ஸ்ரீமத்பாகவதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 23
ஒரு நாள் நீண்ட நேரம் கன்று மேய்த்துக் களைப்படைந்த சிறுவர்கள் கண்ணனிடம் தங்கள் பசி தீர்க்க வழி செய்யுமாறு கேட்டனர்.
அதற்கு பகவான் வேதமறிந்த அந்தணர்கள் அருகில் யாகம் செய்துகொண்டு இருப்பதாகக் கூறி அவர்களிடம் சென்று தன்னாலும் பலராமராலும் அனுப்பட்டவர்கள் என்று சொல்லி அன்னம் கேட்கும்படி கூறினார். அவர்கள் அது போலவே செய்ய அந்த அந்தணர்கள் அவர்களைப் பொருட்படுத்தவில்லை.
சுகர் கூறினார் .
தேசம், காலம், த்ரவியம், மந்திரம், தந்திரம் , ருத்விக் , அக்னி, தேவதைகள், யஜமானன், யாகம், தர்மம் எல்லாம் எவருடைய வடிவமோ அவரை சிறுவன் என்றெண்ணி மதிக்கவில்லை.
(அவித்யாயாம் பஹுதா வர்த்தமானா வயம் க்ருதார்த்தா இதி அபிமன்யந்தி பாலா: - முண்டகோபனிஷத் . அவித்யையில் ஆழ்ந்ததனால் அறிவில் சிறியோருமானவர்கள் தங்களை பெரியோராக எண்ணுகிறார்கள்.
கீதையில் பகவான் நானே க்ரது, நானே யக்ஞம், நானே பித்ருகளுக்கு இடும் அன்னம், மருந்தும் மந்திரமும் நானே, நெய்யும் நானே,அக்னியும் நானே, என்று கூறுகிறார். )
அந்த சிறுவர்கள் திரும்பி வந்து கண்ணனிடம் நடந்ததைக் கூற அவர்களை அவ்வேதியர்களின் மனைவிமாரை சந்திக்கக் கூறி அவர்கள் தன்னிடம் ப்ரியம் கொண்டு தன்னையே சிந்தித்திருப்பதால் வேண்டிய உணவை அளிப்பார்கள் என்று கூற , அவர்கள் அவ்வாறே செய்தார்கள்
. உடனே கண்ணனின் கதைகளால் கவரப்பட்டவர்களும் அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிக்கவர்களுமான அவர்கள் மிகுந்த பரபரப்புடன் அறுசுவை உணவை எடுத்துக் கொண்டு கண்ணன் இருக்குமிடம் வந்தார்கள்.
. சுகர் கூறியது,
சதுர்விதம் பஹுகுணம் ஆதாய பாஜனை:
அபிஸஸ்ரு: ப்ரியம் ஸர்வா: ஸமுத்ரமிவ நிம்னகா:
ருசியான நால்வகை உணவை தனித்தனி பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு நதிகள் கடலை நோக்கிச் செல்வது போல் அவர்கள் அனைவரும் பிரியத்துக்குரிய கண்ணனை நோக்கிச் சென்றனர். அவர்களைக் கண்ட கண்ணன் மகிழ்ந்து அவர்களின் பக்தியைப் புகழ்ந்தார்.
பிறகு அவர்களை திரும்பி யாகசாலைக்கு போகும்படியும் அங்கு அவர்களின் கணவன்மார்கள் யாகத்தை முடிக்கக் காத்திருப்பார்கள் என்றும் கூறினார்.
அதற்கு அவர்கள் தங்கள் கணவன்மார்களின் கட்டளையை மீறி எல்லாம் துறந்து வந்திருப்பதாகக் கூற அதற்கு பகவான் பின்வருமாறு பதிலளித்தார்.
ச்ரவணாத் தர்சனாத் த்யானாத் மயி பாவ: அனுகீர்த்தனாத்
ந ததா ஸன்னிகர்ஷேண ப்ரதியாத ததோ க்ருஹான்
" ச்ரவணம், தர்சனம், த்யானம், கீர்த்தனம் இவைகளின் மூலம் என்னிடம் பக்தி வளர்வது போல என் பக்கத்தில் இருப்பதால் வளர்வதில்லை. ஆகையால் நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.
."
தங்கள் கணவர்களின் கோபத்திற்கு பயந்த அவர்களிடம் பயப்பட வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் பகவத்சங்கல்பத்தால் தம் தவறை உணர்ந்த வேதியர்கள் வேத சாஸ்திரங்கள் ஒன்றும் அறியாத அவர்களின் மனைவிமார்கள் பக்தி ஒன்றினாலேயே பக்வானின் அருள் கிட்டியதை நினைத்து நாணமுற்றனர்.
இந்த லீலையானது தங்களுக்கு ஞானம் உண்டாவதற்காகவே பகவானால் செய்யப்பட்டது என்று உணர்ந்து அவரைக்காண விரும்பினாலும் கம்சனுக்கு பயந்து அங்கு செல்லவில்லை.
தங்களுக்கு இப்படிபட்ட மனைவிகள் கிடைத்தது தங்கள் பாக்கியம் என்றெண்ணி பகவானை பின்வருமாறு துதித்தனர்.
நமஸ்துப்யம் பகவதே க்ருஷ்ணாய அகுண்ட மேதஸே
யன்மாயா மோஹித திய: ப்ரமாம: கர்மவர்த்மஸு.
எவருடைய மாயையால் மயங்கி கர்ம மார்க்கத்தில் சுழன்றுகொண்டு இருக்கிறோ மோ அந்த அகண்ட அறிவுடைய க்ருஷ்ண பக்வானாகிய உமக்கு நமஸ்காரம்."
No comments:
Post a Comment