Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
இன்று ஆடி சுக்லபக்ஷ ஏகாதசி பாண்டுரங்கனுக்கு விசேஷமானது. இன்று பாண்டுரங்கனைப் ப ற்றி பதிவிடாமல் இருக்கலாமா? இதோ.
விட்டல விட்டல பாண்டுரங்கா
நாமதேவர் -2
.நாமதேவர் ஒரு க்ருஹஸ்தராக இருந்த போதிலும் விட்டலனின் பூஜை நாமசங்கீர்த்தனம் இவற்றிலேயே நாள் முழுதும் ஈடுபட்டார். அவர் ஏதும் பொருள் ஈட்டாமல் இருந்ததால் ஏழ்மை நிலை அடைந்த அவரது பெற்றோர்களின் வயதான காலத்தில் அவர் தாய் அவரிடம் கடும் சொற்கள் கூற அவர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்கே சென்று விட்டார்.,
அவர் மனைவி அவரைப் பற்றி அக்கம்பக்கத்தில் முறையிட ஒருவர் அங்கு வந்து தன் பெயர் கேசவதாஸ், நாமதேவரின் அத்யந்த நண்பர் என்று கூறி அவளிடம் மிகுந்த பணம் கொடுத்துச்சென்றார். அவருடைய தாய் அவரை அழைத்துவரக் கோவிலுக்கு சென்றிருந்ததால் அதை அறியவில்லை.
அவர் மனைவி அந்தப் பணத்தைக் கொண்டு நிறைய உணவும் துணி மணிகளும் வாங்கி வந்தாள். கோவிலில் இருந்த திரும்பிய நாமதேவரும் அவர் தாயாரும் அதைக் கண்டு வியப்புற்றனர். நடந்ததைக் கேட்ட நாமதேவர் தனக்கு கேசவ தாஸ் என்று ஒரு நண்பன் இல்லை எனக்கூறி, வந்தது பாண்டுரங்கனே என் உணர்ந்தார். ஆனால் அந்தப் பணம் தன் பக்திக்கு இடையூறு விளைவிக்கும் எனக்கருதி அதை எல்லாம் ஏழை எளியவருக்கு தானம் செய்து விட்டார்.
ஞானதேவர் நாமதேவரைப் பற்றிக் கேள்வியுற்று அவரைக் காண பண்டரிபுரம் வந்தார். அவரைத் தன்னுடன் தீர்த்தயாத்திரைக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினார். அதற்கு நாமதேவர் பாண்டுரங்கனின் அனுமதி பெறவேண்டும் என்று கூற இருவரும் கோவிலுக்குச் சென்றனர்,.
ஞானதேவர் பாண்டுரங்கனிடம் நாமதேவரின் நன்மைக்காகவே அவரை அழைத்துச் செல்ல விரும்பியதாகக் கூறினார். பாண்டுரங்கனும் அனுமதி அளிக்க இருவரும் புறப்பட்டனர். இருவரும் ஹஸ்தினாபுரம் சென்று பின்னர் காசிக்குச் சென்று அங்கு கபீரை சந்தித்தனர்.
அதன்பின் கயா, பிரயாகை சென்று மார்வார் வந்தடைந்தனர். அங்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்ததால் தாகம் எடுத்து ஒரு கிணற்றைக் கண்டனர். அதில் அடியில் கொஞ்சம் நீர் இருந்தது. ஆனால் இறைக்க ஒரு வசதியும் இல்லை. ஞானதேவர் தம் யோக சக்தியால் உள்ளே சென்று தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்
பின்பு நாமதேவரிடம் தன் யோகசக்தியால் அந்த நீர் மேலே வரும்படி செய்வதாக்க் கூறினார். அதற்கு நாமதேவர் பாண்டுரங்கன் திருவுள்ளம் அதுவானால் தண்ணீர் மேலே வரும் என்று கூற அந்த நொடியிலேயே நீர் மேலே வந்தது. அதைக்கண்ட அவரது பக்தியின் மகிமையை உணர்ந்து வியப்படைந்தார்.
அடுத்து அவர்கள் நாகநாத் என்ற இடத்திற்கு சென்றனர். அங்குள்ள சிவன் கோவில் பிரசித்தி வாய்ந்தது . அங்கு நடந்த அதிசயத்தை அடுத்து காண்போம்.
விட்டல விட்டல பாண்டுரங்கா
நாமதேவர்-3
நாகநாத் கோவிலை அடைந்த ஞானதேவர் நாமதேவர் இவர்களுடன் மற்ற பக்தர்களும் சேர்ந்தனர். அவர்கள் கோவிலுள் சென்று சிவபெருமானை தரிசனம் செய்த பின் எல்லோரும் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த அர்ச்சகர்கள் இவர்கள் நாமசங்கீர்த்தனம் செய்வது மற்றவ்ர்களுக்கு இடையூறு என்றும் , கோவிலின் முன் கூட்டம் கூட்டாமல் வேண்டுமானால் பின்புறம் சென்று அதைத்தொடரலாம் என்றனர்.
ஞானதேவரும் நாமதேவரும் அதைக்கேட்டு வருந்தினாலும் தங்களால் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்றெண்ணி அவ்வாறே கோவிலின் பின்புறம் சென்றனர். அங்கு அவர்கள் நாமசங்கீர்த்தனத்தைத் தொடங்கியதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
கோவிலே ஒரு சுற்று சுற்றி திரும்பி அவர்களுக்கு சிவபெருமான் நேராக தரிசனம் அளித்தார். அதைக் கண்டு வியந்த அர்ச்சகர்கள் அவர்கள் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினர். இவ்வாறு சிவபெருமான் தன் ஹரி நாமசங்கீர்த்தனத்தில் உள்ள பிரியத்தை நிரூபித்தான்.
ஞானதேவர் பாடினார்
ஸார ஸார ஸார விடோபா நாம துஜே ஸார
ம்ஹணொனீ சூலபாணீ ஜபதாஹே வாரம் வார
ஸாரம் ஸாரம் ஸாரமே விட்டலாஉந்தன் நாமமே
சூலம் ஏந்தும் சங்கரனும் ஓதுவது உந்தன் நாமமே
அவர்கள் திரும்பி பண்டரிபுரம் வந்ததும் பாண்டுரங்கன் தன் சிறந்த பக்தரான நாமதேவருக்கு ஞானம் அளிக்க வேண்டி ஒரு லீலையை நிகழ்த்தினான். அதைப் புரிந்து கொள்ள நாம் பின்னோக்கிச் சென்று ஞானதேவர் நாமதேவரைத் தன்னுடன் அழைத்துச் செல்ல பாண்டுரங்கனின் அனுமதியைக் கேட்ட சம்பவத்தை பார்ப்போம்.
பாண்டுரங்கன் நாமதேவர் கூறியதைக் கேட்டு நகைத்துக் கூறினான்.
" படிகம் போல் இதயம் கொண்ட உம்மைப் போன்றவர் மனஅமைதி கிடைக்க தீர்த்தயாத்திரை போவதென்பது, சந்திரன் குளிர்ச்சியையும் சூரியன் வெப்பத்தையும் நாடுவது போன்றது."
அதற்கு ஞானதேவர் ,
". பக்தியினால் உன்னை எளிதில் அடையலாம் என்று அறிந்து நாமதேவரிடம் உள்ள் பக்தியை அனுபவிக்கவே அவருடன் செல்ல விரும்புகிறேன். இதுவும் உன் திருவுள்ளப்படிதானே நடக்கிறது." என்று கூறினார்.
அது உண்மைதான் என்பதைப் பின்னர் காணலாம்.
நாமதேவரும் பாண்டுரங்க்னைப் பிரிய மனமின்றி அவருடன் சென்றார். அப்போது பாண்டுரங்கன் "நீ எங்கு சென்றாலும் என்னையே நினைந்து விரைவில் திரும்பி வருவாய்" என்று கூறி ஞான தேவரிடம் நாமதேவர் தனக்கு ருக்மிணியைக் காட்டிலும் பிரியமானவர் என்று கூறி அவரை நன்றாகப் பாற்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான்.
பகவானுக்குத்தான் தன் பக்தர்களிடம் எவ்வளவு வாத்சலயம்! இது யுத்தத்தில் லக்ஷ்மணன் நினைவின்றி கிடந்தபோது ராமன் சீதை இல்லாமல் தன்னல் வாழ முடியும் ஆனால் லக்ஷ்மணனைப் பிரிந்து வாழ இயலாது என்று கூறியது நினைவுக்கு வருகிறது.
நாமதேவர் பாண்டுரங்கனைப் பிரிய மனமில்லாமல் திரும்பத் திரும்ப அவனைப் பார்த்து கண்ணீருடன் சென்றபோது அவரைக் கண்ட ஞானதேவர் பாண்டுரங்கன் எங்கும் உள்ளான் என்று கூற நாமதேவர், உருவத்தைத் தாண்டி அவனைக் காணும் ஞானம் தனக்கு வரவில்லை என்றும் தனக்கு பாண்டுரங்கனே எல்லாம் என்று கூறினார் .
அவருக்கு அந்த ஞானம் வருவதற்காகத்தானே பாண்டுரங்கன் இந்த லீலையைப் புரிந்தான்! அதை அடுத்து காண்போம் .
No comments:
Post a Comment