ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம்
அத்தியாயம் 32
கோபியர் முன் தோன்றிய கண்ணனைப் பற்றி கூறும் அழகான ஸ்லோகம் ,
தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மன்மத மன்மத: (பா. 32.32)
கிருஷ்ணன் மஞ்சள் பட்டாடையுடனும், மாலையுடனும், புன்னகை பூத்த முகத்தினுடன் மன்மதனுக்கும் மன்மதனாய் அவர்கள் முன் தோன்றினார்.
அதனால் மகிழ்ந்த அவ்ர்கள் தங்கள் ப்ரேமையை பலவிதத்திலும் வெளிப்படுத்தினர். அவர்களின் மேலாடைகளை ஆசனமாக அளிக்க அங்கு உட்கார்ந்த கண்ணபிரான் கோபியரால் சூழப்பட்டு அவர்களால் பூஜிக்கப் பட்டு விளங்கினார்.
அப்போது அவர்கள் கண்ணனிடம் கேட்ட சந்தேகம் பின்வருமாறு.
"சிலர் தங்களை சேவிப்பவரை நேசிக்கிறார்கள். (அதாவது பரஸ்பரம் அன்புடன் உதவுகிறார்கள்) சிலர் தங்களை சேவிக்காதவர்க்கும் உதவி செய்கிறார்கள். மற்றும் சிலர் இருசாராரையும் சேவிப்பதில்லை. இதை எங்களுக்கு விளக்க வேண்டும்."
பகவான் கூறியது:
"எவர் ஒருவருக்கொருவர் உபகாரம் செய்கிறார்களோ அவர்கள் காரியத்தில் கண்ணுடையவர்கள். அதில் நட்பும் இல்லை தர்மமும் இல்லை. எவர்கள் தங்களை சேவியாதவர்க்கும் உதவி புரிகிறார்களோ அவ்ர்கள் பெற்றோரைப் போல் கருணை உள்ளவர்கள். இதில் நட்பு தர்மம் இரண்டும் உள்ளது.
மற்றும் சிலர் தங்களை சேவிப்பவரைக் கூட பொருட்படுத்துவதில்லை அப்படி இருக்க மற்றவரை எப்படி பொருட்படுத்துவார்கள்? ஒன்று அவர்கள் ஆத்மாவிலேயே ஈடுபட்டு ரமிப்பவர்களாகவோ அல்லது விஷய சுகங்களில் நாட்டம் இல்லாதவர்களாகவோ இருக்கலாம் . (முற்றும் துறந்த முனிவர்கள்) .
அல்லது அவர்கள் உலக வாழ்க்கையில் ஈடுபட்டோராயின் நன்றிகெட்ட மூடர்களாகவோ அல்லது உபகாரம் செய்தவர்க்கும் துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள்.
செல்வத்தை அடைந்து அது நஷ்டமாகிய ஒரு ஏழை எவ்வாறு அதுபற்றியே சிந்தனையில் இருப்பானோ அதுபோல என்னை நாடியவர் என்னைத் தொடர்ந்து தியானம் செய்வதற்காகவே அவர்களை விட்டு விலகுகிறேன். இவ்வாறு என் பொருட்டு உற்றார் உறவினரையும் விட்டுவந்த உங்களுக்கு என்னிடம் தியானம் நீடித்து நிலைபெறச் செய்யவே நான் மறைந்திருந்தேன். ஆகவே என்மீது குறை கூறலாகாது."
அடுத்த ஸ்லோகம் பக்வான் தன்னடியார் எல்லோருக்கும் கூறியது போல் உள்ளது.
ந பாரயேஹம் நிரவத்ய ஸம்யுஜாம் ஸ்வஸாதுக்ருத்யம் விபுதாயுஷாபி வ:
யா மாஅபஜன் துர்ஜரகேஹ ச்ருங்கலா: ஸம்வ்ருஸ்ச்ய தத்வ: ப்ரதியாது ஸாதுனா (பா. 32.22)
மிக்க வலுவான இல்லறச்சங்கிலிகளை அறுத்துவிட்டு வந்து என்னை சேவித்தவர்களும் களங்கமற்ற பக்தியுடையவர்களுமான உங்களுக்கு தேவர்களுடைய ஆயுட்காலத்திலும் நான் ப்ரதியுபகாரம் செய்ய சக்தியற்றவனாகிறேன்.ஆகையால் நீங்கள்தான் உங்கள் அன்பாலும் கருணையாலும் என்னை இந்தக் கடனில் இருந்து விடுவிக்க வேண்டும். "
அப்பா! எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் ! பகவானுக்குத்தான் அடியார்கள் மேல் எவ்வளவு அன்பு!
அப்பேர்ப்பட்ட பக்தி வருவதற்கு நமக்கு எத்தனை ஜன்மம் ஆகுமோ?
அடுத்து ராசக்ரீடை.
No comments:
Post a Comment