முகுந்தமாலை
19. ப்ருத்வீ ரேணு ரணு: பயாம்ஸி கணிகா: பல்குஸ்புலிங்கோ அனல;
தேஜோ நிஸ்ஸ்வஸநம் மருத் தனுதரம் ரந்த்ரம் ஸுஸூக்ஷ்மம் நப:
க்ஷுத்ராருத்ரபிதாமஹப்ரப்ருதய: கீடா: ஸமஸ்தா: ஸுரா:
த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி:
(த்ருஷ்டே யத்ர) எதைப் பார்க்கையில், இந்த பூமி (ப்ருத்வி) மிகச்சிறிய துகள்( ரேணுரணு:) போலவும் , (பயாம்ஸி) உலகில் உள்ள நீரனைத்தும் (கணிகா: ) சிறு துளிகள் போலவும், (தேஜ; ) பஞ்ச பூதங்களில் ஒன்றான தேஜஸ் (பல்குஸ்புலிங்க:)ஒரு சிறு பொறி போன்ற (அனல: )நெருப்பாகவும், (மருத்) வாயு (தனுதரம்) மிகச்சிறிய (நிஸ்வஸனம்) மூச்சுக்காற்றாகவும், (நப:) ஆகாயம், ஸுசூக்ஷ்மம் – மிகச்சிறிய( ரந்த்ரம் ) துவாரமாகவும் , (ருத்ரபிதாமஹப்ரருதய:) ருத்ரன் பிரம்மா முதலிய (ஸமஸ்தா: ஸுரா:) சகலதேவர்களும் (க்ஷுத்ரா:) சிறிய (கீடா:) புழுக்களாகவும் , காணப்படுகிறார்களோ ,(ஸா தாவக: அவதூத அவதி:) அந்த உன்னுடைய எல்லைகடந்த (பூமா:)மஹிமை , (விஜயதே) வெற்றி கொள்கிறது.
இதில் நாராயணன் பரப்ரம்மமாக வர்ணிக்கப்படுகிறார். பஞ்ச பூதங்களும் பிரம்மத்தின் முன் சிறியவை என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது. எப்படி விண்வெளி வீரர்கள் மேலே போகப்போக இந்த பூமி ஒரு சிறு புள்ளியாகத் தெரியுமோ அதேபோல பிரம்மத்தின் எல்லையற்ற தன்மையுடன் ஒப்பிடுகையில் எல்லாமே அணுவளவாகத் தோன்றுகின்றன.
பிரம்மா நாரதரிடம் கூறுகிறார்.
ஸ்ருஜாமி தந்நியுக்தோ அஹம் ஹரோ ஹரதி தத்வச:
விச்வம் புருஷ ரூபேண பரிபாதி த்ரிசக்தித்ருக் ( ஸ்ரீமத். பாகவதம் 2.6.31)
" அவரால் ஏவப்பட்டு நான் படைக்கிறேன்;அவருக்கு வசப்பட்டு ருத்ரன் அழிக்கிறார். மூன்று சக்திகளையும் தரித்த அவரே விஷ்ணுரூபத்தில் ரட்சிக்கிறார்."
உலக சிருஷ்டி எல்லாம் அவரைத்தவிர வேறில்லை. அவர் எல்லாவற்றிலும் வியாபித்து அவற்றைக்கடந்து நிற்கிறார். 'ஸ பூமிம் விஸ்வத:வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம்., (புருஷ ஸுக்தம்) அவர் பூமியை எங்கும் வியாபித்து பத்துவிரல்களால் எண்ணும் எண்ணிக்கையை கடந்து நிற்கிறார்.
பத்து விரல்களால் எண்ணும் எண்ணிக்கையை கடந்து நிற்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், இது கணிதத்தில் அளவு என்ற பொருளைக் குறிக்கும் சொல். எண்ணிக்கைக்கு ஆரம்பம் பத்து விரல்கள் அல்லவா? அதைக் கடந்து நிற்கிறான் என்பது இறைவனின் எல்லையில்லாத் தன்மையைக் குறிக்கிறது. அதாவது அனந்தம் infinity
முகுந்த மாலை
22. பக்தாபாய புஜங்க காருடமணி: த்ரைலோக்யரக்ஷாமணி:
கோபீலோசநசாதகாம்புதமணி: சௌந்தர்ய முத்ராமணி:
ய: காந்தாமணி ருக்மிணீ கனகுசத்வந்த்வைக பூஷாமணி:
ச்ரேயோ தேவசிகாமணி: திசது நோ கோபாலசூடாமணி:
ய: எவன், பக்தாபாய புஜங்க காருடமணி:- பக்தர்களின் ஆபத்துகளாகிய பாம்பிற்கு கருடமணி போன்றவனோ,
த்ரைலோக்யரக்ஷாமணி:- மூவுலகையும் ரக்ஷிக்கும் ரத்தினம் போன்றவனோ,
கோபீலோசநசாதகாம்புதமணி: -கோபியரின் கண்களாகிய சாதக பட்சிகளுக்கு நீருண்ட மேகம் போன்றவனோ,
சௌந்தர்ய முத்ராமணி-அழகின் அடையாளமாகிய மணியைப் போன்றவனோ,
காந்தாமணி ருக்மிணீ கனகுசத்வந்த்வைக பூஷாமணி: -ஸ்திரீரத்தினமாகிய ருக்மிணியின் மார்புக்கு அலங்கார மணியானவனோ, கோபாலசூடாமணி: - ஆயர்குல சூடாமணியானவனோ
தேவசிகாமணி:-தேவர்களின் முடிகளில் உள்ள இரத்தினம் போன்றவனோ அவன்,
ந: - நமக்கு, ச்ரேய: -க்ஷேமத்தை, திசது- அளிக்கட்டும்.
பக்தர்களின் அபாயம் என்ற பாம்பு, சம்சாரத்தினால் ஏற்படும் துக்கங்கள். இதற்கு பகவான் கருட மணியைப்போல் விளங்குகிறான். எவ்வாறு கருடமணி என்ற கருடபச்சை என்னும் ரத்தினத்தின் சமீபத்தினால் விஷம் விலகுமோ அவ்வாறு பகவானை நினைத்த மாத்திரத்திலேயே சம்சார துக்கங்கள் விலகுகின்றன. அதனால் அவன் த்ரைலோக்ய ரக்ஷாமணி எனப்படுகிறான்.
சாதக பட்சிகள் மழைநீரை மட்டுமே பருகி உயிர் வாழும் என்று கூறப்படுகிறது. கோபியராகிய சாதக பட்சிகளுக்கு அவன் உயிர் கொடுக்கும் நீருண்டமேகம் ஆகிறான்.தேவர்கள் அவன் பாதத்தில் விழுந்து வணங்குவதால் அவன் அவர்களுடைய முடி மேல் இருக்கும் ரத்தினம் ஆகிறான்.
ஆயர்குலம் அவனால் பெருமை அடைந்ததால் அவன் கோபால சூடாமணி எனப்படுகிறான்.
காந்தாமணி ருக்மிணீ ----என்ற வாக்கியத்தில் காணப்படும் மோனை (ALLITERTION) மிக அழகு.
முகுந்த மாலை
23. சத்ருச்சேதைக மந்த்ரம் ஸகலமுபநிஷத்வாக்யஸம்பூஜ்ய மந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுபசிததமஸ்ஸங்க நிர்யாண மந்த்ரம்
ஸர்வேச்வர்யைகமந்த்ரம் வ்யஸநபுஜகஸந்தஷ்டஸந்த்ராண மந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீக்ருஷ்ணமந்த்ரம் ஜப ஜப் ஸததம் ஜன்ம ஸாபல்ய மந்த்ரம்
ஜிஹ்வே-நாவே ,
சத்ருச்சேதைக மந்த்ரம் –எதிரிகளை ஒழிக்கும் மந்திரமும்,
ஸகலமுபநிஷத்வாக்யஸம்பூஜ்ய மந்த்ரம்- எல்லா உபநிஷத வாக்கியங்களாலும் போற்றப்பட்ட மந்திரமும்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் – சம்சாரத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மந்திரமும்,
ஸமுபசிததமஸ்ஸங்க நிர்யாண மந்த்ரம்-சேர்ந்துள்ள அஞ்ஞான இருள் அகல்வதற்கான அம்ந்திரமும்,
ஸர்வேச்வர்யைகமந்த்ரம்- எல்லாஐஸ்வர்யங்களையும் தரும் மந்திரமும்
வ்யஸநபுஜகஸந்தஷ்டஸந்த்ராண மந்த்ரம்- துன்பங்களாகிய பாம்பு கடித்தவரைக் காப்பாற்றும் மந்திரமும்
ஜன்ம ஸாபல்ய மந்த்ரம் – பிறவிப்பயனை அளிக்கும் மந்திரமும் ஆன
ஸ்ரீக்ருஷ்ண மந்த்ரம் – ஸ்ரீ க்ருஷ்ணமந்திரத்தை
ஜபஜப ஸததம்-எப்போதும் ஜபிப்பாயாக.
முந்தைய ஸ்லோகத்தில் பகவானை ஒரு ரத்தினமாக உருவகப்படுத்தக் கண்டோம். இதில் எல்லா பயன்களும் தரும் மந்திரமாக அவன் நாமத்தைக் கூறக் காண்கிறோம் நாம ஜபத்தின் பயன் அளவு கடந்தது. எல்லாப் பயன்களையும் அளிக்கும் ஒரே மந்திரம்..
இந்த இரு ஸ்லோகங்களிலும் குலசேகரர் சம்சார துக்கத்தை பாம்பின் விஷத்திற்கு ஒப்பிடுகிறார். பதினான்காவது ஸ்லோகத்தில் சம்சாராக்யே மஹதி ஜலதௌ என்று சம்சாரத்தை ஒரு பெரிய சமுத்திரமாகக் கூறியவர் இங்கு ஒரு விஷப்பாம்பென வர்ணிக்கிறார்.
அடுத்த ச்லோகம் பகவானை பரம ஔஷதமாக வர்ணிக்கிறது.
24.வ்யாமோஹபிரசமௌஷதம் முநிமனோவ்ருத்திப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் சஞ்சீவனைகௌஷதம்
பக்தாத்யந்த ஹிதௌஷதம் பவபயப்ரத்ஹ்வம்ஸனைகௌஷதம்
ஸ்ரேய;ப்ராப்திகரௌஷதம் பிப மன ஸ்ரீக்ருஷ்ணதிவ்யௌஷதம்
மன- மனமே , வ்யாமோஹபிரசமௌஷதம் – மயக்கங்களைத் தெளிவிக்கும் மருந்தும் , முநிமனோவ்ருத்திப்ரவ்ருத்யௌஷதம்- முனிவர்களின் மனப்போக்கை இயக்க வைக்கும் மருந்தும்,
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் – அரக்கர் தலைவர்களுக்கு இன்னல் விளைவிக்கும் மருந்தும் த்ரிஜகதாம் சஞ்சீவனைகௌஷதம்- மூவுலகையும் வாழ வைக்கும் மருந்தும்,
பக்தாத்யந்த ஹிதௌஷதம்- பக்தர்களுக்கு மிகவும் ஹிதம் அளிக்கும் மருந்தும், பவபயப்ரத்ஹ்வம்ஸனைகௌஷதம்- சம்சார பயத்தைப் போக்கும் சிறந்த மருந்தும்
ஸ்ரேய;ப்ராப்திகரௌஷதம்- எல்லா நலன்களையும் அளிக்கும் மருந்துமான
ஸ்ரீக்ருஷ்ண திவ்யௌஷதம் – ஸ்ரீகிருஷ்ணன் என்னும் திவ்ய மருந்தைப்
பிப – பருகுவாயாக.
முகுந்தமாலை
25. ஆம்னாயாப்யஸனானி அரண்ய ருதிதம் வேதவ்ரதான்யன்வஹம்
மேதஸ்சேதபலானி பூர்த்தவிதய: ஸர்வே ஹுதம் பஸ்மனி
தீர்த்தானாம் அவகாஹனானி ச கஜஸ்நாநம் வினா யத்பத-
-த்வந்த்வாம்போருஹஸம்ஸ்ம்ருதி: விஜயதே தேவஸ்ஸ நாராயண:
யத்பதத்வந்த்வாம்போருஹஸம்ஸ்ம்ருதி:- எவருடைய திருவடித்தாமரைகளின் ஸ்மரணம்
வினா- இல்லாமல்
ஆம்னாயாப்யஸனானி –வேதங்களை பயிலுதல்
அரண்ய ருதிதம்-காட்டுக்கதறலாகுமோ
வேதவ்ரதான்யன்வஹம்- தினந்தோறும் செய்யும் வேதங்களில் கூறப்பட்ட வ்ரதங்கள்
மேதஸ்சேதபலானி-உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்கும் பலனை உடையதாகுமோ
பூர்த்தவிதய: - கிணறு குளம் வெட்டுவது முதலிய தருமகாரியங்கள்
ஸர்வே ஹுதம் பஸ்மனி-அக்னியில்லாத சாம்பலில் செய்த ஹோமம் போலாகுமோ
தீர்த்தானாம் அவகாஹனானி ச – புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது
கஜஸ்நாநம்- யானைக்குளியலுக்கு ஒப்பாகுமோ
தேவ: ஸ: நாராயண: அப்படிப்பட்ட ஸ்ரீமான் நாராயணன்
விஜயதே –வெற்றி கொள்வாராக.
காட்டில் கூக்குரல் இட்டால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். அது போல மனதில் பக்தி இல்லாமல் வேத மந்திரங்களையும் சாஸ்திரங்களையும் கற்பதாலோ அவைகளை சொல்வதாலோ ஒரு பயனும் இல்லை.
அதேபோல உபவாசம் போன்ற வ்ரதங்களை அனுஷ்டிப்பதால் உடல் கொழுப்பு குறையுமே தவிர பகவானின் அருள் கிடைக்காது.
தீ அவிந்த சாம்பலில் ஹோமம் செய்வதைப்போன்றது தருமகாரியங்களை புண்ணியம் கிடைக்கும் என்று பக்தி இல்லாமல் செய்வது. புண்யதீர்த்தங்களில் பகவத் ஸ்மரணை இன்றி ஸ்னானம் செய்தல் யானையைக் குளிப்பாட்டுவது போலாகும் என்கிறார் ஆழ்வார்.
இதன் பொருள் என்னவென்றால் எல்லாவற்றையும் பகவதர்ப்பணமாக செய்யவேண்டுமே தவிர, தன்னலத்துக்காகவோ புண்யம் சேர்க்க விரும்பியோ செய்யக் கூடாது என்பதாகும்.
இதையே பகவான் கீதையில்
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸன்யஸ்ய மத்பரா:
அனன்யேநைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே
தேஷாம் அஹம் ஸமுத்தர்த்தா ம்ருதயு ஸம்ஸார ஸாகராத் ---
"யார் என்னையே நினைந்து வேறு எண்ணம் இல்லாமல் எல்லா செய்கைகளையும் எனக்கு அர்ப்பணிகிறார்களோ அவர்களை நான் சம்சார்க்கடலில் இருந்து காப்பாற்றுகிறேன் ," என்கிறார்.
26. ஸ்ரீமன்நாமப்ரோச்ய நாராயணாக்யம்
கே ன ப்ராபு: வாஞ்சிதம் பாபிநோபி
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேன ப்ராப்தம் கர்பவாஸாதிதுக்கம்
ஸ்ரீமன்நாமப்ரோச்ய நாராயணாக்யம்- ஸ்ரீயுடன் கூடிய நாராயணனின் நாமத்தைக் கூறி
கே- எவர்தான்
வாஞ்சிதம் – விரும்பியதை
ந ப்ராபு: - அடையவில்லை
ஹா- ஐயோ
ந:- நமக்கு
பூர்வம் – முன் ஜன்மங்களில்
தஸ்மின் வாக் – அந்த வார்த்தையானது
ந ப்ரவ்ருத்தா- சொல்லத் தோன்றவில்லை
தேன- அதனால்
கர்பவாஸாதிதுக்கம் - பிறவித்துன்பம்
ப்ராப்தம் – வாய்த்தது
நாராயணாக்யம் ஸ்ரீமன் நாம என்பது த்வய மந்திரத்தைக் குறிக்கும். பாபிகள் கூட நல்ல கதி அடைய முடியும் என்பது கீதையில்,
அபி சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அனன்ய பாக்
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: -- "பெரும்பாவியானாலும் என்னை முழுமனதுடன் நினைப்பநேயாகில் அவன் நல்லவனாகவே கருதப்பட வேண்டும்" என்ற கண்ணனின் வாக்கை நினைவுறுத்துகிறது.
பாகவதத்தில் அஜாமிலோபாக்யானத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.
ஸாங்கேத்யம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலனமேவ வா
வைகுண்டநாம க்ரஹணம் அசேஷாகஹரம் விது:
வேறு எண்ணத்தைக் குறிப்பிட்டோ பரிகாசமாகவோ பாடலிலோ அவமதிப்பாகவோ கூட நாராயணனின் நாமம் உச்சரிக்கப்பட்டால் அது எல்லா பாவங்களையும் போக்கும் என்று பெரியோர் கூறுகின்றனர்.
பகவானுடைய நாமசங்கீர்த்தனம் அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டாலும் நெருப்பு விறகை எரிப்பது போல ஒரு புருஷனுடைய பாவத்தை எரித்துவிடும்.
சிறந்த வீரியம் உள்ள மருந்தை அதன் பெருமையை அறியாமல் ஒருவன் உண்டாலும் எப்படி அதுதான் குணத்தைக் காட்டுமோ அப்படி பகவந்நாமமும் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
தவம் தானம் ஜபம் முதலியவற்றால் அந்ததந்த பாவங்கள் நசித்தாலும் இருதயத்தில் உள்ள அதர்ம வாஸனை நசிப்பதில்லை. பகவத்பாத சேவையால் அதுவும் நசித்துவிடுகிறது.
இதில் ஒன்று நினைவில் கொள்ள வேண்டும் அஜாமிளன் பூர்வஜன்ம பயனாகவும் இந்த ஜன்மத்தில் முதலில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும் இருந்ததனால் அவன் தன் செயலுக்கு வருந்தி பகவத்பக்தியால் நற்கதி அடைந்தான். இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் பகவத் ஸ்மரணம் என்பது கிடைக்க பூர்வஜன்ம புண்ணியம் வேண்டும். அதனால் ஆழ்வார் நம் பிறவித்துன்பத்திற்குக் காரணம் முன் பிறவியில் பகவத்ஸ்மரணம் இல்லாததுதான் என்கிறார்.
No comments:
Post a Comment