Tuesday, May 28, 2019

life in 1950s

இந்த வாழ்க்கை எப்படி ? - J.K. SIVAN

இன்று அகில உலக அம்மா தினம்.... எனக்கு என்றுமே அம்மா தினம் தான். 
''என்னைப்பெற்ற தாயார்'' என்ற அரு மையான,அற்புதமான பொருத்தமான பெயரோடு திரு நின்றவூரில் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயிலில் தாயாருக்கு பெயர். அருமையான கோவில். என் தாய் ஜம்பாவதியும் என் மன சந்நிதியில் ஒரு தெய்வம் தான். அவளை நினைத்து பார்க்கிறேன். கொஞ்சம் சொல்கிறேன்.

அவள் பள்ளிக்கூடமே பார்த்ததில்லை. அப்போது பள்ளிகள் அதிகம் இல்லை, இருந்தாலும் அவள் காலத்தில், எல்லோர் வீட்டிலும் பெண்களை படிக்க பள்ளிக்கூடம் அனுப்பும் வழக்கம் இல்லை. திருமணம் என்றால் என்ன என்று புரியாத விளையாட்டுப் பருவத்திலேயே திருமணமாகிவிட்டது. திருமணம் தனக்கு நடந்தது என்பதால் அவளுக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. தான் ஒன்பது - பத்து வயதிற்குள் ஒரு மனைவி ஆனவள் என்று புரியாமலேயே கணவன் என்கிற 12-13 வயது பையனோடு சேர்ந்து பாண்டி பல்லாங்குழி விளையாடுவது, அவனை பேர் சொல்லி அழைப்பது அக்கால வழக்கம்.

ஒருநாள் அவளை புருஷன் வீட்டில் கொண்டு விட்டார்கள். நிறைய வேலை செய்ய பழக்கப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு டஜன் ஆசாமிகளாவது இருப்பார்கள். கூட்டுக் குடும்பங்களாகவே எல்லோரும் வாழ்ந்த காலம். பெண்கள், அதுவும் நாட்டுப் பெண்கள், மருமகள்கள் அதிக வேலை செய்வதற்காகவே இறக்குமதி செய்யப்பட்டவர்கள். அவர்கள் தான் அரைக்கும், துவைக்கும், சமைக்கும், வீட்டை, தோட்டத்தை சுத்தப்படுத்தும், குழந்தை பெற்கும் மெஷின்கள். அடி உதை திட்டு பட்டினி, இதெல்லாம் ஓவர்டைம் செய்வதற்கு போனஸ்.

ஆண்கள் வேலைக்கு செல்வார்கள். வேலை என்றால் ஏதோ கம்பனி, ஆபிஸ் என்று கனவு காண வேண்டாம். வயல் தோப்பு துறவு தான். காலை உணவு, மதியம் வாழை இலையில் சாப்பாடு. மாலை எதாவது நொறுக்ஸ். இரவு முக்யமாக பலகாரம். இதை ருசி குறையாமல் தயாரிக்க வேண்டும். தயாரிக்க ஸ்டவ், காஸ் அடுப்பு எல்லாம் என்ன என்றே தெரியாதவர்கள். ஆகவே மூன்று குமிழ் வைத்த களிமண்ணால் வேயப்பட்ட மெழுகிய அடுப்பு. அதன் அகண்ட வாயை நிரப்ப தோட்டத்தில், காட்டில், தோட்டத்தில், வெட்டப் பட்ட மரங்கள் விறகு என்று வெயிலில் காய வைத்தவை. சுள்ளிகள். புகையை ஊதி அப்புறப்படுத்த ஊதாங்குழல் என்று இரும்பு குழாய். பெண்களால் மார் வலிக்க ஊதப்படும். ஊதினால் புகையில் கண்களில் நீர் வடியும்.

