Tuesday, July 2, 2019

Where to put vermillion- Periyavaaa

தெய்வத்தின் குரல்

நன்றி: கிருஷ் ராம் சார்

குங்குமத்தையே பழைய புஸ்தகங்களில் ஸிந்தூரமாகத்தான் சொல்லியிருக்கிறது. வேதமாதா அம்பாள் பாதத்தில் சிரஸை வைத்து நமஸ்காரம் பண்ணும்போது, அவள் வகிட்டுக் குங்குமத்தை "ஸீமந்த ஸிந்தூரி" என்றே சொல்லியிருக்கிறது. வகிட்டிலே தான் குங்குமம்; நெற்றியில் – அதாவது, திலகமிட்டுக் கொள்ளும் புருவ மத்தியில் – கஸ்தூரிப்பொட்டு என்பதாக அம்பாள் வைத்துக்கொண்டிருப்பதாக ஸஹஸ்ர நாமத்திலிருந்து ஏற்படுகிறது. "முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசெஷகா" என்று அதில் நாமா வருகிறது. சந்திரனுக்கு மத்தியில் களங்கத் திட்டு மாதிரி அம்பாள் முகத்தில் கஸ்தூரிப் பொட்டு என்று அந்த நாமா சொல்கிறது. நெற்றியை வர்ணிக்கும் நாமாவுக்கும் புருவத்தை வர்ணிக்கும் நாமாவுக்கும் இடையே இந்த நாமா வருவதால் இது புருவ மத்தியைச் சொல்வதாக ஸ்பஷ்டமாகிறது. வகிட்டில் குங்குமம் – "ஸீமந்த ஸிந்தூரி". இங்கேயும் அம்பாளுடைய வகிட்டுக் குங்குமத்தைத்தான் ஆசாரியாள் ஸிந்தூரம் என்று சொல்லியிருக்கிறார்.

சாஸ்திரப்படி ஸௌமங்கல்யத்துக்கு, ஸௌபாக்யத்துக்கு பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்ளவேண்டிய இடம் வகிடுதான். நெற்றி நடுவில் இட்டுக் கொள்வது அலங்காரத்துக்குத்தான். மனஸை ஒருமுகப்படுத்தும் ப்ரூ மத்தியில் [புருவங்களில் நடுவில்] பரமாத்மாவை கான்ஸென்ட்ரேட் பண்ணுவதாலேயே அங்கே சந்தனம், விபூதி இட்டுக்கொள்கிறது போல குங்குமமும், அங்கே இட்டுக் கொள்ளப்படுவதாகவும் சொல்லலாம். அப்படியானாலும் ஸுமங்கலித்தன்மை என்பதற்கு இதிலே விசேஷம் இல்லை! பழைய நாளில் ஸுமங்கலிகள் முதலில் வகிட்டிலேயே குங்குமம் இட்டுக்கொண்டு அப்புறம்தான் அதை நெற்றியிலும் வைத்துக் கொள்வார்கள்.

'பாக்யலக்ஷ்மி' என்றே சொல்லப்படும் மஹாலக்ஷ்மியின் ஸாந்நித்யத்தை பெற அவளுடைய வாஸஸ்தானமான வகிட்டிலேயேதான் குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும். வகிடு பூராவும் அப்பிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டாலும் நெற்றிக்கு மேலே வகிடு பிரிகிறதே, அந்த ஆரம்பத்தில் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும்.
அம்பிகையோ வகிடு பூராவும் இட்டுக் கொண்டிருக்கிறாள்: "வஹந்தீ ஸிந்தூரம் …

ஸீமந்த ஸரணி:" – 'குங்குமத்தைத் தரிப்பதான வகிட்டுப்பாதை'. வகிடு பூராவும் இட்டுக் கொண்டிருந்தால்தான் ஸிந்தூர குங்குமம் 'ஸரணி' என்னும்படியான நேர்பாதை ரூபத்தில் இருக்கும். ஆரம்பத்தில் மட்டும் இருந்தால் வட்டமாக ஒரு பொட்டாகத்தான் இருக்கும். ஆசார்யாள் மேற்கொண்டு சொல்வதிலிருந்து – அதுதான் இந்த ச்லோகத்தின் காவ்ய ரஸத்துக்கும் கல்பனைக்குமே உயிர். நிலையாக இருக்கிற வர்ணனை – அம்பிகை வகிடு ஆரம்பிக்கிற இடத்தில் பெரிய வட்டப் பொட்டாக இட்டுக்கொண்டு, அதையே மேலே வகிட்டோடு வகிடாக, முடிகிறவரை மெல்லிசுக் கோடாக இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெளிவாகத் தெரிகிறது.
Attachments area

No comments:

Post a Comment