வந்து ஒருநாள் இருந்து
தேவாதி நாதனை கண்டு கை தொழுது
அழகுடைய கருடநதி கரைதனில் வந்து
அயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா
No comments:
Post a Comment