Friday, October 4, 2019

Lal Bahadur Sastri - the real patriot

இந்த அக்டோபர் 2ம் தேதியன்று தேசம் காந்தியினை வணங்கும், காமராஜரை நினைத்து கண்ணீர் சிந்தும். ஆனால் இந்த வரிசையில் வணங்கவேண்டிய பாரத முனிவர் ஒருவர் உண்டு

அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது.

லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் பெரும் எடுத்துகாட்டனா மனிதர். இதுவரை இருந்த பிரதமர்களில் அவர்தான் நம்பர் 1

அடித்து சொல்லலாம் பதவியில் இருந்தது வெறும் 1.5 வருடங்களே, ஆனால் அவரின் சாதனைகளும் வெற்றியும் தியாகமும் ஏராளம்

காங்கிரஸ் அரசியலுக்காக நேரு, இந்திரா என சொல்லி சாஸ்திரியினை மறக்கடித்தனர், பாஜகவும் அதையே தொடர்வதுதான் சோகம்..

அவர் வாழ்வினை படித்தால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், அந்த மனிதனை தேடிபிடித்து கட்டி அழ தோன்றும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றான் அந்த மாமனிதன்.

காமராஜர் போலவே அவரும் நம்ப முடியாத அதிசயம். அப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருக்கின்றான், ஆண்டிருக்கின்றான் என்பதில் நிச்சயம் கண்ணீரை துடைத்துவிட்டு பெருமை கொள்ளவேண்டும்.

அவர் பிறந்தது மகா ஏழ்மையான குடும்பம், ஆம் அவர் பிராமண குடும்பம்தான் ஆனால் தந்தை இல்லை.  

வறுமைக்கு எந்த இனமும் தப்பமுடியாது, அவரும் சிக்கினார்

ஆனாலும் கல்விக்காக போராடினார். கங்கையின் கிளைநதியினை நீந்தி கடந்தே பள்ளிக்கு சென்றார். புத்தகம் வாங்க பணமில்லா நிலையில் நண்பனின் புத்தகத்தை இரவல் வாங்கி அதையும் தெருவிளக்கில் படித்து வளர்ந்தவர். அந்த காட்சியினை கண்ட அவரின் ஆசிரியர் அவரை படிக்க வைத்தார். படித்து "சாஸ்திரி" பட்டம் வாங்கினார்

லால் பகதூர் சிறிவஸ்தவா பின்னர் லால் பகதூர் சாஸ்திரி ஆனார்

சாஸ்திரி என்பது அவர் வாங்கிய பட்டம், குடும்ப பெயர் அல்ல. அவரின் முன்னோர்களுக்கு ஆங்கிலேயன் கொடுத்த பட்டம் பகதூர்..

திலகரும் காந்தியும் அவரை அரசியலுக்கு உணர்ச்சியால் அழைக்கின்றார்கள். கதர் உடுத்தி காங்கிரஸ்காரர் ஆனார். கதரை விற்று சம்பாதித்த காசில்தான் தன் தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு போராட வந்தார்.

அது ஒரு மணிகூண்டில் சுதந்திர கொடியேற்றும் போராட்டம், கடும் போலிஸ் நெருக்கடியிலும் தந்திரமாக அந்த கூண்டில் ஏறி கொடியேற்றுகின்றார் சாஸ்திரி, அங்கே மகளிர் அணியில் கொடிபிடித்த அந்த லலிதாமணி அதனை கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றார். நாட்டுபற்றோரிடையே காதல் அந்த தருணத்தில் உருவானது,

அவரை திருமணமும் செய்தார் சாஸ்திரி

இந்தியன் படத்தில் கமல் சுகன்யா காதல் இங்கிருந்துதான் திருடபட்டது. கதரை தவிர வேறு ஆடை அணியமாட்டோம் எனும் சத்தியத்துடன் அந்த திருமணம் நடந்தது.

