Monday, May 13, 2019

Sarpa kshetram - Divya desam

தொண்டைநாட்டு திருப்பதிகள் 22 பதிவு  36

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

திருப்பரமேச்சுர விண்ணகரம் ( காஞ்சிபுரம்)  01

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை
          யூறாலி நாற்றமும் தோற்றமுமாய்
     நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்த
          தான் கடஞ் சூழ்ந்த ழகாய கச்சி
     பல்லவன் வில்லவ னென்று லகில் பல
          ராயாப் பல வேந்தர் வணங்கு கழல்
     பல்லவன், மல்லையர் கோள் பணிந்த பர
          மேச்சுர விண்ணகர மதுவே (1128)
                         -பெரியதிருமொழி 2-9-1
     என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசிக்கப்பட்ட இத்தலம் பெரிய
காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 பர்லாங்
தூரத்தில் உள்ளது. 

     இத்தலத்தைப் பற்றிக் குறிப்பாக எந்தப் புராணத்தில்
சொல்லப்பட்டுள்ளது என்பது அறியுமாறில்லை. ஆனால் புராண காலத்தில்
இத்தலம் ஸர்ப்பச் சேஷத்ரம் என அழைக்கப்பட்டதாகவும், இங்கு
எழுந்தருளியிருந்த பிரான் பரமபத நாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும்
அறியமுடிகிறது. 

     விதர்ப்ப நாட்டு மன்னன் புத்ர சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள
கைலாச நாதனை வணங்க விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும்
பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும், அவ்விருவரும்
மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு மூலையில் அஸ்வமேத
யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்டநாதனாக வீற்றிருந்த
திருக்கோலத்தில் காட்சி கொடுத்து அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு
அருளுவதாக ஐதீஹம். 

     ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் 
செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம்
பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான்
இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது. 

     பரமேஸ்வரவர்மன் பிறப்புக்கும் இத்தலத்திற்கும் உண்டான தொடர்பு
கீழ்வருமாறு பேசப்படுகிறது.

ஒரு சமயம் பரத்வாஜ முனிவர் பெரும் தவமியற்றிக் கொண்டிருக்கும்
போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின்பால் மோகம்
கொண்டு அவளை ஆலிங்கனம் செய்ய அவ்வளவிலேயே ஒரு ஆண் மகவு
உண்டாக இக்குழவியை என்ன செய்வதென்று பிரம்மன் சிந்தனையில் மூழ்க
அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும் இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து
நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று
சொல்லி, மஹாவிஷ்ணுவும் லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு
உயிர் கொடுக்கலாயினர். 

     இஃதிவ்வாறிருந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி
ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென
இப்பெருமாளைத் துதித்துவிட்டு திரும்பும்போது வேடன் உருக்கொண்டிருந்த
எம்பெருமானால் இம்மகவு அவர்களின் கையில் தரப்பட்டது. பிரம்மனாலும்
விஷ்ணுவாலும் வளர்க்கும் பொறுப்பு உண்டானதால் பரமேஸ்வரன் என்று
பெயரிட்டதாகவும் ஒரு கதை உண்டு. 

     இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18
யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். யானைப்பாலை உண்டு 
வளர்ந்த அவன் மிக்க பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் விளங்கினான். 

     பல்லவர்கள் யார் என்பதை ஆராயப் புகுந்த வரலாற்று அறிஞர்கள்
பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணுமிடத்து பரத்வாஜ கோத்ரம்
என்றவொரு பிறப்புரிமையைக் காட்டுவதும் இங்கு உற்று நோக்கத் தக்கதாகும். 

     பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும்,
அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும்,
சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு
சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர். 

     இதனை நினைவுகூறும். முகத்தான்தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள
நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்) 
பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் ரங்கநாதனாகச்
சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும்
எம்பெருமானை எழுந்தருளச் செய்தார். 

     மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை
ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச் 
சிதலமடைய பிறகு அவ்விடத்தில்  
சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. (இந்நிகழ்ச்சி நடைபெற்றதும்
பல்லவர்கள் காலத்திலேதான்) இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள
சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும். 

     ஸ்ரீ வைகுண்டமென்னும் பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு
புஷ்கரணியாக அமைந்துள்ளதாக ஐதீஹம்.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏

நாளையும் திருப்பரமேச்சுர விண்ணகரம்  திவ்யதேசம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
தொண்டைநாட்டு திருப்பதிகள் 22 பதிவு 37

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏🙏🙏

திருப்பரமேச்சுர விண்ணகரம் ( காஞ்சிபுரம்)  02

மூலவர்

     பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம். 

தாயார்

     வைகுந்த வல்லி 

தீர்த்தம்

     ஐரம்மத தீர்த்தம் 

விமானம்

     முகுந்த விமானம் 

காட்சி கண்டவர்கள்

     பல்லவ மன்னன். 

சிறப்புக்கள்

     1. மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின்
உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளமை மிகவும் வியத்தற்குரியதாகும். 

     2. பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி
இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் 
யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும். 

     3. பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட 
சகல காரியங்களுக்கும், தான் போர் மேற் செல்வதற்கும், இப்பெருமாளையே
குருவாகக் கொண்டு வெற்றிமேல் வெற்றி கண்டான். இவன் பாண்டியனை
வென்றதை திருமங்கையாழ்வார் தனது பாடலில். 
 

     தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
          திறல் வாட்டிய திண் சிலையோன்
     பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் - பர
          மேச்சுர விண்ணக ரமதுவே - என்கிறார்.

திருமங்கையாழ்வார். தமது பாக்களில் எல்லாம் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகரம் என்று அம்மன்னனுக்கும் இத்தலத்திற்கும் உள்ள
தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார். 

     4. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. 

     5. பிள்ளைப் பெருமாளையங்கார், மணவாள மாமுனி, இராமானுஜர்
ஆகியோரும் இத்தலத்திற்கு எழுந்தருளி உள்ளனர். 

     6. பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்திகரிக்கும் சிற்பங்கள் அவனுக்கு
பெருமாள் சாஸ்திரங்களைப் போதித்த நிலையிலான சிற்பங்கள் போன்றன
இத்தலத்தின் உட்பிரகாரத்தில் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. 

     7. இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம
அவதாரம் நரஹாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம் செய்த
இராமவதாரம், போன்ற காட்சிகள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டுக் கல்லும்
கதை பேசும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டுள்ளது. 

     8. இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட
பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள்
அதனைத் தோண்டிக்காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும்,
இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான்
என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி
அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக்
கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம்
இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். சுரங்கப் பாதையைத் தோண்ட வந்த
வெள்ளையன் இங்கு அவ்வாறு சுரங்கப் பாதை யாதும் இல்லையெனக் கூறிச்
சென்று விட்டதாகக் கூறுவர். 

     9. இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும்
பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக ஐதீஹம்.

10. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின்
நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

     11. இக்கோவிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு
(ராஜ தர்பார்கள்) நடன சாலைகள் இருந்தன. அவைகள் இன்று சாதாரண
மண்டபங்களாக விளங்குகின்றன. 

     12. இந்த வைகுண்டப் பெருமாள் அடியார்கள் மேல் ஆழ்ந்த
பற்றுக்கொண்டவன். தன்னை நேசிப்பவர்களையும், பூசிப்பவர்களையும் கண்டு
மனது நெகிழ்கின்றவன். அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கண்காணித்துக்
கொள்பவன். தன் அடியார்கள் மீது அன்பு செலுத்தச் செய்து பிறகு
தனக்கடிமை ஆக்கிக்கொள்ளும் தகவினன். நானும் அவ்வாறே செய்தேன்.
அவன் கனிந்த தமிழில் என்னை பாடுமாறு வைத்தான். அவன் பதமே
தஞ்சமென்று உள்ள அடியார்கட்கு என்னை ஆட்படுத்திவைத்தான். 
இவன்தான் நன்மையே செய்யும் பரமேச்சுர விண்ணகரத்தான் என்று பிள்ளைப்
பெருமாளய்யங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் துதிக்கிறார். 
 

     பதத்தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத்தன்
          பதத்தடியார்க்கே யாட்படுத்தான் - இதந்த
     பரமேச்சுர விண்ணகரான் பலவான்
          வரமேச்சுர லணைந்த மால்
     இப்பெருமானின் ஸ்தல வரலாற்றுப் பண்புகளோடு இது பொருத்தி
வருவதும் ஈண்டு நோக்கத் தக்கதாகும்.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளைமுதல்  திருப்புட்குழி திவ்யதேசம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment