Friday, September 13, 2019

Chidambara rahasyam & siginificance of Natarajar


சிதம்பர ரஹஸ்யம் என்று ஒன்று தனியாக இல்லை.அங்கு ஒரு சம்மேளன சக்ரம் இருப்பதாக சொல்கிறார்கள். அதை யாரும் பார்த்ததில்லை. நானும் அதைப்பற்றி கேள்விதான் பட்டிருக்கிறேனேயல்லாது அதை நானும்  பார்த்ததில்லை. சம்மேளனம் என்பது இரண்டும் ஒன்று என்பதான அர்த்தத்தையே கொடுக்கிறது. எந்தஇரண்டு?அம்பிகையும் சிவமுமா?அதுவும் தான். அதையன்றி இந்தஜீவனும் சிவமுமே . அதையும் மீறி, இந்தப்ரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமும் (கல் மண் உட்பட) பஞ்ச பூதங்கள் உட்பட, சிவமும் ஒன்றேயாகும் என்பதே. ஆனாலும் அதை ஆகாசமாகவே தான்  எல்லோரும் பார்க்கிறார்கள். ஆகாசமென்றால் பஞ்சபூதத்தில் ஒன்றான ஆகாசம் மட்டுமல்ல. பின் அது குறிக்கும் பரம்பொருளே தான். அதே மாதிரி, சம்மேளன சக்ரமும் இதே பரம்பொருளின் ப்ரதீகமே (அடையாளமே யல்லாது) வேறொன்றுமில்லை. அதே மாதிரி நாம் எல்லோரும் காணமுடியுமாறு தெற்கு நோக்கியுள்ள நடராஜ மூர்த்தியும் பரம்பொருளைத்தான் காண்பிக்கிறார். அவரும் தன் கையிலிருக்கும் உடுக்கையின் மூலம்படைப்பையும், தன்னுடைய தோற்றத்தின் மூலம் ஸ்திதியையும் , தான் உடுக்கும் புலித்தோலின் மூலம்  சம்ஹாரத்தையும் ,வலது காலால் மிதித்திருக்கும் முயலகன் மூலம் மறைத்தலையும், தன் வலது கையினால் அருளுதலையும் ,இவ்வாறு பரம்பொருளின் ஐந்து செயல்களையும் காண்பிக்கிறார். வீசியெடுத்த அவரது இடது திருக்கை அதற்கு நேரே கீழேயுள்ள அவரது தூக்கியெடுத்த இடது பாதத்தை காண்பிக்கிறது. அந்த இடது திருவடி வீட்டை  -அதாவது முக்தியை காட்டுகிறது. ஆக, அந்த இடது திருக்கை குருமூர்த்தமாக அமைகிறது என்று பெரியோர் சொல்லி கேட்டிருக்கிறேன். இடது மேல் கையில் காணப்படும் 'மான் ', நம் மனத்தை குறிக்கிறது. அந்த மான் எம்பெருமானையே எப்பொழுதும் நோக்கியிருப்பதால் ,நம்முடைய மனதும் எப்பொழுதும் எம்பெருமானையே நோக்கியிருக்கவேண்டும் என்றாகிறது. சில நடராஜ படிவங்களில், இடது மேல் கையில் அக்கினி இருக்கும். அதில் கொடுக்கப்பட்ட எல்லாமும் அக்னியாகவே ஆகிவிடுவதை நாம் ப்பார்க்கிறோம். அதே மாதிரி நம் மனதை எம்பெருமானிடம்சேர்ப்பித்தால்  அது இறைவனாகவே ஆகிவிடுகிறது என்று நாம் உணர முடிகிறது. மனம் என்றால் உடலுடன் சேர்த்துத்தான். இவ்வாறு சேருவதற்கே நமக்கு அறிவு படைக்கப்பட்டிருக்கிறது. வேதம்,அனுஷ்டானம், பூஜை, பக்தி, எல்லாமே இறைவனுடன் சேருவதற்கான வழிகளே.எல்லா மகான்களும் இதையே பலவாறு நமக்கு சொல்லி  நமக்கு அருளுகிறார்கள் .அவரேயான தக்ஷிணாமூர்த்தியும் இதையே நமக்கு அருளுகிறார். இதுதான் முக்தியெனப்படுவது.
சுபமஸ்து 
அன்புடனும், ஆசீர்வாதத்துடனும்,
சிதம்பரேச மாமா.

No comments:

Post a Comment