Thursday, October 24, 2019

Vishnu Sahasranama 771 to 787 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

. 771. சதுர்மூர்த்தி:-நான்கு வ்யூஹ ரூபத்தை நினைவூட்டுவது போல் கிருஷ்ணாவதாரத்தில் இந்த நான்கு ரூபத்திலும், வாசுதேவன், சங்கர்ஷணன், (பலராமன்) பிரத்யும்னன், அநிருத்தன் என்று காண்கிறோம்.

நான்கு ரூபங்களாவன,விராட் புருஷன், ( உலக வடிவு), சூத்ராத்மா, (அந்தர்யாமி) அவ்யாக்ருதம், (வெளிப்படாத சூக்ஷ்ம வடிவு) துரீயம் (இவைகளைக் கடந்த பிரம்மஸ்வரூபம். )
அல்லது வெண்மை, செம்மை, பசுமை, கருமை என்ற வடிவங்கள் .
(சங்கரர்)

772. சதுர்பாஹு: -நான்கு கரங்களை உடையவர். தேவகி வசுதேவருக்கு தரிசனம் தந்தபடி.

773.சதுர்வ்யூஹ:- நான்கு வ்யூஹ ரூபங்கள் உடையவர். 
வாசுதேவன் , சங்கர்ஷணன் , பிரத்யும்னன், அநிருத்தன் என்ற மூர்த்திகளில் வாசுதேவர் பகவான் என்ற சொல்லின் ஞானம் , பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் என்று ஆறு குணங்களையும் கொணடவர். மீதி மூன்றில் முறையே ஞானம், பலம், ( சங்கர்ஷணன் ) ஐஸ்வர்யம் , வீர்யம்( பிரத்யும்னன்) சக்தி, தேஜஸ் ( அநிருத்தன் ) இவை உள்ளன.

774. சதுர்கதி: -பக்தர்களுக்கு நான்கு புருஷார்த்தங்கள் ஆகிய தர்மம் , காமம், அர்த்தம், மோக்ஷம் இவைகளின் வடிவானவர்.

நான்கு வர்ண தர்மங்களையும் ஆஸ்ரம தர்மங்களையும் பின்பற்றி நடப்பவர்க்கு புகலிடம் ஆனவர்,(சங்கரர்)

பகவானுக்கு நான்கு விதமான நடை கூறப்படுகிறது, சிம்ஹம், சார்தூலம் (புலி), ரிஷபம், கஜம் 
ராமாயணத்தில் ராமன் லக்ஷ்மணன் இவர்களின் நடையை , கஜ சிம்ஹ கதீ வீரௌ , சார்தூல வ்ருஷ்போபமௌ என்று வால்மீகி வர்ணிக்கிறார்

775.சதுராத்மா – மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கு உருவங்களாக இருப்பவர். (சங்கரர்) 
ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் நான்கு வடிவாக தோன்றியவர்.

ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி, துரீயம் என்ற நான்கு நிலைகளிலும் அது அதற்கேற்ப நன்கு உருவங்களுடன் ஸ்தூலகவும் சூக்ஷ்மமாகவும் விளங்குபவர்.

776. சதுர்பாவ:- தாவரங்கள், பறவை- மிருகங்கள், , மனுஷ்யர்கள், தேவர்கள் ஆகிய நான்கு வகைகளின் ஆத்மாவாக இருப்பவர்

777. சதுர்வேத வித்- நான்கு வேதங்களின் பொருளையும் உள்ளபடி அறிந்தவர். வேதங்களின் உண்மையொருள் பகவானாக இருப்பதால் அவரே அவரை அறிந்தவர் ஆகிறார். 
வேதாந்த க்ருத் வேதவிதேவ சாஹம்- (ப. கீ) 
நான்கு வேதங்களையும் அறிந்தவர்களுக்கும் தம்முடைய மகிமை என்னும் பெரும் கடலில் ஒரு துளி அளவே தெரியும்படி இருப்பவர்.

778. ஏகபாத்- உலகம் அனைத்தும் தம் ஒரு பாதத்தில் அல்லது பகுதியில் அடக்கியவர் 
'பாதோ அஸ்ய விச்வபூதானி த்ரிபாதஸ்ய அம்ருதம் திவி " புருஷ சூக்தம்.
சகல சிருஷ்டியும் இவருடைய கால் பாகம் முக்கால் பாகம் அழிவற்றது, பரமபதத்தில் உள்ளது.
இதையே கீதையில் 'விஷ்டப்யாஹம் இதம் க்ருத்சஸ்னம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத்' என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் பொருள் " நான் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறேன். இந்த பிரபஞ்சத்தை என்னில் ஒரு சிறிய பாகமாகத தாங்கி நிற்கிறேன்." என்பது.

779. ஸமாவர்த்த: -சம்சார சக்கரத்தை சுழற்றுபவர். 
ஈஸ்வர: சர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்டதி 
ப்ராமயன் சர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா- ப. கீ.18.61
ஈஸ்வரன் எல்லா உயிர்களுக்கும் உள் நின்று அவைகளை யந்திரத்தில் சுழற்றுவதுபோல் மாயையால் சுழலச்செய்கிறான்.

மக்களைக் காக்கத் திரும்ப திரும்ப அவதாரம் எடுப்பவன்.

780. நிவ்ருத்தாத்மா- தயையினால் உலகத்தோடு சேர்ந்திருந்தாலும் இயற்கையில் ஒன்றிலும் சேராத தனித்த மனமுடையவர். 
'ந மாம் லிம்பந்தி கர்மாணி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா,' –கீதை

"எந்த கர்மமும் என்னை கட்டுப்படுத்தாது. அவைகளினால் எனக்கு ஒரு பயனும் இல்லை."

781. துர்ஜய: -வெல்லப்பட முடியாதவர்
782. துரதிக்ரம:-எவரும் தம் கட்டளையை மீற முடியாதிருப்பவர்.
783. துர்லப: - பக்தியாலன்றி அடைய முடியாதவர்.
784. துர்கம:- எளிதில் அறியமுடியாதவர் 
785. துர்க்க:- அவித்யை முதலியவை கோட்டை போல் மூடிக் கொண்டு இருப்பதால் பிரவேசிக்கக் கூடாமல் இருப்பவர்.

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித் யதாதி ஸித்தயே
யதத்தாம் அபி ஸித்தானாம் கச்சித் மாம் வேத்தி தத்வத கீ- 7.3
"மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான் . முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி உணர்கிறான்."

786. துராவாஸ:-அவருடைய இருப்பிடம் அடைய முடியாதது.

துஹ்கேன ஆவாஸ்யதே சித்தே யோகிபி: ஸமாதௌ – யோகிகளால் மிகுந்த சிரமத்துடன் மனதில் தரிக்கபடுகிறவர் .

787.துராரிஹா- துஷ்டர்களை அழிப்பவர்.

  

No comments:

Post a Comment