Monday, July 29, 2019

Vishnu Sahasranama 507 to 521 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

507.ஸோமபா—ஸோமம் பாதி இதி ஸோமபா:- யாகங்களில் தேவர்கள் வடிவில் சோம பானம் செய்பவர். 'அஹம் ஹி ஸர்வ யக்ஞானாம் போக்தா ச பிரபுரேவச ' (ப. கீ.9.24) " நானே யாகங்களின் அதிபதியாகவும் நுகர்வோனாகவும் இருக்கிறேன் 
."
508. அம்ருதபா-அம்ருதம் பிபதி இதி-யாகங்களில் ஆஹுதி செய்யும் ஹவிஸ்ஸுகள் எல்லாம் அம்ருதமாக செய்யப்பட்டு விஷ்ணுவுக்கு கொடுக்கப்படுகின்றன . அல்லது ஆத்மானந்தமான அம்ருதத்தை பானம் செய்பவர் (சங்கரர்.)
அம்ருதம் பாயயதி இதி அம்ருதபா: என்று எடுத்துக்கொண்டால் மோகினி வடிவில் வந்து தேவர்களை அம்ருதம் பருகச்செய்தவர்.

509. ஸோம:-அவரே ஸோமமாக இருப்பவர். கீதையில் நானே யக்ஞம், நானே ஹவிஸ், நானே மந்திரம், நானே ஆஹுதி செய்யப்படும் நெய் , நானே அக்னி, நானே எல்லாம் என்று சொல்கிறார். 
ஸோம: என்பது சந்திரனுக்கும் பொருந்தும்., சந்திரன் அம்ருதமயமானவன் , ஔஷதிகளுக்கு சக்தியைக் கொடுப்பவன், உலகையே மகிழ்வூட்டுபவன். உபநிஷத் பிரம்மத்தை 'ரஸோ வை ஸ:' என்கிறது. அதாவது எல்லாவற்றிலும் ரசம் அல்லது ஸாரமாக இருப்பவர். அந்த விதத்தில் சந்திரனைப்போல பக்தர்களுக்கு அம்ருத மயமானவர்.

510. புருஜித்-புரூன் ஜயதி இதி. புரு என்பது எல்லா உயிர்களின் சரீரங்களையும் குறிக்கும் . அவற்றை ஜெயித்தவர் என்றால் எல்லாவற்றையும் தம் வசமாக்கிக் கொள்பவர் என்று கொள்ளலாம்.
வால்மீகி கூறுகிறார் 
சத்யேன லோகான் ஜயதி தீனான் தானேன ராகவ: 
குரோன் சுச்ரூஷயா வீரோ தனுஷா யுதி சாத்ரவான்
வீரனான ராமன் சத்தியத்தினால் உலகங்களையும் ,தானத்தினால் ஏழைகளையும் ,பணிவிடையால் பெரியோர்களையும் , போரில் வில்லினால் எதிரிகளையும் ஜெயிக்கிறான்.

511. புருஸத்தம: -புரு என்பது பகவானின் விச்வரூபத்தைக் குறிக்கும். ஸத்தம என்றால் பரமபுருஷன். ஸத்தா அல்லது பராக்கிரமம் உடையவர்களில் ஸத்தம , மேலானவன்.
பல ரூபத்தில் சிறந்து விளங்குகிறவர். "இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே,' இறைவன் தன் மாயையால் பல ரூபம் கொண்டு விளங்குகிறான் (சங்கரர்)

512. விநய: -விநயம் என்பது எளிமையைக் குறிக்கும். அலல்து விசேஷேண நீயதே , அதாவது தன்னைச் சரண் அடைந்தோரை அவனை அடைய வழிகாட்டுபவன். 
விநீயதே அனேன இதி விநய: என்று எடுத்துக்கொண்டால் துஷ்டர்களை தண்டிப்பவர் (சங்கரர்)

513. ஜய:- எல்லோரையும் ஜயிப்பவர். பக்தர்களால் அன்பினால் வெல்லப்படுபவர்

514.ஸத்யஸந்த: -சங்கல்பம் தவறாதவர் அல்லது வாக்குத் தவறாதவர். ராமர் கைகேயியிடம் கூறுகிறார், "ராமோ த்விர்நாபிபாஷதே,' ராமனுக்கு ஒரு சொல்தான் என்று. கண்ணனும் திரௌபதியிடம், வானமே இடிந்து விழுந்தாலும் , இமயமலை பொடிப்பொடியாக தகர்ந்தாலும் , சமுத்திரமே வறண்டாலும் தன் வாக்கு பொய்யாகாது என்கிறான்.

515 . தாசார்ஹ:-தாச என்றால் கொடுப்பது. ( அடிமை என்பது தாஸ;) பக்தர்களுக்கு எல்லாம் கொடுப்பவர் அலல்து தானே கொடையானவர். 
தாசார்ஹ என்றால் யாதவ குலம் என்றும் பொருள். அதன்படி இந்தச் சொல் யாதவகுலத்துதித்தவர் என்பதையும் குறிக்கிறது.

516. ஸாத்வதாம் பதி: -ஸத் என்பது பிரம்மத்தைக் குறிக்கும். ஸாத்வதர்கள் பிரம்மத்தை அறிந்தவர்கள். நாராயணனே பிரம்மம் என்கையில் இது பாகவதர்களைக் குறிக்கும். அவர்களின் யோகக்ஷேமத்தை நடத்துபவர். 
ஸாத்வதர்கள் என்றால யாதவர்களையும் குறிக்கும் . ஆகவே ஸாத்வதாம் பதி என்றால் கிருஷ்ணன்.

517. ஜீவ:-எல்லா உயிர்களுக்கும் ஜீவாத்மா வடிவில் நின்று தாங்குபவர்.

518. வினயிதா- விசேஷேண நயிதா- அடியார்களுக்கு வழிகாட்டுபவர்.

519. ஸாக்ஷீ-எல்லாவற்றினுள்ளும் ஸாக்ஷியாக நிற்பவர். 
வினயிதாஸாக்ஷீ என்பதை சங்கரர் ஒரே நாமமாகக் கொள்கிறார். அதாவது விநயித, எல்லாவற்றையும் நடத்துகிறவராகவும் , அஸாக்ஷீ, தம்மைத்தவிர வேறு ஒன்றைக் காணாதவறாகவும் இருப்பவர்.

520. முகுந்த: - முக்திம் ததாதி இதி முகுந்த: - முக்தியைக் கொடுப்பவர்.

521. அமித விக்ரம: மித என்றால் அளவுக்குட்பட்ட என்று பொருள் அமித என்றால் அளவுக்கடங்காத, விக்ரம, பராக்கிரமம்.

  

No comments:

Post a Comment