Thursday, August 22, 2019

Why did she wipe her eyes- Nammzhwar paasuram

ஹே..! பாதுகே-31
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 29.07.2019)

முகுந்தபாதாவநி! மௌக்திகைஸ் தே
ஜ்யோத்ஸ்நாமயம் விஸ்வமிதம் திவாபி !
வைமாநிகாநாம் ந பஜந்தி யேந
வ்யாகோசதாம் அஞ்ஜலி பத்மகோசா: !!

(ஜ்யோத்ஸ்நாமயம்: நிலாவினைப் போன்று குளிர்ச்சியாயுள்ளது.. எப்போது..? திவாபி: : பகலில் கூட! – (ஜ்யோத்ஸ்நா :: அடடே! இந்த பெயரும் நல்லாருக்கே! – பாதுகா ஸஹஸ்ரம் படித்தால் நிறைய பேரும் கிடைக்கும், பேறும் கிடைக்கும்!!))

சூரியன் வானின் உச்சியில் நின்று கூத்தாடும், தகிக்கின்ற நடுபகல் நேரம்..!

அரங்கனின் அருகாமையிலுள்ள அரங்கனடியார்களுக்கு இந்த தகிப்பு உண்டாகவில்லை...! -  பாதுகையில் பதிக்கப்பெற்றுள்ள முத்துக்களின் காந்தி இந்த கொதிக்கும் சூழ்நிலையினை நிலாக்காலம் போல் குளிர்வித்துக் கொண்டிருக்கின்றதாம்...!

இந்த நிலாவின் பிரகாசத்தினால் பகல் நேரத்தில் மலரும் தாமரைமொட்டுக்கள் கூட மலர மறந்து கைகூப்பிய வண்ணம் இருக்கின்றதாம்..!

கற்பனை வளத்தோடு வர்ணிக்கின்றார்..!
ஸ்வாமி தேசிகர் பாதுகா ஸஹஸ்ரத்தில் தமது 623 பாசுரத்தில்..!  

என்ன சொல்ல விரும்புகின்றார்… இதன் மூலம்..?

நமக்கு ஏற்படுகின்ற இன்னல்கள் மூன்று வகை.

1. அதி ஆத்மீகம் நமக்கு நாமேத் தேடிக் கொள்வது.
2. அதி தெய்வீகம் தெய்வங்களால் நமக்கு ஏற்படுவது
3. அதி பௌதீகம் இயற்கையின் சீற்றம்.

இந்த இன்னல்கள் – தகிக்கும் வெய்யில்.

ஆழ்வார்களுடைய அருமையான பாசுரங்கள் – பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள முத்துக்கள்.

இந்த பாசுரங்களில் ஈடுபட்டு அதன் கருத்தினை அறிவது – முத்துக்களிலிருந்து வெளிப்படும் நிலாவைப் போன்ற குளிர்ச்சி.

அப்போது நமக்கு ஏற்படுவது அரங்கனிடத்தில் எல்லையில்லாத பக்தி – விளைவு – மலர மறந்தத் தாமரை மொட்டுக்கள் போன்று நாம் கைகளைக் கூட பிரிக்கத் தோன்றாது கூப்பிய வண்ணம் இருப்போம்..!

ஸகல தேவதைகளும் அப்படித்தான் உள்ளனர்..!

எல்லையில்லாத பக்தி…?

இதோ நம்மாழ்வார் வருகின்றாரே..!

கங்குலும் பகலும் கண் துயிலறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்களென்று கைகூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும்
இரு நிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல்பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே

இரவு பகல் என்ற வேறுபாடு அறியாது கண் துயிலாது உள்ளாள். கண்ணத்தில் வழியும் நீர் கைகளால் இறைக்கும் அளவுக்கு நிரம்பி வழிகின்றது. சங்கு சக்கரதாரியாய் நிற்கும் நம்பெருமாளையே ஆசைப்பட்டு அஞ்ஜலியாலே தலைக்கட்டா நிற்கின்றாள்! உம்மை ஆசைப்பட்ட இவள் தன் நிறம் இழந்தாள்.! இவள் பொருட்டு என்ன செய்யப் போகின்றாய் அரங்கா..?

இங்கு ஒரு சந்தேகம்! இரவு பகல் என வேறுபாடு அறியாமல் இருக்கும் அவள் கன்னத்தில் வழியும் கண்ணீரை மட்டும் எப்படி நினைவோடு துடைக்கின்றாள்..? நியாயமான கேள்விதானே!?

நம்பிள்ளை இதற்கு அருமையான விளக்கம் தருகின்றார்!

எங்காவது கண்களை கண்ணீரானது மறைக்கும் நேரம் பார்த்து நம்பெருமாள் எதிரே தோன்றினால் என்ன செய்வது! அதனாலேயே கண்களை அடிக்கடி கைகளால் துடைத்து சுத்தம் செய்கின்றாளாம். இந்த ஒரு நினைப்பினால் உஷாராகயிருக்கின்றாளாம்!

பாசுரங்கள் அருமையென்றால், அது பூர்வாச்சார்யர்களின் வியாக்யானத்தின் பெருமையினால்தான்..!

தாஸன் - முரளீ பட்டர்
#ஹேபாதுகே#

No comments:

Post a Comment