Friday, December 13, 2019

Thirukaragam temple

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 129

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் 22  . திருக்காரகம் , காஞ்சிபுரம்  01

       நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
          நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
     ஊரகத்தாய், ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
          உள்ளுவாருள்ளத்தாய் உலகமேத்தும்
     காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
          காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
     பேரகத்தாய் பேராதெள் நெஞ்சினுள்ளாய்
          பெருமானுன் திருவடியே பேணினேனே (2059)
                           திருநெடுந்தாண்டகம் - 8
     என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
காஞ்சியில் உலகளந்த பெருமாள் சன்னிதிக்கு உட்புறமாகவே அமைந்துள்ளது.
உலகளந்த பெருமாள் சன்னதியில் அடங்கியுள்ள திவ்ய தேசங்களில் இதுவும்
ஒன்று. காரகம் என்னும் பெயர் வந்துற்ற காரணம் அறியுமாறில்லை.

     கார்ஹமஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத்
தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்று உய்ந்தமையால் அவர் பெயரின்
பொருட்டே திவ்ய தேசம் விளங்கி நின்று கார்ஹகம் ஆகி காரகம்
ஆயிற்றென்பர். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமாகும்.

     எவ்விதம் இப்பெருமாள் (காரகத்தான்) உலகளந்த பெருமாளின்
சன்னதிக்கு வந்துற்றார் என்பதும் ஆராய்தற்குரியதாகும். தனித்த ஸ்தல
புராணம் இல்லை. திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் மட்டும்
இத்தலத்திற்குத் திவ்யம் தந்து திவ்ய தேசத்திற்குள் அமிழ்த்துகிறது.

     உலகமேத்தும் காரகத்தாய் என்ற திருமங்கையாழ்வாரின்
மங்களாசாசனத்தைப் பார்க்கும் போது இத்தலம் ஒருபோது பெருஞ்சிறப்புப்
பெற்றிருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கல்விக்கும். அறிவாற்றலுக்கும்
இப்பெருமாள் வரப்பிரசாதி.

மூலவர்

     கருணாகரப் பெருமாள். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     பத்மாமணி, நாச்சியார், ராமா மணி நாச்சியார்

தீர்த்தம்

     அக்ராய தீர்த்தம்

விமானம்

     வாமன விமானம், ரம்ய விமானம்

காட்சி கண்டவர்கள்

     கார்ஹ மஹரிஷி

சிறப்புக்கள்

     1. உலகளந்த பெருமாள் சன்னதியில் மூன்றாவது பிரகாரத்தில் ரம்ய
விமானத்தில் கீழ், வடக்கு நோக்கி ஆதி சேடன் மீது அமர்ந்த
திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

     2. திருமங்கையாழ்வாரால் மட்டும் உலகமேத்தும் காரகத்தாய் என்று
சொற்றொடர் மங்களாசாசனம்

     3. இப்பெருமாள் கல்வியும் அறிவும் அளவின்றி வளர அருள்
பொழிபவர். எனவேதான் பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108
திருப்பதியந்தாதியில்,
 

     ஓராதார் கல்வியுடையேம் குலமுடையேம்
          ஆராதனம் உடையேம் யாமென்று - சீராயன்
     பூங்காரகங் கானப் போதுவார் தாள் தலைமேல்
          தாங்கா ரகங்காரத் தால்
     நற்கல்வியும் நற்குலமும் நற்புகழும், உடையவர்கள் அவைகள் மேலும்
பெருக வேண்டுமென எண்ணி காரகம் சென்று வணங்குவர். அவர்களின்
திருப்பாதங்களே என் தலைக்கு அலங்காரமாகு மென்று அளவிறந்த
அறிவாற்றல் படைத்த அவனடியார்களின் ஏற்றத்தை இப்பாவில்
தெளிவாக்குகிறார்.

4. வைணவ அடியார்கள்,

     அவனை அறிதலையே பெரிய கல்வியாகவும், அவனுக்கு தொண்டு
செய்துய்யும் குலத்தில் பிறப்பதே நற்குலமென்றும் அவனதடியார்களைப்
போற்றி ஆராதித்து அன்பு செலுத்திப் பணிவிடை செய்தலையே  தொழிலாகக் கொண்டு திகழ்வர் "உற்றதும் உன்னடியார்க் கடிமை" யென்று
ஆழ்வார் கூறிய நிலையில் இருப்பர்.  

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  திருக்காரகம், காஞ்சிபுரம் திவ்யதேசம்  பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 130

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் 22  . திருக்காரகம் , காஞ்சிபுரம்  02

    தம்மைவிட சிறந்த வைணவர்களைக் கண்டால் 'எற்றே இவர்க்கு
நாமின்று' என்று அவர் பெருமைக்கு முன்பு தம்மைத் தாழ்த்திப்
பணிந்துகொள்வர்.

     இத்தகைய அடியார்கட்கான அறிவு, குலம், தொழில் எல்லாம் தருவது
காரகத்தான்தான் என்பதும் இந்த அந்தாதிப்பாவின் அரும்பொருளாகும்.

     5. தனித்த பாசுரம் இன்றி ஒரு சொற்றொடராலே திருமங்கை
இப்பெருமானை மங்களாசாசித்துள்ளார். இப்பெருமை மற்ற ஆழ்வார்களைவிட
திருமங்கைக்கு மட்டுமே சாலவும் பொருந்தும்.

     அதாவது ஒரு திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்து
கொண்டிருக்கும்போதே திருமங்கைக்கு வேறு ஒரு திவ்ய தேசத்து
எம்பெருமானின் நினைவு வந்து விடுகிறது. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என
திவ்ய தேச நினைவுகள் சங்கிலித் தொடர் விளைவு போல நினைவலைகளில்
நீந்துகின்றன. இதில் எங்கே இப்பெருமானை விட்டுவிடுவோமோ
வென்றெண்ணி விடாதிருக்கும் பொருட்டே சொற்றொடர் மங்களாசாசனத்தை
நல்குகிறார்.

     எனவே தமது நினைவுக்கு வரும் திவ்ய தேசத்து எம்பெருமான்களை
ஒருவர்பின் ஒருவராக தொடர் மங்களாசாசனம் செய்துவிடுகிறார்.
திருமங்கையாழ்வார் திவ்ய தேசங்களில் திளைத்து ஈடுபடுவதை எளிதில்
விளக்கிவிட முடியாது. இதனாற்றான் இவரை முன்னோர்கள் ஆத்மாவை
வெய்யிலில் வைத்து உடலை நிழல் வைத்து வளர்த்தவர் என்று
மொழிந்துள்ளார்.

     அதாவது எந்நேரமும், எப்போதும் இவரது ஆத்மா திவ்ய தேசங்களின்
திருவாசல்களிலேயே சஞ்சரித்துக் கொண்டே இருந்ததால் ஆத்மாவை
வெயிலில் வைத்து என்றனர். அதாவது ஒரு திவ்ய தேசத்தை சேவித்துக்
கொண்டே இருக்கும்போது இவரது ஆத்மா இன்னொரு திவ்ய தேசத்தின்
திருமுற்றத்தில் பெருமாளோடு சம்பாஷணையில் இருக்குமாம்.

     எம்பெருமானின் திவ்யதேசங்கட்குத் தொண்டு செய்வதற்கா கவே தமது
சரீரத்தைச் சரீர பலத்தை செலவழித்ததால் உடலை நிழலில் [திவ்ய தேசத்து
மதில்  நிழல்களில், கோபுர நிழல்களில், எம்பெருமான்களின் திருவடி நிழலில்]
வைத்தார் என்பர்.

     இங்கு காரகத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்யவந்தார்.
நெஞ்சமோ நீரகத்திற்கு தாவியது. அங்கிருந்து நெடுவரை என்னும் வேங்கடம்
மேவியது. நிலாத்திங்கள் துண்டன்பால் நெகிழ்ந்தது. பின்பு கச்சி சென்று
ஊரகத்தே புகுந்தது. உடனே வெஃகாவென்று வெருவியது. அவ்வமயமே
அந்தராத்மியாய் பெருமான் இருப்பது நினைவுக்கு வரவே
உள்ளுவாருள்ளத்தாய் என்று மங்களாசாசனமானது. அந்நிலையில் தாம்
காரகத்து திவ்ய தேசத்தில் இருப்பது நினைவுக்கு வரவே உலகமேத்தும்
காரகத்தாய் என்று மங்களாசாசனம் செய்தார். அந்நொடியிலேயே காரகம்
விடுத்துக் கார்வானம் புகுந்தார். அப்போது கள்வனின் நினைவும் வந்து
விட்டது. எனவே 'கள்வா' என்று மங்களாசாசனமிட்டார். அப்போதும் தம்
நெஞ்சைவிட்டு எப்போதும் நீங்கா நிற்கும் காவிரியின் நினைவு வந்தது.
உடனே காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் என்று திருப்பேர் நகரைக்
கூவினார்.

     இங்கெல்லாம் இருப்பவன் என் நெஞ்சத்தினின்றும் பேராதுள்ளானே
என்று ஆத்மா அவனைவிட்டு நீங்காத் தன்மை பெற்றதை நிலைநிறுத்துகிறார்.
தற்போது தலைப்பில் உள்ள பாடலைப் பாருங்கள். இவரது ஆத்மா
காரகத்தில் நின்று கொண்டிருக்கும் போதே திவ்ய தேசங்களில்
சஞ்சரித்தமைதெற்றென விளங்கும்.

     இத்துடன் நின்றாரில்லை உடனே அடுத்த பாடலில் வங்கத்தால்
மாமணி வந்ததுந்து முந்நீர் மல்லையாய் என்று திருக்கடன் மல்லை (2060)
சென்றது. என்னே இவர்தம் அர்ச்சாவதார ஈடுபாடு. எனவே இவர்
ஆத்மாவை வெயிலில் வைத்தவர் என்பதற்குத் தடையேதுமுண்டோ.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளைமுதல்  திருக்கார்வானம், காஞ்சிபுரம் திவ்யதேசம்  பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment