Tuesday, December 3, 2019

Bhakta tukkaram story part3,4

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விட்டல விட்டல பாண்டுரங்கா

துகாராம் -3

ஒரு சமயம் துகாராம் வயலில் பயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பறவைகள் வந்து தானியத்தை உண்பதைப் பார்த்தும் அவைகளை ஓட்டாமல் ஆனந்தமாக அதை பார்த்து எல்லாம் பாண்டுரங்கன் என்ற உணர்வுடன் பாடிக்கொண்டிருந்தார். இயற்கை, வானம் , பூமி எல்லாம் பாண்டுரங்கன் என்று கண்டார். 'ஆதி பீஜ் ஏக்லீ ' விதை ஒன்றுதான். அதுவே எல்லாமாக பரிணமிக்கிறது என்ற பொருளில் அவர் பாடினார்.

நாமசங்கீர்த்தனத்தைப் பற்றி அவர் கூறுகிறார்
நாம சங்கீர்த்தனம் ஒன்றே எல்லா பாவங்களையும் எரிக்ககூடியது. 
வனத்திற்குப் போக வேண்டாம் ஹரி உங்கள் வீட்டிற்கு வருவான். 
ஓரிடத்தில் உட்கார்ந்து அவனிடம் மனதை செலுத்துங்கள்'
ராம கிருஷ்ண ஹரி விட்டல கேசவ என்று ஜெபியுங்கள். 
நாம ஜபம் செய்பவர்கள் இந்த உலகத்திலேயே எல்லாம் பெறுவார்கள்.

துகாராம் ஆடி மாதத்தில் பண்டரிபுரம் போவார் . அந்த அனுபவத்தைக் கூறுகிறார்.

பண்டரிபுரம் சென்றோம் ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்டோம். சந்திரபாகா நதியில் ஸ்நானம் செய்து புண்டரீகனைக் கண்டோம். பண்டரிபுரம் சுற்றிப் பார்த்து விட்டலனுடைய பக்தர்களைக் காண்போம். பாண்டுரங்கனை தரிசித்து அவன் அழகைக் கண்குளிரக் காண்போம். அவன் பாத தூளியை சிரமேல் தரித்து அவன் அருள் பெறுவோம்.

பாண்டுரங்கனை நேருக்கு நேர் கண்டதும் அவன் அழகில் மயங்கிக் கூறுகிறார்..

செங்கல் மேல் நிற்கும் உன் பாதம், இடுப்பில் வைத்திருக்கும் உன் கைகள். கழுத்தில் துளஸி மாலை, இடுப்பில் பீதாம்பரம் , உன் அழகிய முகம் , மகரகுண்டலம் , கௌஸ்துபம் அணிந்த மார்பு இவை என்றும் என் மனதில் இருக்கட்டும்

.பாண்டுரங்கன் ஸன்னதியில் ஒரு தூண் உள்ளது. அது நரசிம்மர் தூண் எனப்படுகிறது. அதைப் பார்க்கும்போது துகாராம் அதைப் பார்த்துத்தான் ப்ரஹ்லாத காரணி நருசிம்ஹா ஜாலாசீ என்ற அபங்கம் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றும்.

பாண்டுரங்கன் பக்தர்களிடம் கொண்ட அன்பு அவர்கள் அவனிடம் கொண்டதை விட மேலானது . அவனுடைய அன்பை துகாராம் புகழ்கிறார்.

பகவானே நீ உள்ளத்தில் கொண்ட பக்தியை மட்டுமே காண்கிறாய் ஜாதி மதம் பார்ப்பதில்லை. ரைதாஸ் எனற சக்கிலியருக்காக பாதரட்சைக்கு நிறம் பூசியவன், கபீருடன் துணி நெய்தவன், மீராவைக் காக்க விஷம் உண்டவன், தாமாஜிக்காக தன்னைத் தாழ்த்திக் கொண்டவன், புண்டரீகனுக்காக கல்லின் மேல் நின்றவன். உன் லீலைகள் அற்புதமானவை.

மேலும் அவர் கூறுகிறார்.
நாம் படுத்துக்கொண்டே அவன் நாமம் கூறினால் அவன் நம் எதிரில் வந்து நிற்பான். உட்கார்ந்து கூறினால் அசைந்துகொண்டே ரசிப்பான். நின்று கொண்டு பாடினால் அவன் நடனம் செய்வான். நடந்துகொண்டே நாமசங்கீர்த்தனம் செய்தால் அவன் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே ரசிப்பான். மனதில் அன்புடன் பாடினால் அவன் ஓடி வருவான்.

ஆனால் பாடுவதற்கு நல்ல குரல் வேண்டுமல்லவா ? வேண்டாம் என்கிறார் துகாராம். அவன் மனதில் உள்ள பக்தியைத்தான் பார்க்கிறான் சங்கீதத் திறமையை அல்ல. இது புரந்தரதாசரின் 'கேளனோ ஹரி தாளனோ தாள மேளகளித்து பிரேமவில்லத கான' என்ற வரிகளை நினைவூட்டுகிறது. அதன் பொருள் தாளம் மேளம் முதலியவற்றோடு கூடிய சங்கீதத்தை மனதில் பக்தியிலாவிடில் ஹரி கேட்க மாட்டான் சகிக்கவும் மாட்டான் என்பது.

இந்த காலத்தில் எல்லாமே ஒரு காட்சிப்பொருளாக ஆவதை நினைத்தால் இது நினைவுக்கு வருகிறது. 

விட்டல விட்டல பாண்டுரங்கா 
துகாராம் - 4

.இவ்வாறு துகாராம் ஹரியின் நாம சங்கீர்த்தனமும் அவன் பக்தர்களுக்கு சேவை செய்வதுமே அவனை திருப்திப் படுத்தும் என்கிறார்.

பாகவதத்தில் பகவான் கூறுகிறார். ' ப்ராயேண பக்தியோகேன ஸத்ஸங்கேன வினா உத்தவ ந உபாயோ வித்யதே ,' உத்தவ கீதை (பா. 11.11. 48)
"பக்தியும் சத்சங்கமுமே என்னை அடையும் உபாயங்கள். "

ஒரு ஆடி மாத சுக்லபக்ஷ ஏகாதசி அன்று பாண்டுரங்கனே அவரைக் காண வந்து விட்டான் என்று முன்பே பார்த்தோம். அப்போது அவர் அவனிடம் 'ரத்னா ஜடித சிம்ஹாசன வாரீ பாய்சாலே அபனா,' என்று கால் கடுக்க செங்கல் மேல் நின்றவனை இரத்தின சிம்ஹாசனத்தில் உட்காரும்படி வேண்டுகிறார்.

அப்போது ருக்மிணி அவனுக்கு சாமரம் வீச தான் அவனுடைய பாதுகையைத் தாங்க வேண்டும் என்கிறார். 
பிறகு பாண்டுரங்கன் அவரிடம் பசிக்கிறது என்று கூற துகாராமிடம் இரண்டு மாதங்களுக்குக்கு முன் செய்த காய்ந்த அப்பம் இரண்டு மட்டுமே இருந்ததாம். அதை பாண்டுரங்கன் அமிர்தம் போல் நினைத்து உண்டானாம். இலையோ, மலரோ, பழமோ, நீரோ எதையும் பக்தியுடன் கொடுத்தால் பிரியத்துடன் உண்பேன் என்று கீதையில் கூறியவன் அல்லவா!

மகாபாரதத்தில், 
'அன்யத் பூர்நோதபாம் கும்பாத் அன்யத் பாதாவநேஜநாத் அன்யத் குசலஸம்ப்ரச்நாத் ந ச இச்சதி ஜனார்தன: ' பகவான் பூர்ண கும்பம், அவன் பாதத்தை அலம்புவது, அன்பான் மொழிகள் இதைத்தவிர் வேறு எதையும் விரும்பான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 
அதனால்தான் துரியோதனன் முதலியவர்களின் அழைப்பை மறுத்து எளியவிதுரர் வீட்டிற்குச் சென்றான். அதேபோல் குசேலரின் அவலையும் சபரியின் பழங்களையும் உகந்து அன்போடு ஏற்றான்.
பாண்டுரங்கன் துகாராமிடம் அவர் கொடுத்த அப்பத்தை உண்டபோது தான் விதுரர் வீட்டில் உண்டது போல உணர்ந்ததாகக் கூறினானாம்.

இது போன்ற பக்தர்களின் சரித்திரங்களை அன்றி வேறெங்கு பகவானின் வாத்சல்யம் சௌசீல்யம் சௌலப்யம் இவைகளை அறிய முடியும்!

துகாராம் வாழ்ந்தது 46 வருடங்களே. அதன் முடிவில் அவர் பண்டரிபுரம் சென்றார். அதற்குப்பிறகு அவரை யாரும் காணவில்லை. அவர் வைகுண்டத்திற்கு பூத உடலுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருடைய சொற்பமான வாழ்நாளில் கணக்கற்ற அபங்கங்கள் செய்தார். இவ்வாறு அவர் பாண்டுரங்கனின் மிகச்சிறந்த பக்தராக விளங்கினார் . இன்றும் அவர் அபங்கங்களின் மூலம் அவர் வாழ்கிறார்.

துகாரம் மற்றும் இதர பக்தர்களுடைய சரித்திரம் கூகிள் செய்தால் கிடைக்கும். இங்கு அவர் பக்தியைப் பற்றி மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. இதே போல மற்ற பாண்டுரங்க பக்தர்களைப் ;பற்றி அடுத்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment