S.Chidambare
Nagalakshmi- Sri Kamakoti,2
ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ கிருஷ்ண ஆவிர்பாவம்
ஸ்ரீ கிருஷ்ண ஆவிர்பாவம் ஒரு உபாக்யானமாகவே கருதப்படவேண்டும். உபாக்யானம் என்பது ஒரு நல்ல விஷயத்தை விரிவாக எடுத்துச்சொல்வதே. ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை விவரிப்பதான இந்த கட்டம் மிகப்பாவனமானதே. அதைப்படிப்பதால் பல நல்ல பலன்கள் ஏற்படும். பலஸ்ருதி என்று தனியாக ஒன்று இல்லாவிட்டாலும் அதுவே அதன் பலச்ருதி தான் .
துவாபர யுகத்தில் பரம்பொருள் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்தது. அந்த அவதாரம் வசுதேவருடைய பத்னியான தேவகிக்கு ஏற்பட்டது . கம்சனால் சிறையில் அடைக்கப்பட்ட வசுதேவ தம்பதி ஏற்கனவே தம் ஆறு குழந்தைகளை இழந்து ,ஏழாவது குழந்தையும் கர்ப்ப ரூபத்திலேயே கோகுலத்தில் இருக்கும், நந்தகோப ருடைய இரண்டாவது மனைவியான ரோஹிணியின் கர்ப்பத்தில் சேர்ந்துவிட, தேவகிக்கு அடுத்த எட்டாவதுகர்ப்பம் தோன்றும்பொழுதே அவள் அஞ்ச ஆரம்பித்துவிட்டாள் . முடிவில் அது ஒரு ஆவணி மாசத்தில், க்ருஷ்ணபக்ஷத்து, அஷ்டமியின் ரோகிணி நக்ஷத்திரத்தில் நடு இரவில் பிறந்தும் விட்டது.
அப்பொழுது வானிலும் நிலத்திலும் இருந்த நிலையை ஸ்ரீ வியாச பகவான் இவ்வாறு வர்ணிக்கிறார்:
காலம் பரம சோபிதமாக இருந்தது. நக்ஷத்ரங்களும் திசைகளும் ரம்மியமாக இருந்தன. நதிகளும் அதில் உண்டாகும் எல்லாமும் ,ஸாதுக்களின் மனது போல் சாந்தமாகவும், இருந்தன. மேகங்கள் மெல்லவே கர்ஜித்துக்கொண்டிருந்தன .கின்னரர்களும், கந்தர்வர்களும், ஸித்த சாரணர்கள் எல்லோரும் ஆனந்த ம்கொண்டு நர்த்தனம் ஆடி நின்றார்கள்.ஆகாயத்தில் துந்துபி முழங்கிற்று . இவ்வாறுஇருண்ட நிசியில் ஜனார்த்தனன் பிறக்கப்போகும் சமயத்தில்,எல்லா இடங்களிலும் பிரசன்னமாகி இருக்கும் பகவான் விஷ்ணு கிழக்கு திக்கில் சந்திரன் உதயமாகி அம்ருதம் பொழிவதுபோலவே,அவதரித்தார். ( குறிப்பு: மேலே சொன்ன இவ்வேழு வரிகளில் வர்ணிக்கப்பட்ட இயற்கையின் வர்ணனையை சிரத்தையுடன் கேட்டால், எக்காரணத்தாலும் கலங்கின மனமும் தெளிவடைந்து, எந்த விதமான களங்கமுமற்று,ஸ்படிகம் போல் சுத்தமாகிவிடும் --என் அனுபவத்தின் பேரில் நான் இதை இங்கு எழுதுகிறேன். சாதாரணமாக படிக்கும்பொழு இது அச்சமயத்தில் இருந்த இயற்கையின் வர்ணனமாகவே தான் தோன்றும். அப்படியல்ல. ஸதா ஆர்ப்பரித்து கொந்தளிக்கும் நிலையில் உள்ள நம் எல்லோரின் மனமும், இந்த சப்தக்கோர்வையால், மனம் மெல்ல மெல்ல அடங்கும் நிலைக்கு வரும் இந்த மாற்றம் ஸ்ரீ வ்யாஸ பகவான் போன்ற மஹான்களுடைய வாக்குக்குத்தான் ஏற்படும்.)
இன்னொன்று. இங்கு ஸ்ரீ வியாச பகவான் , "ஜாயமானே ஜனார்தனே " என்று ஸ்ரீ கிருஷ்ணனை இங்கு ஜனார்த்தனன் என்ற பெயரால் குறிப்பிடுகிறார். ஜனார்த்தனன் என்ற சொல்லுக்கு அஸுரக்கூட்டத்தை அழிப்பவன் என்று பொருள். ஸ்ரீகிருஷ்ணன் எவ்வளவு அஸுரர்களை (சகடாசுரன் முதல் கம்ஸன் , சிசுபாலன் வரை தானாகவேயாகவும், பாரதப்போரில், கௌரவ பாண்டவர்களுடைய 18 அக்ஷளஹிணி சேனைகளும் நிர்மூலமாகக் காரணமாக இருந்தும் இந்த அழிவை ஏற்படுத்தினார். பூமித்தாய்க்கு கொடுத்த வரத்தை நிறைவேற்ற வேண்டியே தான் அவர் இவ்வாறு பூமியின் பாரத்தைக்குறைத்தார். இதுவே அவருடைய இந்த அவதார நோக்கம் என்பதைக்குறிக்கவே தான், பகவான் வியாசரும், ' ஜாயமானே ஜனார்த்தனே ' என்று எழுதினர். அ ந்தப்பிறப்பை ஸ்ரீ வ்யாஸாச்சார்யாள் இவ்வாறு வர்ணிக்கிறார்கள்.
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார் யுதாயுதம்,
ஸ்ரீ வத்ஸ லக்ஷ்மம் கலசோபி கெளஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்
மஹார்ஹ வைதூர்ய கிரீட குண்டலத்விஷா
பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தளம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி:
விரோசமானம் வசுதேவ ஐக்க்ஷத I இந்த ஒரு ஸ்லோகத்தை,அதன் பொருளுணர்ந்து முழு மனதுடன் மற்று எல்லாவற்ரையும் மறந்து படித்தாலே சகல சௌபாக்கியத்துடன், ஞானமும் கிட்டும்.
ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தத்தில் மூன்றாவது அத்தியாயத்தில் 9-10 ஆன இரண்டு ஸ்லோகங்களால், ஸ்ரீ கிருஷ்ணனாக தேவகியின் திரு வயிற்றில் பரம்பொருளேயான, ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆவிர்பாவம் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது. ஸ்ரீமத் பாகவத கிரந்தத்தை எழுதியவர். ஸ்ரீ வியாசமுனிவர். சொன்னது பதினாறே வயதினரான அவருடைய புத்திரர் சுகபிரும்மம். கேட்டது அபிமன்யுவின் புத்திரனான பரீக்ஷித் மஹாராஜா. சொன்ன இடம் ஹரித்துவார் க்ஷேத்திரத்தில் கங்கை நதியின் கரையில் .ஸ்ரீ க்ருஷ்ண பரப்ரும்மம், தன் தாயின் வயிற்றிலிருந்து சிசுவாக இல்லாமல் 4-வயது பாலகனாகவே பிறக்கிறார்.தாமரை இதழையொத்த கண்மலர்கள் , நான்கு புஜங்கள், அவற்றில் சங்கம்,கதை சக்கிரம் இவைகளுடன்,மார்பில் ஸ்ரீ வத்ஸத்துடனும், கழுத்தில் மாலையாக அணிந்த கெளஸ்துப மணியுடனும், பீதாம்பரமும் (மஞ்சள் நிறத்துடன் கூடிய ) பட்டுடையை அணிந்தும், அப்பொழுது தான் உண்டான முழுமையான கரியமேகத்தின் அழகிய தோற்றத்துடனும், ஸௌ பாக்கியத்துடன் கூடினதுமான அழகிய தேஹம் , பெரிய வைடூர்யத்தாலான கிரீடத்தை தரித்தவராகவும், காதிலணிந்த குண்டலங்கலின் ப்ரபையால், மறைக்கப்பட்ட காதுகள் வரை வளர்ந்திருந்த ரோம ராசியுடன் விளங்குபவருமான வரும், திரு வயிற்றில் அணிந்த ஒட்டியாணம் , புஜங்களில் அணிந்த தோள்வளைகள் , மற்றும் கைகளில் அணிந்த கங்கணங்கள் முதலியவற்றால் பிரகாசிக்கிறவராகவும் அத்புதமாக இருந்த அவரை (அந்த பாலகனை) வசுதேவர் கண்டார் . மேலும் வசுதேவர் அந்த பாலகனை தனக்குப்பிறந்த பிள்ளையாகவே பார்க்காது அவரை பரப்ரும்மமாகவே தான் பார்த்தார். பகவான் வ்யாஸாசார்யாளளும் இந்த 'தம்' என்ற ஒரு சொல்லால் (பரம்பொருளை 'தத் ' என்றே தான் குறிப்பிடுவார்கள். தம் என்பது இதன் இரண்டாம் வேற்றுமையின் ஒருமை உருபு.) அவரைக்குறிப்பிட்டு, பிறந்த பாலகன் சாதாரண குழந்தையல்ல ஆனால் அவர் பரம்பொருளே தான் என்று குறிப்பிடவும் செய்கிறார். 'பரம்பொருளின் இந்த அவதாரம் கண்டு, அது தனக்கு மகனாய்ப்பிறந்ததது கண்டு அப்பொழுதே, அந்த காராக்ருஹத்தில் (சிறையில்) தான் அடைபட்டுக்கிடக்கும் பொழுதே, வசுதேவர், பதினாயிரம் பசுக்களை பிராமணர்களுக்கு மனதால் தானம் செய்தார்.காராகிருஹத்தில், தன் பத்னி தேவகி இருந்த அறைக்குள் சென்று குழந்தையைப்பார்த்து ஆச்சரியத்துடன் தன் இரு கைகளையும் கூப்பி , வணங்கி, அந்த பாலகனை ஸ்தோத்திரம் செய்யவும் ஆரம்பித்தார் .
" அப்பனே நீங்கள் ஆனந்தம் என்ற சொல்லால் விவரிக்கப்படும், பரம்பொருளே. இந்த மானுட ரூபத்தை இப்பொழுது எடுத்திருக்கிறீர்கள் . தாங்கள் இயற்கையிலிருந்து அப்பாற்பட்டவரும், மேலானவரும் கூட. அப்படி வேறானவராக இருந்தும் பரம்பொருளென,எக்காலத்திலும் உள்ளவராக இருந்தும், சாதாரண க்குழந்தைபோல், தன்னுடைய மாயையால் அதில் முற்றிலும் சம்பந்தப்பட்டவர்போல நடிக்கிறீர் . இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லாஜீவன்களிட த்தும் அவற்றின் புத்தியின் ஸ்வரூபத்தைக்க்கண்டவராகவும் இருக்கிறீர். பரம்பொருளுக்கே ஏற்பட்ட தர்மமான சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் இவற்றை செய்யவேண்டி இப்பொழுது இங்கு என் கிருஹத்தில் அவதரித்திருக்கிறீர்கள். இந்த அவதாரத்தில் தாங்கள் சம்ஹார நோக்கத்துடனேயே பிறந்திருப்பதால், அதன் வர்ணமான கறுப்பு வர்ணத்துடன் க்ருஷணனாக அவதரித்திருக்கிறீர்கள். அது ஞாயமே தான். இந்த லோகத்திலுள்ள ஸாதுக்களை ரட்சிக்கும் பொருட்டும், துஷ்டர்களின் ஸேனைகளை யெல்லாம் வதம் செய்யவேண்டியும், இவ்வாறு செய்கிறீர்கள், யுத்தத்திற்கான ஆயுதமும் தரித்திருக்கிறீர்கள் என்று பலவாறு துதித்தார் .
இதேமாதிரி, தாயாரான, தேவகியும், இவ்வாறு அந்த பாலகனை வர்ணிக்கலானாள். " எந்த வகையில் அந்தப்பரம்பொருள் வர்ணிக்கப்படுகிறதோ, அந்த பொருளே தான் தாங்களும். எதற்கு, குணம் என்பதே கிடையாதோ,எதற்கு எவ்விதமான மாற்றம் என்பதுவும் கிடையாதோ, எது 'ஸத் ' என்ற பதத்தால் முற்றிலுமாக வர்ணிக்கப்படுகிறதோ,அதுவும் தாங்களே தான். எந்தப்பொருள் ஒவ்வொரு யுகத்தின் இரண்டாவது பரார்த்தத்தின் முடிவிலும், எல்லா ஜீவன்களும் அழிந்தபிறகு, சேஷமாக மிஞ்சி யிருக்கிறதோ, அதுவே தான் தாங்கள். நிமேஷாதி (நிமேஷம் தொடங்கி,--நிமிஷம் என்றால் கண் இமைக்கும் நேரம்) வத்ஸரம் ( வருஷம்) முடிய காணப்படும், காலமும் தாங்களே. தங்களுடைய ரூபமான காலத்தின் அசைவையொட்டித்தான், இந்தப்பிரபஞ்சமும் அசைகிறது. உங்களுடைய அமானுஷ்யமான தோற்றம் கண்டு நான் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் பிறந்ததை கம்சன் அறிந்தால் உடனேயே இங்கு வந்து உங்களைக்கொன்று விடுவானே. ஆகையால் இந்த த்தோற்றம் தங்களுக்கு வேண்டாம் . சாதாரண குழந்தையாய் மாறி விடுங்கள் என்று அந்தபாலகனை வேண்டினாள். (குறிப்பு: கிரந்தத்தின் மூலத்தில், இவ்வியிரண்டு ஸ்துதிகளிலும் பல அரிய ஆனால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வேதாந்தக்கருத்துக்கள் சொல்லப்பட்டுக்காண்கிறன. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய மட்டில்,எளிதான வகையில், அவற்றை யெல்லாம் இங்கு கொடுக்க முயன்றிருக்கிறேன் --மூலத்திலிருந்து எல்லாவர்ணனைகளையும் என்னால் முடிந்தமட்டில் கொடுத்திருக்கிறேன்.இதற்கு மேல் விவரிக்க என் அறிவு எட்டவில்லை. பண்டிதர்கள் மன்னிக்கவேண்டும்) இந்த ஸ்ரீமத் பாகவத கிரந்தத்திற்கு,ஸ்ரீதரர் என்பவர் வியாக்கியானம் செய்திருக்கிறார். அதை நான் பார்த்ததில்லை. அதைப்படித்தால் மேலும் சில விவரங்கள் கிடைக்கும்.)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்," இதற்கு மூன்று ஜன்மங்கள் முன்பாக, ஸ்வாயம்புவ மனுவில், நீங்கள் இருவரும் ஸு தபா வாகவும் அவர்தம் மனைவி பிருச்னியாகவும் இருந்தீர்கள்.என்போன்ற புதல்வன் தான் வேண்டுமென்று பன்னிரண்டு ஆயிரம் தேவ வருஷங்கள் (ஒரு மானுட வருஷம்,தேவர்களுக்கு ஒரு நாள்) காய்ந்த இலைச்சருகு களையே உண்டு தவம் செய்தீர்கள். அன்று உங்களுக்குக்கொடுத்த வரத்தின் பயனாக இந்த ஜன்மத்தில் உங்கள் பிள்ளளையாக இப்பொழுது பிறந்திருக்கிறேன். இதற்கு முன்பு, அதிதிக்கும் காச்யபருக்கும் மகனாக, வாமனனாக ப்பிறந்துள்ளேன். அப்பொழுது உபேந்திரன் என்று அறியப்பட்டேன் . ஏற்கனவே பூமிக்குக்கொடுத்த வாக்குப்படி பூபாரத்தைக்குறைக்கவேண்டி இப்பொழுது பிறந்துள்ளேன். என்னை உடனே இங்கிருந்து எடுத்து கோகுலம் செல்லவேண்டும். அங்கு நந்தகோபனின் மனைவி ஒரு பெண்மகவை ஈன்று அது தெரியாமல் மயக்கத்தில் இருக்கிறாள். என்னை அங்கு அவளுடைய பக்கத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள பெண்மகவை இங்கு எடுத்து வரவேண்டும்."
உடனே வஸுதேவர் தன் குழந்தையை ஒரு கூடையில் எடுத்து, அங்கிருந்து புறப்பட்டார்.அவரது கைகால்களிலிருந்து சங்கிலிகள் தாமாகவே விலகின.பூட்டியிருந்த சிறைக்கதவுகளும் தானாகவே திறந்துகொண்டன. காவலுக்கிருந்த காவலாளிகளும் மாயையால் மயக்க நிலையை எய்தினர். லேசாக மழை தூர ஆரம்பித்தது.ஆதிசேஷன் தன் படத்தை விரித்து,குழந்தையின் மீது மழை ஜலம் விழாமல் குடைபோன்று கூடவே சென்றான். யமுனை அப்பொழுது ஒரே வெள்ளத்திலிருந்தாலும்,வஸுதேவருக்கு போகும்போதும் திரும்பி வரும்போதும், வழி விட்டது. வசுதேவர் விரைந்து நந்தகோபன் க்ருஹத்துக்குச்சென்று , அங்கு மயங்கிக்கிடந்த யசோதையின் பக்கத்தில்,தான் எடுத்துச்சென்ற ஆண் குழந்தையை விட்டுவிட்டு, அங்கிருந்த பெண்குழந்தையை எடுத்து வர முடிந்தது. மழையானதாலும், நடு நிசியானதாலும் நந்தனுடைய கிருஹத்திலும் எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தனர். போகும் வழியிலும், வரும் வழியிலும் ஜன நடமாட்டமே இல்லாதிருந்தது.
