Tuesday, October 29, 2019

Changing name as per Numerology - Periyavaa

பேசும் தெய்வம் J K SIVAN
மஹா பெரியவா

நான் ''நாராயணஸ்வாமி''

காஞ்சிபுரம் சங்கர மடம் ஒரு வெல்ல மண்டி. மஹா பெரியவா இருக்கிறார் என்றால் பக்த ஈக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துக் கொண்டே இருக்காதா. போதும் என்கிற திருப்திக்கு அங்கே இடமேது? நான் கீழே கொடுத்துள்ள சிறு சம்பவம் யாரோ எங்கோ சொன்னதின் சாராம்சம். என் வழியில் கொடுத்திருக்கிறேன்.

அன்று அவர் முன்னே கண்களில் காவேரியோடு நமஸ்கரித்து நிற்பவள் ஒரு வயசான பாட்டி. மஹா பெரியவா பார்வை அவள் மீது பட்ட அடுத்த கணமே அவளுடைய உள் வலி அந்த மஹா பெரிய டாக்டருக்கு தெரிந்துவிட்டது. அழுகையை நிறுத்தக்கூடாது. அது தானாகவே நின்றாள் பாரம் குறையும். பொறுமையின் பூஷணம் காத்திருந்தது.

"பெரியவா நான் என்னத்தை சொல்வேன்,எப்படி சொல்றது. என்ன பாவம் பண்ணினேனோ இந்த வயசிலே எனக்கு இப்படி ஒரு பேரிடி. புள்ளையை வாரி கொடுத்துட் டேனே . புத்ர சோகம் தாங்க முடியலே. எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை எதுக்கு அவ்வளவு அவசரமா எனக்கு முன்னாலேயே போய் சேர்ந்துட்டான்? எனக்கு இருந்த ஒரே ஒரு ஊன்றுகோலும் போய்ட்டுதே. என்னென்ன ஆசைகள் மனசிலே இருந்ததோ, பொசுக்குனு போயிட்டான் பெரியவா.....'' மஹா பெரியவா கருணை நிறைந்த கற்சிலையாக அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

''ம்ம் ம்ம்ம் ....'' பெரியவா மேலே சொல்லு என்ன பண்ணனும்? என்கிற மாதிரி ம்ம் காரம்.

"உங்க காலடியே கதின்னு விழுந்துட்டேன். வேறே ஒண்ணும் தோணலை. ஏதாவது ஹோமம் பண்ணி அவனோட ஜீவன் ஆத்மா திருப்தியா போய் சேர, சாந்தியடைய
பெரியவா தான் ஏதாவது வழி காட்டணும் அவனோட ஆத்ம சாந்திக்காக நா…ஏதாவது ஹோமம் பண்ணி அவனை த்ருப்திப் படுத்தணுமான்னு பெரியவா வழி காட்டுங்கோ..''

"நீ எந்தக் கோவிலுக்கும் போவேணாம், எந்த ஹோமமும் பண்ணவேணாம். நீ கிராமத்துலேர்ந்துதானே வரே? அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற ஜனங்களை பாத்திருப்பியோன்னோ? பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை! என்ன பண்ணறேன்னா….பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி! இது ஒண்ணுதான்…ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான
வழி!.."

அவருக்கே உரித்தான தாய்ப்பாசத்தோடு ரொம்ப சிம்பிளாக ஒரு வழி சொல்லிவிட்டார் மஹா பெரியவா. நமக்கு இப்படி சொல்ல தெரியுமா?.

வெயிலின் அருமை நிழலில் தெரியுமோ என்னவோ, ஒரு டம்பளர் மோரில் நன்றாகவே தெரியும். வெயில் காலங்களில் யார் வந்தாலும் எங்கள் வீட்டில் நீர்க்க ஒரு டம்பளர் மோர் நிச்சயம். குடித்தவர் முகத்தில் தோன்றும் 1000 வாட் பல்ப் வெளிச்சம் கொடுத்த என்னிடமும் காணப்படலாம். மோர் என்ற பெயருக்கு தான் எவ்வளவு எளிமை. ஆனால் இனிமை. அது சரி பெயர் என்று சொல்லும்போது இன்னொரு அற்புத மஹாபெரியவா சமாச்சாரம் சொன்னால் என்ன என்று தோன்றுகிறது. சொல்கிறேன்.

நாராயணசாமிக்கு காரணம் புரிந்துவிட்டது. அவனால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் மார்க் என்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. எப்படி தொண்ணுறு வாங்குவது. அப்போது தானே எங்காவது வேலை நிச்சயமாக கிடைக்கும்.
தொண்ணுறுக்கு என்ன வழி? படி படி என்று சொல்லாதீர்கள். அவன் படித்து புஸ்தகத்தை அக்குவேறு ஆணிவேராக கிழித்தே விட்டான். என்ன செயதும் 80 தாண்டவே இல்லையே.
வெங்கடாச்சாரி ஜோசியர் வழுக்கை மண்டையை தடவிக்கொண்டே நடு மண்டையில் இருந்த நாமத்தை தொட்டார். ஐடியா கிடைத்துவிட்டது. எதிரே நாராயணசாமி பரிக்ஷை ரிசல்ட் எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தான்.

