Monday, July 29, 2019

Srimad Bhagavatam skanda 9 adhyaya 23,24 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 9- அத்தியாயம் 23/24

அத்தியாயம் 23/24
சுகர் கூறினார். 
யயாதியின் மூத்த மகனான யதுவின் வம்சம் மிகவும் புண்ணியமானது.. மனிதர்களின் பாவம் அனைத்தையும் போக்க வல்லது. எந்த வம்சத்தில் பகவான் மானிட வடிவில் அவதரித்தாரோ அந்த யதுவம்சத்தைப் பற்றிக் கேட்கும் மனிதன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

யதுவுக்கு நான்கு புதல்வர்கள். அதில் மூத்தவனான ஸஹஸ்ரஜித்தின் ஸந்ததியார் மாதவர்கள், வ்ருஷ்ணிகள், யாதவர்கள் எனப் பல பிரிவாயினர். இன்னொரு புத்திரனான க்ரோஷ்டுவின் ஸந்ததியில் வந்தவர்கள் போஜர்கள் ஸாத்வதர்கள். இதில் தோன்றியவன் தேவமீடன்.,அவனுடைய புத்திரனான சூரனுக்கு மாரீஷை என்ற மனைவியிடம் பத்து புத்திரர்களும் ஐந்து பெண்களும் பிறந்தனர்.
அதில் வசுதேவர் , தேவபாகன் இவர்கள் முக்கியமானவர்கள். 
வசுதேவருடைய சகோதரியான ப்ருதையை பிதாவாகிய சூரன் ஸந்ததியற்ற அவன் தோழன் குந்திபோஜனுக்கு தத்துக் கொடுத்தான். பிறகு பாண்டு அவளை மணந்தார். இன்னொரு சகோதரியின் மகன் தந்தவக்ரன்.ஸ்ருதஸ்ரவஸ் என்ற சகோதரியை மணந்தவன் தமகோஷன். இவனுடைய மகன்தான் சிசுபாலன்.

வசுதேவர் பிறந்தபோது தேவதுந்துபிகளும் ஆனக வாத்தியங்களும் முழங்கியதால் இவர் ஆனகதுந்துபி என்று கூறப்படுகிறார். வசுதேவருக்கும் தேவகிக்கும் பகவானே குழந்தையாகத் தோன்றினார்.

சுகர் கூறினார்
யதாயதா இஹ தர்மஸ்ய க்ஷயோ வ்ருத்திஸ்ச பாபமான: 
ததா து பகவான் ஈச: ஆத்மானம் ஸ்ருஜதே ஹரி: 
எப்போதெல்லாம் தர்மத்திற்கு குறைவும் பாபத்திற்கு ஏற்றமும் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.,

ஈசனும் பரனும் ஸாக்ஷியும் ஆத்மாவுமான இவருக்கு தம் மாயையன்றி ஜன்மத்திற்கும் கர்மத்திற்கும் வேறு காரணம் எதுவும் இல்லை. கலியுகத்தில் பிறக்கப்போகும் மக்களுக்கு துக்கத்தையும் அக்ஞாநத்தையும் போக்க வாசுதேவ ஸுதனாக அவதரித்தார்.

தன் பிரியமான புன்முறுவலாலும் கம்பீரமான பேச்சினாலும் மற்ற லீலாவிலாசங்களாலும் உலகை மகிழ்வித்தார். தேவரூபத்துடன் மதுரையில் பிறந்து மனுஷ்ய ரூபத்துடன் ஆய்ப்பாடி சென்று அங்கு அரக்கர்களைக் கொன்று கோப கோபியரை மகிழ்வித்து பின்னர் கம்சனைக் கொன்று அவதார காரியத்தை விளக்கப்படுத்தினார்.
கௌரவர்களிடையே விளைந்த பூசலை நிமித்தமாகக் கொண்டு அரசர் கூட்டத்தை கண்பார்வையாலே அழித்து பூபாரத்தைத் தீர்த்துப் பின்னர் தமது பதத்திற்கு எழுந்தருளினார்.

இவ்வாறு கூறிவிட்டுப் பின்னர் சுகர் க்ருஷ்ணாவதாரத்தை விரிவாகக் வர்ணிக்க ஆரம்பித்தார். அதுவே தசமஸ்கந்தம்.

ஸ்கந்தம் 9 முற்றிற்று 

No comments:

Post a Comment