நாட்டுக்காக சிறையெல்லம் சென்றுவிட்டு பின் சுதந்திர இந்தியாவில் ரயில்வே மந்திரியாக அமர்ந்தார் சாஸ்திரி

அவர்தான் ரயில்வே மந்திரி, ஒருமுறை கூட ஏசி கோச்சிலோ, கூபேயிலோ அவர் பயணித்தவரில்லை, மக்களோடு மக்களாக அமர்ந்திருந்தார். ஒருமுறை அவர் சற்றுதாமதமாக வர ரயில் அவருக்காக நிறுத்தபட்டிருந்தது. ஆத்திரமுற்ற சாஸ்திரி என் தவறுக்காக‌ மொத்த மக்களையும் காக்க வைத்த அந்த ஸ்டேஷன் மாஸ்டரை சஸ்பெண்ட் செய்கின்றேன் என அறிவித்துவிட்டு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ரயிலில் ஏறினார்.

தன் உதவியாளர் கார் வாங்கியதை காண்கின்றார், என் சம்பளமே கார் வாங்க போதாது எனும்பொழுது நீ எப்படி வாங்க முடியும்? முறைகேடு செய்திருப்பாய் உனக்கு இனி என்னிடம் வேலை இல்லை என விரட்டிவிட்டவர் சாஸ்திரி.

வால்டர் வெற்றிவேல் விஜயகுமார் பாத்திரம் இப்படித்தான் உருவாக்கபட்டது.

அவர் பிரதமராக இருந்தபொழுது ஒரு பியட் கார் வாங்கினார், அவர் இறந்த பின் மாதாந்திர கட்டணம் செலுத்தமுடியாமல் அந்த கார் அவர் குடும்பத்தாரால் திருப்பி அனுப்பபட்டது.

அப்படியும் ஒரு பிரதமர் நம் நாட்டில் இருந்திருக்கின்றார், அவர் குடும்பமும் அப்படி இருந்திருக்கின்றது.

இப்படி ஒரு மனிதனை பார்க்க முடியுமா?

கல்லூரி விண்ணப்பம் சென்று வரிசையில் நின்று மயங்கி விழுகின்றான் அந்த இளைஞர், மயக்கம் தெளிவித்து கேட்கின்றார்கள், உன் முகவரி என்ன? அவன் சொன்னான் நான் லால்பகதூர் சாஸ்திரியின் மகன். அந்த கல்லூரி முதல்வரே கேட்கின்றார், ஒரு வார்த்தை சொன்னால் வீட்டுக்கே பாரம் அனுப்புவோமே?

அந்த இளைஞன் சொன்னான். என் தந்தையின் பெயருக்காக அப்படி நடந்தால் அவர் என்னை கல்லூரியில் சேர அனுமதிக்கவே மாட்டார்.

இவரை பற்றி நன்கு அறிந்த நேருவின் சகோதரி அவரின் இளைய மகனை சொந்த செலவில் லண்டனில் படிக்க வைத்தார். படித்து வந்த மகன் பெரிய கம்பெனியில் சேர்ந்தான். சந்தோஷமாக தந்தையிடன் விஷயத்தை சொன்னபொழுது கலங்கினார் சாஸ்திரி

"நீ படித்து வேலையில் சேர்ந்திருக்கின்றாய் நல்ல விஷயம், ஆனால் உலகம் நானே உனக்கு உதவியதாக சொல்லும், இந்த வேலையினை விட்டுவிடு"

இப்படிபட்ட சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபொழுதுதான் தமிழகத்தில் அரியலூர் ரயில் விபத்து நிகழ்ந்தது. அண்ணா கும்பல் ஆர்பரித்தது, கலைஞரோ "அரியலூர் அழகேசா நீ அண்டு நாங்கள் மாண்டது போதும்" என கடுமையாக முரசொலியில் சாடினார்.

அந்த விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகினார் சாஸ்திரி, நேரு எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆனால் மற்ற பொறுப்புகளை தொடர்ந்தார்.

(காமராஜரை மட்டுமல்ல, லால் பகதூர் சாஸ்திரியினையே திமுக படுத்திய பாடு கொஞ்சமல்ல..)

இந்நிலையில் காஷ்மீரில் கலவரம் அதிகரித்தது, சாஸ்திரியினை அழைத்த நேரு நிலமையினை அறிந்துவர சொன்னார், ஆனால் தயங்கி நின்றார் சாஸ்திரி

காரணம், அவரிடம் குளிருக்கு அணியும் ஆடை இல்லை, அதை வாங்க பணமும் இல்லை. அட இப்படியுமா ஒரு அரசியல்வாதி இருந்திருப்பான்?

இதனை அறிந்த நேரு ஆச்சரியபடவில்லை, சாஸ்திரியின் குணம் அவருக்கு தெரியும். தன் குளிர் ஆடையினை கொடுத்தார்

குள்ளமான சாஸ்திரிக்கு அது நீளமாக இருந்தது, மனைவி அதனை வெட்டி தைத்து கொடுக்க காஷ்மீருக்கு கிளம்பினார் சாஸ்திரி

காமராஜர் பதவி விலகி கட்சிக்கு வழிகாட்டியதையொட்டி கொஞ்சமும் யோசிக்காமல் அவ்வழி நடந்தார் சாஸ்திரி, அவர் பதவி விலகும் பொழுது சொன்னது இப்படித்தான்

"இருமுறை பதவி விலகியிருக்கின்றேன், அப்பொழுதெல்லாம் வறுமையினை சமாளிப்பது எப்படி என கற்றுகொண்டேன். இம்முறை அது கஷ்டமில்லை பாலும் காய்கறியும் கிடைத்துவிடுவதால் வாழ்வதில் சிரமமில்லை"

இப்படிபட்ட மனிதர்கள் இனி கிடைப்பார்களா?

அந்த மனிதன் கட்சிக்கு மகத்தான தொண்டாறறிய பொழுதுதுதான் நேருவின் மரணம் நிகழ்ந்தது, கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு எழுந்தது.

காமராஜரை அமர சொன்னார்கள். நானும் சாஸ்திரியும் வேறல்ல. நான் இருந்தால் என்ன செய்வேனோ அதனையே சாஸ்திரியும் செய்வார் என சொல்லி வழிவிட்டார் காமராஜர்.

"ஜெய் கிசான்" அதாவது உழவன் வாழ்க என்ற திட்டத்தை முன்னெடுத்து சென்றார் சாஸ்திரி, விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமது.

அந்த 1965 மகா குழப்பமான வருடம்.

1962ல் சீன போரினை இந்தியா எதிர்பார்க்கவில்லை. இன்று ரோகிங்கியா அகதி போல வந்த திபெத்தியரையும் தலாய்லாமாவினையும் வரவேற்றதில் சீனா அடித்தது, கொஞ்சமும் யுத்தம் எதிர்பார்க்க சூழலில் பட்ட அடி அது. ஆனாலும் நேரு எனும் மாமனிதனுக்கு உலகில் இருந்த செல்வாக்கு காரணமாக சீனபோர் முடிவுக்கு வந்தது, ஆனாலும் இந்தியா பட்ட அடி அதிகம். அடியினை விட வலி அதிகம், எதிர்பாரா அடி.

நேரு வேறு இறந்துவிட்டார், இப்பொழுதுதான் சீனாவிடம் இந்தியா அடிவாங்கியிருக்கின்றது, இப்பொழுது இருக்கும் சாஸ்த்திரி சும்மா. இப்பொழுது அடித்தால் இந்தியா அலறும் என யுத்தம் தொடங்கியது பாகிஸ்தான். அதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பும் இருந்தது.

இந்தியாவில் சாஸ்திரி மகா உறுதியாக இருந்தார், "ஜெய் கிசான் ஜெய் ஜவான்" என்ற கோஷத்தில் அவர் இந்தியாவின் மகத்தான ஆளுமையாக மின்னினார்.

உலகம் அப்படி ஒரு தலைவன் உருவாகுவான் என நினைக்கவில்லை. கொஞ்சமும் அசரமால் துணிந்து நின்றார் சாஸ்திரி.

ஆம் பெருமகன் நேரு இல்லை இனி இந்தியாவுக்கு தலைவன் இல்லை என பாகிஸ்தானும் சீனாவும் திட்டமிட்டு தொடுத்த போர் அது

அமெரிக்காவும்  வந்தது, தன் பேட்டன் டாங்க் எனும் நவீன டாங்கிகளை பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்தது, அதுதான் பாகிஸ்தானின் துருப்பு சீட்டு. உடைக்க முடியாத டாங்கி என அதற்கு பெயர். தரைபடை வெற்றியினை அதுதான் தீர்மானிக்கும்

அந்த தைரியத்தில் இறங்கியது பாகிஸ்தான், பேட்டன் டாங்க் இந்தியாவிற்கு கடும் சோதனை கொடுத்தது, ஆரம்பத்தில் திணறிய இந்திய படை எப்படியோ ஒரு டேங்கினை பாகிஸ்தான் வீரரோடு சிறைபிடித்தது

மெதுவாக கேட்டார்கள், "அற்புதமான டாங்கி இதன் மூலம் நீங்கள் வெல்வீர்கள் நாங்கள் அவ்வளவுதான், சரி இந்த பாதுகாப்புமிக்க பேட்டன் டாங்கிற்கு எந்த வழியாக டீசல் ஊற்றுவீர்கள்?"

