Friday, November 29, 2019

Bhakta tukkaram story part2

Courtesy:smt.Dr.Saroja Ramanujam

விட்டல விட்டல பாண்டுரங்கா துகாராம் -2

நாமதேவர் பகவானிடம் தான் நூறு கோடி அபங்கங்கள் இயற்ற வல்லமை வேண்டும் என்று கேட்டாராம். பாண்டுரங்கனே வந்து அவர் இயற்றியதை எல்லாம் எழுதுவானாம். ஆனால் அது முடியும் முன்பே அவர் உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு பகவானின் திருவடி சேர ஆசை கொண்டார். அப்போது பகவான் அவரிடம் சிறிது காலம் தன்னுடன் இருந்து பிறகு துகாராமாக பிறந்து அவர் நூறு கோடி அபங்கங்கள் இயற்றும் நோக்கத்தை நிறைவேற்றலாம் என்று கூறவே அவர் மறுபடியும் துகாராமாகப் பிறந்தார் .

இது எதைத் தெரிவிக்கிறது என்றால் நாம் பகவானிடம் வைக்கும் கோரிக்கை நிறைவேறாமல் போவதில்லை , நாமே நம் எண்ணத்தைப் பிறகு மாற்றிக்கொண்டாலும். உதாரணமாக துருவன் தவம் செய்தது தனக்கு உயர்ந்த பதவி வேண்டும் என்பதற்கு. ஆனால் பகவானின் தரிசனம் கிடைத்த பிறகு முக்தியையே விரும்பினான். ஆனாலும் பகவான் அவன் முதலில் கொண்ட ஆசை நிறைவேறிய பின்பே அவனுக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார்.

துகாராமின் சாத்விகப் பண்பிற்கு உதாரணம் என்னவென்றால், அவரை நிந்தித்தவர்களிடம் அவர் தன் குறைகளை எடுத்து இயம்பியதற்கு அது தான் அவைகளை களைய உதவியது என்று நன்றி கூறினார். மேலும் அவர்களிடம் தன்னைப் பற்றி பேசுவதற்கு பதில் பகவானின் குணங்களைப் பற்றிப் பேசுவது நலமளிக்கும் என்று கூறினார்.

துகாராமின் புகழ் சிவாஜி வரை எட்டியது. ஒரு சமயம் சிவாஜி மொகலாயர்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்ததால் மாறுவேஷத்தில் துகாரமைக் காண வந்தார் .அப்போது துகாராமிடம் ஒரு தட்டு நிறைய பொற்காசுகளைக் கொடுத்தார். துகாரம் அதைக் கண்டு பாண்டுரங்கனின் சேவை தவிர வேறு எதையும் தான் விரும்பவில்லை என்றும், அவன் தன் நலத்தைப் பார்த்துக்கொள்வான் என்றும் கூறி, பாண்டுரங்கன் தன்னைக் காக்க சக்தியில்லாமல் போனாலொழிய வேறு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். அதற்கு சிவாஜி அந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவிடலாமே என்று கூற துகாராம், சேற்றில் காலை விடுவானேன் பிறகு அதை அலம்பிக் கொள்வானேன் என்று கூறினார்.

சிவாஜி துகாராமின் நாம சங்கீர்த்தனத்தில் வெகுவாக ஈடுபட்டு இரு மாதங்கள் அங்கு தங்கினார். அப்போது ஔரங்கசீப் அங்கு சிவாஜி இருப்பதை அறிந்து 2௦௦௦ போர்வீரகளை அனுப்பி அந்த இடத்தை முற்றுகை இடச் செய்தான். அவர்கள் சிவாஜியை ஒப்படைக்கும்படி கேட்டபோது அங்கிருந்த மக்கள் அச்சம் கொண்டனர். துகாராம் அவரகளிடம் பயப்படவேண்டாம் நாமசங்கீர்த்தனம் தொடரட்டும், எல்லாம் பாண்டுரங்கன் பார்த்துக் கொள்வான் என்று கூறினார்.
பக்தனின் சொல்லை மெய்யாக்குபவன் அல்லவா அவன்?பாண்டுரங்கன் சிவாஜி போல வேஷம் கொண்டு அந்த வீரர்களுக்கு போக்குக் காட்டி ஒரு அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று மறைந்து விட்டான். அவர்கள் அந்தக்காட்டில் திக்குத்தெரியாமல் அலைந்து மாண்டார்கள்.

பின்னொரு சமயம் சிவாஜி ஒரு வர்த்தகன் போல வந்து அவரிடம் ஒரு மூட்டை அரிசியை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினான். அவர் வந்தது மன்னன்தான் என்று அறிந்து அவன் மனதை புண்படுத்த விரும்பாமல் அதை வாங்கிக் கொண்டார் . ஆனால் ஒரு நாளுக்கு மட்டும் போதுமான அரிசியை வைத்துக்கொண்டு மற்றதை ஏழைகளுக்கு விநியோகம் செய்துவிட்டார்.

No comments:

Post a Comment