மஹரிஷியின் அந்திம நேரம் - 3 J K SIVAN
ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் ல் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கண்கள் குளமாக காட்சி அளித்தன.
1950 ஏப்ரல் 13ம் தேதி.. மகரிஷிக்கு நுரையீரல் அடைப்பு. மருந்துகள் கொடுத்து ஸ்வாசம் சரியாக டாக்டர் அருகே செல்கிறார்.
''ஒண்ணும் பண்ண வேண்டாம். இன்னும் ரெண்டு நாளிலே எல்லாம் சரியாயிடும்'' மகரிஷி டாக்டரை மருந்து கொடுக்க அனுமதிக்கவில்லை. .
சில மணி நேரங்கள் நகர்ந்தன. மகரிஷி ஒருவரை கூப்பிட்டு எல்லோரையும் அங்கிருந்து போக சொல்லிவிட்டார்.
''நான் தனியாக இருக்கவேண்டும். எல்லோரையும் இங்கிருந்து போகச்சொல்லுங்கள்'' அவருக்கு பணிவிடை செய்யும் ரங்கசாமி நகரவில்லை. அவர் காலடியிலேயே உட்கார்ந்திருந்தார்.
காலை யில் ரங்கசாமியை ஜாடைகாட்டி அழைத்து மகரிஷி அவரிடம் ''தேங்க்ஸ் '' என்று ஆங்கிலத்தில் சொன்னார். ரெங்கசாமிக்கு இங்கிலிஷ் தெரியாது. விழித்தார். மகரிஷி சிரித்துக்கொண்டு
''ஆங்கிலத்தில் தேங்க்ஸ் என்று ஒரு வார்த்தை உண்டு '' நமக்கு அதற்கு சரியாக ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்றால் ''சந்தோஷம் '' என்கிறார் .
காலையிலிருந்து மதியம் வரை பக்தர்கள் திறந்திருந்த மஹரிஷியின் சின்ன அறையை எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தார்கள். குருவை தரிசிக்க தீராத ஆர்வம் ஆசை. மஹரிஷியின் தேகம் ரொம்ப க்ஷீணமாகி விட்டது. எடை அதிகம் குறைந்துவிட்டது. விலா எலும்புகள் வெளியே சருமத்தை பிளந்து வெளியே வரும்போல் தோன்றின. மஹரிஷியின் உடல் கருத்து விட்டது. அவரை இந்த நிலையில் பார்த்த பக்தர்கள் கதறினார்கள்.
ஞானிகளுக்கு வலிக்காது என்று தப்புக் கணக்கு போடுகிறோம். ரமணருக்கு கடுமையான வலி இருந்தது. தனியே இரவில் அவர் துன்பத்தால் வாடுவது தெரிந்தது. பிறர் கவனிக்காத போது தான் அவர் தனது உபாதைகளை, வலிகளை வெளிப்படுத்தினார். சோபாவில் படுத்தவாறு முனகுவது தெரிந்தது. வலி ஏற்படு வது உடலுக்கு இயற்கையானது என்பார். சாதாரணமானவனாக இருந்தாலும் சன்யாசிகளில் ராஜாவாக இருந் தாலும் உடலை கத்தியால் வெட்டினால் ரத்தம் பீறிடும். வலி பெருகும். ஆனால் அந்த உடலின் அவஸ்தையை எப்படி உணர்கிறோம், வெளிப்படுத் துகிறோம் என்பதில் தான் வேறுபாடு உள்ளது.
எவ்வளவு வலி, கஷ்டம், உடல் பாதிப்பு இருந்த போதிலும் ரமண மகரிஷி கடைசிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதை தடுக்க வில்லை. அவர்கள் மேல் அவரது த்ரிஷ்டி கருணையோடு அன்போடு படிந்து கொண்டே இருந்தது.
ஆஸ்ரமத்தில் வாழ்ந்த இதர ஜீவன்கள் , பறவைகள், மிருகங்கள் மீது அதிக அக்கறையோடு கடைசி வரை அவரது பாசமும் நேசமும் நிறைந் திருந்தது.
அவர் மறையும் சில மணி நேரங்கள் முன்பு ஆஸ்ரமத்தில் அனைத்து மயில்களும் உரக்க கத்தின. அருகில் இருந்தவரை மெதுவாக கையசைத்து கூப்பிட்டு ஈனஸ்வரத்தில்
''மயிலுக்கு எல்லாம் ஆகாரம் போட்டாச்சா?''
என்று கேட்டார். அவை அவரது அறையைச் சுற்றி சுற்றி வந்தன. பசுக்கள், நாய்கள், குரங்குகள் எல்லாமே நிம்மதியின்றி அமைதியின்றி இருப்பது தெரிந்தது. எஜமானனுக்கு உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதை அறிந்து செய்வதறியாது திகைத்தன. ஒரு வெள்ளை மயில் அடிக்கடி மஹரிஷியின் அருகே நிற்கும். அது விடாமல் அவர் இருந்த நிர்வாண அறையின் கூரையில் ஏறி நின்று வாய் ஓயாமல் கத்தியது.
எத்தனையோ பக்தர்களின் குரல்கள் ''பகவானே எங்களை விட்டு போக எப்படி மனம் துணிந்தது?'' என்று கதறியபோது ''எதற்கு இத்தனை முக்யத்வம் இந்த தேகத்துக்கு கொடுக்கிறீர்கள்? . உங்கள் குரு இந்த தேகம் இல்லை. இந்த தேகம் இல்லாவிட் டாலும் கூட உங்கள் குரு உங்களை விட்டு போகமாட்டார். உங்களில் நான் உண்டு, என்னில் நீங்கள் உண்டு. சந்தோஷமாக சென்று வாருங்கள்'' என்று சமாதானம் செய் து அனுப்பினார். என்னுடைய பக்தன் என்ற நினைப்பே வேண்டாம். அழுகை துக்கம் ஒன்றுமே வேண்டாம். மேலும் மேலும் துன்பப்படுவதற்கு இந்தமாதிரி ஒரு காரணம் வேண்டவே வேண்டாம். உங்களால் எனக்கு எதையும் தரவும் இயலாது. நானும் பெற முடியாது. அமைதியாக அமர்ந்து ; எனது அன்பை அனுபவியுங்கள். உங்கள் மேல் எனக்குண்டான ஆர்வம், நேசம் அதை உணருங்கள். அது சந்தோஷத்தோடு என்னை உங்களோடு பிணைக்கும்.. வேறெதுவும் வேண்டாம் ''
1950 ஏப்ரல் 14ம் தேதி. சாயந்திரம். எந்த கணமும் பகவான் இந்த பூத உடலில் இருந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரிய தலையணை களில் அவர் சாய்ந்து கொண்டிருந்தார். உட்கார்ந் தவாறு அவர் தலையை பின்புறம் சாய்த்து அதில் அமர்ந்திருந்தார். வாய் திறந்திருந்தது. ஸ்வாசம் சிரமமாக இருந்தது. சில நிமிஷ நேரங்கள் அவருக்கு பிராணவாயு செலுத்தினார்கள். அதால் பயனில்லை.. அதை யெல்லாம் எடுத்து விடுங்கள் என்று சைகை காட்டினார்.
கடைசி நிமிஷங்களில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ( தமிழக முதல்வராக இருந்தவர்) மகரிஷி கூட இருந்தார். அவர் படும் சிரமத்தை பார்த்து ஒரு திரை போட்டு தரிசனம் வேண்டாம் என்று தரிசன கூட்டத்தை விலக்கினார். மகரிஷி படும் அவஸ்தையை அவரும் கண்ணால் காண இஷ்டப்படவில்லை.
மகரிஷி தன்னை நிமிர்த்தி உட்கார வைக்கச் சொன்னார். ' அருணால சிவா...'' என்று அருகிலிருந் தோர் தியான பாராயணம் செய்தார்கள் . மகரிஷி காதால் அதை சந்தோஷமாக கேட்டார். கண்களை அகல திறந்து நோக்கினார். கண்கள் ஒளி வீசின. புன்னகைத்தார். கண்களில் நீர் பெருகி ஒட்டிய கன்னத்தில் வழிந்தது. பத்மாசனத்தில் அமர்ந்தார். ஒரு பெருமூச்சு விட்டார் . பிறகு அசைவில்லை. அப்போது நேரம் இரவு 8.47. அவருக்கு விசிறிக் கொண்டிருந்தவர்கள் நிறுத்தினர். வெளியே விசிறும் சப்தம் கேட்கவில்லை என்பதிலிருந்தே திரைக்கு வெளியே இருந்த பக்தர்கள் புரிந்து கொண்டார்கள். பகவான் ரமண மகரிஷி இனி பூத வுடலில் இல்லை. உடைந்து போன இதயங்கள் வெகுநேரம் அழுதன.
வானத்தில் அன்றிரவு 8.47க்கு விண்ணில் ஒரு வால் நக்ஷத்ரம் பளிச்சென்று மின்னி விரைந்து சென்று அருணாச்சல மலைகள் மேல் பறந்து சிகரத்தின் பின் மறைந்ததை பார்த்ததாக பல பத்திரிகைகள் மறுநாள் எழுதின.
ஹென்றி கார்டியர் ப்ரெஸ்ஸன் என்கிற பிரெஞ்சுக் காரர் புகைப்பட நிபுணர், ரமண பக்தர் திருவண்ணா மலை ரமணாஸ்ரமத்தில் வசித்தவர் என்ன சொல்கிறார் :
'' நான் என் வீட்டின் வெளியே அப்போது இருந்தேன். என்னோடு இருந்த நண்பர்கள் ''அதோ பார் ஒளிவீசி வானில் ஏதோ ஒரு நக்ஷத்திரம் வால் நீண்டு பறக்கிறது ''என்று என்னை கூப்பிட்டு காட்டி னார்கள். அது மாதிரி நான் பார்த்தது இல்லை. கடிகாரம் அப்போது இரவு 8.47 என்று காட்டியது. ஆஸ்ரமத்துக்கு ஒடினோம். எங்கள் மனதிலிருந்த பயம் உறுதியாகியது. அங்கே அந்த குறிப்பிட்ட நேரத்தில் பகவான் மஹா நிர்வாணம் அடைந்தார் என்று அறிந்து கொண்டோம்.''
No comments:
Post a Comment