Wednesday, February 12, 2020

Srimad Bhagavatam skanda 10 adhyaya 33 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம்

அத்தியாயம் 33

பின்னர் அங்கு கையுடன் கைகோத்துக்கொண்டு நின்ற பெண்களுடன் பகவான் ராஸக்ரீடை செய்ய ஆரம்பித்தார் . இதை பாகவதம் வர்ணிக்கிறது.

ராஸோத்ஸவ: ஸம்பரவ்ருத்த: கோபீமண்டலமண்டித:
யோகேச்வரேண க்ருஷ்ணேன தாசாம் மத்யே த்வயோ: த்வயோ: (பா. 33.3)

யோகேஸ்வரரான க்ருஷ்ணன் அவர்கள் இரண்டிரண்டு பேரின் மத்தியில் தாம் இருந்தவாறு கோபீமண்டலத்துடன் ராசக்ரீடை செய்ய ஆரம்பித்தார். அப்போது அதைப் பார்க்கும் ஆவலால் தேவர்கள் தங்கள் மனைவிகளுடன் கூடி மெய்ம் மறந்து ஆகாயத்தில் நின்றனர்.

லீலாசுகர் க்ருஷ்ண கர்ணாம்ருதத்தில் இதை எட்டு ஸ்லோகங்களால் வர்ணிக்கிறார். அதில் முதல் ஸ்லோகம் மிகவும் ப்ரபலமானது

அங்கனாம் அங்க்னாம் அந்தரே மாதவோ
மாதவம் மாதவம் சாந்தரேணாங்கனா
இத்தம் ஆகல்பிதே மண்டலம் மத்யக:
ஸஞ்சகௌ வேணுனா தேவகீநந்தன:

ஒவ்வொரு பெண்ணின் மத்தியிலும் ஒரு கண்ணன், ஒவ்வொரு கண்ணன் மத்தியிலும் ஒரு கோபி, இவ்வாறு அமைந்த வட்டத்தின் மத்தியில் கண்ணன் நின்று குழலூதுகிறான். நடனத்திற்கு இசை வேண்டுமல்லவா!

யோகேஸ்வரன் என்ற அடைமொழியையும் இந்தக் காட்சியையும் கண்டால் எவரால் கண்ணனின் செய்கைக்கு மாசு கற்பிக்க இயலும். ஆனாலும் பரீக்ஷித்திற்கு சாமானியன் போல சந்தேகம் வருகிறது. அதற்கு சுகர் பதில் கூறுகிறார் இந்த அத்தியாயத்தின் முடிவில்.

யாதவாப்யுதயத்தில் தேசிகர் கூறுகிறார் .
பாதாஸ்ரிதானாம் ப்ரமசாந்திஹேது: ப்ரியாஸஹஸ்ரம் ப்ரமயாம்ஸ்சகார
தன்னை அண்டினவர்களின் ப்ரமையை போக்கக் காரணமானவன் தன் பிரியமான ஆயிரம் கோபியரையும் சுற்ற வைத்தான் . ப்ரமா என்ற சொல்லின் இரு பொருள்கள் , ப்ரமை அல்லது மயக்கம் , சுற்றுதல்.

"என்மாயையால் எல்லா ஜீவர்களையும் இய்ந்திரத்தில் சுற்றுவதைப்போல சுற்றவைக்கிறேன்' என்று கீதையில் அவன் கூறியதற்கு உதாரணம் போல் அந்த குரவையாட்டம் இருந்தது. அந்த அற்புத வட்டமானது அவர்களின் ஆட்ட வேகத்தால் இடைவெளி இல்லாதது போலத் தோன்றும் சக்கரத்தை ஒத்திருந்தது. தாங்களே சுழன்றபோதிலும் அந்தப் பெண்கள் பூமியெ சுழலுவதாக எண்ணினர்.

வெகு நேரம் விளையாடிய பிறகு, கீழே உட்கார்ந்த கண்ண்னை கோபியர் அவனாலேயே பறித்து அளிக்கப்பட்ட பூக்களும் இலைகளும் அடர்ந்த கிளைகளால் அவனுக்கு விசிறினர். அப்போது மயில்கள்கூட்டமாக மேலே பறந்து இருக்கும் நீலமலை போல கண்ணன் தோற்றம் அளித்தான்.

உபனிஷத் கூறுகிறது,
'ரஸோ வை ஸ: ரஸம் ஹேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி,'
பகவான் எல்லா இன்பங்களின் இருப்பிடம். அவனை அடைந்தவர் ஆனந்தம் அடைகிறார்.

