Wednesday, July 31, 2019

Raama naamam

இராமா...!
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 28.6.2019)

இன்று காலை, அனுமன் பற்றிய ஒரு ஊடகத் தொடரினை சற்றேக் காணும் வாய்ப்பு கிடைத்தது..!

இந்திரஜித் தனது மாயாஜால சக்தியினால், வானர சேனைகளே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளுமாறு சேனைகளின் மதியினை மயக்குக்கின்றான்..!  அவனது கையினில் ஒரு சக்ரம் போன்ற ஆயுதம் சுழன்று கொண்டிருக்கின்றது..!

வானர சேனைகள் அவர்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மடிவது நிச்சயம் என சூளுரைக்கின்றான்..!

அனுமன் ஸ்ரீராமநாமம் சொல்லியபடியே, இந்திரஜித் அருகில் வந்து, அவன் கையில் சுழன்று கொண்டிருக்கும் சக்ராயுதத்தினை விழுங்குகின்றான்..!

ஆயினும் இந்திரஜித்தின் மாய சக்தியினால் கோரமாக வானர சேனைகள் மதியிழந்து மூர்க்கமாக அடித்துக்கொள்கின்றன..!

அனுமன் ஒரு உபாயம் செய்கின்றான்..!

ஒரு மேட்டின் மீது ஏறி நிற்கின்றான்...!

"ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்..." என்று தம் பலம் கொண்ட மட்டும் , எல்லோரும் கேட்கும் வண்ணம் சொல்கின்றான்..!

இந்த அதிர்வலையானது, அந்த மாயசக்தியினை விடுவிககின்றது..!  

சேனைகள் அனைவரும் சுயநினைவிற்குத் திரும்புகின்றனர்..!

இராமன் செயயாததை அவன் நாமம் செய்யும்..!

பெரியவர்கள் காலை மாலை இருவேளையும் ஸஹஸ்ரநாம பாராயணம், ஸ்தோத்திரங்கள் சொல்வர்..!  அது நம் இல்லத்தினை துாய்மைப்படுத்தும்..!  

அக்ரஹாரத்தில் ஆங்காங்கு வேதபாராயணம், திவ்யபிரபந்தப் பாராயணம் போன்ற திவ்யமான ஒலி அலை எழுந்த வண்ணம் இருக்கும்..!

(மழை வேண்டி பிரார்த்தனைக்கு அவசியமில்லாமல் இருந்தது.   கொள்ளிடம் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது..)

எங்கள் வடக்குச் சித்திரை வீதியில் மதுராந்தகம் ஸ்ரீவீரராகவாச்சார்யார் என்றொரு ஆச்சார்ய புருஷர் இருந்தார்..!  அவரிடத்து பல புத்திசாலி சீடர்கள் காலை 0700 மணிக்கெல்லாம், அவரவர் அனுஷ்டானத்தினை முடித்துவிட்டு, அவர் வீட்டு வாசல் திண்ணைக்கு வந்து விடுவர்கள்..!  நித்தமும் ஒரு சதஸ்ஸே நடக்கும் அவரது இல்லத்தில்..! 

அந்த வழியே இதனைப் பார்த்தவாறு நடந்து போகும் எங்களுக்கே ஒரு உத்வேகம், புத்துணர்ச்சி்ப் பாய்ந்தது போலிருக்கும்..!

கண்ணன் அரக்கர்களை வதம் செய்யும் போது, அவர்கள் "ஐயோ.." என்று கத்திய சொல்லலைகள் வானில் நிலைத்து ஒரு அமங்கலத்தினை உண்டாக்கியதாம்..!

இடைச்சியர்கள் தயிர் கடையும் போது, கண்ணனின் லீலைகளைப் போற்றி அவர்கள் பாடிய பாட்டின் அலைகள் அந்த அமங்கலத்தினைப் போக்கியதாகக் கூறுவர்..!

(எப்போதும் டி.வீயில் வரும் அழுகை சீரியல்களும், ஐயோ என்னும் அமங்கலமான சப்தங்களும், நம் இல்லத்தினை எப்படி பாழ்படுத்தும்..!  நினைத்துப் பாருங்கள்.)

கலியுகத்தினில, நம்மைச் சுற்றியுள்ள அமங்கல அலைகளைப் போக்கக்கூடியது, நாம சங்கீர்த்தனமும் அவனது ஸ்தோத்திர பாராயணங்களும் மட்டுமே..!

வானவீதியிலுள்ள அமங்கல சப்த அலைகளைப் போக்கக் கூடியப் புண்யாஹம் அவன் நாம கீதம்..!.

இந்த நாம ஜபம் என்னவெல்லாம் செய்யும்..?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே 
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே 
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே 
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.

வேறு என்ன செய்யும்..?

குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 
வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)       
  
வேறென்ன வேணும்....?

தாஸன்
-முரளீ பட்டர்-
#,இராமா#

No comments:

Post a Comment