Monday, July 29, 2019

Vaishnavism

#ஸ்ரீவைணவம் 
#ஒரு_விளக்கம்

எவன் விஷ்ணுவுக்கு அடிமையோ அவன் ஸ்ரீ வைணவன். எவன் தன்னை விஷ்ணுவிடம் முழுமையாகச் சரணாகதி பண்ணிக் கொண்டானோ அவனுக்கு வைணவத்துவம் சித்திக்கிறது. அவனுக்கு மண்ணுலகில் சுக
துக்கங்கள் சமம். மண்ணுலகில் எல்லா உயிர்களும் அவன் பார்வையில் சமம். 

விஷ்ணுவிடம் முழுச் சரணாகதி பண்ணிக்கொள்வதால் பிற 
தெய்வங்கள் அவனுக்குத் தேவையற்றதாகிவிடுகிறது. அவைகள் அவனுக்குச்
சாதாரணமானவைகளாகப் படுகின்றன. பிற தெய்வ வழிபாடு அவனுக்குத்
தேவையற்றதாகிவிடுகிறது. விஷ்ணுவே சகல தேவதைகளையும் படைத்தான்.
விஷ்ணுவிற்குள் சகல தேவதைகளும் அடக்கம். எனவே விஷ்ணுவையே
தனக்குத் தெய்வமாக்கிச் சரணம் அடைந்தவனுக்கு பிறதேவதை 
வழிபாடென்பது பொருளற்றதாகிறது. 

     அதாவது கங்கை நீரைக் கையில் வைத்திருப்பவன் கிணறு வெட்டித்
தாகம் தீர்த்துக் கொள்ள நினைக்கமாட்டான். விஷ்ணுவாகிய எம்பெருமான்
ஸ்ரீமந்நாராயணனை "உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும்
உன்னிலிட்டேன்". என்றவாறு இரண்டறக் கலந்த மனப்பாங்கைப் பெற்றபின்
அவனுக்குப் பிற தெய்வ சிந்தனைக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. 

     தூய வைணவர்கள் பத்துப்பேர் குழுமியிருக்கும் இடம் ஒரு திவ்ய
தேசத்திற்குச் சமம். ஒரு வைணவன் என்பவன், 

     1) 12 திருமண் இட்டுக் கொள்ளல் வேண்டும். 
     2) அடியார்களின் பெயர்களைத் தனக்குப் பெயராக இட்டுக் கொள்ள
       வேண்டும். 
     3) வலதுபுறத்தில் சக்கரத்தையும், இடதுபுறத்தில் சங்கும் (ஆச்சார்யரிடம்
        முறைப்படி) பொருத்திக் கொள்ள வேண்டும். 
     4) தினமும் பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வேண்டும். 
     5) திருமந்திரம் என்னும் நாராயண மந்திரத்தை உணர்ந்து உரைக்கும்
       ஆற்றல் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பஞ்ச ஸமஸ்காரம்
       என்று பெயர். (இதைப் பற்றி திவ்யதேச ஸ்தல வரலாற்றுக்
       குறிப்புகளில் இந்நூலில் சற்று விரித்துரைக்கப்பட்டுள்ளது)     இந்நிலைகளை அடைந்த ஒரு வைணவனை எம்பெருமான் எப்போதும்
விடாது பின்தொடர்ந்து பாதுகாத்து வருகிறான். பக்தர்கட்காக எதையும்
செய்யும் பரந்தாமன் ஒரு வைணவன் வழிமாறிச் சென்றாலும் அவனைத்
திருத்திப் பணி கொள்ளச் செய்துவிடுகிறான். இதைத்தான் "திருத்திப் பணி
கொள்வான் எந்தை" என்று ஆழ்வார்கள் மொழிந்துள்ளனர். 

     எத்தனையோ மதங்களில் பிரவேசித்து உண்மை நிலையை அறிந்து
பகவானை அடைய விரும்பிய பக்தர்கள் அவைகளை உதறிவிட்டு வைணவம்
புகுந்ததை வரலாறு காட்டும். திருமழிசையாழ்வாரே சிவவாக்கியர் என்னும்
பெயரில் சித்தராய் இருந்து சைவம் முதலான சமயங்களில் நுழைந்து
அவைகளில் கடைத்தேற வழியில்லாமையையும், முக்தியடைய உபாயம்
இல்லாததையும் அறிந்து வைணவத்திற்கு வந்து (எம்பெருமானாலே திருத்திப்
பணி கொள்ளப்பட்டு) ஆழ்வாராக ஆனார். 

     விஷ்ணு என்ற சொல்லுக்கு 

     1) எங்கும் நிறைந்தவர் 2) நன்மை தருபவர் 
     3) மாயையிலிருந்து அகற்றுபவர் 
     4) எல்லாப் பொருள்களின் உயிர்நாடியாயிருப்பவர். 

     என நான்கு பொருள் உண்டு. இப்பேர்ப்பட்ட விஷ்ணுவே
அனைத்திற்கும் பிறப்பிடம் என்பது கீதையின் வாக்கு. ஆதிதேவனாக
விளங்கும் இந்த மகாவிஷ்ணுவை நீரில் புஷ்பங்களால் அர்ச்சித்தும், 
அக்னியை ஆகுதி செய்தும், மனதினால், தியானம் செய்தும், சூரியனை 
நோக்கி மந்திரங்களை உச்சரித்தும், சிலா ரூபங்களையும் வரைபடங்களையும்
பிம்பங்களையும், வைத்துப் பூஜித்து வழிபடலாமென பாகவத 
புராணங்கூறுகிறது. 

     வைணவ மார்க்கத்தில் அடிப்படையான கொள்கை அந்த
பரமாத்மாவாகிற விஷ்ணு உலகம் முழுவதும் வியாபித்து நிற்பதனால் உலகம்,
அதனுள் அடங்கிய சகல வஸ்துக்களும் அவனுடைய சரீரமாகிறதென்பதுவும்,
அவனே அந்த சரீரத்திற்கு ஆன்மாவாகவும் இருக்கிறான் என்பதாகும்.
அதாவது பரமாத்மா ஆன்மா என்றால் ஜீவாத்மாக்கள் அவனையே
சார்ந்திருக்கின்ற சரீரமாகின்றன. அவன் எஜமானாகின்றான். அவன் சுவாமி.
ஜீவாத்மாக்கள் அவனுடைய சொத்துக்கள். அவன்தான் நம்மைப் பேணிப்
பாதுகாக்கின்றவன். நாம் அவனையே சார்ந்திருக்கின்ற, அவனால்
காப்பாற்றப்படுகின்ற பத்தினியாக - பெண்ணாக ஆகிறோம். புருஷன் என்ற
சொல் வேண்டியதைக் கொடுக்கிறவன் என்ற பொருளைத் தருகிறது. (லட்சுமி
தேவிதான்அந்த பரந்தாமனின் பத்னி) ஜீவாத்மாக்கள் இந்த லட்சுமியின்
மனோபாவத்தை அடையும்போது அந்தப் பரமாத்மாவாகிற எம்பெருமான்
தானே இரட்சிக்கத் தொடங்குகிறான். இது அவன் கடமையுமாகிறது. அதுவே
ஜீவாத்மாக்களின் முக்திக்கு வழிகாட்டியாகிவிடுகிறது. 

     இப்படிப்பட்ட மனநிலையைத்தான் எல்லா ஆழ்வார்களும் அடைந்து
விஷ்ணுவிடம் தங்கள் பக்தியினையும் காதலையும் வளர்த்துக் கொண்டார்கள்.
இந்தப் பக்தி பெருங்காதலில் ஆழ்ந்தமையால், ஆழ்வார்கள் ஆனார்கள்.
அதனால்தான் இறைவனை "கண்ணுக்கு இனியன்" என்று பாடினார்கள்.
"மனத்துக்கு இனியன்" என்று ஆண்டாள் பாமாலை சூட்டினாள். இதனால்
தான் நாவலந்தீவில் வாழும் நங்கை மீர்காள் என்று எல்லா
ஜீவாத்மாக்களையும் பெண்தன்மையேறிட்டவர்களாய் பெரியாழ்வார்
விளக்கினார். "நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பா" என்று
பட்டத்தரசியாகிற லட்சுமிக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை பெரியாழ்வார்
தெளிவுபடுத்துகிறார். இராமன் கானகம் கிளம்பும்போது இலட்சுமணன்
இராமனிடம், நானும் சீதையும் உம்மை விட்டு என்றும் பிரியோம் என்று
உரிமையோடு பேசுகிற நிலையும் இந்த ஜீவாத்மா தத்துவத்தை
உணர்த்துவதுதான். 

     பெரியாழ்வாரும், 
 

"பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து
     பேணி நம்மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க
     இவளா மொன் றென்னு கின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினா
     ளென்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப் படுத்திடு மின் இவளை
     உலகளந் தானி டைக்கே"
     மருத்துவன் வந்து பார்த்து நான் பக்குவம் செய்யும் கால எல்லையைத்
தாண்டிவிட்டது என்று கூறுவதற்கு முன் இவளின் கருத்தையறிந்து செயல்பட
வேண்டும். (இவள் உன் மகள்) கண்ணனிடம் பேரன்பு கொண்டவள். ஆகவே
இப்போதே இவளைக் கொண்டுபோய் கண்ணன் பால் சேர்த்துவிடுங்கள்.
இப்பேர்ப்பட்ட மனநிலையை அடைந்தவனே வைஷ்ணவன். 

     இவ்விதம் மாறாக் காதல் கொண்டு மயங்கி நிற்கவைக்கும் அந்த
மாயவன் நற்குணங்களின் உறைவிடம். நற்குணக்கடல், குணங்களால் உயர்ந்த
வள்ளல் என்றெல்லாம் கம்பர், திருமாலின்     பெருமையைக் கூறுவர். இறைவன், விஷ்ணு பண்புகளோடு கூடியவன்
என்பது வைணவ அடிப்படைக் கொள்கை மேன்மையும், நீர்மையும், 
வடிவழகும் கூடிய பசுங்கூட்டமாயிற்று பரத்துவம் என்பது வ்யாக்யானம். 

     மேன்மைக்குத் துணையானவை, உலகத் தோற்றத்திற்கு உதவுபவை,
அடியாரை உய்விக்க அமைந்தவை என இறைவனுக்குரிய பண்புகளை
மூவகையாகக் கூறுவர். 

     மேன்மைக்குத் துணையானவை 

     எம்பெருமானைச் சேரவேண்டுமென்று முக்தி ஒன்றையே குறிக்கோளாக்
கொண்ட பக்தன் அடையக்கூடிய "பரத்வ" நிலையான அமர்ந்த திருக்கோலம்.

     உலகத்தோற்றத்திற்கு உதவுபவை 

     தன்னை வியூகப்படுத்தி திருப்பாற்கடலில் எழுந்தருளி அபயக் குரல்
கேட்கும் போதெல்லாம் ஆதரவளிக்கும் சயன திருக்கோலம். (பிரம்மனும்
உலகைப் படைக்கும் முன் சயன திருக்கோலத்திய பெருமானைத் தரிசித்த
பின்பே உலகு படைக்கலுற்றான் என்பர்) 

     அடியாரை உய்விக்க அமைந்தவை 

     இதுவே விபவ அவதாரமாகவும், அர்ச்சாவதாரமாகவும்,
அந்தர்யாமியாகவும் இருந்து உலகு நடைபெற பக்தர்கட்கு அருளும் நின்ற
திருக்கோலம். 

     இந்த மூன்று குணங்கள் வைணவத்தில் எம்பெருமானின் கல்யாண
குணங்களாச் சித்தரிக்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்களின்
பண்புகளைத்தான் 

     சௌல்ப்யம் - எளிமை 
     சௌசீல்யம்  - நீர்மை 
     ஆர்ஜவம்  - செம்மை 
     வாத்ஸல்யம்  - பரிவு 
     சுவாமித்வம்  - தலைமை என்றனர். 

     யசோதையின் கயிற்றுக்கு கட்டுண்டு நின்ற காட்சியை எளிமைக்கும் 
 

மூவுலகும் இருள்தீர நடந்தமையை நீர்மைக்கும்
இலங்கையை கட்டழித்த நீர்மையை செம்மைக்கும்
பாண்டவர்கட்காக தூது நடந்து சென்றதை பரிவுக்கும்
அமரர்கள் தொழுதேத்த நிற்கும் தன்மையை தலைமைக்கும்     பெரியோர் உதாரணம் காட்டுவர். 

     இத்தகைய எம்பெருமானிடம் தன்னைச் சரணாகதி பண்ணிக்கொண்ட
வைணவனின் லட்சணம் மட்டும் சாமான்யமானதோ, யார் வைணவன் என்பது
பற்றி பாகவத ரஹஸ்யம் கூறும் விளக்கம் இங்கே தரப்படுகிறது. 

     கைங்கர்யமும் (கைங்கர்யம் என்றால் எம்பெருமானுக்குத் தொண்டு
புரிதல் என்பது பொருள்) நாம ஜெபமும் இல்லாமல் யாருக்கு மன நிம்மதி
ஏற்படாதோ, அவனே உண்மையான வைணவன். பணிவிடைக்கும்
ஜெபத்திற்குமாக எவன் ஜீவிக்கிறானோ, அவனே வைணவன். வைணவன்
என்பவன் பிறப்பதில்லை. அவனுடைய சத்குணங்களே அவனை வைணவனாக
உருவாக்குகிறது. 

     சமீபத்தில் வாழ்ந்த மகாத்மா காந்தியடிகள் வைணவக் கொள்கைகளால்
ஈர்க்கப்பட்டவர். இவர் முதிர்ந்த விஷ்ணு பக்தர் என்பதும் உலகறிந்த
உண்மை. உயிர் துறக்கும் தனது இறுதிக் கட்டத்திலும் ராம், ராம் என்ற நாம
ஜெபத்தோடு உயிர் நீத்தவர். 

     வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியா என்ற நர்ஸி மேத்தாவின் பாடல்
மகாத்மாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். நாடு முழுவதும் பாடப்பட்ட
இப்பாடலின் பொருள் எத்துணையாழமான வைணவ லட்சணம்
பொருந்தியதெனப் பாருங்கள். 

     1) எவன் பிறருடைய கஷ்டங்களைத் தன்னுடையதனவாகக் கருதுவானோ,
அப்படிக்கஷ்டப்பட்டவர்கட்கு உதவி விட்டு அதற்காக கர்வம் கொள்ளாமல்
இருப்பானோ அவனே உண்மையான வைணவன். 

     2) எவன் உலகில் பிறந்தவர்கள் அனைவரையும் உயர்ந்தவர்கள் என்று
கருதி, பெரியோர்களை வணங்கி, மனோ, வாக்கு, காயங்களால் தூய்மையைப்
கடைப்பிடிப்பானோ, அவன் உண்மையான வைஷ்ணவன்.
அப்படிப்பட்டவனுடைய தாயே பேறு பெற்றவள். 

     3) எவன் தனது நண்பனையும், விரோதியையும் சம நோக்கில்
நோக்குவானோ, எவன் ஆசைகளைத் தியாகம் செய்வானோ, எவன் பிற
மாதர்களை தனது தாயாகக் கருதுவானோ, எவன் ஒரு போதும் பொய் 
சொல்ல மாட்டானோ, எவன் பிறர் பொருள் மீது ஆசைவைக்க மாட்டானோ
அவனே      4) எவனை போகமும் மாயையும் அண்டாதோ, எவனுடைய உள்ளத்தில்
திடமான வைராக்கியம் குடி கொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தை
கேட்டதும் மெய்மறந்து போவானோ அவன்தான் வைணவன். அவனது 
சரீரமே எல்லாப் புண்ணிய தீர்த்தங்கட்கும் உறைவிடமாகும். 

     5) எவன் கோபமும், கபடமும், இல்லாதவனோ, எவன் காமத்தையும்,
குரோதத்தையும் விட்டொழித்தவனோ அப்படிப்பட்ட
உத்தமனைத்தரிசிப்பவனது 71 தலைமுறையும் கரையேறி விடும். 

     இப்பேர்ப்பட்ட வைணவன் பற்றிக் கொண்ட வைணவ சம்பிரதாயம்
இந்தியா முழுவதும் பரந்து விரிந்த ஒன்றாகும். இன்று உலகத்தில் பல
நாடுகளிலும் ஆழ்ந்து வேரூன்றத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த
வைணவம் எப்போது உண்டாயிற்றென்று ஒருவராலும் சொல்ல முடியாது.
"தொன்று நிகழ்ந்தனைத்து முணர்ந்திடும் சூழ்கலை வானர்களும் இவள் 
என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று 
பாரதியார் இந்தியாவைப் பற்றிக் கூறுவதைப் போல வைணவமும் என்று
தோன்றியதென்று அறுதியிட்டுக் கூறவே முடியாது. உலகம் தோன்றிய போது
உண்டான ஓம் என்னும் ஓங்கார சப்தத்துடனும், உயிரினங்கள் தோன்றியதும்
அதைப் புரக்கும் தெய்வமான விஷ்ணுவின் அருள் பொழிய ஆரம்பித்தவுடன்
வைஷ்ணவத்துவம் வளரத்தொடங்கிவிட்டது. 

     தொன்மை இந்தியாவில் ஒரு காலத்தில் வராஹ அவதார வழிபாடுகள்
மட்டும் அதிகமாக இருந்ததென்று உணரமுடிகிறது. அதாவது ஸ்ரீராம, 
கிருஷ்ண விபவ அவதாரங்களாக எம்பெருமான் மானிட ரூபத்தில்
தோன்றுவதற்கு முன்பு உண்டான, மச்ச, கூர்ம, நரசிம்ம, வராஹ
அவதாரங்களில் வராஹ அவதார வழிபாடு மட்டுமே இந்தியா முழுவதும்
மேன்மையுற்றிருந்ததாகச் சொல்லலாம். 

     திருமலை, திருக்கடன்மல்லை என்னும் மாமல்லபுரம், திருவிடவெந்தை
(திருவடந்தை) தஞ்சை மாமணிக்கோவில், திருவில்லிபுத்தூர், ஆகியன 
வராஹத் தலங்களேயாகும். அதாவது இங்கெல்லாம் தற்போதுள்ள
மூர்த்திகளின் வழிபாடும், தற்போதுள்ள அமைப்பிலான ஸ்தலங்கள்
கட்டப்படுவதற்கு முன்பு வராஹ மூர்த்திகளும், வராஹ வழிபாடு மட்டுமே
இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே தொன்மை இந்தியாவில்
வைஷ்ணவத்துவம்தான் பரவி, விரவியிருந்த தென்பதையும் எளிதில்
உணரலாம்..     இத்தகைய வைணவ சம்பிரதாயம் பற்றியும், விஷ்ணுவைப் பற்றியும்
கூறும் நூல்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே எண்ணற்ற பல மொழிகளில்
அவ்வப்போது தோன்றியிருந்தன. வைணவக் கொள்கைகளையும்,
விஷ்ணுவைப்பற்றியும் அறிய இந்தியா முழுமையும் தோன்றிய நூல்களில்
கீழ்க்கண்ட நூல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதோடு, வைணவ
வரலாறு, வைணவ வளர்ச்சி, போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள அரிய
ஆதாரங்களைத் தருகின்றன. 

     கீழ்க்கண்ட நூல்களால் வைணவத்தின் செழுமைபற்றி தெள்ளிதின்
உணரமுடிகிறது. 

1. வைணவப் புராணங்கள் 

     1) பதினெட்டுப் புராணங்களுள், கருட புராணம், நாரத புராணம், 
விஷ்ணு புராணம், பாகவத புராணம் ஆகியன விஷ்ணு, விஷ்ணுவின் 
தோற்றம், பல்வகைப்பட்ட அவதார நிலைகள், போன்றன பற்றி பரக்கத்
தெரிவிக்கின்றன. இதில் பராசர முனிவரால் இயற்றப்பட்ட விஷ்ணு புராணம்
அனைவராலும் போற்றி வணங்கப்பட்டதாகும். 

     2) வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் பாரதமும். 

     3) செவ்வைச் சூடுவார் என்னும் புலவரால் வடமொழியிலிருந்து 5000,
செய்யுட்கள் கொண்டதாக ஆக்கப்பட்ட பாகவத புராணம். 

     4) அதி வீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் விருத்தப் 
பாக்களால் இயற்றப்பட்ட நளசரிதம். 

     5) வடமலையப்பர் என்பாரால் தமிழாக்கஞ் செய்யப்பட்ட மச்ச 
புராணம், கருட புராணம், வராஹபுராணம். 

     6) பகவத் கீதை. 

     7) மகாகவி காளிதாசரின் 2480 செய்யுட்கள் கொண்ட ரகுவம்சம்,
(இதனை அரிகேசரி என்பார் தமிழ்ப்படுத்தியுள்ளார்) 

     8) இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மற்றும் இவராக்கிய பிற நூல்கள். 

     9) வேதாந்த தேசிகரின் குரு பரம்பரை ப்ராபவமும் மற்றும் அவரருளிய
பிற நூல்களும். 

     10) மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை     11) பிள்ளைப் பெருமாளையங்காரின் அஷ்ட பிரபந்தம். 

     12) அருளாளப் பெருமாளின் ஞான சாரம், பிரமேய சாரம், சப்த காதை,
மாறனகப் பொருள், திருப்பதிக் கோவை. 

     13) நாலாயிரத்திவ்ய பிரபந்தம். 

     14) துளசி ராமாயணம், கம்பராமாயணம், வில்லி பாரதம். 

     15) பாரத வெண்பா எனப்படும் சங்ககாலத்து நூலான 
பெருந்தேவனாரின் பாரதம். 

     16) ஆழ்வார்களின் பாசுரங்கட்கு அருளப்பட்ட வியாக்யானங்கள். 

     17) முமூச்சப்படி, தத்வத்ரயம், ஸ்ரீவசனபூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம்
என்னும் நூல்கள். 

     18) ஆங்காங்கே கிடைக்கும் ஸ்தல புராணங்கள். 

     இப்பேர்ப்பட்ட நூல்களால் அறியப்படும் வைணவம்தான் ஆத்மாவிற்கு
மோட்சத்தை அடைய பாதைகாட்டும் வழிகாட்டிகளாகும். 

     தொன்மை இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய இந்தியாவிலும்,
இடையிடையே புகுந்த எண்ணற்ற மதங்களும் அவ்வப்போது உருவாகி மிளிர
முடியாமல் போயிற்று. வைணவம் மட்டும் சூர்யன் போல் பிரகாசிக்கிறது.
மிகச் சிறந்த ஞானத்தை (முக்தியடையும் வழியை) 
இந்தியாவே உலகிற்கு அளிக்கும் என்பதை,

     எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
          என்றுரைத்தான் கண்ண பெருமான்
     எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
          இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்இந்தியா உலகிற்களிக்கும் - ஆம், ஆம்
     இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க
     என்ற பாரதியாரின் பாடலும் இங்கு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. 

     இந்தியாவில் தோன்றிய நாம், இந்தியாவில் தோன்றிய மேன்மையான
வைணவத்தை, ஆன்மாவிற்கு வழிகாட்டி, முக்திக்கு இட்டுச் சென்று
இறைவனோடு இரண்டறக் கலக்க வைக்கும் சித்தாந்தத்தை
அறியமுடியாமற்போனால் அதைவிடக் கேவலமானது ஒன்றுமில்லை. 

ஆம் நாம் முக்தர்கள். மோட்சம் அடைய சக்திபெற்றவர்கள்.
பரமாத்மாவோடு, இந்த ஜீவாத்மாவை இரண்டறக் கலக்கவைக்கும் பாதை
காட்டப்பட்ட பேறு பெற்றவர்கள். பிறப்பறுக்கும் பாக்கியம் பெற்றவர்கள்.
இதற்கு உபாயமாக திகழ்ந்து வைணவத்தை விளக்கும் சுடர் போன்று மிளிரும்
திவ்யதேசங்களைத் தரிசிக்க வேண்டாமா? அங்கே அர்ச்சா மூர்த்தியாக
எழுந்தருளியுள்ள எம்பெருமானின் திருக்கோலங்களைக் கண்குளிரக் காண
வேண்டாமா, வம்மின்,
 வம்மின் நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை
மீரே வம்மின் திவ்யதேசம் தொழுவோம், வம்மின்

No comments:

Post a Comment