Monday, January 6, 2020

Old age homes are not SINFUL.. Sukhi sivam

தமிழ்நாட்டு மேடைப் பேச்சாளர்கள், ஒரு கவிஞரைப் பார்த்து கவிஞரான இரவல் கவிஞர்கள், பிஞ்சு எழுத்தாளர்கள் பலர் முதியோர் இல்லங்கள் பற்றிய பிழையான கருத்தை பரப்புகிறார்கள்.

முதியோர் இல்லங்களை ஏதோ விபச்சார விடுதிகள் போல இழித்துரைப்பதும் , கெட்ட வார்த்தை போல பயன்படுத்துவதும் கலாச்சார சீரழிவு போல சித்தரிப்பதும் சரியல்ல .

முதியோர் இல்லங்களின் தோற்றம் தவிர்க்க முடியாதது. சமூக நிர்ப்பந்தம் . மாறிவரும் வாழ்வியலின் நியதி.

முன்பெல்லாம் வீடுகளில் தாய், மருத்துவச்சி உதவியுடன் பிள்ளைப்பேறு பார்த்தார்.இப்போது அப்படியா ?

அந்தி சந்தி நேரங்களில் பெண்கள் வெளியே வருவதில்லை.
இப்போது அப்படியா ?

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் ஆசாரத்தின் பெயரால் தனிமைப் படுத்தப்பட்டார்கள்.
இன்று நடக்குமா?

பூப்படைந்த பெண்கள் திருமணம் வரை வீட்டுப்படி தாண்ட மாட்டார்கள். இன்று இது சாத்தியமா?

நிறைய நிறைய நிறையவே மாறிவிட்டோம்.
சில விஞ்ஞான பூர்வமானவை.
காலத்தின் கட்டாயங்கள்.

முதியோர் இல்லமும் அப்படியே.

தவிர்க்க முடியாத வருங்கால வாழ்க்கை முறை. இப்போதே மனத்தளவில் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.

ஜாதி ஜனங்களுக்கு மத்தியிலே கூடி குழுமியிருந்த நாம் நகர்ப்புறங்களில் பல ஜாதிப் பழக்கங்களுக்கு மத்தியில் வாழவில்லையா ?

மாமன் மச்சான் உறவு முறை பெரிதாக இருந்தது மாறி,
நமக்கு நட்பு பெரிதாகி விடவில்லையா ?

"இவன் என்னவன்" என்பதை கூற பயன்படுத்திய குடும்பம்,
ஜாதி என்ற எல்லைகள் உடைந்து
"நாங்கல்லாம் காங்கிரஸ்காரங்க, "நாங்கள்லாம் தி.மு.க" என்று எல்லைக் கீறல்கள் மாறிப் போகவில்லையா ?

அப்படி முதுமையில் பெற்றோரைக் காப்பாற்றும் பழக்கம் போய் சமூகம் காப்பாற்றும் புதிய உறவுமுறையாக முதியோர் இல்லங்கள் உருவானால் அதை எப்படி குற்றமாகக் கருத முடியும்?

ஒரு சில முதியோர் இல்லங்களில் வீடுகளில் விடவும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

கவனமாக கையாளப்படுகிறார்கள் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

எனவே முதியோர் இல்லம் என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தை போல பயன்படுத்த வேண்டாம் என்றே கருதுகிறேன்.

அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும் முதியவர்களை காரணம் காட்டி மகன் விடுமுறை கேட்டால் எந்த கம்பெனியிலாவது விடுமுறை தருவார்களா ?

ரத்த அழுத்த நோய், சர்க்கரை அளவு திடீர் மாற்றம் உடைய முதியவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும்.

அடிக்கடி வெளியூர் செல்லும் விற்பனையாளர்கள் , முதலாளிகள், சுயதொழில் புரிவோர் இத்தகைய முதியோரை வீட்டில் வைத்துக் கொண்டு கவனிக்காமல் விடுவதும் பிழை.

வெளியூர் செல்லாமல் தமது தொழிலை பாழாக்குவதும் பிழையே.

தரமான சேவையுணர்வை உடைய முதியோர் இல்லங்களால் கவனமாக பாதுகாக்க முடியும் .

உடனே சிலர் இதற்கு எதிர்வாதத்தை கையில் எடுப்பார்கள்.

ஆஹா! பாசம் வேண்டாமா?
பிதுர் பக்தி வேண்டாமா?

பெற்றோரைக் காப்பாற்றுவதை விட அப்படி என்ன பணம்
அல்லது வேலை முக்கியம் என்று வசனம் பேசுவார்கள் .

இப்போது நான் யாருக்கு இந்த யோசனை சொல்கிறேன் தெரியுமா ? பிள்ளைகளுக்கு அல்ல. பெற்றோருக்கு
ஆம் "முதியோர் இல்லங்கள் தரமானவை. உடனே பெற்றோரை அங்கே கொண்டு விடுங்கள் என்று பிள்ளைகளுக்கு நான் போதிக்கவில்லை.

நம் பிள்ளைகள் முன்னேற நாம் எவ்வளவு பாடுபட்டிருப்போம்?

அப்படிப்பட்ட நாமே நமது உடல் நலக்குறை, முதுமையை காரணம் காட்டி அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாமா?

கிராமங்களில் இருந்து பட்டணத்துக்கு மாறிய மாதிரி ,
ஜாதியில் இருந்து சிநேகத்துக்கு மாறிய மாதிரி, வீடுகளில் இருந்து முதியோர் இல்லங்களுக்கு
நாம் மாறிக் கொள்வது நல்லது .

நமது பிள்ளைகள் அமெரிக்கா போகிற வாய்ப்பு வருகிறது.

லட்ச லட்சமாய் சம்பாதிக்க வாய்ப்பு வரும்போது, நமது மூட்டு வலி , இரத்த அழுத்தம் இப்படி காரணம் காட்டி அவர்கள் எதிர்காலத்தை நாம் ஏன் பாழாக்க வேண்டும்?

வயதாக வயதாக பற்று குறைய வேண்டாமா?
பந்தம் மறைய வேண்டாமா? துறவு துளிர் விட வேண்டாமா?

எங்க இருந்தால் என்ன? என்ன ஆனால் என்ன என்கிற சந்யாசம் நம்முள் வரவில்லை என்றால் நாம் நிம்மதியாக இருக்க முடியுமோ? முடியாது.

இல்லை இறக்கத்தான் முடியுமா? பிள்ளைகள் நம்மை கைவிட்டு விட்டார்கள் என்கிற நிலை வராதபடி நாமே நம் பிள்ளைகளை விட்டு விலகி நிற்கும் துறவு நிலை ஏற்பட்டால் துயரம் இருக்காது. ஐம்பது வயதாகிற எல்லோருக்கும் இந்த எண்ணம் அவசியம்.

வயதான காலத்தில் நமது மூடப் பாசத்தால் பிள்ளைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு நாம் காத்திருந்து அவமானப் பட வேண்டுமா என்ன?

வயதான பெரியவர்களுக்கு டி.வி. பார்ப்பது ஒரு தொடர் நோய்.

இது பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சல் என்று மருமகள் நொடித்துக் கொள்வாள். நியாயம் தானே?

முதியோர் இல்லத்தில் டி.வி. பார்த்தால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள். வயதாக வயதாக வீட்டில் யாரும் நம்மோடு பேச மாட்டார்கள்.

முதியோர் இல்லத்தில் நம் வயதில் நண்பர்கள் இருப்பார்கள்.
வேண்டுமட்டும் பேசலாமே .

தரமான முதியோர் இல்லங்களில் தொடர்ச்சியான மருத்துவ செக் அப் உண்டு.முதுமைக்கு ஏற்ற உணவு உண்டு.

காலாற வாக்கிங் போக பதட்டமில்லாமல் நடந்து சுற்ற இடம் உண்டு. வேண்டுமானால் வேலை செய்யலாம். முடியாவிட்டால் படுத்துக் கொள்ளலாம்.

வேலைக்காரி வந்தாலும் பிரச்சனை,
வராவிட்டாலும் பிரச்சனை என்கிற கொடுமை இல்லை.

ஆம். முதுமையில் தனியாக வீடுகளில் இருக்கிற எத்தனையோ பெற்றோருக்கு வீட்டை பராமரிப்பதே பெரிய சிக்கல்.
அவர்களது நகையும் பணமும் கூட பாதுகாப்பு அல்ல .

பாசமற்ற குடும்பங்களில் மேசை, டீப்பாய் போல ஜடப் பொருளாக இருப்பதை விட முதியோர் இல்லங்களில் உயிர்ப்பாக இருப்பது ஆரோக்கியமானது.

தன்னலமற்ற தியாக உணர்வுடைய சேவை நிறுவங்களின் தரமான முதியோர் இல்லங்களை கண்டறிய வேண்டும்.

வெறும் வணிக நோக்குடன் நடைபெறும் முதியோர் இல்லங்களை தடை செய்ய வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாய் பற்றுகளைக் குறைத்துக் கொண்டு துறவு வாழ்வு வாழ நாம் தயாராக வேண்டும்.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்." என்ற திருக்குறள் ஒரு சாகாக்கவிதை . நம் பிள்ளைகளுக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்தோம். அவர்கள் மீதான நமது சுமையையும் நாம் விட்டுக் கொடுப்போமே.

நாம் சுமந்த நமது பிள்ளைகள் நம்மை சுமக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பிலிருந்து விடுதலை ஆகி விட்டால் நமக்கு பிறகு எந்த வருத்தமும் இருக்க முடியாது. யோசியுங்கள்.

- சுகி. சிவம்,.

No comments:

Post a Comment