ப்ரபுபாதர் கூறுகிறார்- கடவுளுக்கு பெயர் கிடையாது. ஆனால், அவரின் தன்மைகளைப் பொருத்து அவருக்கு நாம் பல்வேறு பெயர்களைத் தருகிறோம்.. கடவுள் எல்லா வகையிலும் வசீகரமிக்கவராக விருப்பதால், அவருக்கு "கிருஷ்ணர்" என்ற பெயர் பொருத்தமானதாகும், "கிருஷ்ணர்" என்றால் "வசீகரம் நிறைந்தவர்" என்று பொருள். எல்லா அம்சங்களும் இதில் அடங்கும்.

சுகர் கூறினார்,
ரேமே ரமேசோ வ்ரஜசுந்தரீபி: யதா அர்பக: ஸ்வப்ரதிபிம்பவிப்ரம:
க்ருத்வா தாவந்தம் ஆத்மானம் யாவதீ: கோபயோஷிதா:
ரேமே ச பகவான் தாபி: ஆத்மாராமோ அபி லீலயா

பகவான் ஆத்மாராமராக , அதாவது ஆனந்தமே வடிவானராகிலும், எத்த்னை கோபியர் இருந்தனரோ அத்தனை வடிவு கொண்டு அவ்ர்களுடன் தன் ப்ரதிபிம்பத்துடன் விளையாடும் குழந்தையைப் போல் விளையாடினார்.

இதைக் கேட்டும் உண்மை விளங்காதவனாக பரீக்ஷித் சுகரை நோக்கிக் கூறினான்.
"தர்மத்தின் மரியாதைகளை நிரூபிப்பதற்காக அவதாரம் எடுத்தவர் எவ்வாறு பிறர் மனைவிகளைத் தீண்டும் அதர்மத்தை செய்தார்.?"
இங்கு பரீக்ஷித் ஒரு விஷயத்தை மறந்து விட்டான். அது என்னவென்றால் கண்ணனுக்கு பத்து வயது என்பது.

சுகர் கூறிய பதில்.
"கோபிகளுக்கும் அவர்களுடைய கணவர்களுக்கும் உடல் படைத்த எல்லோருக்கும் உள்ளே எவர் உறைகிறாரோ அந்த சாக்ஷியாகிய பகவானே லீலை புரிய இங்கு இந்த உடலுடன் தோன்றி இருக்கிறார்.

(கோபிகளுக்கும் அவர்கள் கணவன்மார்களுக்கும் ஆத்மாவாக உள்ளவன் எப்படி பரபுருஷன் ஆவான். அவன் பரமபுருஷன் அல்லவாஎன்பது இதன் பொருள்)

அவருடைய மாயையால் மோஹமடைந்த கோகுல வாசிகள் தங்கள் மனைவிமார் தங்களுடன் இருப்பதாகவே கருதினர்.

கோபஸ்த்ரீகளுடன் ஸ்ரீ க்ருஷ்ணன் புரிந்த இந்த லீலையை எவன் ஸ்ரத்தையுடன் கேட்கிறானோஅல்லது வர்ணிக்கிறானோ அவன் விரைவில் பகவானிடம் சிறந்த பக்தியை அடைந்து ஹ்ருதயத்தில் உள்ள காமத்தை ஒழித்து விடுவான் எனக்கூறினார் சுகர்.

தத் க்ரது ந்யாயம் என்பது உபநிடதங்களில் சொல்லப்பட்டது. அதாவது ஒன்றை தீவிரமாக நினைந்தால் நாம் அப்படியே ஆகிவிடுவோம் என்பது. ஆனால் பக்வானின் விஷ்யத்தில் இதற்கு எதிர்மறையான விளைவு.

அவன் உரலில் கட்டுண்டதை நினைத்தால் நம் பிறவித்தளை விடுபடுகிறது. வெண்ணை திருடியதை நினைத்தால் மனதில் உள்ள கள்ள எண்ணங்கள் போய் விடுகின்றன. ராஸக்ரீடையை நினைத்தால் காம ஜயம் ஏற்படுகிறது.

கோபியர் எங்கும் கிருஷ்ணனையே காண்கிறார்கள் அதனால் அவர்களுடைய கணவர், புத்திரன் மற்றவர்களிடம் அன்பு பெருகிற்றே தவிர குறையவில்லை. இதைப் போல பரிபக்குவமான பக்தனுக்கு உலகமே ப்ருந்தாவனம்.எல்லாமே ராசக்ரீடை.

No comments:

Post a Comment