முகுந்தமாலை
3.முகுந்த மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்தம் ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்
அவிஸ்ம்ருதி: த்வச்சரணாரவிந்தே
பவே பவே மே அஸ்து தவ பிரஸாதாத்
முகுந்தா , உன்னை (பவந்தம்) தலையால் வணங்கி ( மூர்த்னா ப்ரணிபத்ய ) இந்தச் சிறு வரம் மட்டுமே (ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்) பிரார்த்திக்கிறேன் (யாசே), வரப்போகும் ஜன்மங்களில் எல்லாம் (பவே பவே) உன்னுடைய அருளால் ( தவ பிரஸாதாத்) உன் சரண கமலங்களில் (த்வச்சரணாரவிந்தே) நீங்காத நினைவு (அவிஸ்ம்ருதி: ) எனக்கு இருக்கட்டும். (மே அஸ்து).
பகவானே நாம் அடைய வேண்டிய லட்சியமாகவும் அதற்கு மார்க்கமாகவும் இருக்கிறான். அதனால் பக்தி வருவதற்கும் அவனையே பிரார்த்திக்க வேண்டும். 'அவனருளால் அவன்தாள் வணங்கி ,' என்றபடி.
உபநிஷத் கூறுகிறது, 'யமைவேஷ வ்ருணுதே தேன லப்யதே,' யாரிடம் பகவான் அருள்பாலிக்கிறானோ அவன்தான் பகவானை அடைய முடியும்.அதனால் ஆழ்வார் அவன் நினைவு பெறுவதற்கும் அவனையே யாசிக்கிறார்.
பக்தன் மோக்ஷத்தை விரும்பான். பலஜன்மங்கள் எடுத்தாலும் விடாது பகவான நினைவிலேயே ஆழ்ந்திருப்பதே அவனுடைய குறிக்கோள். ஆண்டாள் பாவை நோன்பின் பயனாக "இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்." என்றல்லவா கேட்டாள்.
ஏகாந்தம் இயந்தம் அர்த்தம் என்றதன் பொருள் நான் இதுமட்டும்தான் கேட்கிறேன் என்பது. அர்ஜுனன் "நீ மட்டும் எங்களுடன் இருந்தால் போதும்" என்று சொன்னான். பகவான் நம்முடன் இருப்பின் மற்றவை எல்லாம் எந்த மூலை? பக்தியை மட்டும் யாசித்தால் அவன் நம் சாரதியாக நம் வாழ்க்கை என்னும் ரதத்தை செலுத்திக் கடைசியில் அவனிடமே சேர்ப்பித்துக் கொள்வான். ஆழ்வார் இதுமட்டும்தான் என்பதில் எல்லாமே அடங்கிவிட்டது.
முகுந்தமாலை
4.நாஹம் வந்தே தவசரணயோர் த்வந்த்வ மத்வந்த்வ ஹேதோ:
கும்பிபாகம் குருமபி ஹரே நாரகம் நாபநேதும்
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம்
ஹே ஹரி. வைகுண்ட பதவியை அடைவதற்காகவோ, அல்லது மிகவும் கொடியதான, கும்பீபாகம் என்னும் நரகத்தில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவோ, அல்லது சுவர்க்க லோகத்தில் மிருதுவான மலர்க் கொடியைப் போன்ற தேவலோகப் பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவோ, நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை வணங்கவில்லை.
நான் எத்தனை பிறவி எடுத்தாலும், ஒவ்வொரு பிறப்பிலும், உன்னை என் இதயமாகிய கோவிலுக்குள்ளே வைத்து அனுதினமும் பூஜிக்க வேண்டும் என்பதற்காகவே உன் திருவடிகளை வணங்குகின்றேன்.
5 நாஸ்தா தர்மே ந வஸு நிசயே நைவ காமோப போகே
யத் யத் பவ்யம் பாவது பகவந் பூர்வ கர்மானு ரூபம்
ஏதத் ப்ரார்த்யம் மம பாஹுமதம் ஜன்ம ஜன்மாந்தரேபி
த்வத் பாதாம்போருஹ யுககதா நிஸ்சலா பக்திரஸ்து
.
பகவானே. எனக்கு இந்த தானம் யாகம் முதலிய தர்மங்களின் மீது நாட்டம் இல்லை. செல்வத்தைக் குவிப்பதிலோ அல்லது உலக இன்பங்களிலோ எனக்கு ஆசை இல்லை. என் முன் ஜென்ம கர்ம வினைப்படி எது எது எப்படி நடக்க வேண்டுமோ, அப்படியே நடக்கட்டும்.
நான் உன்னிடம் விரும்பிக் கேட்பது என்னவென்றால், என்னுடைய எல்லா ஜன்மங்களிலும், உன் திருப் பாத கமலங்களில் மட்டும் ஸ்திரமான பக்தியினை தந்தருள வேண்டும் என்பதே
.
மேற் கண்ட இரு ஸ்லோகங்களில் ஆழ்வார் வேண்டுவது என்னவென்றால் அவன் பாதக்கமலங்களின் நினைவு எப்போதும் இருக்கும் பக்தி மட்டுமே.. பக்தி செய்வது பெரும்பாலும் பிறவி நீங்கி முக்தியடையவே. "உன்னுடைய சரண த்வந்த்வம் அத்வந்த்வம் அதாவது இருமை நிலை நீங்கி முக்தியைக் கொடுப்பவை ஆயினும் அதற்காக நான் உன்னை வணங்கவில்லை."என்கிறார் நான்காவதுச்லோகத்தில்.
பிறகு நரகம் புகாமல் சுவர்க்கம் செல்ல விரும்பியோ என்ற கேள்விக்கு பதில் கும்பீபாகம் என்கிற கொடிய நரகத்தில் விழாமல் இருப்பதற்காகக்கூட செய்யவில்லை. ஸ்வர்கம் என்பது அழகிய அப்ஸரஸ்த்ரீகள் இருக்கும் இடம். அதுவும் வேண்டாம் என்கிறார். பின் என்னதான் வேண்டும் என்றால் மீண்டும் மீண்டும் பிறந்தாலும் என் இதயமாகிய கோவிலில் நீ குடியிருக்க வேண்டும்என்ற கோரிக்கையை மட்டும் சமர்ப்பிக்கிறார்.
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் என்று கோதை சொன்னபடி அவன் நினைவு நீங்காமல் இருப்பின் எத்தனை ஜன்மம் எடுத்தால் என்ன?
அடுத்த ச்லோகத்தில் "தர்மகாரியங்களில் கூட எனக்கு நாட்டமில்லை." என்கிறார் . சாதாரணமாக தான தர்மங்கள் யாக யக்ஞங்கள் இவை இகபர சுகத்தை விரும்பி செய்யப்படுபவை. பகவானிடத்தில் நிச்சலமான பக்தி இருந்தால் அந்த பக்தன் எது வந்தாலும் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் கவலைப் படுவதில்லை. 'ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ,' என்ற நிலையில் எல்லாம் பகவானின் பொறுப்பாகி விடுகிறதல்லவா?
பக்தி பிச்சம் ஈயவே என்று த்யாகராஜர் கேட்டபடி பக்தி கிடைக்கவும் அவனைத்தான் பிரார்த்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment