Friday, November 1, 2019

Srimad Bhagavatam skanda 10 adhyaya 8 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - தசம ஸ்கந்தம் அத்தியாயம் 8 (தொடர்ச்சி)

இப்போது சிறிது நேரம் பாகவதத்திலிருந்து விலகி வேதாந்த தேசிகர் கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தை எவ்வாறு அனுபவிக்கிறார் என்று காண்போமா ?

கிருஷ்ணனும் பலராமனும் தவிழத் தொடங்கினார்கள் . இதை தேசிகர் அழகாகக் கூறுகிறார். 
கிருஷ்ணன்பூமியில் தவழ்ந்த போது பூமிதேவி அவன் மேனியை தூசியின் உருவத்தில் தழுவினாளாம் .

பிறகு அவன் பேச முயற்சிக்கையில் த்ன் தாய் பெயரை சரிவர உச்சரிக்க முடியாததைக் கண்டு எல்லோரும் மகிழ்ந்தனர்
,.தேசிகர் கூறுகிறார், உலகையெல்லாம் படைத்து அவற்றில் உள்ளவைகளுக்கு நாமரூபம் கொடுத்தவன் இங்கு கோகுலத்தில் தாயின் பெயரைக் கூற முயன்று எல்லோருக்கும் ஆனந்தததை அளித்தான் என்று.

.'அவன் உச்சரித்ததெல்லாம் வேதமே. கோபியருக்குத் தன் மழலைச்சொல்லால் வேதத்தையே கற்பிக்க முயன்றானாம்.

அடுத்து அவன் நிற்க முயன்று முடியாமல் கீழே விழுந்து தன் முளைக்கின்ற இளம் பற்களைக் காட்டி அழகாக சிரிக்கும்போது எல்லொருக்கும் கண்ணான அந்தக் கண்ணனைத் தவிர யசோதை வேறு எதையும் காணாதவள் ஆனாள் .

'கோல நறும்பவள செந்துவர் வாயினிடை
கோமள வெள்ளிமுளை போல் சில பல்லிளக ' என்ற பெரியாழ்வார் பாசுரம் நினைவுக்கு வருகிறதல்லவா?

பிறகு யசோதை கண்ணனுக்கு நடக்க கற்பிக்கிறாள். மூவுலகும் அளந்தவன் சில அடிகளுக்கு மேல் நடக்க முடியாத மாதிரி நடித்து கீழெ விழுந்து அன்னை வந்து தூக்கிக் கொள்ளும்படி செய்து அவளுக்கு ஆனந்தம் கொடுக்கிறான். நடக்க ஆரம்பித்தபின் அவன் பாதச்சுவடு பூமியெங்கும் பரவியது தன் முத்திரையை பூமியில் பதித்து தீய சக்திகளை விரட்டுவது போல இருந்ததாம்.

அடுத்து தேசிகர் கண்ணனின் நவநீத நாட்டியத்தைப் பற்றிக் கூறுகிறார்.
கோபியர் தயிர் கடைகிறார்கள்.அப்போது அங்கே வந்த கண்ணன் தனக்கு வெண்ணை தருமாறு வேண்டுகிறான் . அப்போது அவர்கள் அவனிடம் நாட்டியம் ஆடினால் வெண்ணை தருவதாகக் கூறினர். இது தேசிகரால் பினவருமாறு வர்ணிக்கப் படுகிறது.

ய ஏஷ லோகத்ரய சூத்ரதார: பர்யாய பாத்ராணி சராசராணி 
ஆநர்தயதி அத்புத சேஷ்டித: அஸௌ நநர்த்த கேலன் நவனீத காங்க்க்ஷீ

மூவுலகுக்கும் சூத்ரதாரியானவன் எவன் சராசரங்களை ஆட்டுவிக்கிறானோ அவன் இங்கு வெண்ணையை விரும்பி அழகாக நர்த்தனம் ஆடினான். '

இதையே கோபால விம்சதியில் நவனீத நாட்டியம் என்று வர்ணிக்கிறார்.
ஆவிர்பவது அனிப்ருதாபரணம் புரஸ்தாத் 
ஆகுஞ்சிதைக சரணம் நிப்ருதான்ய பாதம் 
தத்னாநிமந்தமுகரேண நிபத்த தாளம்

நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம் (கோபால விம்சதி-4)
நந்தபவனே – நந்தகோபன் இல்லத்தில் 
அனிப்ருதாபரணம் – அசைந்து ஒலிக்கும் ஆபரண்ங்களுடன்
ஆகுஞ்சிதைக சரணம் – ஒரு பாதம் மடங்கியதாயும்
நிப்ருதான்ய பாதம்- இன்னொரு பாதம் நேராகவும் வைத்து
நிமந்தமுகரேண தத்னா- நன்கு கடையப்பட்டதால் ஒலிக்கின்ற தயிரால் 
நிபத்த தாளம் – தாளம் போடப்பட்ட 
நாதஸ்ய –கண்ணபிரானுடைய 
நவநீத நாட்யம் – வெண்ணையை விரும்பி செய்யப்பட்ட நடனம்
ஆவிர்பவது- என் முன்னே தோன்றட்டும்.

கோகுலத்தில் வெண்ணை கடையும் இடத்திலேயே நிற்பதால் கண்ணனின் மேனி முழுவதும் தயிர்த்துளிகள் தெறிக்கின்றன. இது தேசிகருக்கு பாற்கடல் கடைந்தபோது அவன் மேனியில் தெறித்த பால் துளிகளை நினைவூட்டுகிறது.

இது குலசேகரரின் 
க்ஷீரஸாகர தரங்கஶீகராஸார தாரக்ருத சாருமூர்த்தயே
போகிபோகசயனீய சாயினே மாதவாய மதுவித்விஷே நம: 
என்ற முகுந்தமாலை ஸ்லோகத்தை நினைவூட்டுகிறது.

மது என்ற அசுரனைக் கொன்ற வரும், ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டவரும், மேனியில் பாற்கடலின் அலைகளால் பாற்துளிகள் தூவப்பட்டு நக்ஷத்திரங்கள் ஒளிரும் மேகம் போன்ற அழகிய மேனியுடையவருமான மாதவரை வணங்குகிறேன்.

கண்ணனின் நாட்டியத்தால் கவரப்படாதவர் யார்? 
இதோ லீலாசுகரின் வாக்கு.
வதனே நவனீத கந்த வாஹம் வசனே தஸ்கரசாதுரீதுரீணம் 
நயனகுஹனாச்ரு ஆச்ரயேதா: சரணம் கோமலதாண்டவம் குமாரம்

வாயில் வெண்ணைவாசம் , சொற்களில் கபடம், கண்களில் பொய்க்கண்ணீர், இதோடு அழகாக நாட்டியம் ஆடும் சிறுவனின் பாதங்களை சரண் அடைகிறேன்.

பகவான் பாற்கடலை விட்டு ஏன் கோகுலம் வந்தான் ? பாற்கடலில் பால் மட்டுமே கிடைக்கும் , வெண்ணை தயிர் இவை கிடைக்காதல்லவா? அதனால்தான் கோகுலம் வந்தான் என்பது பக்தர்களின் வாதம். 
இப்படி எல்லொரும் அவன் நடனத்தை ரசிப்பது கண்டுதான் ஊத்துக்கடு கவி ஆடாது அசங்காது வா , கண்பட்டு விடும் என்றாரோ?

அடுத்து பாகவதம் கூறும் கண்ணன் பாலலீலைகளைக் காண்போம் .

  

No comments:

Post a Comment