Monday, July 1, 2019

Why Chant lalita sahasranamam ?

மாங்கல்ய பலத்தை நீட்டிக்கும் லலிதா சகஸ்ரநாமம்...

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு நாமம் உண்டு. அந்த நாமத்தை உச்சரிப்பதன் மூலம் அதற்குரிய இறைவனின் அருளை பெறுவோம். சிறப்பு வாய்ந்த நாமங்கள் அதிகம் உண்டு. தேவி மகாத்மியத்தில் அம்பாளை வழிபடுவது மிகச் சிறந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பிகையை வழிபட உரிய முறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 

தெய்வ வழிபாட்டின் போது மன சுத்தியும், சரீர சுத்தியும் வேண்டும் பிறகு தான்  இஷ்ட தெய்வத்தை பூஜிக்க வேண்டுமென்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள். பூஜையில் 64 உபசாரங்கள் உண்டு. அனைத்தையும் எல்லோராலும் செய்ய முடியாது என்றாலும் 16 உபசாரங்களையாவது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது. சந்தனம், குங்குமம், புஷ்பம் போடுதல், தூபம், தீப, நைவேத்யம்,கற்பூரம் காட்டுவது என்பதைத் தான் எல்லா பூஜைகளிலும் பொதுவாக கடைப்பிடிக்கிறோம். இவை தான் ஷோட சோப உபசாரங்கள் என்று சொல்கிறார்கள்.

அஞ்ஞானத்தை விரட்டி மெய்ஞானத்தைத் தரக்கூடியது அம்பிகை வழிபாடு. அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருப்பது  பெரும் சக்தியான  பெண் தெய்வமான பராசக்தி வழிபாடு என்று தேவிமகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. பரமேஸ் வரியை லலிதா என்று அழைக்கிறோம். சகல அபீஷ்டங்களையும் நிறைவேற்றி வைக்கும் தாயான இவள் வழிபடுவதற்கு எளிமையானவள். இவளை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். 

பாஸ்கரராயர், அப்பைய தீட்சிதர் போன்ற மகான்கள் அம்பாளை வணங்கி பெரும் பாக்கியங்களை அடைந்தவர்கள் என்பதை இவர்களது சரித்திரத்தில் படிக்கலாம். அம்பிகையின் வழிபாடுகளில் முதலிடம் பிடிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம். ஹயக்ரீவர் அகஸ்தியமுனிவருக்கு இதை உபதேசித்தார். அகிலாண்ட கோடி, பிரம்மாண்ட நாயகி, சச்சிதானந்த சொரூபி எல்லாவற்றுக்கும் உடையவளாய் காப்பவளாய் விளங்கும் சர்வேஸ்வரரின் துணைவியான சர்வேஸ்வரியின் அருளை நாம் பெறுவதற்கு உரிய சக்தியாய் விளங்குவது ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம்.     

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்தால் சகல துக்கங்களும் போக்கி செளந்தர்யத்தைக் கொடுக்கும். கலிதோஷத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் பல்வேறு துன்பங்கள், துக்கம், துயரம், வறுமை, பிணி என்று பலவகை பாதிப் புகளை நிவர்த்தி செய்யும் வல்லமை பெற்றது இது என்கிறார் ஹயக்ரீவர்.

தினமும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் பிரம்மா, விஷ்னு, சிவபெருமான் போன்ற மும்மூர்த்திகளையும், தேவர்களையும் திருப்திபடுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 'ஆபால கோபால விதி தாயே  நம' என்ற நாமாவளியை உச்சரித்து பலன் பெறலாம். 

தெய்வங்கள் எல்லாம் அனுக்கிரகம் கொடுத்தாலும் சுமங்கலிகள் லலிதாம்பாளை வழிபட்டால் துன்பம், துயரம், ஆபத்து போன்றவற்றிலிருந்து காப்பாற்றிவிடுவாள் என்கிறது தெளர்பாக்ய தூல வாதூல நம' என்ற நாமாவளி. சுமங்கலிப் பெண்கள் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மாங்கல்ய பாக்கியத்தை நீட்டி செளபாக்கியவதியாய் வைத்திருப்பாள் சர்வேஸ்வரி.

No comments:

Post a Comment