சிறைக்கு வஸுதேவர் திரும்பி வந்ததும், முன்போல சிறைக்கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன, கைகால் விலங்குகளும் மறுபடி தானே பூட்டிக்கொண்டன. கொண்டு வந்த பெண் குழந்தையை மறுபடி தேவகியிடத்தில் சேர்த்துதான் தாமதம், கொண்டுவந்த குழந்தை 'வீல் 'என்று கத்திற்று . காவலாளிகள் மயக்கத்திலிருந்து, விழித்தெழுந்து, குழந்தை பிறந்துவிட்டதை அறிந்து ,மன்னனிடம் சென்று விவரம் சொன்னார்கள் .ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தத்தில் மூன்றாவது அத்தியாயத்தில் இது கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த க்ருஷ்ண அவதார கட்டம் முடிவடைகிறது. இதை என்போன்ற சாதாரண மக்கள் எல்லோரும் படித்துத்தெரிந்துகொள்ளுமாறு எளிய நடையிலேயே எழுதியிருக்கிறேன். பரம்பொருளின் இந்த க்ருஷண ஆவிர்பாவம் எல்லோராலும், ஞானிகளாலும், மகான்களாலும், மிக முக்கியமாகக்கருதப்படுகிறது. ஏன் ? ஏனென்றால், இந்த அவதாரத்தில் தான் பிறந்த க்ஷணம் முதல் 125-வது வயதில் மறையும் சமயம் வரை ஒவ்வொரு க்ஷணத்திலும், தான் பரம்பொருள் தான் என்று தன்னையே காட்டிக்கொள்கிறார். துவாபரயுக யுக முடிவில் அவர் இடைக்குலத்தில் மேலே நாம் கண்டபிரகாரம் தோன்றுகிறார். இடைக்குலம் என்பது மாடு மேய்ப்பவர் குலம் என்பது நாம் அறிந்தது.இந்தக்குலத்தில் போஜர்கள் என்று அறியப்படும் மன்னர்களும் இருந்தார்கள்.உக்கிரசேனன், அவன் பிள்ளை கம்ஸன் இவர்களெல்லாம் போஜர்களே. அவர்கள் க்ஷத்திரியர்க ளுமில்லை, அவர்களுக்கு அடுத்தபடியான வைஸ்யர்களுமில்லை. இவ்விரண்டு குலங்களுக்கும் இடைப்பட்ட வர்கள். பாண்டவர்களின் தாயான குந்தியும் இந்தக்குலத்தவளாகத்தான் கருதப்படுகிறாள். அவள் குந்திபோஜன் என்னும் மன்னனால் வளர்க்கப்பட்டவள்.
பரம்பொருளுடைய கிருஷ்ணாவதாரம் அவருடையகாலத்தில் அவர் வாழ்ந்த முறையிலும் , அவர் உபதேசித்த மொழிகளாலும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் செய்தது தர்மத்திற்கு துணைபோனது, மற்றும் அதர்மத்தை அறவே அழித்தது. எதிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்தது. மனிதனிலிருந்து மிருகம் ஈறாக எல்லோரையும் கவர்ந்தது. தான் வாழ்ந்த ஒவ்வொரு க்ஷணத்திலும் தன்னை பகவான் என்றே காட்டிக்கொண்டது.. அவருடைய அவதாரம் சாதாரண ஜனங்களாகிய நமக்கெல்லாம் சகல சௌபாக்கியங்களையும் கேட்காமலே கொடுக்கவல்லது. இவ்வாறு வியாச பகவான் நினைத்தார். முற்று துறந்த பிரும்ம ஸ்வரூபியான சுகபிரும்மமும் நினைத்தார். இதை -இந்த க்ருஷ்ணாவதாரத்தைப்படித்தால் -அனுபவத்தில் தெரியும்.
ச.சிதம்பரேச ஐயர்.
விகாரி ,ஆவணி 24,சுக்ல துவாதசி
10 செப் 2019
No comments:
Post a Comment