சாதம் வடிக்க பிரிஸ்டீஜ், ருக்மணி குக்கர்அப்போது கிடையாது. பெரிய பித்தளை தவலை அல்லது பெரிய வெண்கல பானை. சில வீடுகளில் மண் பானை. அரிசி கொதித்து சாதமாகிவிட்டது என்று தெரிந்தவுடன். சளசள வென்று கொதித்த சாதம் நிறைந்த வெண்கலப்பானையின் வாயின் மேல் ஒரு தட்டு மூடப்பட்டு துணியால் குறுக்கே கெட்டியாக இருகைகளாலும் பிடித்துக்கொண்டு இறக்கி கஞ்சி வடிக்கப்படும். கஞ்சி ஆறியவுடன், அதில் கொஞ்சம் மோர், பெருங்காயம், ஒரு துண்டு இஞ்சி, சின்ன பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறி வேப்பிலை நிறைய கிள்ளிப் போட்டு உப்பு சேர்த்து நீர்க்க ஒவ்வொரு லோட்டா எல்லோருக்கும். இது எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். இது காலை காப்பி டீக்கு பதிலாக. எங்கள் காலத்தில் கூட இந்த மார்னிங் ட்ரிங்க் இருந்தது. விரும்பி சாப்பிட்டிருக்கிறேன்.

இன்னொரு விதமாகவும் இது தயாராகும். சூடான கஞ்சியோடு கொஞ்சம் பால் சேர்த்து நாட்டு சர்க்கரை போட்டு சூடாக பருக பெரியவர்கள் காத்திருப்பார்கள். நானும் நிறைய பாயசம் மாதிரி குடித்திருக் கிறேன்.
வீட்டில் நிறைய குழந்தைகள் வளைய வரும். இல்லை. மேயும். வீடு என்றால் மண் சுவரில் கட்டிய ஒட்டு வீடு. ரெண்டு கட்டு மூன்று கட்டு என்று உள்ளே உள்ளே போய்க்கொண்டே இருக்கும். முற்றம் ( வழக்
கத்தில் சொல்வது ''மித்தம்'') பின்னால் கொல்லை வரை செல்லும். கன்றுக்குட்டி, பசு எல்லாம் பின்னால் காத்திருக்கும். தூரத்தில் கிணறு இருக்கும். மரங்கள் செடி கொடிகள் நிறைந்து குளுகுளு வென்று மணமாக இருக்கும்.

அபோதெல்லாம் சாதம் தான் மூன்று வேளையும். குழம்பு, ரசம், காய், தயிர் என்று இல்லை. ஏதோ ஒரு சாதம். அதை தனித் தனி தட்டுகளில் இட்டு பரிமாறுவது எல்லாம் வழக்கம் இல்லை. அனைத்து அரை டிக்கெட்களும் 3 லிருந்து 16-18 வரை வரிசையாகவோ வட்டமாகவோ உட்கார்ந்திருக்கும் . ஒரு டஜனுக்கு மேல் நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். வட்டத்தின் நடுவே பெரிய பாத்திரத்தில் கலந்த சாதம், பிசைந்த சாதம் தயாராக இருக்கும். ஒரு முதியவள், பாட்டியோ, அத்தையோ, சித்தியோ, அம்மாவோ அதை வட்டத்தின் உள் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு நீட்டப்பட்ட கையிலும் போடுவாள். ஒரு கைக்கு போட்டு விட்டு மறு கைக்கு நகர்வாள் . ரெண்டு சுற்று, மூன்று சுற்றிலேயே பெரிய வாயகல பாத்திரம் நிறைய இருந்த தயிர் சாதமோ, குழம்பு சாதமோ, ரசம் சாதமோ சுத்தமாக காலி யாகிவிடும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒவ்வொரு கைப்பிடியிலும் ஏதாவது ஊறுகாயோ, வடாமோ, துவையலோ, காயோ வைத்து கலந்து தான் போடுவாள். முந்தைய நாள் குழம்பு, காய்கறிகள், எல்லாம் எண்ணைவிட்டு சண்ட காய்ச்சி கெட்டியாக எரிச்சகறி என்று தொட்டுக்க வைத்து கொடுப்பது தேவாம்ருதமாக இருக்கும் அந்த சாப்பாடு. இனி ஒரு முறையாவது அதை சாப்பிட வேண்டும் கிருஷ்ணா!

பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இப்போது மாதிரி நொடிக்கு ஒருதரம் கதவைத் திறந்து உள்ளே வேட்டையாட குளிர் சாதன பெட்டிகளோ, அலமாரியில் பிஸ்கட்டோ கிடையாதே. சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பொழுது போக்க டிவியோ கம்ப்யூட்டரோ, ஐ பாடோ மொபைலோ கிடையாது. ரேடியோ என்றால் என்னவென்றே தெரியாது. ஒருவரோடு ஒருவர் பேச டெலிபோன் கூட இல்லாத காலம். இப்போது மாதிரி கர்ண குண்டலமாக ஒட்டிக்கொள்ள ஒரு மொபைல் தொலைபேசி, கைப்பேசி கிடையாது. குடிக்க ஆர்வோ தண்ணீர் கிடையாது. ஆற்றிலிருந்து மொண்டுவந்த தவலையில், பானையில், உள்ள ஜலம் தான் எல்லோருக்குமே. இதால் எல்லாம் நாங்கள் ஒருவரும் வியாதியஸ்தர்களாக வில்லை. நான் இப்போது 80+ தாண்டிவிட்டேனே. அதிகம் டாக்டர்களைத் தேடாத ஆள்.

அன்றன்று தயாரிக்கும் உணவுக்கு அரைக்க, கரைக்க மிக்சி கிடையாது. கல்லுரலில் நிறைய அரிசி, பருப்பு போட்டு மாங்கு மாங்கு என்று அரைப்பார்கள். காலை நீட்டிக்கொண்டு சிலர் அரிசி, பருப்புகளை எந்திரம் என்னும் இரு வலுவான வட்ட வடிவ கல்லுக்குள் போட்டு அரைப்பார்கள். கீழ் வட்டக்கல் அசையாது. மேல் வட்டக்கல் கீழ் வட்டங்கள் இரண்டையும் ஒரு கனமான மரத்துண்டு இணைக்கும். மேல் வட்டக்கல்லில் ஒரு துளையில் குட்டையாக ஒரு கெட்டியான மர துண்டு பொருத்தப்பட்டு அது தான் கைப்பிடி. அடிக்கடி உபயோகித்து அந்த கைப்பிடி வழு வழுப்பாக இருக்கும். ஜனா பாய்க்கு பாண்டுரங்கன் இப்படித்தானே மாவு அரைத்து கொடுத்தான். (என்னுடைய ''தெவிட்டாத விட்டலா'' வை இன்னும் படிக்கவில்லையா?)

அரிசி நாம் இப்போது கடையில் வாங்குவது போல் பையில் வராது. நெல்லை குதிரிலிருந்து அப்பப்போ எடுத்து, புடைத்து, தூசி தும்பு நீக்கி, உரல் ( இதுவும் ஒரு கல்லால் ஆன உபகரணம்) அதன் வாய்க்குள் நிறைய நெல்லை போட்டு, மர உலக்கையால் இடிப்பார்கள். பாடிக்கொண்டே நெல்லு குத்துவார்கள். கிராமங்களில் இன்னும் நிறைய வீடுகளில் குதிர்கள் இருக்கிறது.

நெல்லை உமி நீக்கி, குருணை நீக்கி, அரிசியாக சேகரித்து அதை பெரிய பானைகளில் போட்டு வைப்பார்கள். அரிசிப்பானை இல்லாத வீடு அப்போது இல்லை. நெல் குத்துவது ஒரு அழகு. இரு பெண்கள் மாற்றி மாற்றி ஒரே உரலில் இரு உலக்கைகளால் குத்துவார்கள். ஒன்றை ஒன்று சந்திக்காது. இடி படாது. வழ வழ என்று இருக்கும் உலக்கைக்கு பித்தளைப் பூண் அழகாக இருக்கும். நெல்லு குத்தற பாட்டு என்று ஒன்று உண்டு. ராகமாக இருவர் மாற்றி மாற்றி நெல் குத்திக்கொண்டே பாடுவார்கள். என்னிடம் அந்த பாட்டு இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன். பழைய நாட்டுப்பாடல்களை பொறுப்போடு சேகரிக்காமல் விட்டுவிட்டேன்.இருந்தால் தருகிறேன். என் அம்மா ஜம்பாவதி அம்மாள் 90+ல் கூட ரொம்ப நன்றாக பாடுவாள். அந்த குடும்பமே ராம நாடக கீர்த்தனைகள் அறிந்த குடும்பம். அவளது யதுகுல காம்போதி ராக பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. என்னிடம் இருக்கிறது.

பெரிய பானைகளில் புளி , வெல்லம், எல்லாம் சேகரித்து வைத்திருப்பார்கள். மளிகைக் கடைகள் என்று கிடையாது. வீட்டுக்கு தேவையான அரிசி பருப்பு புளி காய்கறிகள், எல்லாம் அவரவர் நிலத்தில் இருந்தே கிடைக்கும். எண்ணெய் செக்கிலிருந்து (ஒத்தை அல்லது சில பெரிய செக்குகளில் ரெட்டை மாடு) சுற்றி சுற்றி வந்து அரைத்துக் கொண்டிருக்கும். எள்ளு, கொப்பரை ஆகியவைகளை செக்கில் இட்டு அதை வழ வழப்பான கனமான ஒரு உலக்கை போன்று ஒரு உபகரணம் நசுக்கி அரைத்துக் கொண்டிருக்கும் அந்த உலக்கையின் கழுத்தில் இருந்து வரும் கயிறு மாட்டின் நுகத்தடியிலிருந்து வரும் மரத்தில் இணைக்கப்பட்டிருக்கும். மாடு நகர நகர, சுற்றி வர, அந்த தடியான மர உலக்கை குழவி செக்கில் உள்ள கொப்பரையையோ எள்ளையோ நசுக்கி எண்ணையாக அரைத்துக்கொண்டிருக்கும். பிறகு தெளிய வைத்து வடிகட்டி எண்ணையை பீப்பாய்களில் நிறப்பி விற்பார்கள். அந்த பக்கம் போனாலே கமகம என்று சுத்த நெல்லெண்ணய் வாசனை மூக்கை துளைக்கும். வீசை தோலா கணக்கு அப்போது. காலணா, அரையணா, மொட்டைத்தலை வெள்ளைக்கார ராஜா எட்வர்ட் வெள்ளி ரூபாய், கிரீடம் வைச்ச விக்டோரியா ராணி போட்ட கனமான வெள்ளிக்காசு என்று இருந்தது. ஒன்றிரண்டு என்னிடம் இருந்ததும் எங்கோ தொலைந்து போய் விட்டது.

விளக்கு வெறும் அகல் அல்லது, சிம்னி என்ற கண்ணாடிக்குடுவை போட்ட விளக்கு. உள்ளே கெரசின் பாட்டிலில் இணைக்கப்பட்ட திரி. ஹரிக்கேன் விளக்கு எங்கு போனாலும் தூக்கிக்கொண்டு போவோம். டார்ச் என்ன என்று தெரியாது. 
தெருவில் நாலு பக்கமும் கண்ணாடி பிரேம் போட்ட ஒரு கூண்டில் தினமும் ஒருவன் சாயந்திரம் வந்து விளக்கை ஏற்றி விட்டுப் போவான். சில நேரங்களில் எண்ணெய் தீர்ந்து போய் விளக்கு அணைந்துவிடும். அல்லது நாலு பக்க கண்ணாடியில் எதிலாவது விரிசல் அல்லது ஓட்டை இருந்து அதன் வழியே காற்று போய் கூட விளக்கு அணைந்து விடும். இரவில் அதிக நடமாட்டம் கிடையாது. எட்டுமணிக்குள் ஊர் அடங்கிவிடும். எங்கும் நிசப்தம். தெருவெல்லாம் புழுதி தெரு தான். நடந்து நடந்து இரவில் கூட வெள்ளையாக பாதை தெரியும். நிலா வெளிச்சத்தில் இந்த வெள்ளைப் பாதையில் நடந்த இன்பத்திற்கு இணை கிடையாது. எங்கும் மண் தெரு தான். நடந்து நடந்து வழ வழப்பாக இருக்கும். இருட்டில் கூட ராஜ பாட்டை தான். நிலா வெளிச்சத்தில் வெள்ளியாக அது தெரிவதே ஒரு தனி அழகு. இருட்டில் ஒரே பயம் நாய்கள் குலைப்பது.பாம்புகள் நடமாட்டம். கீரிப்பிள்ளைகள் .குறுக்கும் நெடுக்கும் ஓடும். அதற்கு பாம்பு வேண்டாமா? புதர்களில் நரிகள் ஓலமிடும். பறவைகள் கத்திக்கொண்டிருக்கும். எங்கும் தண்ணீர் தேங்கி குட்டைகள் உண்டு. சாயந்திரம் ஆனாலே தவளைகள் ஒரே குரலில்,ஒரே சுருதியில் ஜபம் பண்ண ஆரம்பித்து விடும்.

தெருவில் நடமாடும் வண்டிகள் குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் தான். பணக்காரர்கள், ஜமிந்தார், மிராசுகள் பயணிக்கும் காளை பூட்டிய வில் வண்டி, மைனர்கள் சவாரிக்கும் ரேக்ளா. இது ஒரே ஆள் மட்டும் சாய்ந்து கொள்ளாமல் முதுகு நிமிர்த்தி ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு ஒத்தைக் குதிரையை அல்லது இளங்காளையை பூட்டி இயக்கும் வேகமான வண்டி. இதரர் பாதசாரிகள்.

எங்கள் கொள்ளுத் தாத்தாவுக்கு ஒரு சட்டை கூட இருந்ததில்லை. கையில் கூஜாவுடன் பல காத தூரங்கள் நடப்பார். கையில் ஒரு பழுக்காத் தடி (பாணா தடி என்றும் பெயர் உண்டு) . வழியில் ஏதாவது கள்ளர், மிருகங்கள் குறுக்கிட்டால் தற்காப்புக்கு. காலில் பாதரோட்டுக் கட்டை. குமிழ் வைத்த மரத்தாலான ஒரு காலணி . கனமாக இருக்கும். குமிழ் கால் கட்டை விரலுக்கும் பெரு விரலுக்கும் இடையில் பிடிப்பாக இறுக்கிக் கொண்டு நடக்க உதவும். சின்னவயதில் என் தாத்தாவின் இந்த பாத்ரோட்டு கட்டையை காலில் மாட்டி நடக்க முயற்சித்து விழுந்திருக்கிறேன்.

பொழுது போக்கு எல்லோருக்குமே ஊர்க் கோவிலில் நடக்கும் உற்சவங்கள், விழாக்கள் தான்., அங்கும் பார பட்சம் உண்டு. யாருக்கு முதல் மரியாதை என்பதில். யாருக்கு உரிமை ஜாஸ்தி என்று அவர்களுக் குள்ளேயே சிலருக்கு போட்டியிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். எப்படியோ சமாளிப்பார்கள்.

முடி திருத்தகம் எல்லாம் கிடையாது. ஊரில் நாவித குடும்பம் இருக்கும். அவர்கள் வாடிக்கைக் காரர்கள் வீட்டுக்கு மாதத்திற்கொரு முறை அல்லது ரெண்டு மாதத்திற்கொருமுறை வருவார்கள். அனைத்து குழந்தைகளுக்கும் அரை அங்குலத்தில் அப்பளா குடுமி. (முன் பாதி மண்டை, காதுக்கு மேலாக மழிக்கப்பட்டு) பின் மண்டை மட்டும் கருப்பாக இருக்கும். எங்கள் அப்பா காய் விரலால் முடியின் உயரம் எவ்வளவு இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பார். எல்லோருக்குமே சதுரவட்டை மிலிட்டரி கிராப். திலீப் குமாரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.

இடுப்பில் நாலு முழ துண்டு. இது தான் அக்கால பள்ளிக்கூட யூனி பார்ம். பள்ளிக் கூடம் என்றால் ஏதோ கட்டிடம் என்று நினைத்துகொண்டு ஏமாந்து போக வேண்டாம். வாத்தியார் வீட்டு திண்ணை தான். வாத்தியாருக்கும் கிட்டத்தட்ட இதே யூனிபார்ம் தான் . நாலு முழ துண்டுக்கு பதிலாக எட்டு முழ தட்டுச் சுற்று அல்லது பஞ்ச கச்சம். வெள்ளை என்று ஒரு காலத்திலும் அந்த வேஷ்டிகள் இருந்ததில்லை. ஏறக்குறைய காவியேறி இருக்கும். மேல் துண்டு தோளிலோ, இடுப்பு வேட்டி மேலோ கட்டப்பட்டு இருக்கும். அப்பளா குடுமிக்கு பதிலாக வழுக்கை பாய்ந்த குடுமி. தாடி மீசை எக்ஸ்ட்ரா . அவரவர் சாய்ஸ் . அல்லது நிர்பந்தம். ஏன் என்றால் சில காலங்களில் வபனம் செய்யக்கூடாதே. அந்த சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களுக்குள் சென்றால் தடம் மாறிவிடும் என்பதால் மேலே சொல்லாமல் நிறுத்திக்
கொள்கிறேன்.

ஆசிரியர் சொல்வதை பையன்கள் திருப்பிச் சொல்வார்கள். மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள். சிலர் பனை ஏடு வைத்திருப்பார்கள் அதில் எழுத்தாணியால் புள்ளி புள்ளி யாக பொறி த்துக் கொள்வார்கள். ஆசிரியருக்கு பீஸ் என்ன தெரியுமா? வீட்டில் காய்த்த புடலை, கத்திரி, மிளகாய். நெல்,வீட்டில் கடைந்த வெண்ணெய். சொம்பில் பால். தீபாவளி பொங்கல் சமயத்தில் சில பணக்கார மாணவர்கள் வீட்டிலிருந்து வேஷ்டி மேல்துண்டு. ரொம்ப பணக்கார பிள்ளைகள் வீட்டில் இருந்து தங்கக் காசு கொண்டு வந்து தந்து நமஸ்காரம் பண்ணுவார்கள்.

இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது. நமக்கு பதில் சொல்ல யோசிக்க வேண்டியிருக்கும். நிறைய பேருக்கு ''காட்டு மிராண்டித் தனம் '' என்று கூடத் தோன்றலாம். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின் வருபவர்களுக்கு நம்முடைய இப்போதைய வாழ்க்கையும் அப்படித்தானே தோன்றப் போகிறது.

ஆனால் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். கொலஸ்ட்ரால், பீ பி, கிட்னி ஸ்டோன் , எம் ஆர் ஐ ஸ்கேன், ICU, அப்பல்லோ, எல்லாம் பிறக்காத காலம் என்பதால் சுகத்தை தவிர, இன்பத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. இதுதான் ''எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய'' ........ நம் முன்னோர்கள் வாழ்ந்த பொன்னாடா , பொற்காலமா?

இந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்து வளர்ந்தவள் என் தாயார் ஜம்பாவதி அம்மாள். வசிஷ்ட பாரதி
களின் இரண்டாவது பெண். இளம் வயதில் தனது தாயை இழந்தவள். தமிழில் கையெழுத்து போடுவாள். ''V ''என்கிற எழுத்து பல நடுக்கங்களோடு முதுகொடிந்த புழு போல் வளைந்திருக்கிரும். ''ஜ ம் பா வ தி'' எழுத்துக்கள் ரொம்ப மடியாக ஒன்றின் மேல் ஒன்று படாமல் இடது புறத்தில் இருந்து வலது புறம் சாய்ந்து வரிசையின்றி சிறிதும் பெரிதுமாக இருக்கும். ஒரு கையெழுத்து போட குறைந்தது 5 நிமிஷங்களாவது எடுத்துக் கொள்வாள். அவளுக்கு வரும் மணி ஆர்டரில் கையெழுத்து வாங்கி அடுத்த இடம் போகும் தபால்காரர் என் அம்மா கையெழுத்துப் போட்டு முடிப்பதற்குள், வாசல் திண்ணையில் சற்று அமர்ந்து சிரம பரிகாரம் பண்ணிக்கொள்ள, ஏன் ஒரு குட்டி தூக்கம் கூட போட போதிய அவகாசம் அவருக்கு கிடைத்திருக்கும் . அவளைப்பற்றி நிறையவே எழுதலாம்.

  

No comments:

Post a Comment