''நீ என்ன பண்றே. உன் பேரை மாத்திக்கிறே. அது ஒண்ணு தான் உனக்கு இத்தனை நாள் ப்ராபளமாக இருந்திருக்கு. நியுமராலஜி பிரகாரம் நீ இனிமே '' நாரெய்ன்''. சொளை சொளையாக மார்க் இனிமே கிடைக்கும். சரியா? எண்கணித கணக்கு பிரகாரம் உனக்கு ''நாரெய்ன்'' என்கிற பேர் தான் கதி மோக்ஷம்'' என்று சொல்லி பதினைந்து ரூபாய் வருமானம் பார்த்துவிட்டார் வெங்கடாச்சாரி.

நாராயணஸ்வாமி பற்றி சொல்ல மறந்து விட்டேன். அவன் மஹா பெரியவா பக்தன். ஆகவே நேராக காஞ்சி ஓடினான். வரிசையில் 27வதாக நின்றவன் ஊர்ந்து ஊர்ந்து அவர் எதிரே கைகட்டி நிற்கிறான். எதிரே கூடையில் பூ பழம் வெற்றிலை பாக்கு ஒரு துண்டு சீட்டில் ''நாரெய்ன் '' என்று எழுதப்பட்ட பெயர்.

தெய்வத்தின் பார்வை அவன் மேல் பட்டதும் கடல் மடை திறந்தது. ..... ''பெரியவா உத்தரவு கொடுத்தால் இனிமே இதாலே எனக்கு நல்ல வழி பொறுக்கும் என்றால் என் பேரை ''நாரெய்ன் ''என்று மாற்றிக் கொள்கிறேன்''
நிறையபேர் எப்போதும் பெரியவா சந்நிதியில் இருப்பார்கள். முத்து முத்தாக அவர் வாயிலிருந்து புறப்படும் சொற்களை அப்படியே விழுங்கும் ஆர்வம் எவருக்கும் அப்போது உண்டு. ஆகவே பெரியவா அந்த பையனுக்கு என்ன சொல்லப்போறா என்று கேட்க காத்திருந்தார்கள்.

" நாற்பது சம்ஸ்காரங்களில் ஒன்று, நாமகரணம். குடும்பத்தில் எல்லோர்
முன்னிலை யிலும் வேத மந்திரங்களைச் சொல்லி பண்ணுகிற சடங்கு. நாமகரணம் செய்வதற்குத் ( பெயர் வைப்பதற்கு) மட்டும் தான் வேத மந்திரங்கள் இருக்கே தவிர நாமவிகரணத்திற்கு (பெயரை சிதைத்து மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.

சுவாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லி யிருக்கு. 'நம்பி பிம்பி என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார்.

நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடா விட்டாலும், நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள். சுலபமா புண்ணியம் கிடைத்துவிடும்.

நியூமராலஜி என்பாது என்னவோ சில நம்பர்களை இங்கிலிஷ் எழுத்துக்களுக்கு கொடுத்து ஒரு பெயர் உண்டாக்கி சம்பந்தப் பட்ட அந்த நம்பர்களை கூட்டி கழித்து பெருக்கி, வகுத்து ஒரு பெயர் தயாரித்து அதால் நல்லது கெட்டது எல்லாம் சொல்வது. நான் சிலரிடமிருந்து தப்பித்திருக்கிறேன்.

நம்பிக்கை இருப்பவர்கள் நிறையபேர் இந்த நியூமராலஜி பிரகாரம் பேரையே அடையாளம் தெரியாமல் மாற்றிக்கொண்டு ரொம்ப சுகப்படுவதாக சொல்லி கேட்டிருக்கிறேன்.

சரி பெரியவா விஷயத்துக்கு போவோம். நேரம் கடத்த இது நேரமில்லையே.

''அருகில் இருந்தவாளிடம் சன்னமான குரலில் பெரியவா சொன்னார்கள்: இந்த பையனுக்கு நிறைய மார்க்கு வாங்கணும்னு ஒரு கவலை; அதுக்காக பேரை கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையே? படிப்பு கல்வி அறிவு எல்லாம் ஸரஸ்வதியுடைய கடாக்ஷம். அவள் அருள் இருந்தால் தான் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும் னா சரஸ்வதி ஸ்தோத்ரம் இருக்கு; ஸௌந்தர்ய லஹரியிலே மூணு ஸ்லோகம், சரஸ்வத பிரயோகம்; மேதாஸூக்தம் என்று வேதமந்திரமே இருக்கு; குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்ரம்—–இது எல்லாம் பாராயணம் செய்யலாம்.

ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும் 'ட்ரெஷர் ஹௌஸ்' TREASUREHOUSE ஹயக்ரீவ ஸ்தோத்ரம், மந்திரம் இருக்கு. மேதா தக்ஷிணா மூர்த்தி மந்திரம் இருக்கு. அதை உபயோகப் படுத்த தான் முன்னோர்கள் இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணி வைச்சிருக்கா ''
அதை உட்டுட்டு லக்ஷியம்பண்ணாமல் ஏதோ இங்க்லீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை."

இப்படி சொல்லிவிட்டு மெதுவாக எதிரே நின்ற பையனின் முகத்தை பார்த்தார் மஹா பெரியவா..அவன் கண்கள் கெஞ்சின . ஜாடைகாட்டினார். அருகே இருந்த அணுக்க தொண்டர் பிரசாதம் கொடுக்கும்போது ''அவன் பேர் இப்போ என்னான்னு சொல்ல சொல்லு ?'' என்கிறார் மஹா பெரியவா.
நாரெய்ன் என்ற பெயர் தாங்கிக் கொண்டு வந்த பையன் கம்பீரமாக பதில் சொன்னான் ''என் பேர்"நாராயணஸ்வாமி"

  

No comments:

Post a Comment