நடிகர் செந்தில் பாணியில் பாகிஸ்தான் வீரன் சொன்னான் "இதோ இப்படித்தாணே"

அவ்வளவுதான் பேட்டன் டாங்கியினை அழிக்கும் முறையினை கண்டார்கள், இந்திய தாக்குதல் அதன் டீசல் டாங்கினை குறிவைத்தன, பேட்டர்ன் டாங்கிகள் எரிய தொடங்கின, தன் பெரும் ஆயுதம் அழிய தொடங்கியதில் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது.

பாகிஸ்தான் தோல்வி முகம் காட்ட தந்திரமாக பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சுவார்த்தை அன்றைய சோவியத் யூனியனும் இன்றைய உஸ்பெக் நகரமான தாஷ்கண்டில் நடந்தது

அன்றிரவுதான் சாஸ்திரி மர்ம மரணம் அடைந்தார்

தாஷ்கண்ட் ஒப்பந்தம் நிறைவேறியதாகவும், அதன் பின் சாஸ்திரி மாரடைப்பில் இறந்ததாகவும் செய்திகள் வந்தன.

உண்மையில் நடந்தது என்னவென்றால் சாஸ்திரி போரை நடத்தவே விரும்பினார், முழு காஷ்மீரையும் மீட்டெடுத்து அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கவே விரும்பினார். இந்திய படைகளும் வெற்றிமுகத்தில் இருந்தன‌

ஆனால் வல்லரசுகளுக்கு அது பிடிக்கவில்லை. காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும் பட்சத்தில் அது சர்வதேச அரசியலாகாது. அது இழுத்துகொண்டே இருந்தால்தான் வல்லரசுகள் அரசியல் செய்யமுடியும் என திட்டமிட்டன‌

ஆம் அந்த சிக்கலை உலக சிக்கலாக்கி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாரலில் தங்கள் ராணுவத்தை நிறுத்த அமெரிக்காவுக்கும் ஆசை, சோவியத்துக்கும் உள்ளூர ஆசை

இருவருமே காஷ்மீரில் கால்பதிக்கபார்த்தார்கள், சாஸ்திரி மொத்த காஷ்மீரையும் மீட்கும் திட்டத்தில் இருந்தார், விடுவார்களாஅ?

அந்த நயவஞ்சகத்தில்தான் திட்டமிட்டு சாய்க்கபட்டார் சாஸ்திரி,

அவர் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்னர் தான் இறந்தார் என சோவியத் யூனியன் சொன்னதால் போர் நின்றது. ஆனால் சாஸ்திரி கையெழுத்து இடும் ரகம் அல்ல. அவரின் விருப்பம் காஷ்மீரை முற்றாக விடுவிப்பது.

அந்த போர் மட்டும் சாஸ்திரி திட்டபடி தொடர்ந்திருக்குமானால் காஷ்மீர் சிக்கல் என்றோ முடிந்திருக்கும்.

இன்று 370 பிரிவினை பாஜக ரத்து செய்யும் அவசியம் வந்திருக்காது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்திய பகுதியாக இருந்திருக்கும்

அந்த மர்மமே தீராத தேசத்தில்தான், ஜெயாவிற்கு நியாயம் கேட்க போகின்றார்களாம்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கலாம், ஆனால் மர்மமாக சாகும் சூழலை அவரேதான் ஏற்படுத்திகொண்டார் என்பதில் மர்மமே இல்லை.

ஆனால் நாட்டுக்காக வாழ்ந்த மாபெரு மனிதனான சாஸ்திரியின் மரணத்தில் இருக்கும் சந்தேகம் தீர்க்கபட்டிருக்க வேண்டும், சர்வதேச அரசியல் விளையாட்டில் அது வெளிவராமலே போனது

அந்நிய சக்திகளுக்கு இந்திரா, ராஜிவ் மட்டுமல்ல முதன் முதலில் தன் உயிரை கொடுத்தது நிச்சயம் லால் பகதூர் சாஸ்திரிதான்

அந்த மனிதனின் வாழ்வினை நோக்கும் பொழுது , அதுவும் இந்நாளில் நோக்கும்பொழுது தெரிவது ஒன்றுதான்

தெற்கே ஒரு காமராஜர் போல, வடக்கே சாஸ்திரி அப்பழுக்கற்ற தியாக வாழ்வினை வாழ்ந்திருக்கின்றார்.

