Friday, October 11, 2019

thirunaangoor temple

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 77

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

சோழநாட்டு திவ்யதேசங்கள் திருச்செம்பொன்செய்கோயில் (திருநாங்கூர்) 01

    பிறப்பொடு மூப்பொன்றில்லவன் றன்னைப்
          பேதியா வின்ப வெள்ளத்தை
     இறப்பெதிர் காலக் கழிவு மானானை
          ஏழிசையில் சுவை தன்னை
     சிறப்புடை மறையோர் நாங்கை, நன்னடுவுள்
          செம்பொன் செய், கோயிலுளுள்ளே
     மறைப்பெரும் பொருளை, வானவர் கோனை
          கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே - (1269)
                     - பெரிய திருமொழி 4-3-2
     என்று திருமங்கையாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்திருத்தலம்
திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.

வரலாறு

     இராவண சம்ஹாரம் முடிந்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த
த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு
தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர்
அப்பசுவை ஒரு பிராம்மணர்க்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு இந்தக்
கோவிலை (அப்பிராம்மணர் தற்போதுள்ளவாறு) கட்டியபடியால் இதற்கு
செம்பொன்செய் கோவில் என்று பெயர் வந்ததாயும் கூறுவர்.

மூலவர்

     செம்பொன்ரங்கர்

தாயார்

     அல்லிமாமலர் நாச்சியார்

தீர்த்தம்

     ஹேம புஷ்கரணி, கனக தீர்த்தம்

விமானம்

     கனக விமானம்

காட்சி கண்டவர்கள்

     ருத்ரன்

சிறப்புக்கள்

     1) செம்பொன் ரங்கர் என்றும் ஹேமரங்கர் என்றும் பேரருளாளன்
என்றும் இப்பெருமாளுக்குத் திருநாமங்கள். பெருமாள் பரமபதத்தில்
இருப்பதால் அருளாளன். அதைவிடுத்து இங்குவந்து நம்மோடு இருப்பதால்
பேரருளாளன்.

     2) காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காஸ்யபன் என்னும் அந்தணன் மிக்க
வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் வறுமையைப் போக்க
எவ்வளவோ முயன்றும் தவம்பல செய்தும் பயனில்லை. பின்னர் பக்தர்களால்
இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அவன் இங்கு வந்து திருமந்திரத்தை 3
தினங்களில் 32000ம் தடவை உச்சரித்து ஜபம் செய்ய பெருமாள் திருவருளால்
பெருஞ்செல்வம் பெற்றான் என்பதுமோர் கதையுண்டு. எனவே இழந்த
செல்வத்தை பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் எம்பெருமானை சேவிப்பது
மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பதில் ஐயமில்லை.

     3) நாங்கை நன்னடுவுள் அமைந்துள்ள இந்த அழகிய தலத்தை
திருமங்கையாழ்வார் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

     4) திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின்
(திருக்கோழி) அழகிய மணவாளப் பெருமான் ஆவார். இவரே பேரருளாளன்
என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார். எனவேதான்
உறையூரில் உள்ளதைப் போன்றே இங்கும் பெருமாளுக்கு இரண்டு
பிராட்டிகள். இதனைத் திருமங்கையாழ்வாரும்,
 

     பேரணிந் துலகத்தவர் தொழுதேத்தும்
          பேரருளா ளனெம் பிரானை
     வாரணி முலையாள் மலர் மகளோடு
          மண்மகளுடன் நிற்ப
     சீரணி மாட நாங்கை நன்னடுவுள்
          செம்பொன் செய் கோயிலினுள்ளே
     என்று மங்களாசாசனம் செய்துள்ளார். உறையூரில் கமலவல்லி நாச்சியார்,
பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார் இங்கு அல்லி மாமலர் நாச்சியாரும்
பூமாதேவியும் எழுந்தருளியுள்ளனர்.

     5)11 கருடசேவைக்கு இவரும் வருவார்.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளைமுதல்  திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்)  திவ்யதேசம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment