ரீமத்பாகவதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 38
மறுதினம் அக்ரூரர் கோகுலத்திற்குப் புறப்பட்டார். கண்ணனைக் காணும் பாக்கியம் கிடைத்தது பூர்வஜன்ம புண்ய பயனே என்று நினைத்தார். ப்ரம்மா முதலியோர் வண்ங்கிய பொற்பாதங்களைக் காணும் பாக்கியம் கம்சனால் அல்லவா கிடைத்தது என்று எண்ணினார்.
போகும் வழியில் சுப சகுனங்களைக் கண்டார். முன்னுச்சிதவழும் கேசம், தாமரை போன்ற முகம், கருணை மிகுந்த புன்னகை தவழும் கமலக் கண்கள் இவைகளைபற்றி சிந்த்தித்துக் கொண்டே சென்றவர், எல்லோருள்ளும் அந்தர்யாமியானவன் கம்சனால் அனுப்பப்பட்ட போதிலும் தன் பக்தி உள்ளத்தைப் புரிந்து கொள்வான் என்றும் தாள் பணிந்த தன்னை ஏற்று அணைப்பான் என்றும் நம்பினார். இவ்வாறு எண்ணிக் கொண்டே தேரில் கோகுலம் வந்தடைந்தார்.
அப்போது சூரியனும் அஸ்தமிக்க ,அங்குள்ள மாட்டுக் கொட்டிலில் தாமரை, அங்குசம் முதலிய அடையாளங்களுடன் கூடிய கண்ணனுடைய பாதச்சுவடுகளைக் கண்டார். அதைக்கண்டு ஆனந்தம் மேலிட்டு தேரிலிருந்து இறங்கி ஆனந்தக் கண்ணீர் பெருக அவற்றின் மேல் விழுந்து புரண்டார் .
பிறகு மாடுகறக்கச் சென்றவர்களும் மஞ்சள் ஆடையும் நீல ஆடையும் தரித்தவர்களுமான க்ருஷ்ண பலராமர்களைக் கண்டார். அவர்களைக் கண்ட பரவசத்தில் அவரால் தன்னை தெரிவித்துக் கொள்ளவும் முடியவில்லை.
வண்ங்கியவரிடம் வாத்சல்யம் கொண்ட பகவான் அவர் மனதைத் தெரிந்து கொண்டவராய் சக்கரம் ஏந்தும் கையால் அவரை இழுத்து அணைத்துக் கொண்டார். பலராமனும் தன்னை வணங்கியவரைத் தழுவி தம்பியுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் . பின்னர் அவருக்கு முறைப்படி அதிதி ஸத்காரம் செய்தார். நந்தரும் அவரை வரவேற்று உபசரித்தார்
No comments:
Post a Comment