மறக்க முடியாத மாமனிதன் சாஸ்திரி, இந்தியா கண்ட இரும்பு மனிதர்களில் நிச்சயம் அவரும் ஒருவர்.

இன்று காந்திக்கு மட்டுமல்ல, சாஸ்திரிக்கும் பிறந்தநாள்

காந்தி, காமராஜர், சாஸ்திரி என்ற அந்த மகான்களை, தேசத்தின் பெரும் அடையாளங்களை வணங்கும் நாளிது. கட்சி கொள்கை பேதமின்றி இந்தியனாக அஞ்சலி செலுத்தவெண்டும்

இவர்களெல்லாம் இந்த தேசத்திற்காக வாழ்ந்தவர்கள், அதற்காகவே இறந்தவர்கள். ஒவ்வொரு நொடியும் இத்தேசத்திற்காகவே அவர்கள் இதயம் துடித்தது

அந்த இதயத்தினை ஒவ்வொரு இந்தியனும் இரவல் வாங்குவோம், தேசத்தை தாங்குவோம்

இந்த மாபெரும் தேசம் அந்த தியாகிகளை நன்றியோடு வணங்கி, அவர்கள் கண்ட வளமான அமைதியான இந்தியாவினை உருவாக்கி அவர்களுக்கு காணிக்கையாக்க சபதமெற்கும் நாளிது

காந்தி, இந்திரா, ராஜிவிவ் எல்லாம் நாட்டிற்காய் பகிரங்கமய் உயிரை கொடுத்தார்கள், ஆனால் சாஸ்திரி மறைமுகமாக ரஷ்யாவில் உயிரை விட்டார்

அது கொலை, சந்தேகமில்லை. அவர் இருந்தால் காஷ்மீர் சிக்கல் இங்கு வராது, அதன் பின் அரசியல் செய்யமுடியாது என திட்டமிட்டு செய்யபட்ட கொலை

நாட்டிற்காய் உயிர்நீத்த அந்த தியாக தலைவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி. இத்தேசத்தின் ஒவ்வொரு வெற்றியிலும் சாஸ்திரி வாழ்துகொண்டேதான் இருப்பார்

இந்நாட்டின் மிக சிறந்த பிரதமர்களில் அவருக்கு எந்நாளும் முதலிடம் உண்டு, அதில் சந்தேகமில்லை

பாரதம் அப்படித்தான் , அது ஆசீர்வதிக்கபட்ட நாடு. இனி தலைவன் இல்லை எனும் பொழுதெல்லாம் ஒவ்வொரு இரும்பு தலைவன் உருவாகி வருவான்

அப்படி நேருவுக்கு பின் சாஸ்திரி வந்தார், இந்திராவுக்கு பின் மோடி வந்திருக்கின்றார்

இந்நாளில் சாஸ்திரி எனும் மாமனிதனையும் இத்தேசம் கொண்டாடி தீர்க்கவேண்டும், காரணாம் இன்றுதான் நாம் 370ம் பிரிவினையே ரத்து செய்திருக்கின்றோம், அந்த மனிதனோ காஷ்மீர் இந்தியாவோடு முழுமையாக இணைய உயிரையே விட்ட தியாகி

அந்த தியாகிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்...

வந்தே மாதரம், பாரதம் ஒருபோதும் வீழாது.

(அந்த போரில் இந்தியா அட்டகாசமாக நொறுக்கிதள்ளிய பேட்டன் டாங்க் என்ன ஆனது? மிக நவீனமான டாங்க் என அமெரிக்கா மார்தட்டிய அந்த டாங்கினை இந்திய படைகள் டீசல் டேங்கில் ஒரு தீக்குச்சி மூலம் தகர்த்தெரிந்ததில் அமெரிக்காவிற்கு மிகுந்த அவமானமாயிற்று

அந்த டேங்கிகள் செய்வதையே நிறுத்திற்று அமெரிக்கா.)

No comments:

Post a Comment